ரணில் – சஜித் முரண்பாட்டின் பின்னணி என்ன? -புனிதன்


சிறீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி. என்பன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது வேட்பாளரகளை அறிவித்துவிட்ட நிலையில், இலங்கையின் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையும் தனது வேட்பாளரை அறிவிக்காது திண்டாடி வருகிறது. அதற்குக் காரணம் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் போட்டாபோட்டி என்பது வெட்டவெளிச்சமான விடயம்.
இருப்பினும் தான் எப்படியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என அறிவித்துள்ள சஜித், தனக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றார். ஐ.தே.க. கட்சி தன்னை உத்தியோகபூர்வ வேட்பாளராக நியமிக்காவிட்டால், தான் சுயேச்சையாகத் தன்னும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராக இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சஜித் கூறிவருவதாகச் சொல்லப்படுகிறது.


சஜித்துக்கு ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறத்தாழ அரைவாசிப் பேர் ஆதரவளித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதை அவரின் பொதுக்கூட்டங்களுக்கு திரளும் மக்கள் தொகை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், மலையகத்தின் சில அரசியல்வாதிகளும் கூட சஜித்துக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பது இதுவரை வெளியாகவில்லை.
நிலைமை இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட போதிலும், கட்சித் தலைவர் ரணில் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு விருப்பமின்றியே இருந்து வருகின்றார். அவர் மட்டுமின்றி ஐ.தே.கவின் சிரேஸ்ட தலைவர்கள் பலரும் சஜித்தின் நியமனத்தை விரும்பவில்லை எனத் தெரிய வருகிறது.
ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான முரண்பாடு ஜனாதிபதி தேர்தலை ஒட்டி திடீரென உருவான ஒன்றல்ல. அது பல வருடங்களாக இருந்து வருகிறது. ரணில் தலைமையில் ஐ.தே.க. சுமார் 20 தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர், கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்தது. அப்பொழுதிருந்தே இந்த முரண்பாடு இருந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் கரு ஜெயசூரிய ரணிலின் பிரதான போட்டியாளராகக் காணப்பட்டார். அவரை ரணில் தந்திரமாக சபாநாயகர் பதவியில் அமர்த்தி அந்தப் பிரச்சினையை ஓரளவு தணித்துவிட்டார். ஆனால் சஜித் ரணிலுக்கு போட்டியாளராக உருவெடுத்தபோது அதை ரணிலால் தணிக்க முடியவில்லை. சஜித்தை கட்சித் தலைவராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக வளர்ந்து இப்பொழுது அது அவரை ஐ.தே.கவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற நிலையை அடைந்துள்ளது.
ரணில், சஜித் இருவரையும் பொறுத்தவரை இது அவர்கள் இருவருக்கும் வாழ்வா, சாவா என்ற பிரச்சினையாகும். ரணில் ஏற்கெனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அவர் போட்டியிட்டால் வெற்றிபெறமாட்டார் என்பதாலேயே மேற்குலக சக்திகள் சந்திரிகவின் உதவியுடன் மைத்திரிபால சிறிசேனவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உடைத்தெடுத்து அவரைப் பொது வேட்பாளர் ஆக்கியே வெற்றி பெற்றன.
இம்முறை மேற்குலக சக்திகளின் வியூகம் என்னவென்பது தெளிவாகவில்லை. ஆனால் 2015இல் தமக்குச் சாதகமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை எப்படியும் தக்க வைக்கவே அவர்கள் முற்படுவர் என்பது மட்டும் நிச்சயம். அதேநேரத்தில் ஐ.தே.க. சார்பில் ரணில் போட்டியிட்டால் வெற்றிபெறமாட்டார் என்ற சிறுபிள்ளைக்குக்கூட தெரிந்த உண்மை அவர்களுக்கும் தெரியாமல் இருக்காது.
ரணிலையும் சஜித்தையும் பொறுத்தவரை மக்கள் மத்தியில் சஜித்துக்கே ரணிலைவிட செல்வாக்கு அதிகம். ரணில் கொழும்பு நகர மேட்டுக்குடிவாசி. அவருக்கு சாதாரண பொதுமக்களின் பிரச்சினைகள் விளங்குவதில்லை என்பதற்கு இரண்டு உதாரணங்கள் கூறலாம்.
ஒருமுறை இலங்கையில் நோய்த்தாக்கம் காரணமாக வெற்றிலை உற்பத்தி பாதிப்படைந்து வெற்றிலையின் விலை அதிகரித்துவிட்டது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஒருவேளை உணவு இல்லாவிட்டாலும் வெற்றிலை போடாமல் இருக்கமாட்டார்கள். இதனால் அவர்கள் வெற்றிலை விலை உயர்வு பற்றி குறைகூற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது முறைப்பாட்டைக் கேட்ட ரணில், “வெற்றிலைக்குப் பதிலாக சுவிங்கத்தைச் சாப்பிடுங்கள்” என ஆலோசனை கூறினார்!
அதேபோல, ஒருமுறை அரிசி விலை அதிகரித்து மக்கள் அதை வாங்கச் சிரமப்பட்டபோது, “சோற்றுக்குப் பதிலாக பாணைச் சாப்பிடுங்கள்” என ரணில் ஆலோசனை கூறினார்!!
அவரது இந்த ஆலோசனை பிரான்ஸை ஆட்சி செய்த 14ஆம் லூயி மன்னனின் மனைவி சொன்னதைத்தான் ஞாபகப்படுத்தியது. அங்கு மக்கள் பாண் வாங்கிச்சாப்பிட வழியில்லாது தவித்த போது, மன்னன் லூயியின் மனைவி மக்களைப் பார்த்து, “பாண் வாங்க வசதியில்லாதுவிட்டால் கேக் வாங்கிச் சாப்பிடுங்கள்” என்று சொன்னாளாம். (பிரெஞ்சு புரட்சியின் போது மன்னனையும் மனைவியையும் கொன்ற புரட்சிவாதிகள், மன்னனின் மனைவியின் கழுத்தை வெட்டியபோது, “கேக் போல இருக்கிறது” என்று சொன்னதாக ஒரு கதை உண்டு)
சஜித்தைப் பொறுத்தவரை தனது தகப்பனார் ஆர்.பிரேமதாச போல கீழ்மட்ட மக்களுடன் நெருங்கிப் பழகுபவர். அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானதும் இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அம்பாந்தோட்டையில் இருந்துதான். அதன் காரணமாக அவருக்கு அடிமட்ட மக்களின் பிரச்சினைகள் ஓரளவு விளங்கும்.
ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான முரண்பாடு பிரதானமாக அதிகாரப் போட்டியே. ஏனெனில் சஜித் ஜனாதிபதியாகத் தெரிவானால் ஐ.தே.க. தலைமைப் பதவியும் இயல்பாக அவரையே சென்றடையும். அதன்பின்னர் ரணிலுக்கு அரசிலோ கட்சியிலோ எந்த அதிகாரமும் இல்லாமல் போய்விடும். சஜித் வைப்பதே சட்டமாக இருக்கும். சஜித் வழமையாக ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் சொல்வது போல தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் எனக் கூறவில்லை. எனவே அவர் அதிகாரத்துக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி தன்னை அரசியலிலிருந்தே ஓரம்கட்டி விடுவார் என்ற பயமும் ரணிலுக்கு இருக்கிறது.
இருவருக்குமிடையான போட்டியில் அதிகாரத்தை விட சாதிப் பிரச்சினையும் இருக்கிறது. ரணிலோடு ஒப்பிடுகையில் சஜித் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
1990இல் ஏறத்தாழ இதுபோன்ற ஒரு பிரச்சினையைத்தான் சஜித்தின் தந்தை ஆர்.பிரேமதாசவும் எதிர்நோக்கினார். 1977 முதல் 13 வருடங்களாக அதிகாரத்தில் இருந்த ரணிலின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்றபடியால் 1990இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வேறு ஒருவரை நிறுத்த வேண்டிய நிலையில் இருந்தார். தனக்கு அடுத்த நிலையில் பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாசவை நியமிப்பதற்கு ஜே.ஆருக்கு விருப்பமில்லை. ஆனால் பிரேமதாசவுக்கு கட்சி அடிமட்டத் தொண்டர்களிடம் இருந்த செல்வாக்கு காரணமாகவும், அவருக்கு இருந்த அடியாட்கள் ஆதரவு காரணமாகவும் இறுதியில் ஜே.ஆர்., பிரேமதாசவுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்றும் அதே நிலைமைதான் தோன்றியுள்ளது. ஜே.ஆரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்க, ஆர்.பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவுக்கு சந்தர்ப்பம் வழங்க விரும்பாமல் முரண்டு பிடிக்கிறார். ஒருவேளை பலரின் நிர்ப்பந்தம் காரணமாக (வெளிநாட்டு சக்திகள் உட்பட) ரணில் தமது கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக சஜித்தை நியமிக்க சம்மதித்தாலும், எதிரணியால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்குக்கு முன்னால் அவரால் ஈடுகொடுக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Source: Vaanavil 104 

No comments:

Post a Comment

The UK and the Pandora papers: A cesspit of the super-rich by Thomas Scripps

  No one in the UK needed to be told that the Johnson government is beholden to the interests of the super-rich. Indeed, it is a government ...