உலகப் பேரழிவை ஒன்றுபட்டு முறியடிப்போம்!


உலகம் முழுவதையும் அழிக்கும் ‘அரக்கனாக’ கொரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி கிருமி ஊழித்தாண்டவம் ஆடுகின்றது.
முடிசூடி ஆண்ட அரச பரம்பரையிலிருந்து ஒருபிடி சோற்றுக்கு வழியில்லாத பரதேசி வரை இந்த கொடிய வைரஸ் தன் கைவரிசையைக் காட்டி வருகிறது. பணக்காரன் ஏழை என்ற பேதம் இல்லை இந்த வைரசுக்கு. முதலாளி தொழிலாளி என்ற பேதமும் இல்லை. செல்வந்த நாடு ஏழை நாடு என்ற பேதமும் இல்லை. படித்தவன் படிக்காதவன் என்ற பேதமும் இல்லை. வல்லரசு நல்லரசு என்ற பேதமும் இல்லை. இப்படி உலகை சமனப்படுத்திய எந்தவொரு நிகழ்வும் இதற்கு முதல் உலகில் தோன்றியதில்லை எனத் துணிந்து கூறலாம்.
இன்று இருப்போர் நாளை இருப்பாரா என்ற நிச்யமற்ற நிலை ஒவ்வொரு மனிதர் முன்னாலும் எழுந்து நிற்கிறது. முன்னர் எல்லாம் வயோதிபம் காரணமாகவோ அல்லது தீராத நோய் காரணமாகவோ மனிதர்கள் தமது ஆயுளின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் இன்று இந்த நிமிடம் பிறந்த குழந்தையிலிருந்து நூறு வயதைத் தாண்டிய வயோதிபர்கள் வரை தமது ஆயுள் முடியப்போவதை எதிர்பார்த்திருக்கும் அவல நிலை.


இந்த நோய் சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பரில் முதன்முதலாக இனம் காணப்பட்டது. இது இயற்கையாகத் தோன்றியதா அல்லது எங்காவது மனிதர்களால் தீய நோக்கோடு உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதா என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை.
ஆனால் சீனா மீது நீண்டகாலமாக காழ்ப்புணர்வு கொண்டிருந்த அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான மேற்கு நாடுகளும் சீனாவே திட்டமிட்டு இந்த வைரசை; பரப்பியதாக எழுந்தமானத்துக்குப் பிரச்சாரம் செய்தன. இந்த கொள்ளை நோயுடன் சீனப் பொருளாதாரம் சரிந்தது, சீனாவின் கதை முடிந்தது என ஆர்ப்பரித்தன. இனி ஜென்மத்துக்கும் சீனா தலைதூக்க முடியாது எனக் கொக்கரித்தன. சீனா மீது இந்த நாடுகள் கடுமையான வன்மம் கொள்வதற்குக் காரணம் என்ன?
சீனா ஒரு சோசலிச நாடு, அந்த நாடு தமது நாடுகளிலும் சோசலிசத்தைப் பரப்பி தாம் கட்டிக்காத்து வரும் முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்கு சமாதி கட்டிவிடும் எனப் பயந்து ஆரம்பகாலத்தில் சீனாவை இந்த நாடுகள் எதிர்த்தன. ஆனால் சீனா பொருளாதார ரீதியாக உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடாக உருவாகி முதலாளித்துவ சமூக அமைப்பை விட சோசலிச அமைப்பு மேன்மையானது என்பதை நிரூபித்த பின்னர், சீனாவை எப்படியும் வீழ்த்தி தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேணடும் என இந்த நாடுகள் கங்கணம் கட்டிச் செயல்பட்டன.
சீனாவுக்கு எதிராக பல்வேறு விதமான சதி சூழ்ச்சிகளில் ஈடுபட்ட இந்தநாடுகள் அவை எல்லாவற்றிலும் தோல்வி கண்டபின்னர், ட்ரம்ப்பின் அமெரிக்கா சீனாவை மடக்குவதற்கு வர்த்தக யுத்தத்தில் இறங்கியது. அதுவும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் சீனாவின் வூஹான் நகரில் கொடிய கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரக் கணக்கானோரைப் பாதித்ததுடன், மூவாயிரத்துக்கு மேற்பட்டோரைப் பலி கொண்டது. இந்த வைரஸ் சீனாவை உலுப்பிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான மேற்கு நாடுகளும் மனிதாபிமான ரீதியில் சீனாக்கு உதவுவதைவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. சீனா இறுதி மூச்சு விடுவதைப் பார்ப்பதற்கு அவை ஆவலுடன் காத்திருந்தன.
ஆனால் நவ சீனத்தின் சிற்பி மாஓ கூறியதைப் போல, ‘சூறைக்காற்றையம் ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும்’ எதிர்த்து சீன மக்கள் ஒரு மனிதனாக ஐக்கியப்பட்டு நின்று தம்மை நோக்கி வந்த துன்பத்தை எதிர்த்து நின்றனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர்.
இன்று வரலாறு தலைகீழாக மாறியுள்ளது. எந்த அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இந்த கொடூரமான நோயை வைத்து சீனாவை இழிவுபடுத்தவும் தனிமைப்படுத்தவும் முயன்றனவோ, அவையே தமது நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவிகோரி அதன் காலடியில் விழுந்துள்ளன. எந்த வூஹான் நகரை பழித்து ‘வூஹான் வைரஸ்’ என அழைத்தனரோ, அந்த நகரிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரசைக் கட்டுபபடுத்துவதற்கான மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் செல்கின்றன. இதன் மூலம் முதலாளித்துவ அமைப்பை விட சோசலிச அமைப்மே மேன்மையானது என்பதை சீனா மீணடுமொருமுறை நிரூபித்துள்ளது.
சீனா மட்டுமல்ல, இன்னொரு சின்னஞ்சிறிய சோசலிச நாடான கியூபாவும் இந்த கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் உதவி வருகிறது. இவ்வளவுக்கும் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக கியூபா மீது மிலேச்சத்தனமான முறையில் அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அநியாயமான செயலுக்கு மேற்கத்தைய நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன. இருந்த போதிலும் கியூபா அரசியல் வஞ்சம் தீர்க்க எண்ணாது சோசலிசப் பண்பாடான சர்வதேசியத்துவ உணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் ஓடோடிச்சென்று மேற்கு நாடுகளுக்குக் கூட உதவி வருகின்றது.
இருந்தபோதிலும் ஏகாதிபத்திய குணாம்சம் ஒருபோதும் மாறாது என்பதற்கு உதாரணமாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா இந்த உலகப் பேரழிவுத் தருணத்திலும் கியூபா, ஈரான், வெனிசூலா, வட கொரியா, சிரியா என்பனவற்றின் மீதான தனது பொருளாதாரத் தடையை நீக்க மறுப்பதுடன், மென்மேலும் புதிய தடைகளையும் விதித்து வருகின்றது. சீனாவிடம் உதவி கேட்டுக்கொண்டே சீனாவுக்கெதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இருந்தபோதிலும், இந்தக் கொடிய நோய் உருவான சூழலில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் நடந்து கொள்ளும் முறையில் இருந்து உலக மக்கள் பல பாடங்களைப் படிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவையாவன:
உலகம் அழிந்தாலும் ஏகாதிபத்தியம் தனது இயல்பை மாற்றாது.
முதலாளித்துவ அமைப்பைவிட சோசலிச அமைப்பே மேன்மையானது.
சோசலிச நாடுகளே உலக மக்களைக் காப்பாற்றக்கூடிய ஆற்றலும் மனித நேயமும் உள்ளவை.
சகல முதலாளித்துவ நாடுகளிடமும் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு, ஆற்றல், வளங்கள் என்பவற்றைவிட தனியொரு சீனாவிடம் அதிகமாக உள்ளது.
இந்த நெருக்கடியான நேரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் எனப்படும் அமெரிக்காவிடமும் மேற்கு நாடுகளிடமும் உள்ள வளங்களும் ஆற்றலும் குறைவானவை என்பது தெட்டத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் ‘பென்னம்பெரிய’ நாடுகளை விட எமது சின்னஞ்சிறிய இலங்கை இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் தனது
பன்மடங்கு ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இயற்கைக்கு முன்னாலும் மனித ஆற்றலுக்கு முன்னாலும், மனிதனால் படைக்கப்பட்ட ‘தெய்வங்கள்’ ஆற்றலற்றவை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
மனித குலம் தான் கடந்து வந்த இலட்சக்கணக்கான வருடப் பாதையில் எத்தனையோ இடர்களை வெற்றி கொண்டு முன்னேறி வந்துள்ளது. அத்தகைய இடர்களில் ஒன்றே தற்போதைய நிலைமையும். எனவே இப்பொழுது மனிதர்களுக்குத் தேவை திடமான நம்பிக்கை ஒன்றே.
இன்றைய சூழலில் இன, மொழி, மத, வர்க்க, நாட்டு முரண்பாடுகள் எல்லாம் இரண்டாம் பட்சமானவை. கொரோனா என்ற இந்த கொடிய அரக்கனே இன்று எமது பிரதான எதிரி. மனிதனால் நேரடியாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டோ அல்லது மனிதன் இயற்கையைச் சீண்டியதினால் அதனால் உருவாக்கப்பட்டோ தோன்றியுள்ள அந்த எதிரியை அழித்து மனித இனத்தைக் காப்பதில் அனைத்து உலக மக்களும் ஒரே மனிதனாக அணி திரளுவதே இன்றைய தேவையாகும்.
இறுதி வெற்றி மனிதனுக்கே. மானிடமே வெல்லும்!

Source: Vaanavil March - Journal 101

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...