பாராளுமன்ற பொதுத் தேர்தல்: வலதுசாரி பிற்போக்கு சக்திகளை மக்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்!


UNFGG-TNA
நாட்டில் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் 2015 ஓகஸ்ட 17இல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைந்ததின் காரணமாக இயல்பாக நடைபெறும் ஒரு தேர்தல் அல்ல. முறைப்படி அப்படியான ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது.
இவ்வருடம் ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஓடி, வலதுசாரி பிற்போக்குக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) உதவியுடன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின்னர், நாட்டில் எழுந்த அசாதாரண ஜனநாயக விரோதச் சூழ்நிலையால்தான் தற்போதைய தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.


ஏற்கெனவே ஆட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) அரசாங்கம் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கத்தக்கதாக, ஜனநாயத்துக்கு விரோதமாக வெறுமனே 47 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐ.தே.கவை அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன அனுமதித்தார். இந்த ஜனநாயகப் படுகொலையை ‘நல்லாட்சி’ என்ற பெயரில் அரங்கேற்றி முடித்தனர்.

அந்த உண்மையை, அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் வலதுசாரி அரசாங்கம் ஆட்சியில் இருந்த குறுகிய காலத்தில் தனது மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் சுயரூபத்தைக் காட்டிவிட்டது. முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பம் உட்பட, அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், கட்சி ஆதரவாளர்கள், அரச அதிகாரிகள் என எல்லோரையும் பழிவாங்கும் நடவடிக்கையை ரணில் அரசாங்கம் வகைதொகையில்லாமல் செய்தது. இலங்கையின் வரலாற்றிலோ அல்லது உலக வரலாற்றிலோ இவ்வளவு தொகையாகவும், வேகமாகவும் அரசியல் பழிவாங்கல்கள் நடைபெற்றது கிடையாது என்னும் அளவுக்கு இந்த நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

மறுபக்கத்தில், முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. தகாத நபர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்ததின் மூலம், திறைசேரியில் ஊழல்கள் மோசடிகள் நடைபெற வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. பண்டாரநாயக்காவாலும், அவரது மனைவி சிறீமாவோவாலும் உருவாக்கப்பட்டு,கட்டிக்காக்கப்பட்டு வந்த, வெளிநாட்டு வல்லரசுகளுக்கு எதிரான அணிசேராக் கொள்கை கைவிடப்பட்டு, நாடு ஏகாதிபத்திய கொலனியாக மாறக்கூடிய வெளிநாட்டுக் கொள்கைக்கு அத்திபாரம் இடப்பட்டது. இலங்கைக்கு நெருக்கடியான நேரங்களில் உதவிய சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுடனான நீண்ட கால நட்புறவு கீழிறக்கம் செய்யப்பட்டது.

ஆனால் ஐ.தே.க அரசாங்கம் அமைத்தாலும், அந்தச் சிறுபான்மை அரசாங்கம் எந்த நேரமும் கவிழலாம் என்ற அச்சமும் அதற்கு இருந்தது. அந்த அரசாங்கத்தைக் கவிழ்ந்து விடாமல் காப்பாற்றுவதற்காக, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு, அதன் உறுப்பினர்கள் சிலரை நிர்ப்பந்தித்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க அரசுக்கு முண்டுக் கொடுக்க ஜனாதிபதி சிறிசேன செய்த ஏற்பாடும், ஐ.ம.சு.கூ. பிரதமர் ரணிலுக்கும், நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவுக்கும் எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தால் தவிடுபொடியாக்கப்பட்டது.

இந்த நிலைமையில்தான் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். அதன் நோக்கம் ஐ.தே.க. அரசை மீண்டும் பதவிக்குக் கொண்டு வருவதுதான். அதை தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் செய்யும் திகதி முடிந்த பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வெட்ட வெளிச்சமாக ஜனாதிபதி சொல்லியும் விட்டார். ஜனாதிபதியினதும் ஐ.தே.கவினதும் அடிப்படை நோக்கம் நாட்டு மக்களுக்குச் சேவை செய்வது என்பதை விட, வெளிநாட்டு வல்லாதிக்க எஜமானர்களுக்குச் சேவை செய்வது என்று இருக்கும் போது, அவர்களிடம் இதைவிட வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.

எனவே ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறப் போகும் தேர்தல் என்பது வெறுமனே எந்தக் கட்சி ஆட்சியில் அமர்வது என்பதற்கான தேர்தல் அல்ல. அது ஒருபுறம் வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஐ.தே.க மற்றும் ஜனாதிபதி தலைமையிலான வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கும், மறுபுறம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு, முற்போக்கு, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கும் இடையிலான ஒரு போராட்டமாகும். எனவே மக்கள் இந்த அடிப்படையான அரசியல் உண்மையைப் புரிந்து கொண்டு, ஐ.தே.க தலைமையிலான வலதுசாரி பிற்போக்கு சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்.

வலதுசாரிப் பிற்போக்கு சக்திகள் என்னும் போது, அவை வடக்கு கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இன்னொரு வடிவத்தில் இருக்கின்றன. அது ஆரம்பத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியாக உருவெடுத்து, பின்னர் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள் என உருமாற்றம் பெற்று, இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வடிவத்தில் காட்சி அளிக்கிறது. அந்தக் கூட்டமைப்பு ஒருபக்கத்தில் சாதாரண தமிழ் மக்களிடையே சிங்கள மக்களுக்கெதிரான இனவாத விசத்தைப் பரப்பிக் கொண்டு, மறுபுறத்தில் ஐ.தே.க தலைமையிலான பெரும் முதலாளித்துவ சிங்கள இனவாத சக்திகளுடன் தொடர்ச்சியாகக் கூடிக்குலாவி வந்துள்ளது. இது அவர்களது இன, மொழி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட பிற்போக்கு வர்க்க ஒற்றுமையாகும்.

எனவே சிங்கள – தமிழ் மக்களிடையே உள்ள இந்த இருவகையான வலதுசாரி பிற்போக்கு சக்திகளையும், இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் என, அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாகும். இந்த வரலாற்றுக் கடமையை, ஓகஸ்ட் 17ஆம் திகதி வழமைபோல இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவதற்கு இப்பொழுதே சங்கற்பம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...