விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா? விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா? -புனிதன்

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்று உருவாகியிருக்கிறது. இந்தக்
கூட்டணியில் விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
என்.சிறீகாந்தா,  அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையிலான கட்சிகள்
இணைந்துள்ளன. இப்படியான ஒரு கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாகும் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் இணைய மறுத்துள்ளமைதான்.
பொன்னம்பலம் இணைய மறுத்தமைக்கு அரசியல் ரீதியிலான கருத்து
முரண்பாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாது. அது பெரும்பாலும் தனிநபர் முரண்பாடு சம்பந்தப்பட்ட காரணம்தான். எனவே அவர் வடக்கு அரசியலில் எந்தவிதமான காத்திரமான பங்களிப்பையும் வழங்க முடியாதவராகவே இருக்கப் போகின்றார்.



விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் உதயத்துடன் பிற்போக்கு
தமிழ் தேசியவாத சக்திகள் மூன்று அணிகளாகப் பிளவுண்டுள்ளதைக் காண
முடிகிறது. அதேநேரத்தில் விக்னேஸ்வரன் தலைமையிலான அணி
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு மாற்றாகவும், சவாலாகவும் சிலரால்
பார்க்கப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்ப
வேண்டிய தேவை உள்ளது. ஒரு அணிக்கு இன்னொரு அணி மாற்று
என்றால்இ அதன் பிரதான அர்த்தம் கொள்கை சம்பந்தப்பட்ட மாற்றாக
இருக்க வேண்டும். அடுத்ததாக தலைமையின் சிறந்த குணாம்சம்
சம்பந்தமாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் விக்னேஸ்வரன்
தலைமையிலான கூட்டணிக்கு இருக்கிறதா என்றால் இல்லை
என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலாவதகஇ விக்னேஸ்வரன் தலைமையில் சேர்ந்திருக்கிற கட்சிகளும்,
கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியும் முன்னர் தமிழ் தேசியக்
கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள்தான். எனவே இவர்களுக்குள்
கொள்கைரீதியில் அடிப்படை முரண்பாடு எதுவும் கிடையாது.

இவர்களுக்கிடையிலான முரண்பாட்டின் பிரதான தோற்றுவாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளை மதிக்காமல் ‘பெரியண்ணன்’ தோரணையில் தன்னிச்சையாக செயல்பட்டதுதான். தமிழரசுக் கட்சி தனது தேர்தல் வெற்றிகளுக்கு மற்றைய கட்சிகளைப் பயன்படுத்திய அதேநேரத்தில் மற்றைய கட்சிகளுக்கு உரிய இடத்தை வழங்கத் தயாராக இருக்கவில்லை. உதாரணமாகஇ தென்னிலங்கை அரசியல் கட்சிகளை டுத்துக்கொண்டால், பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியும் சரி,  தேர்தலுக்காக ஏனைய கட்சிகளை இணைத்து கூட்டணிகளை உருவாக்கும்போது அந்தக் கூட்டணிக்கு பொதுவான ஒரு பெயரை வைப்பது மட்டுமல்லாது அந்தக் கூட்டணியை தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதுடன்இ பொதுவான சின்னங்களின் கீழும் போட்டியிட்டு வந்துள்ளன.

தென்னிலங்கைக் கட்சிகளிடம் உள்ள இந்த குறைந்தபட்ச ஜனநாயக
நடைமுறை ஒருபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக தேர்தல்கள்
திணைக்களத்தில் பதிவு செய்யுமாறும்இ ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிட ஏற்பாடு செய்யுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) தலைமையிடம் பங்காளிக் கட்சிகள் பல தடவை வலியுறுத்திய போதும், தலைமை அதற்குத் தயாராக இருக்கவில்லை. அப்படிப் பதிவு செய்து பொதுச்சின்னத்தில் போட்டியிட்டால் தமிழரசுக் கட்சியின் ‘பிடி’
கூட்டமைப்புக்குள் இல்லாமல் போய்விடும் என்ற பயம் காரணமாக
சம்பந்தன் – மாவை – சுமந்திரன் மும்மூர்த்திகள் அதற்கு இடம்
கொடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் இந்த ஆதிக்க மனோபாவம் காரணமாகவே சில கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு பிரிந்து செல்லக் காரணமாயிற்று.

ஆனால் பிரிந்து சென்ற கட்சிகள் தாம் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து
சென்றதற்கான காரணத்தைச் சொல்லும் போது ஏதோ கொள்கை முரண்பாடு காரணமாகப் பிரிந்து சென்றதாகத்தான் கூறிக் கொள்வார்கள்.
அப்படி அவர்கள் சொல்லும் கொள்கை முரண்பாடு என்னவென்று பார்த்தால்
கூட்டமைப்பின் வேகம் போதாது என்பது ஒன்று. மற்றையது கடந்த
ஐ.தே.க. அரசாங்க காலத்தில் அரசுக்கு  ஆதரவாகச் செயல்பட்டது என்பது.
இந்த இரு விடயங்களையும் பொறுத்தவரை, ஆரம்ப காலம் முதல்
எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டு
வந்திருக்கின்றன. அதாவது, தமிழ் கட்சிகளின் வரலாற்றை எடுத்து நோக்கினால் அவைகள் சில விடயங்களில் ஒரே மாதிரியான  கொள்கைத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். அவை என்னவென்று பார்த்தால்: தமிழ் மக்களின் வாக்குகளை ஏமாற்றிப்
பெறுவதற்காக மோசமான தமிழ் இனவாதம் பேசுதல். நாட்டின் முற்போக்கு – ஜனநாயக கட்சிகளான இடதுசாரிக் கட்சிகளுக்கும்,சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எதிராக வர்க்க அடிப்படையில் பிற்போக்கு ஐக்கிய கட்சியுடன் கள்ள உறவு வைத்திருத்தல். சர்வதேச ரீதியாக சோசலிச அல்லது
ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளுடன் உறவு வைப்பதற்குப் பதிலாக
ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவைப் பேணுவது. இந்த நிலைப்பாட்டை அன்றைய தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகள் மட்டுமின்றி, இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அச்சொட்டாகப் பின்பற்றி வருகின்றது. அதுமட்டுமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினரும் சரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியும் சரி, இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.தமிழினத்தின் சாபக்கேடே இதுதான்.

இந்த நிலைமையில், விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணி தமிழ்
தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரதான அணியாக இருக்கும் என்பது
சரியான கணிப்பீடு அல்ல. வேண்டுமானால் விக்னேஸ்வரனின்
அணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளில் ஒரு பகுதியைப்
பிரித்தெடுத்து அந்த வாக்கின் மூலம் நாடாளுமன்றத்துக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பலாம். அதற்கு அப்பால் அந்த அணி கொள்கை அடிப்படையில் ஒரு மாற்று அணியாக இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளின் வரலாற்று அடிப்படையிலும், தற்போதைய வடக்கின் கள நிலவரப்படியும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கொள்கை அடிப்படையிலான மாற்று அணி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமே. இந்த உண்மையை அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் கண்டுகொள்ள முடியும்.
நன்றி: வானவில் இதழ் 110 மாசி 2020

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...