நாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை


லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு, இலஞ்சம் ஊழலின் அதிகரிப்பு, அதிகாரத் துஸ்பிரயோகம், பொதுச் சொத்துகள் தனியார்மயமாக்கம், வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகள் அதிகரிப்பு, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை என இவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நாட்டு மக்கள் அனைவரும் பொதுவாக எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் எதிர்நோக்கும் பிரத்தியேகப் பிரச்சினைகளும் இருக்கின்றன.
குறிப்பாக, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். சுமார் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் 2009 மே மாதத்தில் யுத்த அவலத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் இவர்களது அன்றாட பிரச்சினைகளே இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளது.

இதுதவிர, இவர்களது அரசியல் தலைமை தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த நான்கு வருடங்களாக கூடிக்குலவி வருகின்றபோதும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனத்துவம் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமலே உள்ளன.
மாகாண சபைகள் இயங்கிய போதிலும் அவைகளுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இப்பொழுது அந்த மாகாண சபைகளும் காலாவதியான நிலையில் அவற்றுக்கான தேர்தலையும் நடத்தாமல் அரசாங்கம் பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி இழுத்தடித்து வருகின்றது.
கடந்த அரசாங்க காலத்தில் வடக்கு கிழக்கில் ஓரளவு அபிவிருத்தி வேலைகள் துரிதகதியில் நடைபெற்ற போதிலும், தற்பொழுது எந்திவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையே உருவாகி இருக்கின்றது.
இதுதவிர வேலைவாய்ப்பு விடயங்களிலும் பாகுபாடு காண்பிக்கப்படும் நிலை தொடர்கின்றது. இதனால் வேலையற்ற இளைஞர்கள் வன்முறைக் கலாச்சாரத்தில் ஈடுபடும் நிலை தோன்றியுள்ளது.
இப்படியான பொதுவாhனதும் குறிப்பானதுமான நிலைமைகள் ஒருபுறமிருக்க, இந்த நிலைமைகளுக்கு எல்லாம் அடிப்படையாக நாட்டின் அரசியல் உறுதியற்ற தன்மையே பிரதான காரணமாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னேற வேண்டுமானால் அந்த நாட்டில் அரசியல் உறுதிப்பாடு இருப்பது அவசியமானது. ஆனால் துரதிஸ்டவசமாக 2015 ஜனவரிக்குப் பின்னர் அந்த நிலைமை எமது நாட்டில் இல்லாமல் போய்விட்டது.
அதன் காரணமாக நாட்டில் பயங்கரவாதச் செயல்கள், போதைவஸ்து பாவனை, குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகள் பெரும் அளவில் தலைவிரித்தாடுகின்றன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் சில இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களும், அதனால் பல மக்கள் இறந்தமையும் பெருமளவு மக்கள் காயமடைந்தமையும் இதற்கு உதாரணம்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு ஏகாதிபத்திய மேற்குலக சக்திகளே துணைபுரிந்தன. அவற்றின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாட்டின் பாதுகாப்புத்துறையை அரசாங்கம் பலவீனப்படுத்தியதினால் வந்த வினையே இதற்கான காரணம்.
30 வருட உள்நாட்டுப் போரால் சீரழிந்து போயிருந்த ஒரு நாட்டில் யுத்தம் முடிவடைந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பாதுகாப்புத்துறை பலமாகவும் விழிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியமானது. ஏனெனில் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் மீண்டும் தலைதூக்க முற்படுவது எந்தவொரு நாட்டிலும் இயல்பானது. அதுமட்டுமல்லாது, யுத்த கலாச்சாரத்தமால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இளைஞர்கள், யுத்தம் முடிவடைந்தாலும் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.
இதற்கு ஒரு உதாரணம், வடக்கில் உருவாகியுள்ள ‘ஆவா குழு’ எனப்படும் ஒரு வன்முறைக்குழுவின் தோற்றமும், ஏனைய சிறுசிறு வன்முறைக் குழுக்களின் தோற்றமும் ஆகும்.
அரசாங்கம் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆனபின்பும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணாமல் இழுத்தடித்து வருவதின் காரணமாக வடக்கு கிழக்கில் மட்டுமின்றி, முழு நாட்டிலும் அரசியல் உறுதியற்ற தன்மை நிலவி வருகின்றது.
இதன் காரணமாக குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை சில தீய சக்திகள் தவறான வழியில் இழுத்துச் செல்ல முற்படுவதைக் காண முடிகிறது.
காணாமல் போனோரைக் கண்டு பிடிக்கும் போராட்டம், சிறையில் உள்ள தமிழ் பயங்கரவாத சந்தேக நபர்களை விடுவிக்கும் போராட்டம், இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் போராட்டம், தமிழ் பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கெதிரான போராட்டம், இப்படியாகப் பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களின் போது அப்பாவிப் பொதுமக்கள் அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் கொடிகளை ஏந்த வைக்கப்பட்டுள்ளனர். தேசிய ஒடுக்குமுறைக்கு பல ஆண்டுகளாக உள்ளாக்கப்பட்ட ஒரு மக்கள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்தையும், சுரண்டலையும் மேற்கொண்ட ஏகாதிபத்திய சக்திகளின் கொடிகளைத் தாங்கி நிற்பது என்பது அந்த மக்கள் திட்டமிட்ட முறையில் திசை மாற்றப்பட்டுள்ளதையே எடுத்துக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் அத்திபாரமாக அமைந்தது 2015 ஜனவரி 8இல் அமைந்த ஆட்சி மாற்றமே.
அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் தலைமைக்கும் பாரிய பங்கு இருந்தது. அந்த தலைமை கடந்த நான்கு வருடங்களாக பொதுவாக நாட்டுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கும் பாரிய நாசம் விளைவிக்கும் இன்றைய அரசாங்கத்தை நிபந்தனை எதுவுமின்றி பாதுகாத்து வருகின்றது. இனிமேலும் பாதுகாக்கும் எண்ணத்துடன் இருக்கின்றது. அவர்கள் இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்துச் செயல்பட்டிருந்தால் இந்த நிலைமை தோன்றியிருக்காது.
இலங்கை உலக வரைபடத்தில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது. அதன் காரணமாக உலக வல்லரசு ஆதிக்கப் போட்டியில் அதன் வகிபாகம் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கின்றது.
அமெரிக்கா தலைமையிலான உலக வல்லாதிக்க சக்திகள் இலங்கையை தமது செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு நாடாக வைத்திருக்கவே எப்பொழுதும் விரும்பி வந்திருக்கின்றன. அதன் காரணமாகவே 1948 பெப்ருவரி 4ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமக்கு விசுவாசமான பிற்போக்கு ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் இருத்திச் சென்றது.
ஆனால் இலங்கை மக்களின் தேசிய சுதந்திர உணர்வையும், தன்னாதிக்க சிந்தனையையும் புரிந்து கொண்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி 1956இல் ஐ.தே.கவை தூக்கி எறிந்து ஏகாதிபத்திய விரோத அரசொன்றை நிறுவினார். அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த அக்கட்சி தலைமையிலான ஒவ்வொரு அரசும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகளாகவே இருந்து வந்துள்ளன.
இதன் காரணமாகவே, ஏகாதிபத்திய சார்பு சக்திகள் 1957இல் பண்டாரநாயக்கவை கொலை செய்தன. அவர் இறந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவரது மனைவி சிறீமாவே பண்டாரநாயக்கவின் அரசை 1962இல் இராணுவச் சதி மூலம் கவிழ்க்க முயன்றன. பின்னர் 1970இல் பெரும் மக்கள் ஆதரவுடன் உருவான அவரது அரசை 1971இல் ஜே.வி.பி. என்ற எதிர்ப் – புரட்சி இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி மூலம் கவிழ்க்க முயன்றன. அது தோற்ற பின்னர் 1972 முதல் தமிழ் பிரிவினைவாதிகளின் மூலம் தனித்தமிழ் நாட்டுக்கான போராட்;டத்தை முடுக்கிவிட்டனர். அது 30 வருடப் போராக மாறி நாட்டை சின்னாபின்னப்படுத்தியது. அந்தப் போரையும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசே முடிவுக்குக் கொண்டு வந்தது.
அதன் பின்னர் அந்த அரசு நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் வேகமாக முனனெடுத்துச் செல்கையில், அரசியல் சதி மூலம் 2015இல் அவ்வரசைக் கவிழ்த்து தமக்கு இசைவான அரசொன்றை நிறுவிக் கொண்டன. அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை நிர்மூலம் செய்து தமக்கு ஏற்ற சூழலை உருவாக்கி வருகின்றன.
எனவே இன்றைய தேவை நாட்டின் தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும் பேணக்கூடிய உறுதியான அரசொன்றை மீண்டும் உருவாக்குவதே. அப்படிப்பட்ட ஒரு அரசொன்றை வெறுமனே இராணுவமயமாக்கலின் மூலம் உருவாக்கிவிட முடியாது. அத்தகைய அரசு நாட்டு மக்கள் அனைவரினதும் ஜனநாயக சுதந்திரங்களையும், குறிப்பாக சிறுபான்மை தேசிய இனங்களின் இனத்துவ மற்றும் மத உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய அரசாக இருக்க வேண்டும்.
அத்தகைய ஒரு அரசைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த வாய்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி பயன்படுத்திக் கொள்வதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

மூலம் : வானவில் இதழ் 104 2019

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...