நாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை !

மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அதாவது, தற்போது இலங்கையில் ஆட்சியில் உள்ள ‘நல்லாட்சி’ அல்லது ‘கூட்டு’ அல்லது ‘தேசிய’ அரசாங்கம் உடனடியாக தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி, மக்கள் தாம் விரும்பும் புதிய அரசாங்கம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தற்போதைய ஆட்சியாளர்களை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

அதற்கான காரணங்கள் பலவுண்டாயினும், அவற்றில் சில மிகவும் முக்கியமான காரணங்களாகும்.
2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சதி – சூழ்ச்சி நடவடிக்கைகளாலும், பொய் வாக்குறுதிகளாலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். தமிழ் – முஸ்லீம் மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் அவர் ஒருபோதும் ஜனாதிபதியாகி இருக்க முடியாது என்பது இரகசியமானதல்ல.
அதே ஆண்டு ஒகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதே சதி – சூழ்ச்சிகள் மூலமும், பொய் வாக்குறுதிகள் மூலமும் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அமைந்தது. அந்தத் தேர்தலிலும் ரணில் குழுவினருக்கு ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதே சரி.
அதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது நாட்டு மக்களில் பெருவாரியானோர் இவர்களது சதி – சூழ்ச்சிகளில் எடுபடவில்லை என்பதே அது.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வருவதில் முன்னர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச விட்ட தவறுகள் மட்டும் காரணியல்ல. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஏகாதிபத்திய – எதிர்ப்பு, பிற்போக்கு – எதிர்ப்பு, பிரிவினைவாத – எதிர்ப்பு கொண்ட தேசபக்தி அரசாங்கத்தை வீழ்த்தி, தமக்குச் சார்பான அரசொன்றை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளினதும், இந்திய பிராந்திய விஸ்தரிப்புவாத சக்திகளினதும் முயற்சியே இன்றைய வல்துசாரி அரசாங்கம் பதவிக்கு வர ஏதுவாயிற்று.

ஆனால் ஏகாதிபத்திய சக்திகளும், இன்றைய ஆட்சியாளர்களும் முற்போக்கு – ஜனநாயக சக்திகளை ஒடுக்கி, தாம் நினைத்தபடி ஆட்சியை நடாத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு மக்களின் ஆதரவு இல்லையென்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக எடுத்துக் காட்டியிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, இன்றைய அரசு பதவி விலக வேண்டும் எனக் கோருவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, இன்றைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் பல பொய் வாக்குறுதிகளை அளித்த போதிலும் அவற்றில் ஒன்றைத்தன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
பிரதான விடயங்களான பொருளாதார அபிவிருத்தி, தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்பன குறித்து ஒரு சிறிய அளவேனும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு காணப்படவில்லை. (மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடினும் பாரிய பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்தது)

குறிப்பாக போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்களின் உடனடிப் பிரச்சினை கூட தீர்க்கப்படவில்லை. அதன்காரணமாக விரக்தியடைந்த மக்கள் வீதிக்கு வந்து போராடுவதுடன், பிரிவினைவாத எண்ணங்களும் வலுவடைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையை மெத்தனமாக எடுத்தால் ஆபத்தில்தான் வந்து முடியும்.
உதாரணமாக, ஜே.வி.பி. இயக்கம் முதன்முதலாக 1971 ஏப்ரலில் ஆரம்பித்த அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சி அன்றைய சிறீமாவோ அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டது. ஆனால், 17 வருடங்கள் கழித்து 1988இல் மீண்டும் ஜே.வி.பி. ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது. அந்தக் கிளர்ச்சியும் அன்றைய ஐ.தே.க. அரசால் மோசமாக ஒடுக்கப்பட்டாலும், ஜே.வி.பியினர் மனதை விட்டு ஆயுதக் கிளர்ச்சி சிந்தனை முற்றுமுழுதாக மறைந்துவிட்டது எனச் சொல்ல முடியாது. நாட்டின் ஆட்சியதிகாரம் நலிவுறும் போது அவர்கள் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபடக்கூடும். (இன்று அதற்கான சூழல் உருவாகி வருகிறது)

அதேபோல, 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் புலிகளின் தலைமையும், பெருமளவான உறுப்பினர்களும் அழிக்கப்பட்டாலும், அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழத்துக்கான சிந்தனை மறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
புலிகளை ஒழித்துக்கட்டிய மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் தமிழ் மக்கள் தமது பரம விரோதியாகப் பார்த்தே இன்றைய அரசைப் பதவிக்குக் கொண்டுவர ஆதரவளித்தனர். ஆனால் அவர்கள் நம்பிய இன்றைய அரசு இனப் பிரச்சினைத் தீர்வை மட்டுமின்றி, போரினால் பாதிக்கப்பட்ட தமது வடுக்களை நீக்கக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவர்கள் இந்த அரசின் மீது முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த உண்மையை அவர்கள் அரசுக்கு ஆதவளித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டியதின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் உலகின்பல போராட்டங்கள் பல தடவை தோல்வியடைந்த போதிலும், மீண்டும் மீண்டும் அவை உருவாகியுள்ளன. அதுமாத்திரமின்றி, அவற்றில் சில பல தடவை முயற்சிக்குப் பின்னர் வெற்றியும் பெற்றுள்ளன.
இந்தக் காரணிகளால் இன்றைய அரசு ஆட்சி புரிவதற்கான அருகதையை இழந்துவிட்டது என்பது ஒருபுறமிருக்க, ஆட்சியை நடாத்தும் சக்திகளுக்கிடையிலும் பாரிய முரண்பாடுகள் தோன்றி, நாட்டில் அரசாங்கம் ஒன்று நடைமுறையில் இல்லை என்ற அளவுக்கு நிலைமைகள் உருவாகியுள்ளன.

ஒருபுறத்தில் ஆட்சியின் பங்காளிக் கட்சிகளான ஐ.தே.கவுக்கும் சிறீ.ல.சு.கவுக்கும் இடையில் முரண்பாடு. இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு. அமைச்சரவைக்குள் முரண்பாடு. ஐ.தே.கவுக்குள்ளும் முரண்பாடு. சிறீ.ல.சுகவுக்குள்ளும் முரண்பாடு. ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடாத்தும் ஆணிவேரான அதிகார வர்க்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடு.

இதன் காரணமாக பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க, அதை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. அதன் காரணமாக ரணில் தரப்பினர் ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்காக அல்லது குறைப்பதற்காக ஜே.வி.பியைப் பயன்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளனர்.

இதனால் நாட்டின் நிர்வாகம் முற்றுமுழுதாகச் சீர்குலைந்துள்ளது. அதன் காரணமாக நாட்டு மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இந்தமுறை இந்த நம்பிக்கை இழப்பு சிங்கள – தமிழ் – முஸ்லீம் மக்கள் என்ற வேறுபாடின்றி அனைவரிடமும் உருவாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வக்கற்று, மக்களின் தலையில் அதைச் சுமத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலையை திடீர் திடீர் என பெருமளவில் அதிகரித்து வருகிறது. இது மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
மக்களுக்கு இன்று தேவைப்படுவது விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது, தமது நாளாந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, இவற்றை நிறைவேற்றுவதற்கு பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்பனவாகும்.
இவற்றை அடைவதானால் நாட்டில் உறுதியான ஒரு அரசாங்கம் பதவியில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அரசாங்கம் என்ற ஒன்றாவது இருக்க வேண்டும். ஆனால் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லாமல் போய்விட்டது.

இதற்கு ஒரேயொரு பரிகாரம், தற்போதைய கையாலாகாத அரசாங்கம் தனது தவறை ஏற்று பதவியில் இருந்து விலகிக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை நடாத்தி, மக்கள் தமக்கு நன்மை பயக்கும் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வழி சமைப்பதுதான். இதற்கு இன்றைய ஆட்சியாளர்களும், அவர்களது சர்வதேச எஜமானர்களும் இடம் கொடுக்கமாட்டார்கள். எனவே மக்கள் மாற்றம் கோரி வீதிக்கு வந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
:
Courtesy: VAANAVIL 89_2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...