புலம் பெயர் தேசங்களில் புரையோடிப்போயுள்ள புலிப் பயங்கரவாதம்
எஸ்.எம்.எம்.பஷீர்
பயங்கரவாதத்துடன் வாழ  நேரிடும்  எங்களுக்கு காலையில் வீட்டை விட்டு செல்லும் பொழுது திரும்பி வருவோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை
                                                                                லக்ஸ்மன்  கதிர்காமர்

“For those of us who have to live with terrorism, when we leave home in the morning there is no guarantee that we will come back.”

                                                                         Lakshman Kadirgamarஅண்மைக்காலங்களில் புலிகளின் வன்முறை செயற்பாடுகள்  இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் குறிப்பாக ஐரோப்பாவில் அடிக்கடி தங்களுக் கிடையிலான நிதி நிர்வாகம் , இயக்க அதிகார போட்டியின் காரணமாக வெளிப்பட்டு வருகிறது. இலங்கையில் புலிகளின் அழிவோடு புலிப் பயங்கரவாதமும் புலிகளின்  வன்முறையும் முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் புலம் பெயர் தேசங்களில் புலிகளின் வன்முறைகள் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை என்பதையே அண்மையில் பாரிஸில் கொல்லப்பட்ட பரிதியின் கொலையும்   சொல்லி நிற்கிறது.

நாடு கடந்த பயங்கரவாதத்தின் , வன்முறையின் கொலைக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் புலிகளின் தலைவர்  பிரபாகரனிடமிருந்தே கால்கொண்டது.   1981 ஆம் ஆண்டில்  தமிழ் நாட்டில் நாடுகடந்து வாழும் சூழலில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும்   துப்பாக்கி சமர்  செய்தே நாடு கடந்த வன்முறைக்கு வித்திட்டனர். பாண்டி பஜார் சண்டையில் பிரபாகரன் தமிழ்நாட்டு  பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரின் கைரேகைப்  பதிவுகள் பொலிசாரால் கோப்பிடப்பட்டன.
படம்: பிரபாகரனை தமிநாட்டு போலீசார் பாண்டி பஜாரில் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

பிரபாகரன் எம்.ஜி ஆரின் அனுசரணையுடன் வீட்டக் காவலிலே வைக்கப்பட்டார் . சட்டப்படியான விசாரணைக்கும்  தண்டனைக்கும் உட்படுத்தப்படவில்லை. பின்னர் தமது புலம் பெயர் -நாடு கடந்த - இயக்க கொளைஞர்க்ளளைக் கொண்டு 1990 ஆம் ஆண்டில் ஈ பீ ஆர் எல் எப் செயலாளர் நாயகம் பத்மனாபாவையும் அவரின் தோழர்களையும்   தமிழ்நாட்டிலே கொன்றார். அதன் பின்னர் , 1991 ஆம் ஆண்டு  இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் கொன்று நாடு கடந்த பயங்கரவாத முத்திரையை இந்தியாவில் அமர்க்களமாகப் பதித்தார். வழக்கம் போல் சகல படுகொலைகளையும் மறுத்தார், ஆனால் அவரின் இயக்கத்தினர் மூலம் அந்தப் படுகொலைகள் யாவும் தலைவனின் வழிகாட்டல் என அறிந்து புலி ஆதரவாளர்கள் அகிலமெங்கும் அக மகிழ்ந்தனர்.

ராஜீவின் கொலையின் பின்னர் 1993 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையினர் தனது கடற்பரப்பு எல்லைக்குள் சதாசிவம்  கிருஷ்ணகுமார் எனும் புலித் தலைவர் , கிட்டு பயணித்த கப்பலை சுற்றி வளைத்தனர். கிட்டு தற்கொலை செய்து கொள்ள  அவருடன் பயணித்த ஒன்பது பேரை இந்தியக் கடற்படையினர்  கைது செய்தனர்.

கிட்டு ஆயதங்களுடன் பயணித்தார் என்று சொல்லப்பட்டது. இச்சம்பவம்  நாடு கடந்த பயங்கரவாதிகளுக் கெதிரான இந்திய அரசியின் நடவடிக்கை எனப்பட்டது. ஆனால் புலிகளின் இந்திய பேச்சாளர் வை. கோ   கிட்டு பயணித்த கப்பல் மீது , இந்தியக் கடற்படை குண்டு வீசி இருக்கிறது. கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை, இந்தியக் கடற்படைதான் கிட்டுவைக் கொன்றது என்றார்.  எது எவ்வாறெனினும் பயங்கரவாதிகளாக இந்தியா பிரகடனப்படுத்திய பின்னர் கிட்டுவின் இந்தியக் கடலாதிக்க எல்லைக்குள் பிரவேசித்த பயங்கரவாதிகள் என்ற   முகாந்திரத்தைக்  கொண்டு கிட்டுவின் கப்பல் இடை மறிக்கப்பட்டது.
புலிகள் இலங்கையில் அழியும் வரை ,  புலம் பெயர் தேசங்களில் புலிகளின் கட்டாய நிதி சேகரிப்பு , மாற்றுக் கருத்தாளர்களின் அரசியல் சமூக நடவடிக்கைகளை மறுத்தல் அல்லது மட்டுப்படுத்தல்  என பல நெருக்குவாரங்களை புலிகள் மேற்கொண்டு வந்தனர். புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் புலிகளுக்கு எதிராக, அவர்களின் நாடு கடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கேள்வி எழுப்பிய போதெல்லாம் புலிகள்  "சும்மா கிட இல்லையேல் அங்கு உமது சொந்தம் சுடப்படும் " என்ற எச்சரிக்கையை  விடுத்தனர் . இலங்கையின்  வடக்கு கிழக்கு தமிழர்கள்  பேசாமடந்தைகளாக   இருப்பது எப்படி புனை பெயரில் தமது எதிர்ப்பை ஆங்காங்கே ஊடகங்களில் காட்டுவது எப்படி என்பதை மிக விரைவாக கற்றுக் கொண்டார்கள்.
புலிகளின் வரலாற்று அயோக்கியத்தனங்களை ஆவணப்படுத்தி வெளிக் கொண்டுவர முனைந்ததாலதான் சபாலிங்கம்  1.5.1994 அன்று புலிகளால் பிரான்சில் அவரின் இல்லத்தில் வைத்து  சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி மக்கள் உறவினர்கள் சபாலிங்கம் கொல்லப்பட்டு ஓராண்டின் பின்னர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் " தமிழ் மக்களின் போராட்டத்தின் மீதும் அவர்களுடைய எதிர்கால நல்வாழ்வின் மீதும் அக்கறையுடன் உண்மையாக உழைத்ததால்  நீங்கள் அழிக்கப்படீர்கள் " என்று குறிப்பிட்டிருந்தார்கள் . அந்தச் செய்தி உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தவர்கள் யார் என்பதை , அதற்காக புலம் பெயர் தேசத்திலும் தங்களை   அழித்துக் கொண்டவர்கள் யார் என்பதையும் முரண் நகையாக சுட்டிக் காட்டியிருந்தது.  புலம் பெயர் தேச புலிகளின் அடாவடித்தனங்களுக்கு  கனடாவில் ஆளாகிப் போன பலரில்    தீ பீ எஸ். ஜெயராஜ்  எனும் பத்திரிக்கையாளரும் ஒருவர். அவர் வெயிட்ட  மஞ்சரி  சஞ்சிகையில் எழுப்பிய புலி விமர்சனங்களை சகிக்க  முடியாத புலிகள் அவர் மீது தாக்குதல்  தொடுத்தனர். அவரே இப்போது பிரான்சில் கொல்லப்பட்ட பரிதியின் கொலை புலிகளின் உள்  முரண்பாட்டுக் கொலை என்பதாக  திட்டவட்டமாக கூறுகிறார்.

ஆனால் மழை விட்டும் தூவானம்  விடவில்லை என்ற கதையாக இப்போது புலம் பெயர் தேசங்களில் ஆங்கங்கே   நடைபெறும் புலிகளின் அடாவடித்தனங்கள் பல உள் முரண்பாட்டு முறுகல்களின்  விளைச்சல்களாக, வினை விதைப்பின் அறுவடைகளாக  வெளிவருகிறது  என்றால் மிகை ஆகாது.

ஐரோப்பாவில் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மறைந்த வெளி விவகார அமைச்சர்  லக்ஸ்மன  கதிர்காமர்  அவர் பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் மல்கம் ரிப்கின்னை  (Malcolm Rifkin) 1996 ஆம் ஜனவரியில்  பிரித்தானியாவில் சந்தித்த பொழுது  பிரித்தானியாவிலிருந்து சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஸ்டேர்லிங் பவுன்சுகள் மாதந்தோறும் புலிகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்ததுடன் , பிரித்தானியாவின் புலிகளுக் கெதிரான செயற்பாடுகள் போதுமானவையாகவில்லை என்று தனது அதிருப்தியையும் தெரிவித்திருந்தார். அவரின் புலம் பெயர் தேச புலி எதிர்ப்பு ராஜீய நடவடிக்கைகளுக்காக இலங்கையில் தனது உயிரையே புலிகளுக்கு பலியிட வேண்டி நேரிட்டது. புலிகளின் புலம் பெயர் தேச நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டோர் பலர் அதற்கான  விலையை -தமது உயிரை- புலம் பெயர் தேசத்திலும் , புலத்திலும் கூட கொடுக்க வேண்டி கூட நேரிட்டது. அவர்களின் தியாகங்கள் போற்றுதலுக்குரியவை. இலண்டனிலுள்ள அன்றைய கால கட்டத்தில் புலி எதிர்ப்பு தமிழ் வானொலி ஒன்றில் புலி குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்த ஜான் எனும் சுவிசில் வாழ்ந்த இளைஞன்  தனது புலம் பெயர் புலி எதிர்ப்பு விமர்சனங்களுக்காக , இலங்கைக்கு விடுமுறைக்கு சென்ற சில நாட்களிலே வாழைச்சேனையில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார். இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கோரி சுவிஸ் வந்தவன் அந்நாட்டு பிரஜையாகி பாதுகாப்பாக இலங்கை செல்ல முடிந்தும்  ,  தனது  ஊருக்கு செல்ல முடிந்தும் புலத்தில் வாழும் புலிகளுக்கு தான் பிறந்த மண்ணிலே தன்னையே பலி கொடுக்க நேரிட்டது .  

இப்போது புலிகள் உலகெங்கும் தமிழர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் கொல்லப்படுகிறார்கள் என்று பிலாக்கணம் பாடுகிறார்கள்.  பரிதியின் கொலை இலங்கை அரசின் புலனாய்வுத்துறையின் செயற்பாடு , அரசுடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் புலிகளின் அல்லது புலி எதிர்ப்பாளர்களின் , தமிழ் துரோகிகளின் செயற்பாடு  என்றெல்லாம் புலிகளின் ஊடகக் குரல்கள் ஓர்மத்துடன் ஒலிக்கின்றன . புலிகளின்  குரல்தரவல்லோர்கள் " மக்களே சோர்ந்து விடாதீர்கள் , முள்ளி வாய்க்கால் முடிவல்ல , பிரான்சும் முடிவல்ல , விழ விழ எழுவோம் , தலைவன் வழி  செல்வோம் " என்று அறை கூவல் விடுகிறார்கள். புலிகளின் இந்திய தமிழ் "உணர்வாளரும்" , புலிப் பேச்சாளருமான  பழ நெடுமாறன் தமிழர்களுக்கு உலகில் எங்கும் பாதுகாப்பில்லை என்று ஒப்பாரி வைக்கிறார். பத்மநாபா கொல்லப்பட்ட பொழுது தமிழ் நாட்டிலே தமிழனுக்கு   புலித் தமிழனால் பாதுகாப்பில்லை என்றோ , சபாலிங்கத்துக்கு பிரான்சிலும் புலித் தமிழனால் அல்லது  புலிப் பாஷையில்  இனந்  தெரியாத நபர்களால் பாதுகாப்பில்லை என்றோ சொல்ல முடியவில்லை. அல்லது சபாலிங்கத்தின் கொலை இலங்கை அரசின் நாடுகடந்த கொலை என்றோ சொல்லவில்லை.

பிரான்சில் புலிகளின் முன்னாள் தலைவர்களான கஜனும் நாதனும் ஜூலை  1996 ஆம் ஆண்டில் பகல் வெளிச்சத்தில் பகிரங்கமாக  கொல்லப்பட்ட பொழுது புலிகள் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையே கொன்றது என்று தமது ஆதரவாளர்களை நம்பவைத்தனர். சு.ப தமிழ் செல்வனும் கருணாவும் சமாதான பேச்சுவார்த்தைக்காக பிரான்ஸ்  வந்த பொழுது கஜநினதும் , நாதனதும் கல்லறைகளுக்குச்  சென்று இறுதி மரியாதை செலுத்தினர். 

  படம்: கஜன் , நாதன் ஆகியோரின் பிரான்சிலுள்ள கல்லறைகள் 
 பிரான்சில் வைத்தே கருணாவும் கிழக்கு தமிழர்கள் பிரிந்து செயற்படவேண்டும் எனும் உள்ளுணர்வைப் பெற்றார் என்று கருணாவினை பிரான்சில் சந்தித்த பிரான்சில் வாழும் மட்டக்களப்பு தமிழர்கள் சிலர் இக்கட்டுரையாளரிடம்  குறிப்பிட்டனர். தமிழ் செல்வன் குழுவினர் பிரான்சுக்கு வந்த பொழுது பரிதி அக்குழுவினருடன் நெருக்கமாக காணப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 படம்: தமிழ் செல்வன் பிரான்சுக்கு விஜயம் செய்த பொழுது 

எனினும் பிரான்சில் தமிழ் செல்வனைச் சந்தித்த புலிகளின் முக்கியஸ்தர்கள்  சிலரை இங்குள்ள புகைப்படத்தில் காணலாம்.   பரிதியின் இறந்த  உடலிலிருந்து ஓடிய குருதியினை தொட்டு நெற்றியிலும் நெஞ்சிலும் பூசி தமிழ் ஈழத்துக்காக போராடுவோம் என்று புலி ஆதரவாளர்கள் பிரதிக்கினை எடுத்திருக்கிறார்கள். புலிகள் தமிழர்களை நம்பவைத்தே சுதுமலையிலிருந்து முள்ளிவாய்க்கால் சுடுகாடுவரை இழுத்துச்  சென்றனர். அந்த  தொடரில் பிரான்சில் பரிதியின் இழப்பும் இணைக்கப்பட்டுள்ளது . இழுக்கப்படப்  போவதும் இழக்கப் போவதும்  இனியும் புலி வால் பிடித்த புலம் பெயர் தமிழர்கள்தான்.!!
பிற்குறிப்பு : லக்ஸ்மன்  கதிர்காமர்  புலிகளால் வீட்டுக்குள்ளேயே சுடப்பட்டுப் போனார் 
11 -11-2012

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...