அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் ‘நல்லாட்சி’ தூய்மையாகிவிடாது! வானவில் இதழ் -81 செப்ரெம்பர் 23 2017



ரண்டரை வருடங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 08இல் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி ஏற்றபோது நாட்டு மக்களுக்கு ‘நல்லாட்சி’ வழங்கப்போவதாகச் சொல்லியே பதவி ஏற்றது.

குறிப்பாக, முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இடம் பெற்ற ஊழல், மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம் எதுவும் தமது ஆட்சியில் இருக்காது என மைத்திரியும், ரணிலும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். அத்துடன், சிறுபான்மை தேசிய இனங்களின் – குறிப்பாகத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் அமைப்;பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை எதுவும் இன்றி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கும், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஆதரவளித்திருந்தது.



அதேபோல, முஸ்லீம் கட்சிகளும் நிபந்தனை எதுவும் இன்றி மைத்திரி – ரணில் அணிக்கு ஆதரவளித்திருந்தன. எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிடின், மைத்திரியோ ரணிலோ ஒருபோதும் பதவிக்கு வந்திருக்க முடியாது என்பது சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும்.
இவை தவிர, யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்து நிiவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும்;; மைத்திரி – ரணில் அரசு வாக்குறுதி அளித்தது.

ஊடக சுதந்திரமும், மனித உரிமைகளும் பேணப்படும் எனவும் மைத்திரி – ரணில் அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இவற்றில் ஒன்றைக்கூட இந்த அரசாங்கம் இற்றைவரை நிறைவேற்றவில்லை.
அதுமட்டுமின்றி, முன்னைய அரசால் தொடங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விலைவாசி கட்டுக்கடங்காமல் எகிறிச் செல்வதைக் காண முடிகிறது. பணவீக்கம் என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நாட்டில் எந்தத் திசையை நோக்கினாலும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றவண்ணம் உள்ளன.
இன்னொரு பக்கத்தில் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் அரசைக் கொண்டு நடாத்த முடியாத அளவுக்கு வலுத்துச் செல்கின்றது.

ஆனால் அரசாங்கமோ இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகாண முடியாத கையறு நிலையில், எல்லாப் பிரச்சினைகளுக்கும் முன்னைய அரசாங்கத்தில் பழியைப் போட்டுத் தப்பிக்க முயல்கிறது. அத்துடன் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரையும், தமது அரசாங்கத்துடன் இணையாமல் நாட்டுப்பற்றுடன் உறுதியாக நிற்கும் முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் பழிவாங்கும் எண்ணத்துடன் அவர்கள் மீது எண்ணற்ற குற்றச்சட்டுகளைச் சுமத்தி, அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளுக்கும், நீதிமன்ற விசாரணைகளுக்கும் அழைத்து அலைக்கழிக்கின்றது.

அத்துடன் இந்த ஆரவாரத்தில் சத்தம் சந்தடியின்றி நாட்டின் முக்கியமான வளங்களை இந்தியா, சீனா மற்றும் மேற்கு நாடுகளுக்கு தாரைவார்த்து வருகின்றது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்ட அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், “இலங்கை ஜனாதிபதி ட்ரம்ப்பின் மூலோபாயத் திட்டத்தில் முக்கியமான நாடாக இருக்கின்றது” எனத் தெரிவித்ததின் மூலம், நமது நாட்டை மைத்திரி – ரணில் கூட்டு எத்திசையை நோக்கி இழுத்துச் செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஊழல் மோசடிகள் அற்ற ‘நல்லாட்சி’ நடாத்தப் போவதாகச் சொன்ன இந்த அரசாங்கத்தில்தான், முனனொருபோதும் இலங்கையில் நிகழாத அளவுக்கு ஊழலும் மோசடிகளும் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளை அரசாங்கமே நியமித்த விசாரணைக் குழுக்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

முக்கியமாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவான அர்ஜூனா மகேந்திரன் பிணைமுறி ஊடாக மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா மோசடியை ‘கோப்’ விசாரணை முடிவும், ஜனாதிபதி ஆணைக்குழுவும் அம்பலத்துக்குக் கொணடு வந்தும் இன்றுவரை அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதமர் ரணிலுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தும், அவர் பதவி விலகாமல் பதவியில் அழுங்குப்பிடியாக பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய புள்ளியான ஐ.தே.கவைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மோசடி அம்பலமானதால் பதவி விலக வேண்டி வந்தது. அப்படிப் பதவி விலகியவருக்கு எதிராக நீதித்துறையின் ஊடாகவும், தனது கட்சி அடிப்படையிலும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய பிரதமர் ரணில், அதைவிடுத்து அவரது ‘முன்மாதிரி’யைப் புகழ்ந்து, அவர் மீதான குற்றக்கறையைக் கழுவ முயற்சிக்கிறார்.
இதில் முக்கியமான விடயமென்னவென்றால், சில நாட்களுக்கு முன்னர்தான் வெளிவிவகார அமைச்சராக இருந்த இன்னெரு ஐ.தே.க. முக்கிய புள்ளியான மங்கள சமரவீரவை அவரது சேவை திருப்தி இல்லாததால் வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து மாற்றி அப்பதவி ரவி கருணநாயக்கவுக்கு வழங்கப்பட்டதுடன், ரவி கருணநாயக்க வகித்துவந்த நிதியமைச்சர் பதவி மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டது.

உண்மையில் இந்த அமைச்சு மாற்றங்கள் கண்துடைப்புக்காகவே நடாத்தப்பட்டது. இது நடைபெறுவதற்கு முதல், அமைச்சரவையில் பல அமைச்சர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என ஜனாதிபதி கருதுவதால், முழுமையானதொரு அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி மேற்கொள்ளப் போகிறார் என ஊடகங்களில் பெரிதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் ‘மலையைக் கெல்லி எலியைப் பிடித்தது’ போல, இந்த இரண்டு அமைச்சுகளும்தான் மாற்றப்பட்டது. ஆனால் இந்த மாற்றம் நடந்து சிறிது நாட்களிலேயே ரவி கருணநாயக்க பதவியை இழக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஊழல் மோசடியில் ஈடுபட்டு, பதவி விலகி, முழு உலகமும் எம்மைப் பார்த்து நகைக்கையில், முன்னர் சில தவறுகளுக்காக இதே அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து பதவி விலக வைக்கப்பட்ட இன்னொரு முன்னாள் அமைச்சரான ஐ.தே.க.
புள்ளி திலக் மாரப்பன புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்படியானால், முன்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் காலாவதியாகிவிட்டனவா? அதுமட்டுமின்றி, இன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி விலகி இருக்கும் ரவி கருணநாயக்கவுக்கும் எதிர்காலத்தில் திரும்பவும் ஏதாவதொரு அமைச்சுப் பதவி வழங்கப்படுமா?

இது ஒருபுறமிருக்க, கொழும்பிலுள்ள ‘சைற்றம்’ என்னும் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிடும்படி மாணவர்கள், ஆசியர்கள், வைத்தியர்கள், பெற்றோர்கள் என முழுநாடும் திரண்டு நின்று போராடுகையில், சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன என்ற தனி நபருக்காக அதை மூடாது அரசாங்கம் அழுங்குத்தனமாக நிற்கிறது. ‘நல்லாட்சி’ என்றால் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கவல்லவா வேண்டும். ஆனால் இந்த அரசு ‘நல்லாட்சி’ என்ற பெயரில் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இவை மட்டுமின்றி, தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவித்தல், தமிழ் கைதிகள் விவகாரம் போன்ற பிரச்சினைகளிலும் அரசாங்கம் இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் செய்யவில்லை.

மறுபக்கத்தில் மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடாத்தாது இழுத்தடிக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத, தேசத்துரோக நடவடிக்கைகளை அதிகமான ஊடகங்கள் விமர்ச்சித்து எழுத ஆரம்பித்திருப்பதால், ஜனாதிபதியும் பிரதமரும் இப்பொழுது, தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பெரிதாகப் பேசி வந்த ஊடக சுதந்திரம் பற்றிய கதைகளை மறந்து, ஊடகங்கள் மீது ஏறிப்பாய ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், மைத்திரி – ரணில் அரசு நாட்டை ஆட்சி செய்யும் தகுதியை இழந்துவிட்டது என்பது தெளிவாகின்றது. இதற்கு ஒரே பரிகாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி, மக்கள் ஆதரவு பெற்ற அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகை செய்யும்படி அரசைக் கோரி மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதுதான். ஏனெனில் மக்கள் கிளர்ச்சி ஒன்றின் மூலம் மட்டுமே இந்த அரசாங்கத்தை ஒருவழிக்குக் கொண்டுவர முடியும்.





















.

வானவில் இதழ் 81
செப்ரெம்பர் 23  2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...