Sunday, 8 July 2018

இலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது!


லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையை விட்டுப் புறப்பட இருக்கிறார். அதற்கு முதல் வழமைப் பிரகாரம் இலங்கையின் அரசியல் பிரமுகர்களைச் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்து வருகிறார். வழமையாக இந்தச் சந்திப்பு ஆட்சியில் இருப்பவர்களுடனும், எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடனும் மேற்கொள்ளப்படுவதுதான் சம்பிரதாயம். ஆனால் அமெரிக்கத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிணைந்த எதிரணியின் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான மகிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார்.

அமெரிக்கத் தூதுவர் ராஜபக்சவைத் தேடிச் சென்று நீண்ட நேரம் உரையாடியமைக்கு இரண்டு காரணங்கள் ஏதுவாக இருந்துள்ளன.


ஒன்று, திட்டமிட்ட சதி மற்றும் சூழ்ச்சிகள் மூலம் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அவரது தனித்துவமிக்க ஆளுமை காரணமாக அவரே இலங்கையின் முதல்தர மக்கள் அபிமானம் பெற்ற தரைவராக இன்னமும் இருக்கிறார் என்பதாகும்.

இரண்டாவது, இலங்கை மக்களில் மிகப் பெரும்பான்மையானோர் ராஜபக்சவையே தமது இரட்சகராக இவ்வருடம் பெப்ருவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் மூலம் தெரியப்படுத்தியிருக்கும் களநிலவர யதார்த்தமாகும்.
2015 ஜனவரித் தேர்தலின் போது ராஜபக்சவை தோற்கடிப்பதில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும், இந்தியாவும் பின்னணியில் இருந்து திட்டங்கள் தீட்டிச் செயற்பட்டதாகவே பெரும்பாலோர் கருதுகின்றனர். மகிந்த ராஜபக்ச கூட சில சந்தர்ப்பங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் மேற்கொள்வதற்குப் போட்ட திட்டங்கள் எதுவும் பூரண வெற்றியைத் தரவில்லை. ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதும், பரம எதிரிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரையும் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டரசாங்கமும் அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தராதது மட்டுமின்றி, இலங்கையில் இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்களிலேயே மக்களின் அதிக வெறுப்பைக் கொண்ட அரசாங்கமாகவும் இன்றைய அரசாங்கமே இருக்கின்றது.
இத்தகைய ஒருசூழ்நிலையில்தான், அமெரிக்க தூதுவர் கெசாப் ராஜபக்சவை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதாவது அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு வழமையான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு என்பதற்கும் அப்பால், தம்மால் வெறுக்கப்பட்ட ஒருவர் விரும்பியோ விரும்பாமலோ அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு சக்தியாகவும் இருக்கிறார் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதாகவும் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கையில் அடுத்ததாக அமையப் போகும் (அது பெரும்பாலும் ராஜபக்ச அணியின் அரசாங்கமாக இருக்கும் என்பதுதான் உள்நாட்டு – வெளிநாட்டு அபிப்பிராயமாக இருக்கின்றது) அரசாங்கத்துடன் எவ்வாறு நடந்து கொள்வது என்ற ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், ராஜபக்ச – அமெரிக்க தூதுவர் சந்திப்பு நிகழ்ந்துள்ளமை இன்னொரு பரிமாணமாகும்.
ஏனெனில், இந்தச் சந்திப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களிலும், ஊடகங்களிலும் இன்று அதிகமாகப் பேசப்படுகின்றது. அப்படிப் பேசப்படுவதற்குக் காரணம், ராஜபக்சவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர், ராஜபக்சவின் இளைய சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை எதிரணியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடாது என வலியுறுத்தியதாகவும், அதையும் மீறி அவரை நிறுத்தினால் அமெரிக்கா அதைத் தடுத்து நிறுத்தும் என எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்ததின் காரணமாகவே.
அமெரிக்கத் தூதுவர் அவ்வாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியிருந்தால், அது மிகவும் கண்டனத்துக்குரியதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் என்பது ஒருபுறமிருக்க, அடுத்த ஜனாதிபதி மகிந்த அணியைச் சேர்ந்தவர்தான் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும் இருக்கின்றது.

இலங்கை 1948 பெப்ருவரி 4 ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்பு, நமது நாடு சுதந்திரமும், சுயாதிபத்தியமும், இறைமையும் கொண்ட ஒரு சுதந்திர நாடு. இலங்கை மக்களுக்கு எவ்வாறான அரசியல், பொருளாதார, கலாச்சார கட்டமைப்பு தேவை அல்லது பொருத்தமானது என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்கும் தகைமை உடையவர்கள். வேண்டுமானால் நேச நாடுகள் இலங்கைக்கு தமது ஆலோசனைகளையும், உதவிகளையும் தன்னலம் கருதாது வழங்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் இலங்கை எப்படிச் செயல்பட வேண்டுமென அந்நிய நாடுகள் உத்தரவிட முடியாது. அப்படிச் செயல்பட்டால் அது இலங்கையின் இறைமையை மீறிய செயலாகவே கருதப்படும்.
ஆனால், கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி நிலைமை அவ்வாறாக இல்லை என்பதே தூரதிஸ்டவசமான உண்மையாகும். இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப ஆண்டுகளில் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு இலங்கையின் விவகாரங்களைத் தீர்மானிக்கும் நிலையில் இருந்தது. அந்த நிலையை 1956 இல் ஏற்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான தேசபக்த அரசும், அதன் பின்னர் அவரது துணைவியார் தலைமையில் இடதுசாரிக் கட்சிகளுடன் அமைந்த கூட்டரசாங்கங்களும் ஓரளவு நீக்கின.

பிரித்தானிய முடியரசுடனான பிடியை இலங்கை ஓரளவு விடுவித்துக் கொண்டாலும், பின்னர் நவ காலனித்துவ முறையின் கீழும், உலகமயமாக்கலின் கீழும் அந்த இடத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஒருபுறமும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் பிடித்துக் கொண்டன. இந்த அந்நிய வல்லாதிக்க சக்திகளின் ஆதிக்கத்துக்கு வசதியாக இலங்கையின் படுபிற்போக்கான தரகு முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பிற்போக்கு இனவாத தமிழ்த் தலைமைகளும் செயற்பட்டும் வந்துள்ளன.

அதன் காரணமாக, இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல் மாற்றங்களிலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், இந்தியாவும் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளன. இலங்கையில் பெரும் அழிவை ஏற்படுத்திய 30 வருட இனவாத யுத்தத்துக்கும் இவ்விரு சக்திகளுமே காரணம். யுத்தத்தை பெரும் பிரயத்தனங்கள், அர்ப்பணிப்புகள் மத்தியில் முடிவுக்குக் கொண்டு வந்த பின்பும், இலங்கையை முன்நோக்கி நகர விடாமல் வைத்திருப்பதும் இந்த இரு சக்திகளும்தான்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், 2015 ஜனவரி முதல் நாட்டை அழிவுப்பாதையில் இழுத்துச் செல்லும் நாசகார சக்திகளிடமிருந்து அதை மீட்டெடுக்கும் நம்பிக்கைக் கீற்று பெப்ருவரி 10 உள்ளுராட்சித் தேர்தல் மூலம் வெளிப்பட்டது. அந்த வெளிப்பாடு நிச்சயமாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகையும், இந்தியாவையும் கலங்கடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் வெளிப்பாடே அமெரிக்க தூதுவர் மகிந்த ராஜபக்சவுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எனக் கருதுவதற்கு இடமுண்டு.

அமெரிக்கத் தூதுவரின் இந்தக் கருத்துக்கள் ஒரு எச்சரிக்கை சமிக்ஞைதான். இந்தச் சமிக்ஞை எதிர்காலத்தில் இலங்கை மக்கள் எதிர்கொள்ளப்போகும் இடர்ப்பாடுகளுக்கான ஒரு கட்டியம் கூறலே.

எது எப்படியிருப்பினும், இலங்கை மக்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதற்கு எந்தவொரு உள்நோக்கம் கொண்ட அந்நிய நாட்டுக்கும் இடமளிக்க முடியாது. இடமளிக்கவும் கூடாது.
இப்படியான வெளிநாட்டுத் தலையீடுகள், அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு மட்டும் உரியனவல்ல. முதற் தடவையும் அல்ல. எனவே இலங்கை முன்னைய காலங்களில் செய்ததைப் போல, ஏனைய பல நாடுகள் செய்ததைப் போல, இப்படியான நெருக்கடியான நேரங்களில் நாட்டின் அனைத்து தேசபக்த சக்திகளையும் ஓரணியில் திரட்டி, தீய சக்திகளின் திட்டங்களை முறியடிக்க வேண்டியது முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் தலையாய வரலாற்றுக் கடமையாகும்.
Source: Vaanavil - 90 -2-18 


No comments:

Post a comment

Biden’s Drone Wars BY BRIAN TERRELL

  On Thursday, April 15, the   New York Times   posted an  article   headed, “How the U.S. Plans to Fight From Afar After Troops Exit Afghan...