"நல்லாட்சி" இப்னு அசுமத்



நல்லாட்சி
----------------
நூறு நாட்கள்
வெற்றி நடை போடுமென்று
நாடெங்கும் கூறிக்கொண்டு
பலர் கூடி இயக்கி
கொண்டுவந்த திரைப்படம்....
'நல்லாட்சி'' –
இலங்கைத் திரையில் திரையிடப்பட்டது!



அதுவரையில் –
நீண்ட காலம் ஓடிய
'அபூர்வ சகோதரர்கள்''
கழற்றப்பட்டு
ஜனவரி 9 முதல்
நல்லாட்சி திரையிடப்பட்டது.

நூறு நாட்கள் ஓடியபின்
கழற்றப்பட்டு
வேறு நாட்கள் பார்த்து
ஆறு வருடமோ...
ஆறாறு வருடங்களோ...
ஆரூடம் கூறாவிட்டால்
ஏழாறு வருடங்களோ
அடுத்தாட்சி திரையிடும்வரை
நல்லாட்சி ஓடுமென
சொல்லாட்சி புரிந்ததால் -
ரசிக மக்களிடையே
எதிர்பார்ப்பு ஏராளம்!

விசிலடிச்சான் குஞ்சுகள்
தெருவெங்கும் இறங்கி
ஆரவாரம் செய்து –
ஏழரை முடிந்து
எட்டு தாண்டி
ஒன்பதில் திரைக்கு வந்தது
நல்லாட்சி!

திரைக்கு வந்து
சில நொடிகளே ஆன
புத்தம் புதிய திரைப்படம்
நல்லாட்சி –
உங்கள்
சின்னத் திரைகளில்
முதன் முறையாக
உடனே வெளியிடப்பட்டது!

விறுவிறுப்பான காட்சிகள்!
சாண்டோ சின்னப்ப தேவரையும் மீறிய
யானைக் காட்சிகள்!
தினமும் ஆரம்ப நாட்களில்
அடிக்கடி காட்டப்பட்டன!
கடந்த பல வருடங்களாக
யானையை மக்கள் மறந்திருப்பார்களோ
என்ற ஞாபகத்தில்
காட்டப்பட்டனவோ தெரியாது!

அடுத்து வந்தன
வாகனக் காட்சிகள்!
அவசரத்திற்கு ஒதுங்கும்
ஆண்களைப் போல்
கண்ட நின்ற இடங்களிலெல்லாம்
வாகனங்கள்!
அடுத்து வந்தன
ஆயுதக் காட்சிகள்!
அதுவும் அழுத்துப்போக –
ரசிக மக்கள்
சுற்றும் முற்றும் பார்த்தனர்...
நூறு நாட்கள்
வெற்றிகரமாக ஓடுமென
எதிபார்க்கப்பட்ட திரைக் காவியம்
தாறு மாறாக ஓடத் தொடங்கியது...

நான்தான் இயக்கினேன் படத்தை
நன்றாக ஓடுமென்றார்
ஓர் இயக்குநர்!
இல்லை - இல்லை
இதனை இயக்க
நான்தான் முதலில்
நாடா வெட்டினேன் என்றார்
இன்னொரு இயக்குநர்!
இப்படியே இயக்குநர்கள்
எல்லோரும் ஒன்றுகூடி
ஆளுக்கொரு அறிக்கை விட்டனர்!

நாளுக்கொரு செய்தி
வந்ததே அன்றி
ஆளுக்காள் ஏதேனும் அசைத்ததாக இல்லை...
எத்தனோல் வியாபாரிகள்
எடுத்தெறியப்பட்டார்கள்...
ஆகார வியாபாரிகள்
அதிகாரம் பெற்றார்கள்...
பருப்பு வியாபாரி
நிதி மந்திரியானார்
கருப்பு வியாபாரிகள்
அதிகாரிகளாயினர்...

இப்படித்தான்
இத் திரைப்படத்தின் பாத்திரங்கள்!
இடைவேளை என்றொரு
பட்ஜெட் வந்தது
அரிசி விலை – பருப்பு விலை
குறையவே இல்லை
பாவம் -
கொத்தமல்லி வியாபாரிகள்!
நூறு நாட்கள் கடக்கும் முன்பே
ஏகப்பட்ட ஓட்டைகள் என
விமர்சகர்கள் கூறினர்!
எடிட்டிங் சரியில்லை
என்றார் ஓர் இயக்குநர்!

திரைக் கதையில் தொய்வு ஏற்பட்டதால்
மீண்டும்
துணையாக நடிகர்கள் சேர்க்கப்பட்டாலும்
ஒப்பனை பழையதே என்பதால்
ரசிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை!

இப்படியே திரைப்படம்
ஓட்டப்பட்டாலும் -
19வது ரீலில்
பிரச்சினை இருப்பதாகவும்
இதனால்
நூறு நாட்கள் தாங்குமா?
என்றொரு சந்தேகம்
நிலவுவதாகவும்
வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன!

என்றாலும்
பாடல்கள் எல்லாமே
குத்துப் பாடல்கள் என்பதால் -
சில காலம் இவை
தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்குமாம்!
வில்லன்கள் பின்
நல்லவர்களாக மாற்றப்படுவதால் -
படத்தில் இருந்த எதிர்பார்ப்பு
குறைந்து விட்டதாகவும்
குறை கூறப்படுகிறது!

அதிகாரம் பற்றிய
கிளைமாக்ஸ் காட்சி
இழுபறியாகவே உள்ளதால்
முடிவு குறித்தும்
விடிவு இல்லையென
விமர்சனங்கள் வருகின்றன!

தென் பகுதி ஏரியாக்கள்
நிலை இதுவென்றால் -
வடக்கு நிலை
இதைவிட மோசம்!
ரசிக மக்களிடையே
ஏராளம் எதிர்பார்ப்புகள்

என்றாலும் -
பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதிகள்
தங்கள் சொந்த நலன்களில் மாத்திரமே
இன்னும் முற்போக்காக இருக்கிறார்கள்!
நல்லாட்சி திரைப்படத்தில்
நகைச்சுவை வேடமேற்ற இவர்கள் -
அடிக்கடி –
வேசங்களை மாற்றுவதிலும்
முற்போக்குவாதிகள்தான்!

தங்களையே பதிவு செய்ய துப்பில்லாதவர்கள் -
எதிர்க் கட்சித் தலைமை
பாத்திரம் நினைத்து
பிச்சை எடுத்துகொண்டிருக்கிறார்கள்!

அடுத்த திரைப்படத்திற்கு
கால்சீட் கொடுக்க
இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்!
ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தாலும்
திரைப்படம்
வசூலில் மாத்திரம்
சாதனை படைத்துவிட்டதாம்!
மத்திய வங்கி –
எவன் கார்ட் போன்ற
ஏரியாக்களில்
வசூல் ஏராளம் என்கிறார்கள்!

என்றாலும் -
மொத்த வசூலையும்
இயக்குநர்களே
வாரிச் சுருட்டிக் கொள்வதால்
முதல் போட்டுத் தயாரித்த
வாக்காளர்கள் பாவம்
நட்டத்தில் இருக்கிறார்கள்!

( வலம்புரி கவிதா வட்டத்தின் 14வது கவியமர்வு கடந்த 03ம் திகதி கொழும்பு, குணசிங்கபுர, அல் - ஹிக்மா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றபோது Ibnu Asumath  வாசித்த கவிதை )


நன்றி : இப்னு அசுமத்தின்  முகப் புத்தகத்தில் இருந்து

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...