சிறுபான்மையின மக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார்கள்?

2019 நொவம்பர் 16இல் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் அப்போதைய எதிரணி சார்பாகப் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றியீட்டினார். அதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பதவி விலக கோத்தபாய அணியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி ஏற்றது. ஆனால் அந்த அரசு சிறுபான்மை அரசு.
இந்த நிலைமையை மாற்றி பலமிக்க ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்காக, அரசியலமைப்புப் பிரகாரம் நான்கரை ஆண்டுகளின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு விதியைப் பயன்படுத்தி விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தகைய ஒரு சூழலில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் மக்கள் பொதுத் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்து நிற்கிறது.
ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற பெரும்பாலான (சுமார் 85 சதவீதம்) தமிழ் – முஸ்லீம் மக்கள் கோத்தபாயவுக்கு வாக்களிக்காது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். அதற்குக் காரணம் சஜித் நிச்சயம் தோல்வியடைவார் என்பது இந்த மக்களின் தலைமைகளுக்குத் தெரிந்திருந்தும், தமது சுயலாபம் காரணமாகவும், பாரம்பரியமான ஐ.தே.க. விசுவாசம் காரணமாகவும் அவருக்கே இந்த மக்களை வாக்களிக்க வைத்தனர்.
மக்களைப் பொறுத்தவரை எந்த நேரமும் அரசியல் சிந்தனையில் இருப்பவர்கள் அல்ல. தேர்தல் நெருங்கும் நேரங்களில் மட்டும் அரசியலில் ஆர்வம் காட்டுவார்கள். மற்றைய நேரங்களில் தாமுண்டு, தமது குடும்பம் உண்டு என இருந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேவையானதெல்லாம் பாதுகாப்பான, ஓரளவு வசதியான வாழ்வு, தொழில் வசதிகள், பிள்ளைகளின் படிப்பு என்பனதான்.
ஆனால் இந்த சிறுபான்மை இன மக்களுக்குத் தலைமைதாங்கும் அரசியல் தலைமைகள் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு தமது அரசியல் இருப்பை வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமது நலன்களைப் பாதுகாக்க அது அவசியமானது. அவ்வாறு தமது அரசியல் இருப்பை வைத்துக்கொள்ள வேண்டுமானால் இனவாதத்தை பிரதான ஆயுதமாக எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும்.
அப்படிப் பார்க்கையில், தமிழ் இனவாத அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, தமிழ் இனவாதத்தை அற்றுப்போகாமல் தொடர்ந்து பேணுவதானால், மறுபக்கத்தில் சிங்கள இனவாதம் வீச்சுடன் இருக்க வேண்டும். அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சிகள் ஏதாவது எடுக்கப்பட்டால் அதை சிங்கள இனவாதிகள் குழப்ப வேண்டும். இடையிடையே தமிழ் மக்கள் மீது இன வன்செயல்களை நடத்த வேண்டும்.
இந்த விடயங்களைப் பொறுத்தவரை, ஐ.தே.க. தலைமை மேற்படி விடயங்களை கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக கனகச்சிதமாக அரங்கேற்றி வந்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை இவை:
□ சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத்தேர்தல் 1947இல் நடந்த கையோடு இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது.
□ வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்தது.
□ 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்செயல்களை முன்னின்று நடத்தியது.
□ இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1957 இல் செய்யப்பட்ட பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம், 1987இல் செய்யப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம், 2000ம் ஆண்டில் சந்திரிக அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் என்பனவற்றைக் குழப்பியது.
□ 1981இல் யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது தென்னிலங்கையிலிருந்து காடையர்களைக் கொண்டு சென்று தேர்தலில் மோசடி செய்ததுடன், யாழ்.பொது நூலகம், யாழ்.நகரக் கடைகள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், நாச்சிமார் கோயில் தேர், யாழ்.தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லம் என்பனவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியது.
இப்படிப் பல கைங்கரியங்கள் ஐ.தே.க. தலைமையால் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ளன. இருந்தும் அன்றிலிருந்து இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை வரை எல்லாத் தமிழ்த் தலைமைகளுமே ஐ.தே.கவுடனேயே உறவு வைத்து வந்துள்ளன, வருகின்றன. அதற்குக் காரணம் ஐ.தே.க. செய்யும் இத்தகைய செயல்கள்தான் தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தைக் கிளறி வாக்குப் பெறவும், தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவி வருகின்றன.
இன்னொரு பக்கத்தில் முஸ்லீம் தலைமைகளை எடுத்துக்கொண்டால் அவை வேறு சில நோக்கங்களுக்காக ஐ.தே.கவை ஆதரித்து வருகின்றன.
ஆரம்ப காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு தலைமைதாங்கிய டாக்டர் கலீல் தலைமையிலான முஸ்லீம் லீக், சேர்.ரசீத் பரீத் தலைமையில் இருந்த சோனக இஸ்லாமிய சங்கம் என்பன கொழும்பு முஸ்லீம் வர்த்தக சமூகத்தைத் தலைமையாகக் கொண்டிருந்ததுடன், ஐ.தே.கவின் கிளைகள் போலவே செயல்பட்டன.
இந்த நிலைமையை மாற்றவும், இந்த மண்ணின் மைந்தர்களான உண்மையான முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவுமே அஸ்ரப் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசை உருவாக்கினார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
ஆனால் அவருடைய தூரதிஸ்டவசமான மறைவுக்குப் பின்னர், தலைமையைக் கைப்பற்றிய ஹக்கீம் தலைமையில் முஸ்லீம் வர்த்தக சமூகம் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்றி அதை முன்னர் போல ஐ.தே.கவின் வாலாக மாற்றியுள்ளது. இன்னொரு முஸ்லீம் தலைமையான ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதே பாதையையே பின்பற்றுகிறது. இந்த இரு தலைமைகளும் ஐ.தே.கவுடன் கூட்டு வைத்திருக்கின்ற அதேநேரத்தில், தமது இருப்புக்காக தமிழ் – சிங்கள மக்களுக்கெதிரான முஸ்லீம் இனவாதத்தையும் பயன்படுத்துகின்றன.
ஆக, மொத்தத்தத்தில் இன்றைய தமிழ் தலைமையும், முஸ்லீம் தலைமைகளும் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுடைய நலன்களை விட தமதும், தமது சமூகத்திலுள்ள வசதி படைத்தவர்களினதும் நலன்களைப் பாதுகாப்பதிலேயே முனைப்பாக உள்ளன. அவ்வாறு அவர்கள் தமதும் தமக்கு வேண்டப்பட்டவர்களதும் நலன்களைப் பாதுகாப்பதானால், அதற்கு ஏதுவான கட்சி முதலாளித்துவ, பிற்போக்கு, பேரினவாத ஐ.தே.க. கட்சியே. அதனால்தான் தென்னிலங்கையிலுள்ள ஏனைய கட்சிகளை விட ஐ.தே.க. சிறுபான்மை இனங்களுக்கு ஆகக்கூடுதலான அநியாயங்களைச் செய்த போதிலும், உதைத்த காலை நக்குவது போல இந்த இரு தலைமைகளும் ஐ.தே.கவின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றன.
இந்த நிலைமையில் தமிழ் – முஸ்லீம் மக்கள் தற்போதைய தமது தலைமைகளையும், அவை சோரம் போயிருக்கிற ஐ.தே.க. தலைமையையும் தொடர்ந்தும் ஆதரிப்பதால் ஏதாவது பயன் உண்டா என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமானதாகும். அதுவும் விரைவில் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறப்போகின்ற சூழலில் அவர்கள் தமது நிலைப்பாடு பற்றி ஆழமாகச் சிந்திப்பது அவசியமாகின்றது.
ஒரு பக்கத்தில் அவர்கள் இந்த விடயத்தைக் கொள்கை சார்ந்து சிந்திக்கின்ற அதேநேரத்தில், மறுபக்கத்தில் நடைமுறை சார்ந்தும் தந்திரோபாயம் சார்ந்தும்; சிந்திக்க வேண்டும்.
அதாவது, கொள்கை சார்ந்து என்று சிந்திக்கும்போது, இன்றைய சூழலில் தவிர்க்க முடியாது நாட்டை ஆள வாய்ப்புள்ள இரண்டு பிரதான கட்சிகளில் ஒப்பீட்டுவகையில் எது சிறந்தது என்பதை ஆராய்ந்து தீர்மானிப்பது அவசியமானது.
அந்த வகையில், நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களையும், உள்நாட்டு பெரும் முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளின் நலன்களையும் பாதுகாக்கின்ற ஐ.தே.கவை ஆதரிப்பதா அல்லது ஒப்பீட்டு வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொண்டதும், நாட்டினதும் மக்களினதும் நலன்களையும் முதன்மைப்படுத்துகின்றதுமான சிறீலங்கா பொதுஜன பெரமுன – சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக்கட்சிகள், தேசப்பற்றுள்ள சக்திகள் கொண்ட கூட்டை ஆதரிப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
அதேநேரத்தில், நடைமுறை சூழல் மற்றும் தந்திரோபாயம் என்பனவற்றைப் பார்த்தோமானால், தற்போது ஐ.தே.கவுக்கு எதிரான உறுதியான ஒருவரான கோத்தபாய ராஜபக்சவே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருக்கின்றார்.
அதுமாத்திரமின்றி, விரைவில் நடைபெறப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் எவ்வித சந்தேகமுமின்றி, அவரது அணியினரே வெற்றிபெற்று ஆட்சியமைக்கப் போகின்றனர். எனவே அடுத்த 5 வருடங்களுக்கு அவர்களது அரசாங்கமே நாட்டை நிர்வகிக்கப் போகின்றது.
இத்தகைய ஒரு சூழலில் தமிழ் – முஸ்லீம் மக்கள் தமது தலைமைகளின் தவறானதும், புத்திசாதுரியமற்றதுமான சொல்லைக் கேட்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தது போல மீண்டும் ஒரு தவறைச் செய்து, அடுத்த 5 வருடங்களும் எதையும் பெற முடியாத அனாதைகளாக நிற்கப் போகின்றார்களா? அல்லது தமது தலைவிதியை மாற்றி அமைக்கப் போகின்றார்களா என்பதே முக்கியமான கேள்வியாகும். பொதுத்தேர்தல் நடைபெறப் போகின்ற சூழலில் இது ஒரு முக்கியமான கேள்வியாகும்.
இதற்கான ஒரேயொரு பதில், தமது சொந்த நலன்களுக்காக தொடர்ந்தும் ஐ.தே.கவுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், ஹக்கீம் – ரீசாத் தலைமையிலான முஸ்லீம் தலைமைகளையும், மனோ கணேசன் தலைமையிலான இந்திய வம்சாவழித் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டணியையும் தமிழ் – முஸ்லீம் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான்.
அவ்வாறு செய்யாமல் தொடர்ந்தும் தமிழ் – முஸ்லீம் மக்கள் இந்தக் கட்சிகளுக்கு வாக்களித்தால், அது பொதுத்தேர்தலில் படுதோல்வி அடையப்போகின்ற ஐ.தே.கவுக்கு வாக்களிப்பதாக அமைவதுடன், இந்த மக்கள் அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் வனாந்திரத்தில் சஞ்சரிக்கும் நிலையும் ஏற்படும் என்பதையும்; உணர்ந்து கொள்வது அவசியம்.
Source: vaanavil -110. February 2020

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...