வட மாகாணசபையினதும் முதலமைச்சரதும் திட்டமிட்ட அரசியல் கபட நாடகம்! -சமரன்

ஏப்ரல் 16, 2015


மிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வட மாகாணசபை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளதாகவும், அது சம்பந்தமாக சர்வதேச சமூகம் தகுந்த விசாரணை நடாத்தி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி சமீபத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது.

இந்தத் தீர்மானம் திடீரென வந்த ஒன்று அல்ல. இந்தத் தீர்மானத்துக்கான முன்னறிவித்தலை மாகாணசபை உறுப்பினரும், இனப்பற்று என்ற விசம் அளவுக்கு அதிகமாக தலைக்கேறி சன்னதம் ஆடுபவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டே கொடுத்திருந்தார். அப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கொஞ்சமும் பிடிக்காத மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். அவர்தான் தமிழர்களை இனப்படுகொலை செய்த சூத்திரதாரி என கூட்டமைப்பு குற்றம் சாட்டியும் வந்தது.


அதன்பின்னர் இவ்வருடம் ஜனவரி 8 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக வந்ததுடன், கூட்டமைப்பினருக்கு மிகவும் பிடித்த ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் அமைந்துவிட்டது. புதிய அரசாங்கத்தில் கூட்டமைப்பு மந்திரிப் பதவி எதனையும் பெறாதுவிட்டாலும், அரசாங்கம் அமைத்துள்ள ‘தேசிய நிறைவேற்று சபை” என்ற அமைப்பில் அங்கம் வகிப்பதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் கூட்டமைப்பும் பங்குபற்றி வருகிறது.

புதிய அரசாங்கம் சில முக்கியமான வேலைகளைச் செய்வதற்கு என அறிவித்திருந்த 100 நாள் வேலைத்திட்டக் காலம் ஏறத்தாள முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலைமையில் தாம் ஆதரித்து, அதன் மூலம் பதவிக்குக் கொண்டுவந்த புதிய அரசாங்கத்துக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் அவகாசம் கூடக் கொடுக்காது, அதற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கிடப்பில் இருந்த சிவாஜிலிங்கத்தின் தீர்மானத்துக்கு வட மாகாணசபையில் வடிவம் கொடுத்து திடீரென நிறைவேற்றியது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும். அதுவும் முதலமைச்சர் விக்னேஸ்வரனே அதை முன்மொழிந்தும் இருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், முதலமைச்சர் விக்னேஸ்வரனினதும் இந்த திடீர் நடவடிக்கை எதற்காக எனக் கூட்டமைப்பு ஆதரவாளர்களே சற்றுக் குழம்பிப் போய் இருக்கிறார்கள். சரி ‘எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தால் என்ன, எமது நோக்கம் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதுதான்” என கூட்டமைப்பினர் ‘றீல்” விடுவார்களாக இருந்தால், அது சம்பந்தமாகவும் சில கேள்விகள் அவர்களிடம் கேட்க வேண்டிள்ளது. அதுவும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான ஒருவரே வட மாகாண சபையின் தலைமை அமைச்சராக இருக்கையில் அவர் வழங்கும் நீதி பக்கம் சாராது நிலைநாட்டப்பட வேண்டியது இன்றியமையாதது.

அப்படிப் பார்த்தால், இலங்கை அரச படைகள் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை செய்தது என்றால்,இந்தியாவின் அமைதிப்படை இலங்கை மண்ணில் புலிகளுடன் சமரில் ஈடுபட்டிருந்த போது அப்பாவி தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகள் எந்த வகையானவை? அவைகள் இனப்படுகொலை இல்லையா? புலிகள் கூட அந்த நேரத்தில் சுவர்களில் எழுதிய ஒரு சுலோகத்தில் ‘கோட்ஸே காந்தியைக் கொன்றான். ஆனால் ராஜீவ் காந்தியோ காந்தீயத்தையே கொலை செய்துள்ளான்’ என எழுதினார்கள். புலிகளினால் உருவாக்கப்பட்டு, அவர்களே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று அறிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தனது மாகாணசபைத் தீர்மானத்தில் இந்திய அமைதிப்படை செய்த படுகொலைகளையும் குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாது பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளார்கள்.

அதுமாத்திரமல்லாமல், நீதியின் தராசைச் சரியாகப் பிடிப்பதானால், அதுவும் முன்னாள் நீதிபதியான முதலமைச்சர் அதைப் பிடிக்கும்போது பக்கம் சாராமல் சமநிலையாகப் பிடிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் புலிகள் இத்தனை வருடங்களிலும் தமிழ் மக்கள் மீது நடாத்திய படுகொலைகளையும் கண்டித்தே ஆக வேண்டும். தமிழ் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள்,

தொழிற்சங்கவாதிகள், மதத் தலைவர்கள், அரச நிர்வாகிகள், சக போராளிகள் என பல்லாயிரக்கணக்கானோரை புலிகள் கொன்று குவித்தனரே அதைப்பற்றி ஏன் வட மாகாணசபையின் தீர்மானத்தில் வாயே திறக்கவில்லை. இறுதி யுத்த காலத்துக்கு முன்னரே புலிகள் சுமார் 30,000 (முப்பதினாயிரம்) தமிழ் மக்கள் வரை கொலை செய்துள்ளார்கள் என்ற ஒரு கணிப்பீடு கூட இருக்கிறது.
அரச படைகளின் இறுதி யுத்தப் படுகொலைகள் பற்றி அடிக்கடி பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதே இறுதி யுத்த நேரத்தில் தாம் மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பியோட முற்பட்ட போது புலிகள் அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்ததை நேரில் பார்த்த எத்தனையோ சாட்சிகள் இருக்கிறார்கள். புலிகள் அப்பாவிப் பொதுமக்களைத் தாமும் சுட்டுக் கொன்றது மட்டுமின்றி, பலவந்தமாக அவர்களைப் தமக்குப் பாதுகாப்புக்காகப் பிடித்து வைத்திருந்து அரச படைகளின் தாக்குதலிலும் உயிரிழக்க வைத்துள்ளார்கள். எனவே இறுதியுத்த நேர மக்களின் வகைதொகையற்ற உயிரிழப்புகளுக்கு புலிகளே அடிப்படைக் காரணகர்த்தாக்கள் என்பதே உண்மை. இதுபற்றி வட மாகாணசபைத் தீர்மானம் ஏன் மௌனம் சாதிக்கிறது?

உண்மை என்னவெனில் இந்தத் தீர்மானத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றியதின் நோக்கமே வேறு. தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள ஐ.தே.க அரசாங்கம் சட்டப்படியான அரசாங்கமோ, பெரும்பான்மை பலம் உள்ள அரசாங்கமோ அல்ல. எனவே தவிர்க்க முடியாதபடி ஒரு சில மாதங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் புதிய ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே ஒரு தேர்தல் நடைபெற்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஐ.தே.கவுக்கு மட்டுமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அது ஒரு விசப்பரீட்சையாக இருக்கப் போகின்றது. எனவே தாம் ஆதரித்து பதவிக்குக் கொண்டு வந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பதாக இருந்தபோதும், தம்மைப் பாதுகாக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலையிலும் கூட்டமைப்பு இருக்கிறது.

அதற்குக் காரணம் புதிய ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரியை எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமலே கூட்டமைப்பு ஆதரித்தது. எடுத்ததிற்கெல்லாம் மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்துடன சண்டை போட்டுக் கொண்டிருந்த கூட்டமைப்பு, தமிழ் மக்களின் பிரச்சியைத் தீர்ப்பது சம்பந்தமாக மைத்திரியிடம் எவ்விதமான வாக்குறுதியும் பெறாமல் அவரை ஆதரித்தற்கான காரணம் என்ன என்ற பெரியதொரு கேள்வி தமிழ் பொதுமக்களிடம் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், புதிய அரசாங்கம் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்குவதாகவோ, வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுவதாகவோ, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவோ, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாகவோ அல்லது கூட்டமைப்பு இதுமாதிரி முன்வைத்து வந்த கோரிக்கைகள் சம்பந்தமாகவோ இதுவரை சாதகமான சமிக்ஞை எதையும் காட்டவுமில்லை.

இப்படியான ஒரு கையறு நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் இருக்கையில், எப்படியும் புதிய அரசில் பதவி சுகம் அனுபவித்துவிட வேண்டும் என ஆவலாதிப்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அவருக்கு ஜால்ரா போடும் நியமன எம்.பி சுமந்திரனும் அரசாங்கம் நடாத்திய இவ்வருட சுதந்திர தின விழாவில் பங்குபற்றியதின் மூலம் இதுவரை காலமும் தமிழ் தலைமைகள் கடைப்பிடித்து வந்த சுதந்திர தினப் பகிஸ்கரிப்பு என்ற நாடகத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளனர். அதன் காரணமாக அவ்விருவரினதும் கொடும்பாவிகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழ் தேசிய உணர்வாளர்களால் எரிக்கப்பட்டும் உள்ளன.
இவையெல்லாம் சேர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களிடம் என்ன விடயத்தைச் சொல்லி வாக்குக் கேட்பது என்ற தர்மசங்கட நிலையை கூட்டமைப்புக்கு உருவாக்கியுள்ளது. அதற்கு ஒரு தீர்வாகக் கண்டு பிடிக்கப்பட்டதும், கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதுமே வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சிவாஜிலிங்கம் முன்மொழிந்த ‘இனப்படுகொலை’ தீர்மானம். அது போலியான, மக்களைத் திட்டமிட்டு ஏமாற்ற என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பதை அதை நிறைவேற்றியவர்களே அம்பலப்படுத்தியும் விட்டனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீர்மானத்தை நிறைவேற்றவிட்டு, பின்னர் அதன் சாரத்தையும் காரத்தையும் குறைப்பதற்காகவும், அரசாங்கத்தைத் தாஜா செய்வதற்காகவும், அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதின் நோக்கம் வேறொன்றும் இல்லை, தமிழ் மக்களின் நிலைமையை உலகறிய வைப்பதற்குத்தான் என்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அந்தத் தீர்மானம் கொண்டு வந்தது இறுதி யுத்தத்தை நடாத்திய முன்னைய மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விசாரிப்பதற்காகத்தான் என்கிறார்.

எதுஎப்படியோ, முன்னாள் நீதவானும் அவரது சகாக்களும் சேர்ந்து அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து, அவர்களை அடிமுட்டாள்களாக்கி, அவர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு இந்த இனப்படுகொலைத் தீர்மானத்தின மூலம் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள்.
வட மாகாணசபையின் பருப்பு தமிழ் மக்களிடம் அவியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...