ஒரு இலங்கையனின் ஈடு செய்யமுடியாத இழப்பு : கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் எஸ்.எம்.எம்.பஷீர்



( 02 திகதி செப்டம்பர் மாதம் 2017 இல்  காலமான  கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் குறித்து எனது நினவுப் பகிரல்  )



"நாங்கள் இலங்கையர்கள் என்று வரவேற்கப்பட வேண்டும்
நாங்கள் அதை இயன்ற அளவு விரைவாக செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்
ஒரு இலங்கை தமிழராக அல்லாது ஒரு தமிழ் இலங்கையனாக இருக்க விரும்புகிறேன்"  டாக்டர் ராஜசிங்கம் நரேந்திரன்                        
                                               
       
                                                       

திரு ராஜசிங்கம் நரேந்திரன் கால்நடை வைத்தியத்துறையில் பட்டம் பெற்றவர் கனடாவில் பிரயோக உடலியல் உட்சுரப்பியல் ( physiology and endocrinology ) ஆகிய துறைகளில்  கலாநிதி பட்டம் பெற்றவர்  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். சுமார் ஒரு கால் நூற்றாண்டுக்கு மேலாக சவூதி அரேபியாவில் உள்ள கிங் பைசல்  பல்கலைக்கழகத்தில் (King Faisal University )    இணைப் பேராசிரியராக கடமையாற்றியவர்.  உயர்ந்த கல்வியும் , அதிக ஊதியம் தரும் தொழிலும் வகித்த பொழுதிலும் , “தான் உண்டு தன் பாடுண்டு” என்றில்லாமல் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிராக நடுநிலைமையோடு  தனது குரலை தனது எழுத்துக்கள் மூலம் மிக காத்திரமாகவே  இடையறாது பதிவு செய்து, அதற்கு துணை போன இனவாத அரசியல் சக்திகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயற்பட்டு வந்தவர்.

இலங்கையில் சமாதானமும் இன ஐக்கியமும் மிளிர வேண்டும்  என்ற உயரிய நோக்குடன்  இன ஐக்கியத்துக்கு குந்தகம் விளைவித்த சகல வன்முறைகளையும் , கருத்தியல்களையும்  மிகத்  துணிகரமாக எதிர்த்தவர். அதன் விளைவாய்  தமிழ்தேசியவாதிகளின்  வக்கிரங்களை எதிர்கொண்டவர். எந்த சந்தர்ப்பத்திலும் அமைதியாக , நாகரீகமாக எதிர்ப்புக்களை  சமாளிக்கும் திறன் பெற்றிருந்தவர்.  புலிகளின் தோல்வியின்  பின்னர் பல மிதவாத தமிழர் கல்விமான்களுக்குள்ளும் , அறிவுசீவிகளுக்குள்ளும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான போக்கு ஒரு சிங்கள இனவாத போக்காக கிளைவிட்டு போதும், புலிகளின் அழிப்பு குறித்து ஒரு விசாரம் ஏற்பட்ட பொழுதும்மிக நிதானமாக தான் ஒரு  இலங்கை தமிழராக அல்லாது ஒரு தமிழ் இலங்கையனாக தன்னை மிகத் துணிச்சலாக நிலை நிறுத்தியவர் டாக்டர் .நரேந்திரன்.



எனக்கும் டாக்டர் நரந்திரனுக்கும் இடையிலான தொடர்பு என்பது காற்றுவெளியில்  ஏற்பட்டதே.  2006 ஆம் ஆண்டில் நான் இலண்டன் தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபன (டி பீ .சி) அரசியல் ஆய்வு நிகழ்ச்சிகளில் வாரந்தோறும் கலந்துகொண்ட பொழுதுகளில் , அவர் எனது பங்கேற்பு பற்றியும் எனது கருத்துக்கள் பற்றியும் மின்னஞ்சல்களில் சிலாகித்து குறிப்பிடுவதை அறிந்தேன். அந்த மின்னஞ்சல்களும் என்னிடம் இன்னமும் இருக்கின்றன. அது மாத்திரமல்ல எனது ஞாபகத்தின்படி ஒரு தடவை அவர் என்னிடமும் தொலைபேசியில் உரையாடியதாக ஒரு  ஞாபகமும் உண்டு. 


தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் மேற்குலகில் குடியேறாமல் , அவர் எழுதியும் பேசியும் வந்ததை செயல் படுத்தவே விரும்பினார். இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தனது துறைசார் நிபுணத்துவத்தை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதுடன் , மக்கள் நலன் சார்ந்த சில நற்பணிகளில்  அக்கறையுடன் அவர் ஈடுபட்டிருந்தார். அவர் தனது  அரசியல் நிலைப்பாடு பற்றி  ஒரு கட்டுரைக்கான பதில் ஒன்றில் மிகத்  தெளிவாகவே  பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.


நான் தமிழ்-சார்பானவன் மற்றும் இலங்கை சார்பானவன்.  எனது நிலைப்பாடு தற்போதைய யதார்த்தங்களால் வரையறுக்கப்பட்டு கடந்த காலத்திலிருந்து முற்றிலும் விலக்கிக் கொண்டவையாயும்.  நான் மே 18, 2009 க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களுக்கிடையே   ஒரு முழுமையான இடைவெளி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசாங்கம் செய்ததை நான் பார்த்திருக்கிறேன், அதற்காக நன்றி உள்ளவனாயுள்ளேன். அரசாங்கத்தின் உதவியுடன் அரசாங்கத்தால் மட்டுமே இதை செய்ய முடியும். தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு விமர்சிக்காமல் மாறாக தமிழர்களுக்கு அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவேன் அல்லது அரசாங்கத்தை ஊக்குவிப்பேன்.

வடக்கிலும், கிழக்கிலும்  'தமிழ்மக்களை' பிரதிபலிக்கும் நான் ஒரு ஐக்கியப்பட்ட ஸ்ரீலங்காவிற்காக இருக்கிறேன் . யுத்தத்தின் அழிவிலிருந்து முழுமையாக மீட்கப்பட்டு, ஒரு பெருமை வாய்ந்த மக்களாக அவர்களின் காலடியில் இருக்கும் வரை எந்தவொரு அதிகாரமும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அல்லது தமிழ் பேசும் மக்களின் பிரத்தியேக பாதுகாப்புகள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் அரசு உதவி செய்யும் குடியேற்றத்தை ஆதரிக்கவில்லை. என்றாலும் , வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களம், முஸ்லீம் மற்றும் பெருந்தோட்ட தமிழ்  குடிமக்களை வரவேற்கிறேன். இந்த பகுதிகளில் ஒரு பொருளாதார மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இந்த நிலைப்பாடுகளால் நான் அரச சார்பானவன் ஆக கருதப்படலாம். இலங்கை முழுவதும் எங்களின் வாழ்க்கைக்கானது , அரசாங்கம் எமது உரிமை, மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் உறுதி செய்ய வேண்டும்.  போருக்குப் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கில் அரசியலை அணுகுவதில் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு நான் தயங்கவில்லை.


தற்போது எனக்கு தமிழ் நலன்கள் என்பது அவர்களின்  உயிர், மீட்பு, நல்லிணக்கம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பனவாகும் .  ஏனைய பரிசீலனைகள் யாவும் இரண்டாம் பட்சமாகவும்   தூரமாகவும்  உள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் அதிகாரத்தை தேடும் நபர்களை நான் ஆதரிக்கவில்லை. அவர்களது நலன்கள் தமிழர்களின் நலன்களல்ல. எல்லா தமிழர்களும் புலிகள் அல்ல, தற்போது   காண்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்கள் அல்ல..” (2011)


( I am pro-Tamil and pro-Sri Lanka. My position is defined by the current realities and completely divorced from the past. I think there should be a complete break between pre- and post- 18th May’2009. I have witnessed what the government has done in the past two and a half years and am thankful for that. More needs to be done and these can be done only by the government and with the help of the government. I would rather work with the government or encourage the government to achieve what is urgently needed by the Tamils, rather than criticize it on the basis of what is not important for the Tamils now.
I am for a united Sri Lanka, where the north and east will continue to reflect their predominant ‘Tamilness’. I do not think any devolution of power will be useful for the Tamils, until they have recovered fully from the devastation of war and are on their feet as a proud people. I do not think that the north and east should be the exclusive preserves of the Tamils or Tamil-speaking people. While I do not condone state-aided colonization, I welcome Sinhala, Muslim and Plantation Tamil migrations to the north and east. We need this to bring about an economic transformation in these areas. I may sound pro-government because of these positions. I believe the whole of Sri Lanka is ours to live and that the government should ensure our rights, safety and security, wherever we live. I have not hesitated to criticize the government on its approach to politics in the north and east, after the war.
Tamil interests to me at present mean survival, recovery, reconciliation, peace and security. All other considerations are secondary and distant. I am not supporting those seeking political power in the north and east by hook or by crook. Their interests are not the interest of the Tamils. As much as all the Tamils were not Tigers, the Tamil politicians visible at present are not the Tamils.-2011).


1988  இல் தமிழ்த் தேசிய அரசியலில்  , ஆயுதப்  போராட்டத்தில் ,புலம்பெயர் தமிழர்களின் ஈழப் போராட்ட ஆதரவில் காணப்பட்ட மனிதாபிமானம் இன்மை , வன்முறை  ஆராதிப்பு நபுஞ்சகத்தனம் என்பன குறித்து என்ன நிலைப்பாட்டில் இருந்தாரோ அதே நிலைப்பாட்டிலே நரேந்திரன் தனது இறப்பு வரை இருந்துள்ளார் என்பதுதான் அவரின் ஆழ்ந்த அரசியல் புரிந்துணர்வையும் , தீர்க்கதரிசனத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது. 1988  இல் அவர் வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களில்  இலங்கையில் தனி நாட்டுப் போராட்டத்தை ஆதரித்தோரை வெளிநாட்டு  அகதி அந்தஸ்தினை இலக்காகக்  கொண்ட   பணம்படைத்த தமிழ் சமூகத்தின் கபடத்தனத்தை வெளிப்படையாகச் சாடினார். தனது தாய் உட்பட குடும்ப உறுப்பினர் சிலரை இந்திய சமாதானப் படையின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் இழந்தவர் இவர். ஆனாலும் தெளிவான அரசியல் நிலைப்பாட்டை இவர் எப்பொழுதுமே கொண்டிருந்தார். அவரின் அரசியல் கருத்துக்களில்  பெரும்பாலானவை தமிழ் சிங்கள முஸ்லீம் மிதவாதிகளை ஈர்த்தது.

( THE HYPOCRICY
It was also not uncommon to see staunch Eelamites living  as citizens or landed immigrants in other nations, desperately endeavouring to save their kith and kin through the device of sponsored immigration, while at the same time encouraging the armed insurrection in Sri Lanka with their money, words and deeds. Dr. R. Narendran –Tamil Times 1988)




ஆனாலும், பின்னாளில் நானும் அவரும் ஒரு கருத்து சமர் ஒன்றினை செய்ய வேண்டி நேரிட்டது. அதுவும் கலாநிதி .இராஜசிங்கம்  நரேந்திரன் ஆங்கிலத்தில் எழுதிய ( CONSTITUTIONAL CHANGES IN SRI LANKA: CABARET DANCE BY BURQA- CLAD! By: Dr.Rajasingham Narendran -Wednesday, 1 September 2010 ) என்ற கட்டுரை ” ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றங்கள் பர்தா அணிந்து காபரே நடனமாடுவது போலுள்ளது”  என்ற தலைப்பில் தேனீ இணையத் தளத்தில் தேனீ எஸ். குமாரினால் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது. அவரின் எழுத்துக்களை வழக்கமாகவே  மிக நீண்ட காலமாகவே (அவரின்  1988  ஆம் ஆண்டு கட்டுரைகள் உட்பட வாசித்திருந்தவன்  என்ற வகையில் ) அவரின் அந்த தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளையும் வாசித்தேன் . அதன் பின்னர் அவரின் கட்டுரைத் தலைப்பிற்கு எதிர்வினையாக ஒரு பதில் கட்டுரையொன்றினை ”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்? " என்ற தலைப்பில் நான் தேனியில் எழுதினேன். இத்தனைக்கும் அவரின் கட்டுரை உட்பொருளை நான் விவாதிக்கவில்லை. அவரின் கட்டுரைத் தலைப்பையே  சர்ச்சைக்குளாக்கினேன். அவரின்  அரசியல் சிந்தனைகள் என்றுமே மிதமானவை , அறிவுபூர்வமானவை , நடைமுறை சாத்தியமானவை.  ( http://www.bazeerlanka.com/2011/04/blog-post_419.html)
அதற்கு பதிலாக  அவர் எனக்கு தனது பக்க நியாயத்தை எழுதி மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பும்படி தேனீ ஆசிரியரை வேண்டிக் கொண்டார்.  அவரின் விளக்கத்தை நான் மீண்டும் மறுக்க வேண்டி ஏற்பட்டது. , அவரின் விளக்கத்துடன் உடன்பாடற்றபடியால்  அதற்கும் ஒரு ஒரு மறுப்பினை " அவமரியாதையா இல்லையா? கலாநிதி நரேந்திரன் அவர்களுக்கு பதில்." என்ற தலைப்பில் எனது பதிலுக்கு பதிலை தேனீக்கு எழுதினேன்.   

இதன் பின்னர் நான் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய மாநாட்டில் கலந்துகொண்ட பொழுது , அதுவும் இறுதி நாள் நிகழ்ச்சியின் பொழுது அவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சந்திக்க நேரிட்டது. அதுவரை மின்னஞ்சல் தொலைபேசி மூலம் மட்டுமே நான் மூன்றாம் தரப்பு மூலம் அறிந்திருந்த டாக்டர் நரேந்திரன் என் முன்னாள் நிற்கிறார். பரஸ்பரம் நாங்கள் ஆளுக்காள் தங்களை அடையாளம் கண்டு  கொள்வதில் எந்த சிரமுமிருக்கவில்லை , என்றாலும் அவர் என்னை எதிர்கொண்டதும், யாரோ என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். மனுஷர் உயரமானவர் மட்டுமல்ல அவரின் பிரதிபலிப்பே உயரமானதாகவே இருந்தது. அது பற்றி நான் அப்பொழுதே  எனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தவற்றை , அந்த நற் குணவியல்பு கொண்ட மனிதரை  ஞாபகமூட்டுவதற்காய் மீண்டும் பதிவிலிடுகிறேன்.

" சென்ற 9 ம திகதி தை 2011 ஆண்டு கொழும்பு ராமகிருஷ்ண மண்டபத்தில் என்னை சந்திக்க விரும்பி சந்தித்த டாக்டர் ராஜசிங்கம் நரேந்திரன் என்னோடு நாட்டு நடப்புக்கள் உட்பட பல தனிப்பட்ட விடயங்களை கதைத்துவிட்டு என்னை அன்புடன் தனது வீட்டுக்கு இராப் போசனத்துக்கு அழைத்தார். ஆனால் அன்று எனக்கு வேறோரிடத்தில் இராப்போசனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் அவரின் அழைப்பை அன்புடன் மறுக்க வேண்டி நேரிட்டது. அவ்வாறான  ஒரு புரிந்துணர்வு அவரிடம் நான் அவரது கட்டுரை பற்றி விமர்சனம் வைத்த பின்பும் அவர் மீது எனக்கும் என்மீது அவருக்கும் ஒரு அறிவு பூர்வமான புரிந்துணர்வும்  பரஸ்பர மதிப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு முக்கிய நபரிடம் எனது தமிழ் இலக்கிய அறிவு பற்றி விதந்துரைத்தமையும் ” கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்பதை நிருபணம் செய்ததது. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி நான் எழுதியதை தவறென்று அவரும் சொல்ல முடியாது நானும் சொல்ல மாட்டேன் .  (கற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும் தேனீ 17  ஏப்ரல்  2011  ).

அது மாத்திரமல்ல ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எனப்படும் ஒரு இஸ்லாமிய மத இயக்கம் தொடர்பாகஅவர்கள் ஷரியா சட்டம் குறித்து  வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக  சிங்கள தீவிரவாத சக்திகளின் கருத்துக் கண்டனங்கள் எழுந்த பொழுது,  முஸ்லிம்களில் பலரும் ஆதரவுக் கருத்தினை வெளியிடாத போதும்  அவ்வியக்கத்தின் தலைவரான ராசிக் சொன்ன கருத்தினை அதன் சூழமைப்பில் சரி கண்டு தனது கருத்தை  ராசிக்கின் கருத்துக்கு ஆதரவாகவெளிப்படையாக சொன்னவர் நரேந்திரன்.


இவரின் தந்தை கூட ஒரு எழுத்தாளர் என அறிய ஆச்சரியமாக இருக்கவில்லை. தமிழர்களின் கலாச்சார பங்களிப்பு ( The Cultural Contribution of the Tamils)   என்ற நூலை அவர்  எழுதி உள்ளார். அந்த நூல் சைவ சித்தாந்த பெருமைகளை பேசினாலும் , அவ்வாறான மேட்டிமை விழுமியச் சிந்தனைக்கப்பால் நரேந்திரனோ தமிழர்களுக்கான ஒரு ஆக்கபூர்வமான அரசியல் பங்களிப்பினை விட்டுச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...