மக்கள் விரோத, தேச விரோத ரணில் – மைத்திரி அரசை மக்கள் சக்தியாலேயே அகற்ற முடியும்!




க்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக 2018 ஏப்ரல் 04ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப்போனது. தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் கிடைத்ததால், 46 மேலதிக வாக்குகளால் தீர்மானம் தோற்றது.
தீர்மானம் தோற்றாலும், இன்னொரு வகையில் பார்த்தால் இந்தத் தீர்மானத்தின் மூலம் கூட்டு எதிரணி பலமடைந்துள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்தத் தீர்மானத்தால் ‘நல்லாட்சி’ என்ற கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் கூட்டு எதிரணியால் பிளவு ஏற்படுத்த முடிந்துள்ளது. ஏனெனில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கியமான அமைச்சர்கள் உட்பட 16 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், அதன் பின்னர் அவர்கள் அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் தீர்மானித்துள்ளனர். இது கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில் சந்தேகமின்றி வெற்றிதான்.


அதாவது நாடாளுமன்றத்தில் உண்மையான எதிரணியின் பலம் 54இல் இருந்து 76ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தொகை 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்துள்ளது.
அரசாங்கத்துக்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு எதிராகக் கிடைத்த பெரும்பான்மை வாக்குகள் 46ஆக இருந்ததுக்கு சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் செய்த இரண்டக வேலையே காரணம். ஏனெனில் சுதந்திரக் கட்சியின் 94 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதாகத் தீர்மானித்துவிட்டு கடைசி நேரத்தில் அவர்களுள் 26 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டார்கள். அவர்கள் இவ்வாறு செய்ததிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், அவரது போசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவினதும் சதி வேலைகளே காரணம். அதைப் பின்னர் பார்ப்போம்.
வாக்காளிக்காது தவிர்த்த சுதந்திரக் கட்சியின் 26 பேரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் எதிரணியின் வாக்குகள் 102ஆக அதிகரித்திருக்கும். இவர்களுடன் ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஐ.தே.கவைச் சேர்ந்த 30 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பர். இந்தச் சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் ஈ.பி.டி.பி. கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருப்பார். திட்டமிட்டபடி நிகழ்வுகள் அரங்கேறியிருந்தால் மத்திய வங்கி நிதி மோசடியிலும், நாட்டை நாசமாக்கிய வேறு பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட பிரதமர் ரணில் வீட்டுக்குப் போயிருப்பார்.
இந்த வாக்கெடுப்பில் ரணில் தப்பிப் பிழைத்ததிற்கு போலி எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், சில பிழைப்புவாத முஸ்லீம் மற்றும் மலையகக் கட்சிகளினதும் உறுப்பினர்களின் ஆதரவே பக்கபலமாக அமைந்தது என்பதுதான் உண்மை. அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்ப் பொதுமக்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கக்கூடாது என வலியுறுத்திய போதிலும், தாம் ரணிலிடமிருந்து சில வாக்குறுதிகளைப் பெற்று நிபந்தனையின் அடிப்படையிலேயே வாக்களிப்பதாக வழமைபோலத் தமிழ் மக்களை ஏமாற்றியே கூட்டமைப்பின் ஏகாதிபத்திய சார்பு, ஐ.தே.க. சார்புத் தலைமை ரணிலைக் காப்பற்ற வாக்களித்து நாட்டுக்கும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்துள்ளது. ஆனால் அப்படி ஒரு நிபந்தனை விதிப்போ அல்லது வாக்குறுதி பெறுதலோ ரணிலுடன் நடைபெறவில்லை என ரணிலின் நெருங்கிய சகாவும், ‘நல்லாட்சி’ அரசின் அமைச்சருமான மனோ கணேசன் உடனடியாகவே அம்பலப்படுத்தி தமிழ் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழித்துவிட்டார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்ற சூழ்நிலைமைகளை எடுத்துப் பார்க்கையில், இதில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் கரங்கள் நன்றாக விளையாடி இருப்பது புலனாகின்றது.
தற்போதைய மைத்திரி – ரணில் வலதுசாரி அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த மேற்கத்தைய சக்திகளினதும், இந்தியாவினதும் கரங்கள் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் தீர்மானகரமான பங்கு வகித்திருப்பது இரகசியமானதல்ல. தமிழ் கூட்டமைப்பை ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதிலும் (இல்லாவிட்டாலும் அவர்கள் அதைத்தான் செய்திருப்பார்கள்) இந்த சக்திகள் ஈடுபாடு காட்டியுள்ளதை கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனே தனது வாயால் உளறிக் கொட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், உறுப்பினர்களை ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதில் கோடிக்கணக்கான ரூபா பணமும் விளையாடியுள்ளது. ஐ.தே.கவிற்குள் ரணிலுக்கு எதிராக ஆவேசமாகப் போர்க்கொடி தூக்கியவர்களை இந்தப் பணத்தின் மூலமே மௌனிக்கச் செய்யப்பட்டது என்பது பல பக்கங்களிடமிருந்தும் கிடைக்கும் தகவலாகும்.
இந்த இரண்டு ஆயுதங்கள் தவிர இன்னொரு ஆயுதமும் ரணிலின் வெற்றிக்கு உதிவியுள்ளது. அது வழமைபோல மைத்திரியும் சந்திரிகவும் செய்த சதி சூழ்ச்சிகளாகும்.
சந்திரிகவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராகவும், ரணிலுக்கு ஆதரவாகவும் அவர் வெளிப்படையாகப் பேசி வந்தார். (ஆயுள் பரியந்தம் அவரது பொது எதிரி மகிந்த ராஜபக்ச தான்)
ஆனால் மைத்திரியைப் பொறுத்தவரையில், ஆரம்பத்தில் சுதந்திரக் கட்சிக்குள் எழுந்த கடுமையான ரணில் எதிர்ப்பைக் கண்டு திகைத்த மைத்திரி, தானும் ரணிலை விரும்பாதவர் போலப் பாசாங்கு செய்தார். அதை கட்சி உறுப்பினர்களும் உண்மையென நம்பினர். ஆனால் கடைசி நேரத்தில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு கோரியதின் மூலம், சுதந்திரக் கட்சியின் ஒருபகுதி உறுப்பினர்களை வாக்களிப்பில் கலந்து கொள்ளாதபடி செய்து மைத்திரி ரணிலைக் காப்பாற்றிவிட்டார். கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் உறுதியான ஒரு நிலைப்பாட்டை அறிவித்திருந்தால் அனைத்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருப்பர்.
சுதந்திரக் கட்சிக்கு குழிபறிப்பதற்கு சந்திரிகவும் மைத்திரியும் செய்துள்ள துரோகம் இதுதான் முதல் தடவையல்ல. 2015 பொதுத் தேர்தலின் போது இருவரும் சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டே, சந்திரிக ஐ.தே.கவை ஆதரித்து வாக்களிக்கும்படி அறிக்கை வெளியிட்டார். மைத்திரி கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தான் தேர்தலில் எந்தத் தரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பதாக அறிக்கை வெளியிட்டார். அதன் மூலம் இருவரும் ஐ.தே.கவின் வெற்றிக்கு வழிகோலினர். அவர்கள் தமது இவ்வாறான துரோகத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதே உண்மை.
எதிரணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கபடத்தனமான முறையில் தோற்கடிக்கப்பட்டாலும், அதன் மூலம் நல்லாட்சி அரசுக்குள் ஏற்பட்டுள்ள குழறுபடி நிலையோ அல்லது நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையோ ஒருபோதும் நீங்கப்;போவது இல்லை என்பதே உண்மையாகும். இனி வரும் நாட்களில் நிலைமகள் மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உண்டு.
இதிலிருந்து ஏகாதிபத்திய – எதிர்ப்பு, ஐ.தே.க. – எதிர்ப்பு, முற்போக்கு – ஜனநாயக சக்திகள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாடாளுமன்றத்தில் நடாத்தும் குதிரைப் பேரங்கள் மூலம் இந்த மக்கள் விரோத, தேச விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப முடியாது என்பதே அது. அதற்கு ஒரேயொரு வழி மக்கள் சக்தியைத் திரட்டுவதுதான். அந்த உண்மையை நடந்து முடிந்த உள்ள+ராட்சித் தேர்தலில் மக்கள் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள்.
எனவே, மக்கள் ஆதரவை இழந்துவிட்ட இந்த அரசை அகற்றுவதற்காக, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இயக்கத்தை தேசப்பற்றுள்ள அனைத்து சக்திகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
முற்போக்கு – ஜனநாயக சக்திகள் தமக்குள் உறுதியான ஒற்றுமையை ஏற்படுத்தி, சரியான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து மக்களையும் ஓரணியில் திட்டினால், அவர்கள் மூலம் ஈட்டும் வெற்றியை உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகளின் சதி நடவடிக்கைகளோ, பணபலமோ எதுவும் செய்துவிட முடியாது. இது ஒன்றே, இது மட்டுமே, வெற்றிக்கான பாதையாகும்.
வானவில் இதழ் எண்பத்தெட்டினை முழுமையாக வாசிப்பதற்கு:

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...