பயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி

பயிரை மேய்த வேலிகள்..(25)
********************************************
( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)

புலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.


சற்று நேரத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டத்தை புரிந்துகொண்ட புலிகள் உடனடியாகவே அதனை சமாளிக்க முயன்றனர். இந்த மாணவிகளை கட்டாய ஆயுத பயிற்சிக்கு அழைத்துச்சென்றிருந்த புலிகளின் அரசியல் துறையினர் விரைவாக இயங்கத்தொடங்கினர். அங்கு சென்ற புலிகளின்மகிளீர் அரசியல் குழுவினர் ஆயுத பயிற்சி நடைபெற்றமைக்கான சான்றுகளை அப்புறப்படுத்தி விட்டு மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என அழைக்கப்பட்ட முகாமை செஞ்சோலையாக மாற்றத்தொடங்கினர். அருகே இருந்த செஞ்சோலையில் பெயர் பலகையை எடுத்துவந்து விமானதாக்குதல் நடந்த இடத்தில் போட்டுவிட்டனர்.
 6305_n

ஒருகாலத்தில் புலிகளின் மூத்த தளபதியாக இருந்த கருணாவின் கட்டுப்பாடில் இருந்த இந்த இடம் பின்பு செஞ்சோலையாக மாற்றப்பட்டு 2006 ஜனவரி நடுப்பகுதிவரை போரில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் இடமாகவே இருந்தது வந்தது. அதன் பின்பு புளிகளின் மகளீர் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில் மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என பெயர் சூட்டப்பட்டு பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.
அப்போது சமாதான காலமாக இருந்தமையால் இந்த இடம் இராணுவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பின்னாட்களில் நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே இந்த மாணவிகளை புலிகள் ஆயுத பயிற்சி வழங்கும் முகமாக அங்கு அழைத்துச்சென்றிருந்தனர். இது ஒரு ஆயுத பயிற்சி முகாமாக தொழிற்பட தொடங்கியிருந்தாலும் முழுமையான புலிகளின் போர் பயிற்சி முகாம்களைவிட குறைந்த நிலை பயிற்சி முகாமாகவே இருந்தது.

செஞ்சோலை என்பது புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1991 அக்டோபர் 23ம் நாள் யாழ்ப்பானம் சண்டிலிப்பாயில் புலிகளால் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். 1995 யாழ்ப்பாண இடம்பெயர்வின்போது கிளிநொச்சிக்கு இடம்மாற்றப்பட்டு பின் கிளிநொச்சி இடம்பெயர்வின் போது பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு பின்பு இந்த வள்ளிபுனம் பகுதியில் இயங்கத்தொடங்கியது. சமாதான சூழலில் ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையால் கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அருகாமையில் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு செல்லும் வீதியில் ஒருபகுதியாகவும் இயங்கத்தொடங்கியது.

கிளிநொச்சி சமூக சேவைகள் திணைக்களத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக செயற்பட தொடங்கிய செஞ்சோலைக்கான நிரந்தர வளாகத்தை கிளிநொச்சியிலேயே புலிகள் அமைத்து இயக்கத்தொடங்கியிருந்தனர்.

2003 ஜூனில் இதன் கட்டுமானப்பணிகளை தொடங்கிய அவர்கள் 18 மாதங்களில் மிக அழகான அதிக வசதிகள் கொண்ட வளாகமாக அதனை அமைத்திருந்தனர். மூன்று வயது தொடக்கம் வயதுக்கு வந்த பிள்ளைகள் என 245 பெண்பிள்ளைகளுக்காக் 11 வதிவிட கட்டடத்தொகுதிகளையும் ஒரு விசேட சிசு பராமரிபு நிலையம், கற்றல் செயற்பாட்டு நிலையங்கள், இரண்டு சமையல் கூடங்கள், உணவு உண்ணும் இடம் என்பவற்றையும் கட்டியிருந்தனர்.

அத்துடன் ஒரு நிர்வாக கட்டடத்தொகுதி, ஒரு திறன்விருத்தி நிலையம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு சுகாதார பராமரிப்பு நிலையம், மற்றும் ஒரு நூலகத்தினையும் இந்த புதிய செஞ்சோலை வளாகம் கொண்டிருந்த்தது. ஒரு பூங்காவை அமைப்பதன் மூலம் அருகில் இருந்த ஆண்களுக்கான காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து செஞ்சோலையை தனியாக பராமரிக்கும் திட்டத்தையும் புலிகள் கொண்டிருந்தனர். கணணி கூடம், ஒலி-ஒளி காட்சியமைப்பையும் அங்கு நிறுவ புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் அமைந்த இந்த புதிய செஞ்சோலை வளாகத்தை பிரபாகரன் 2006 ஜனவரி 15ல் திறந்து வைத்து செஞ்சோலை பிள்ளைகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கியிருந்தார். சுதர்மகள் என அழைக்கப்பட்ட ஜனனி செஞ்சோலையின் பொறுப்பாளராக இருந்தார்.


பயிரை மேய்ந்த வேலிகள்..(25)-ராஜ் செல்வபதி


********************************************


(உலகை உறைய வைத்த இரத்த சகதி)
2006 ஆகஸ்ட் 14. அன்றைய ( இன்றைக்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு) பொழுது புலரத்தொடங்கியது. புலிகளால் ஆயுத பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்க தீர்மாணித்த புலிகள் அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கு தயாராகிவிட்டனர்.

கிளிநொச்சி மாணவிகளை வடமுனை போர்களங்களுக்கு ஏற்றிப்போவதற்காக தயார் நிலையில் வாகனங்கள் நின்றன. நாவற்காட்டில் காளி மாஸ்டர் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. அங்கிருந்த முல்லைத்தீவு மாணவர்கள் தப்பி ஓடுவதற்கான மற்றுமொரு முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தனர். வட்டகச்சி பண்ணையில் புலித்தேவன் இன்று என்ன செய்யபோகின்றாரோ எனற பயத்தில் கிளிநொச்சி மாணவர்கள் அன்றைய பொழுதை எதிர்கொள்ள தயாராகினர்.

வள்ளிபுனத்தில் இருந்த பெண்கள் பயிற்சி முகாமில் முல்லைத்தீவு மாணவிகளும் அங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் எனற நம்பிக்கையில் அன்றைய காலை பொழுதை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளத்தொடங்கினர்.

சூரியனும் அந்த மாணவிகளை போன்றே இன்று சிறிது துணிச்சலுடன் பிரகாசிக்க தொடங்கினான். இரவின் குளிர்ச்சி தளர்ந்து பகலின் ஆதிக்கம் மெல்ல தலையெடுத்தது. இரட்மலானையில் இலங்கை வான் படைக்கு சொந்தமான தாக்குதல் போர் விமானங்கள் தமக்கு கிடைத்த தகவல்படி அன்றைய தாக்குதலுக்கு புறப்பட தயாராகின.

வள்ளிபுனத்தில் முதல் நாள் இரவு ஆழ ஊடுறுவும் படையினர் கட்டிச்சென்ற சிவப்பு நிற அடையாளக்கொடி காற்றில் அசையத்தொடங்கியது. அந்த கொடிய கவனித்த மாணவிகள் சிலர் அது புலிகளின் ஏதாவது ஒரு தந்திரமாக இருக்க வேண்டும் என அதனையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ”ஏறுது பார் கொடியேறுது பார்” என்கின்ற தமிழீழ தேசிய கீத்துடன் அன்றய செயற்பாட்டுக்காக பொறுப்பாளர் புலிக்கொடியை ஏற்றி வைத்தார். ஏனையவர்கள் அதற்கு மரியாதை செய்யுமாறு பணிக்கப்பட்டன்ர்.

மாணவிகளை மூளைச்சலவை செய்யும் நோக்கில் புலிகள் இப்போது ஒலிபெருக்கிகள் மூலம் எழுச்சிப்பாடல்களை ஒலிக்கவிட்டனர். ”ஆழக்கடல் எங்கும் சோழ மகராசன்” என்று புரட்சி பாடகர் சாந்தனின் குரல் கம்பீரமாக காற்றில் ஒலிக்கத்தொடங்கியது.

காலை 7.00 மணிக்கு முற்றத்தில் வரிசையில் நிற்கவைக்கப்படுவதற்காக கட்டளையிடப்பட்ட மாணவிகள் மனதில் எப்படி தப்பிக்கலாம் என்கின்ற சிந்தனையில் மூழகிப்போய் இருந்தனர். முகாம் பொறுப்பாளர் மேலதிக உத்தரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

போர்க்களத்தில் நிற்கின்ற புலிகளை தவிர அனேகமா அத்தனை உயர்நிலை புலிகளும் காலை உணவுக்காக குடும்பத்தினர், நண்பர்கள் சகிதம் உணவு மேசைகளில் அமர்ந்திருந்தனர்.
இப்போது காலை மணி 6.53 ஆகியிருந்த்தது, ஆளில்லா உளவு விமானம்- Unmanned Aerial Vehicle. ( வண்டு ) வள்ளிபுனம் வானில் தோன்றியது. சாந்தனின் கம்பீரக்குரல் வேவு விமானத்தின் ஒலியை வெறித்தனமாக அடக்க முயன்றது.

காலை மணி 6.55 அருகில் படுத்திருந்த நாயின் காதுகள் திடீரென கூர்மையடைந்தன. கலவரமடைந்த நாய் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது.

காலை மணி 6.56 உளவு விமானம் அங்கிருந்து விலகி சற்று தொலைவில் பறக்கத்தொடங்கியது. நாய் அதிக கலவரத்துடன் அங்கிருந்து காட்டுக்குள் ஓடியது.
திடீரென காற்றை கிழிந்த்துக்கொண்டு வானில் பாய்ந்த நான்கு போர் விமானங்கள் அந்த பயிற்சி முகாம் மீது மாறிமாறி குண்டுமழை பொழிந்தனர். ஒரு நிமிடத்துக்குள்ளாகவே விமானங்கள் தக்குதல்களை முடித்துவிட்டு திரும்ப தொடங்கின. உளவு விமானம் மீண்டும் வள்ளிபுன வானில் தோன்றி அமைதியாக வட்டமிடத்தொடங்கியது.

பலகனவுகள் சுமந்து பாடசாலைக்கு சென்ற முல்லைத்தீவு மாணவிகள் உடல் சிதறி அந்த முகாம் எங்கும் பலியாகி கிடந்தனர், ஒரு நிமிடத்துக்கு முன்புவரை உயிருடன் இருந்த தங்கள் தோழிகள் உடல் சிதறி கிடப்பதை பார்த்தபடி பல மாணவிகள் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உதவிக்காக அவர்களால் கூக்குரல் இடமுடியாத படி தப்பித்தவர்களின் ஓலம் வானை பிளக்க தொடங்கியது.
இன்னும் சற்று நேரத்தில் உலகமே உறைந்து போகும் செய்தியாக அந்த அவல ஓலம் காற்றில் பரவத்தொடங்கியது

இதற்கு மேல் என்னால் இந்த வன்கொடுமையை எழுதமுடியவில்லை கண்களில் நீர் வழிகின்றது கணணி விசைப் பலகை கண்ணீரில் நனைகின்றது.
அநியாயமாக பலிகொடுக்கப்பட்ட எனது அந்த சகோதரிகளுக்காக இப்போது இதயமும் அழதொடங்கியுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த கொடும் காட்சி மீண்டும் என் கண்முன்னே வருகின்றது. சற்று நேரம் பொறுத்து மிகுதியை தொடருகின்றேன் நண்பர்களே…

தொடரும் ....

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்