அரசாங்கம் ஜே.வி.பி. மூலம் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டதா எதிர்க்கட்சி?

லங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி நடத்தும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜனதா விமுத்தி பெரமுனவினால் (மக்கள் விடுதலை முன்னணி – ஜே.வி.பி.) கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் 27 மேலதிக வாக்குகளால் தோற்றுப்போனது. இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
ஏனெனில், ஐ.தே.க. அரசாங்கத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதன் பாரம்பரிய சகபாடியான தமிழ்த்தலைமை – தற்போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – முண்டு கொடுத்து காப்பாற்றிவிடுவது வழமை. இந்தமுறையும் அதுதான் நடந்தது.


எதிரணிக்கு 95 உறுப்பினர்கள்வரை இருந்தும், அதனுடன் சேர்த்து ஜே.வி.பியின் 6 உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்தும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு 92 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. அதேநேரம் தீர்மானத்துக்கு எதிராக 119 பேர் வாக்களித்துள்ளனர். 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதற்குக் காரணம், எதிரணியைச் சேர்ந்த சில முக்கியமான உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. முக்கியமாக அரசை கடுமையாக எதிர்த்து வரும் பிவிதுரு ஹெலஉருமயவின் தலைவர் உதய கம்மன்பில வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளாமைக்கான காரணம் என்னவென இதுவரை தெரியவராதபோதிலும், ஐ.தே.கவை எதிர்க்கும் அதேயளவுக்கு கம்மன்பில ஜே.வி.பியையும் எதிர்ப்பதால், ஜே.வி.பி. கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீரமானத்தை அவர் ஆதரிக்காமல் விட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வாக்களிப்பில் கலந்துகொள்ளாத இன்னொரு முக்கிய பிரமுகர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க. அவர் கலந்து கொள்ளாதது புதுமையல்ல. ஏனெனில் அவர் சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவிகள் வகித்துக்கொண்டே ஐ.தே.கவுக்காக வேலை செய்து வருபவர்.
வாக்களிப்பில் கலந்துகொள்ளாத இன்னொருவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர. அவர் கலந்து கொள்ளாமைக்கான காரணமும் என்னவெனத் தெரியவரவில்லை. ஆனால் ஏனைய இடதுசாரிக்கட்சிகளான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவை போல கம்யூனிஸ்ட் கட்சி எதிரணியுடன் எல்லா விடயங்களிலும் ஒன்றுபட்டுச் செயற்படாதது ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வாக்களிப்பில் கலந்துகொள்ளாத இன்னொருவர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. தேவானந்தா எதிரணியுடன கூட்டுச்சேராமல் சுயாதீனமாகச் செயற்படுவதால் அவர் வாக்களிப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருக்கலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவரது கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பிலிருந்து விலகிவிட்டதால் அவர் கூட்டமைப்புடன் சேர்ந்து செயல்படுவதைத் தவிர்த்து வருகின்றார்.
வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்களில் பலரினதும் கவனத்தை ஈர்த்தவர் மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன். அவர் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக அங்கத்துவம் வகித்துக்கொண்டே தனது அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக அரசுடன் சேர்ந்து வாக்களிக்காதது ஏன் என்பது பலருக்கும் வியப்பாக உள்ளது.
அதேநேரத்தில், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இரண்டு உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஜே.வி.பி. ஏன் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ரணில் அரசுக்கு எதிராகக் கொண்டுவந்தது என்பதும், அதனால் என்னத்தை அது சாதித்தது என்பதும் கவனமாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
ஏனெனில், ‘நல்லாட்சி’ என்ற பெயரில் இந்த ஏகாதிபத்திய சார்பு, மக்கள் விரோத அரசாங்கம் 2015 ஓகஸ்டில் ஆட்சிக்கு வந்தது முதல், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்றே அரசாங்கத்துக்கு பல்வேறு வகைகளில் ஜே.வி.பியும் முண்டுக்கொடுத்தே வந்திருக்கிறது. அரசை எதிர்ப்பதைவிட மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிரணியை எதிர்ப்பதிலேயே ஜே.வி.பி. அதிக அக்கறை காட்டி வந்துள்ளது.
கடந்த ஆண்டு (2018) ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பு தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைவாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த பொழுது, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் சந்தர்ப்பவாதத் தலைமைகள் என்பனவற்றுடன் சேர்ந்து ஜே.வி.பியும் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஐ.தே.கவுக்கு ஆதரவாகவும் கைகோர்த்துச் செயல்பட்டது. அது ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரத்துக் குரல் கொடுத்ததுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தையும் அணுகியது.
இப்படியாக அரசின் ஐந்தாம்படையாகச் செயற்பட்ட ஜே.வி.பி., திடீரென தலைகீழ் நிலை எடுத்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயற்சித்தது ஏன் என்ற கேள்வி முக்கியமானது. ரணில் அரசாங்கம் இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் நடத்திய குண்டுத்தாக்குதல்களை தடுக்கத் தவறியதே தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் காரணம் என்று ஜே.வி.பி. தனது செயலுக்குக் காரணம் கூறுகிறது. அது உண்மைதானா அல்லது வேறு ஏதாவது மறைமுகக் காரணங்கள் இருக்கின்றனவா?
ஜே.வி.பியின் நடவடிக்கைக்கு சிலர் கூறும் காரணம், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஜே.வி.பி. அரசுக்கு பலவழிகளிலும் முண்டுகொடுத்து வந்ததால், மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுவதால் ஜே.வி.பி. இப்படியொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து நாடகமாடியுள்ளது என்பதாகும். இதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மை இதுமட்டுமல்ல.


ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கருதப்பட்ட சில முஸ்லீம் அமைச்சர்கள் மீதும், ஆளுநர்கள் மீதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. குறிப்பாக, அமைர்சர் ரிசாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவரை அமைச்சர் பதவிலிருந்து நீக்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கை ஏறக்குறைய முழுநாட்டு மக்களாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் ரணிலின் அரசாங்கம் ரிசாத் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது. இந்தச் சூழ்நிலையில் ரிசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தினதேரர் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவரது உண்ணாவிரதம் நாட்டு மக்களிடையே அரசுக்கு எதிரான கொந்தளிப்பை உருவாக்கியது.
இந்தச் சூழ்நிலையில்தான், எதிர்க்கட்சி ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்தத் தீர்மானம் முன்னைய நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களைப் போலல்லாது அரசாங்கத்தின் சில உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று வெற்றிபெறக்கூடிய சூழல் தோன்றியது.
ஆனால் ஜே.வி.பி. ரிசாத்துக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராகவே கருத்துத் தெரிவித்து வந்தது. அந்தத் தீர்மானம் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாதம் என ஜே.வி.பி. விமர்சித்தது. அந்தத் தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஜே.வி.பி. அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற இன்னொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஜே.வி.பியின் இந்த நடவடிக்கை ஐ.தே.கவின் இன்னொரு சூழ்ச்சி என்பதை ஒருசிலர் மட்டுமே உய்த்துணர்ந்து அம்பலப்படுத்தினர்.
ஆனால் எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத்தீர்மானம் வெற்றிபெறலாம் எனக்கருதிய அரசாங்கம், முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து ஒரு சூழ்ச்சித்திட்டத்தைத் தயாரித்து முஸ்லீம் அமைச்சர்கள் அனைவரையும் கூட்டாக பதவி விலக வைத்து எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை செயலிழக்க வைத்தது.
எதிர்க்கட்சியின் ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் முஸ்லீம் அமைச்சர்களின் ஒட்டுமொத்த பதவி விலகலால் செயலற்றுப்போய் அரசாங்கம் பாதுகாக்கப்பட்டுவிட்ட சூழலில் ஜே.வி.பி. அரசுக்கு எதிராக போலியாகக் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிலுவையில் இருந்து வந்தது. அரசாங்கம் தப்பிவிட்டது என்ற காரணத்துக்காக தனது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜே.வி.பி. திரும்பப்பெற்றால் ஜே.வி.பியின் கபட நாடகம் அம்பலமாகிவிடும் என்பதால் ஜே.வி.பியால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில் ஜே.வி.பி. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருப்பதால் அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சுலபமாகத் தோற்கடித்துவிடும் என்பது ஜே.வி.பிக்கு நன்கு தெரியும்.
ஆனால் ஐ.தே.கவும் ஜே.வி.பியும் சேர்ந்து ஆடிய இந்தக் கபட நாடகத்தில் சிக்கிக்கொண்டது மகிந்த தலைமையிலான எதிர்க்கட்சிதான். அவர்கள் தமது அரச எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஜே.வி.பி. கொண்டுவந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்து தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டனர். ஜே.வி.பியின் சதி நோக்கத்தை புரிந்துகொண்டதால்தான் சிலர் தமது மனச்சாட்சிப்படி ஜே.வி.பியின் சதியில் அகப்படாமல் தவிர்ப்பதற்காக வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என எண்ணுவதில் தப்பில்லை.
மொத்தத்தில் மீண்டுமொருமுறை ரணில் அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் ஜே.வி.பியினதும் உதவியுடன் தனது ஆட்சியைத் தொடர்வதற்கான சூழலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் முன்னைய காலங்களைவிட ஒரு வித்தியாசம் என்னவெனில், இம்முறை ஜே.வி.பி. வழமைக்கு மாறாக ரணில் அரசுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழமைப்பிரகாரம் அரசுக்கு ஆதரவாகவும் செயற்பட்டு இருவரினதும் ஒரே நோக்கமான ஐ.தே.க. அரசைப் பாதுகாப்பதை நிறைவேற்றியுள்ளன.

மூலம்: வானவில் 104

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...