த.தே.கூட்டமைப்பினதும் ஜே.வி.பியினதும் கபட நாடகம்!- -பி.வீ


தம்மை எதிர்க்கட்சியினர் என மாய்மாலம் செய்யும் தமிழ் தேசியக்
கூட்டமைப்பும், ஜே.வி.பியும் மீண்டுமொருமுறை தமது ஐக்கிய
தேசியக் கட்சி சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமது உண்மையான
சுயரூபத்தை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திலங்க சுமதிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததின் காரணமாக பதவி விலக வேண்டி ஏற்பட்டது. அவரது இடத்துக்கு புதிதாக பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

வழமையாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் சபாநாயகராக இருப்பதால்
பிரதி சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும் மரபு பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் ஆட்சி முறையைப் பின்பற்றும்
இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே
ஐ.தே.கவைச் சேர்ந்த கரு ஜெயசூரிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட
போதுää பிரதி சபாநாயகர் பதவி சிறீ.ல.சு.கவைச் சேர்ந்த திலங்க
சுமதிபாலவுக்கு வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில் அண்மையில் பிரதி சபாநாயகர் வெற்றிடம் ஏற்பட்ட
போது, அந்தப் பதவியை சிறீ.ல.சு.கவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயன் இராமநாதனுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை அக்கட்சி வெளியிட்டது. ஆனால் தமிழரின் ஒற்றுமை பற்றி வாய்கிழியக் கூச்சலிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்
காழ்ப்புணர்வுடன் அதை எதிர்த்ததால், பின்னர் எதிரணி டொக்டர் திருமதி
சுதர்சினி பெர்னாண்டோபிள்ளை (புலிகளால் சில வருடங்களுக்கு முன்னர் மனித வெடிகுண்டினால் படுகொலை செய்யப்பட்ட சுதந்திரக் கட்சி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் மனைவி) அவர்களைத் தமது வேட்பாளராக அறிவித்தது. நாடாளுமன்ற மரபுகளுக்கு இணங்க
சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை அனைத்துக் கட்சியினரும் ஏகமனதாக
பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஜனநாயகம் பற்றி உரத்துப் பேசும் ஐ.தே.க. சுதர்சினிக்கு எதிராக தனது நாடாளுமன்ற
உறுப்பினரான ஜே.எம்.ஆனந்த குமாரசிறி என்பவரைப் போட்டிக்கு நிறுத்தியது.

அங்கயன் இராமநாதனின் நியமனத்தை எதிர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு,சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தது. ஜே.வி.பியும் அவரை ஆதரிக்கும் என அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் கதை வேறு மாதிரி நடந்து முடிந்துள்ளது. தமது அரசியல் சகபாடியான ஐ.தே.கவின் வேட்பாளரை பகிரங்கமாக ஆதரித்தால் தமது சாயம் கழன்றுவிடும் என அஞ்சிய தமிழ் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் கபடத்தனமான முறையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததின் மூலம் ஐ.தே.க. வேட்பாளர் பிரதி சபகாநாயகர் தெரிவில் வெற்றி பெறுவதற்கு நயவஞ்சகமான முறையில் மறைமுகமாக உதவியுள்ளனர்.

கூட்டமைப்பு சுதர்சினியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு பின்னர் ஏன்
வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு இன்றுவரை விளக்கம் எதுவும் அளிக்கவுமில்லை (வழமையாக எடுத்ததெற்கெல்லாம் முந்திக் கொண்டு வாய்ச்சவடால் அடிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளரும்ää ஐ.தே.க. -
கூட்டமைப்பு ‘கலியாண’ தரகருமான எம்.ஏ.சுமந்திரன் கூட இந்த விடயத்தில்
வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துக் கொண்டு இருக்கிறார்).
கூட்டமைப்பைப் பொறுத்தவரை அது உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் ஒரு அங்கம் போலச் செயற்படுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அவர்கள் கட்டிக்காக்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற மரபைப் போலியாகக்
காப்பாற்றுவதற்குத் தன்னும் எதிரணியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்வதையே விரும்பாத அளவுக்கு அவர்களது ஒருகட்சிச் சர்வாதிகார மனோபாவம் இந்த விடயத்தில் வெளிப்பட்டுள்ளது.
ஜே.வி.பியும் கூட்டமைப்பின் அடிச்சுவட்டையே அப்பட்டமாகப் பின்பற்றியுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற போர்வையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆனி 2018 7 அதிகாரங்களைப் பறித்து,  அவற்றை
ஐ.தே.க. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் ஒப்படைப்பதற்காக அரசியல் அமைப்புக்கு 20ஆவது திருத்தம் ஒன்றை கபடத்தனமான முறையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் ஜே.வி.பியிடம் இருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். (சந்திரிக ஆட்சியின் போது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியின்
பங்காளிகளாகவும் இருந்தவர்கள், அப்பொழுது செய்யாததை இப்பொழுது 7
உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு ‘வானத்தைக் கயிறாகத்
திரிக்க’ப் புறப்பட்டிருப்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்).

ஜே.வி.பியினர் இந்த விடயத்தில் மட்டுமின்றி முக்கியமான ஒவ்வொரு
விடயத்திலும் கபட நோக்கத்துடனும்,சந்தர்ப்பவாத ரீதியிலும் செயல்பட்டு
வந்திருப்பதை அவர்களது வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்குப் புரியும்.
தொடர்ச்சியாக இப்படிச் செய்பவர்கள் குறைந்தபட்சம் தாம் அணிந்திருக்கும் சிவப்புச் சட்டைகளையும்,  சோசலிச முகமூடியையும் கழற்றி வீசிவிட்டு தமது கபடச் செயல்களைச் செய்வது நல்லது.
அதேநேரத்தில் இந்தப் பிரதிச் சபாநாயகர் தெரிவின் போது சுதர்சினி
பெர்னாண்டோபிள்ளைக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளைப் பார்க்கும்
போது,  ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களில் சிலர் ஐ.தே.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதும் அவர்களில் சிலர் வாக்களிப்பில் கலந்து
கொள்ளாதிருந்ததும் தெரிய வருகிறது. அவர்கள் அப்படி நடந்து
கொண்டிருப்பது மைத்திரியின் ஆசிர்வாதத்துடன்தான் என மக்கள்
சந்தேகிப்பதில் நியாயமிருக்கிறது.

ஏனெனில் அவரது வரலாறு அப்படி சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையைத்
தோற்கடித்ததின் மூலம் இந்தக் கயவர்கள் தாம் வணங்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக மரபைத் தாமே காலில் போட்டு மிதித்துள்ளதுடன், இலங்கையின் வரலாற்றில் பெண் ஒருவர் முதற்தடவையாக நாடாளுமன்றப் பிரதிச் சபாநாயகராவதையும் தட்டிப் பறித்துள்ளனர். இந்தக் கபட அரசியல்வாதிகள் தமது பதவிகளையும்ää சுகபோகங்களையும்
பாதுகாக்க என்னவிதமான ஈனச் செயல்களிலும் ஈடுபடலாம். ஆனால்
சந்தர்ப்பம் வரும்போது மக்கள் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில்
வைக்கத் தவறமாட்டார்கள். ஏற்கெனவே பெப்ருவரி 10இல் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அவர்கள் அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
-பி.வீ
மூலம்: வானவில் ஜூலை 2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...