ஜனவரி எட்டும் ஆகஸ்து பதினேழும் மாற்றங்களின் மறு திகதிகள்

    
எஸ்.எம்.எம்.பஷீர் 

"ஜனநாயகம் என்பது நாற்பத்தி ஒன்பது விழுக்காடு மக்களின்  உரிமைகளை ஐம்பத்தொரு விழுக்காடு மக்கள்  கைப்பற்றக் கூடிய மக்கட்கும்பலின் ஆட்சியைத் தவிர வேறில்லை" -  தாமஸ் ஜெபர்சன் 

சென்ற ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தலுடன் பதவிக்கு வந்த புதிய அரசுத் தலைவரின்  ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றப்பட்ட அரசியல் மாற்றங்களில் ஒன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவரான  ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாகும்.  நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை , அதன் பிரதமரை புறந்தள்ளிவிட்டு எதிர்கட்சித் தலைவரை (ரணிலை) பிரதமராக நியமித்து , ஆளும்கட்சியை எதிர்க் கட்சியாக்கி , தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட 100 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய திட்டங்களில் அரை வாசியைத் தன்னும் முடிக்க முடியாத நிலையில் அவர் நிறுவிய "நவீன" நாடாளுமன்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

மைத்ரீபால சிரிசேனா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதற்காக தேர்தலின் முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து நடைமுறையில் வெளியேறி எதிரணியுடன் கூட்டமைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் தலைமையைக் கைப்பற்றினார். ஜனாதிபதி மீண்டும் தனது கட்சியின் யாப்பின்படி  சுதந்திரக் கட்சியின் தலைவராக தன்னை கட்சியில் நிலை நிறுத்திக் கொண்டார். "அன்னத்தை தொட்ட   "கை"களினால் வெற்றிலைச் சின்னத்தை இனி நான் தொட மாட்டேன் " என்று சிறிசேனா முடிவெடுப்பார் என்று அவருக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவளித்து ஜனாதிபதியாக்கிய மக்களுக்கு அவர் முதலில் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றியதும் கலக்கத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் மஹிந்த கட்சியின் போஷகராக ஓரங்கட்டப்பட்டது , சற்று ஆறுதலளித்தது. அந்த ஆறுதலும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.  


ஆனால் தை மாதம் எட்டாம் திகதி சிறிசேனாவின்  தலையில் சூட்டப்பட்ட அரசுத் தலைவர் என்ற முதல் மகுடம் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பின்னர் சூட்டப்பட்ட இரண்டாவது மகுடத்துடன் பொருந்தவில்லை. அவ்வப்பொழுது இரண்டாவது மகுடத்தை அணிவதும் , அதற்கேற்ப அரசியல் கட்சியின் தலைவர் வகி பாகத்தை செயற்படுத்துவதும்  எதிபார்த்தவாறு சிறிசேனாவுக்கு நடைமுறையில் சவாலாகவே அமைந்தது. அந்த சவாலில் அவர் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு சுதந்திரக் கட்சியின்-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் -  பெரும்பான்மை உறுப்பினர்களின் பிரதமர் தேர்வான மஹிந்த ராஜபக்சவை , கட்சியின் ஜனநாயக மரபுகளையும்  மீறி , எதிர்த்து நிற்பதுடன் , கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளையும் தவிர்த்து வருகிறார்.     

சிறிசேனா சுமந்துள்ள அரசியல் கட்சித் தலைவர் என்ற மகுடம்  ஒரு முள் கிரீடமாக அவருக்கு மாறுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தலே ஆகஸ்து மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலாகும். மகிந்தவை ஆரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்ற ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான பரப்புரைகள் யாவையும் ஒதுக்கித் தள்ளப்பட்டு சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் சுதந்திரமாக எடுத்த ஜனநாயக முடிவின்படியே மஹிந்த ராஜபக்ச, பிரதமர் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு இந்த நாடாளுமன்றத் தேர்தலிலே போட்டியிடுகிறார்.  

மகிந்தவை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் , குறிப்பாக அமெரிக்காவினதும்  , பிரித்தானியாவினதும் பிரதான குறிக்கோள் . மஹிந்த ராஜபக்ச எப்பொழுதும் சிறுபான்மை மக்களின் விருப்புக்குரியவராக இருந்ததில்லை. உள்நாட்டில்  எவ்வித முகாந்திரமுமின்றி  முஸ்லிம்கள்  அவரை பெரியளவில் ஆதரிக்கவில்லை. மறுபுறத்தில் தமிழ் தரப்பினருக்கு எப்பொழுதும் அவர் தீண்டத்தகாதவர்.

2004 இல் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த போட்டியிட்ட பொழுதும் அவருக்கு எதிராக புலம் பெயர் தேசங்களில் புலிகள் ஆதரவாளர்கள் பண பலத்துடன் பிரச்சாரங்களை முடுக்கி விட்டார்கள். உள்நாட்டு முஸ்லிம்களில் பெரும்பாலானோரும் எவ்வித வெளிப்படையான காரணம் எதுவுமின்றி மகிந்தவை அந்தத் தேர்தலில் எதிர்த்தார்கள், அவருக்கு எதிராகவே வாக்களித்தார்கள். 

2004 ஜனாதிபதி தேர்தலில் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றி ஈட்டியதும் நவம்பர் மாதம் நடைபெற்ற புலிகளின்  வானொலி அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் க.வே பாலகுமாரன்  ”மஹிந்தவின் வெற்றி –பிரபாகரனின் வெற்றியின் தொடக்கம் ; அதாவது பிரபாகரன் அவர்கள் உருவாவதற்கு பண்டா (எஸ்.டப்ளியு .பண்டாரநாயக) அவர்கள் காரணமாக இருந்தது உண்மை. அதுபோலவே மஹிந்தரின் வெற்றியானது பிரபாகரனின் வெற்றிக்கான வாய்ப்பாக அயைப்போகின்றது. தொடங்கப்பட்டது அந்த பண்டாவால் முடிக்கப்படவுள்ளது இந்த மஹிந்த பண்டாவால்” என்று குறிப்பிட்டார். உண்மையில் பாலகுமாரனின் ஆரூடம் நேர் எதிராக , அதேவேளை முரண் நகையாக நடந்தேறியது. பிரபாகரன் வெற்றிபெறவில்லை. மாறாக மஹிந்த பண்டாவால் பிரபாகரனே "முடிக்கப்பட்டார்" .

பண்டா(ரனாயாக)  தொடங்கினாரோ  இல்லையோ , பின்னர் வந்த ஜே . ஆரும் , பிரேமதாசாவும் , பிரபாகரனை  (புலிகளை ) வளர்த்து விட்டார்களோ இல்லையோ மகிந்ததான் பிரபாகரனை முடிவுக்கு கொண்டு வந்தார். மகிந்தவுக்கு சவால்விட்ட பாலகுமாரனும் அந்த "முடிவுடன்"  முடிந்தே போனார். 

2004 ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம்  “நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் ஓர் சாமானியமான தேர்தலல்ல . இது ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான தேர்தலுமல்ல வட கிழக்கு மண்ணில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் அதனது துரோகிகளுக்குமிடையிலான தேர்தலெ ன்பதை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஆதரவாளர்கள் மனதில் நிறுத்தி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரசை துச்சமாக மதிக்கும் துரோகிகளை நாம் துரத்தி அடிக்க வேண்டும். ரணிலுக்கு நாம் பெற்றுக்கொடுக்கும் மாபெரும் வெற்றி முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பை நிமிர்த்துகின்ற பெரும்பான்மை வெற்றியாகும் " என்று முரசறைந்தார். 

மீண்டும் மஹிந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாக போட்டியிட்ட பொழுதும் பெரும்பான்மை  தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்த்தனர். அப்பொழுது முஸ்லிம்களின் " அதிக பட்ச ஆணையை பெற்ற கட்சி என்று சொல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  " நிறைவேற்று ஜனாதிபதி (Executive Presidency) முறை நீக்கப்பட வேன்டும்; அதற்கான உறுதியுரையை பொன்சேகா தந்துள்ளார்; ஒரு தனி மனிதரிடம் அதிகாரம் குவிந்திருக்கின்ற குடும்ப ஆட்சி நடத்தும் சர்வாதிகார மஹிந்த அரசை வீழ்த்தியே ஆகுவோம் என்று சவால் விட்டார். மேலும் தங்களின் பிரச்சாரத்துக்கு வலுவூட்டும் வகையில் "ஜாதிக ஹெல உறுமய (புத்தரின்) போதனையில் மஹிந்தவின் 4 வருட சாதனைகளால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் !!! " என்ற தலைப்பிட்டு ஒரு நீன்ட துண்டுப்பிரசுரம் ஒன்றை மிகவும் கபடத்தனமாக கட்சியின் வெளியீடாக பிரசுரிக்காமல் மகிந்தவிற்கு எதிராக வெளியிட்டனர். அதில் மஹிந்தாவையும் , அவருடன் அன்று இணைந்திருந்த , அல்லது அவருக்கு ஆதரவளித்த முஸ்லிம் தமிழ் கட்சிகளை , அரசியல்வாதிகளை காரசாரமாகக் கண்டித்து  அந்த பிரசுரம் முஸ்லீம்   காங்கிரசால் வெளியிடப்பட்டது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அப்பிரசுரத்தினை வெளியிடுகிறது என்பதை உணர்த்தும் வகையில் , அதனை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டனர்.  அந்த துண்டுப் பிரசுரத்தை முன்னரே இக்கட்டுரையாளர் 2011இல் தனது கட்டுரைகளில்  சுட்டிக்காட்டியிருப்பினும்  இக்கட்டுரையின் அவசியம் கருதி அப்பிரசுரத்தின் மிக முக்கிய பகுதிகளை மீள் விஜயம் செய்ய வேண்டி உள்ளது. இப்பிரசுரத்தில் .. 

"மஹிந்த ராஜபக்ஷ ஜாதிக ஹெல உறுமயவின் தர்மராஜ்யக் கனவை நனவாக்குவதற்கு வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுவது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் வெளியுலகுக்கு அப்பாவி போல் நடித்தாலும் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் தனிச் சிங்களப் பேரினவாத வெறியை ஹெல உறுமய பிக்குகளின் ஆசீர்வாதத்துடன் நடைமுறைப்படுத்தி வருகின்றார். இதனை நன்கு தெரிந்துள்ள அரசாங்கத்திலுள்ள எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களின் சுய இலாபங்களுக்காகவும், பதவி மோகத்திற்காகவும் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எமது சமூகத்தை இவ்வாறு காட்டிக் கொடுக்கப் போகின்றார்கள்?

பொத்துவிலில் பட்டப்பகலில் முஸ்லிம் மக்கள் மத்தியில் சிலைகள் வைக்கப்பட்டன. பிக்குகளால் முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டனர். முஸ்லிம் மையவாடிகளிலும் சிலைகள் வைத்துக் காட்டியது இந்த மஹிந்தவின் தர்மராஜ்ய சட்டம்தான். 

சிங்களப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களை மூடச்சொல்லி ஹெல உறுமய தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஏன் மஹிந்த அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை? பௌத்த பன்சலைகளின் சுற்றுப் பகுதிகளிலிருந்து முஸ்லீம் மக்களை குடியெழும்பச் செய்தது யார்? ‘கிழக்கின் உதயம்’ என்ற போர்வையில் கிழக்கு முழுவதிலும் சப்தமின்றி நடைபெறும் சிங்களக் குடியேற்றத்தைச் சரி என்றுகூட எமது தலைவர்கள் கூறுவார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் கொழும்பில் உல்லாசமாக வாழுகின்றனர்.

ஹெல உறுமயவின் போஷகரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களின் பரம்பரையான காணிகளையும், நிலங்களையும் சுவீகரித்து அரச சொத்தாக மாற்றி பின்னர் அவற்றை சிங்கள மக்களுக்கு பகிர்ந்து கொடு

இதுமட்டுமல்ல, தான் தெற்கின் சிங்களக் குடிமகன் என்பதால் ஹெல உறுமய தேரர்கள் கூறுவதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேவ வாக்காக மதித்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை மிதித்து வந்துள்ளார்.

 தங்களது மனச்சாட்சிகளுக்கு விரோதமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக அடகுவைத்து விட்டு மஹிந்த நல்லவர், வல்லவர் முஸ்லீம்களின் நண்பர் என்று கூவித் திரிகின்ற மாமனிதர் அஷ்ரபின் கட்சியில் முளைத்த களை களும், கட்சி தாவித்திரியும் ஜடங்களும் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.

அவர் ஹெல உறுமயவின் கடும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகும்.

அவர் ஹெல உறுமயவின் கடும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகும்.

அதுமட்டுமா? கொழும்பில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல முஸ்லிம் வர்த்தகர்களை (ஹமீடியாஸ், நோ லிமிட் ஹாஜியார் உட்பட மேலும் பலரை) கோத்தபாய ராஜபக்ஷ குழுவினர் கடத்திப் பல மில்லியன்களைக் கப்பமாகப் பெற்றதை கடத்திச் செல்லப்பட்டவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளனர்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் பேச்சைக் கேட்டு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் பெரும் வரலாற்றுத் தவறைச் செய்தார்கள். அதன் பலனை இப்போது உணர்ந்துள்ளார்கள். அந்த வரலாற்றுத் தவறிலிருந்து நாம் பாடம் கற்றாக வேண்டும். இத்தேர்தலில் ஜனாதிபதிக்கு வாக்க ளித்து நாமும் அதே வரலாற்றுத்தவறை இழைத்து அவஸ்தைப்படப் போகின்றோமா? 


எமது முஸ்லிம் நாடுகளின் பணத்தில்தான் ராஜபக்ஷ குடும்பத்தினர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உல்லாசமான மாட மாளிகைகளைக் கட்டியுள் ளனர். மஹிந்தவுக்கு இந்த உண்மையை மறைக் கவோ மறுக்கவோ முடியுமா? தனது குடும்ப மேலாதிக்கத்தால் இந்நாட்டை பரம்பரை பரம்பரை யாக ஆட்சிசெய்து பௌத்த தர்மராஜ்யம் ஒன்றை உருவாக்க மஹிந்த ராஜபக்ஷ நீண்ட காலமாக கண்டுவந்த பகற்கனவில் இன்று பாரிய இடியும், பலத்த அடியும் விழுந்துள்ளது.

இந்தச் சதிமானத்தை எல்லாம் தடுத்து நிறுத்து வதற்கு எம்மிடமுள்ள ஒரேவழி அவர் மீண்டும் ஜனாதிபதியாகாமல் தடுப்பதேயாகும். 

வடக்கின் வசந்தம்’ என்று முஸ்லிம் தமிழ் மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி மஹிந்தவினால் வடக்கில் ஏற்கனவே முஸ்லீம்களுக்குச் சொந்தமான பகுதிகளில் நடை பெற்றுவரும் இராணுவ முகாம்களுடன்கூடிய பன்சலைகள் மற்றும் குடியேற்றங்களை உடனடி யாக நிறுத்த முடியுமா? அவரின் முஸ்லிம் சமூகத் திற்கு எதிரான சதித்திட்டங்களெல்லாம் இப்போது ஆதாரபூர்வமாக அம்பலமாகி விட்டன. 

மூத்த ஹெல உறுமய பிக்குகளின் உத்தரவுப்படி இயங்கும் சிங்கள அதிதீவிரவாதப் போக்குடைய வரான ஜனாதிபதி ஒரு அங்குலம் நிலத்தையே னும் முஸ்லிம் மக்களுக்காக விட்டுத்தரப் போவது இல்லை. அவர் நமது மையத்துக்களை அடக்கம் செய்யும் மையவாடியிலும்கூட நிலத்தைச் சூறை யாடியது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?


இந்தத் தேர்தல் மஹிந்தவுக்கும், ஜெனரலுக்கும் இடையிலான தேர்தலல்ல. மாறாக, இது சிங்கள இனவெறி மற்றும் தமிழ்த் தீவிரவாதம் ஒன்று சேர்ந்த கூட்டணிக்கும், முஸ்லீம்களின் இருப்பையும் பூர்வீக அடையாளத்தையும் உறுதி செய்யும் கூட்டணிக்குமான தேசந்தழுவிய ஜனாதிபதித் தேர்தல் என்பதை முஸ்லிம்களான நாங்கள் மறந்து விடக்கூடாது.

மிகப் புனிதமாகவும், ஒரு சதமேனும் இலஞ்சம் பெறாமலும் நாற்பது வருட காலமாக இந்நாட்டிற்கு இராணுவ சேவையாற்றிய ஜெனரல் சரத் பொன் சேகா ஒரு வல்லமை மிக்கவர் என்பதையும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட செயல்வீரன் என்பதையும் ஒருபுறம் வைத்து விட்டு, முஸ்லீம்களின் இன்றையத் தேவையானது ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வது என்பதை விடவும் இந்நாட்டில் மறுபிறவி எடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக அட்டகாசமான ஆட்சி செய்கின்ற செய்யத்திட்டமிட்டுள்ள துட்டகைமுனு வான ஜனாதிபதியைத் தோற்கடிப்பதேயாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது."



அந்த மிக மிக நீண்ட துண்டுப் பிரசுரத்தில் சொல்லப்பட்ட விடயங்களில் பல  வெறுமனே மகிந்தவிற்கு எதிரான அதரபூர்வமற்ற குற்றச்சாட்டுக்களாகவே இருந்தன. யுத்தத்தின் பின்னரான மகிந்தவின் பௌத்த தேசிய வாத நடவடிக்கைகளின் மிகையான நடவடிக்கைகளுக்கு காரணம் ஜாதிக  ஹேல உறும என்று முஸ்லிம்  காங்கிரஸ் குற்றம் சாட்டினர். மஹிந்த ஹெல உறுமையவின் கைபொம்மையாக செயற்படுகிறார் என்று முஸ்லிம் காங்கிரசினர் கண்டித்தனர். இந்த நிலைமை 2015 ஜனாதிபதித் தேர்தலில் எந்த விதத்திலும் மாற்றமுறவில்லை. மாறாக ஹெல உறுமைய முஸ்லிம்களின் நண்பர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். பொது பல   சேனா எனப்படும் இயக்கம் ஹெல உறுமயவின் இடத்தை நிரப்பியது, அல்லது அவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டது. "ஹெல உறுமய" எந்த சந்தர்ப்பத்திலும் பொது பல சேனாவை நொந்து கொள்ளவில்லை. மாறாக அளுத்கம முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுக்கு தூபமிட்ட பொது பல சேனாவுக்கு பரிந்து பேசியது.   

மேற்படி மஹிந்த எதிப்பு பிரச்சாரங்களை முடுக்கி விட்டும் பொன்சேகாஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றார். ஆனால்  அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் குத்துக்கரணம்  அடித்து மகிந்தவின் ஆட்சியில் இணைந்ததுடன் ன் , மீண்டும் முஸ்லிம் மக்களையும்  முட்டாளாக்கினர்.  நிறைவேற்று ஜனாதிபதி   முறையை ஒழிப்போம் என்றும் மஹிந்த குடும்ப ஆட்சி நடத்துகிறார், நாட்டின் சொத்துக்களை கபளீகரம் செய்கிறார் என்றெல்லாம் கர்சித்த முஸ்லிம் காங்கிரஸ்  மகிந்தவின் மூன்றாவது ஜனாதிபதிக் கனவுக்கும் கை கொடுத்தனர்.    

தொடரும் ,...

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...