ஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு உள்ளானால் நாட்டின் சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்: வாசு


vasu-1பிரதான கொள்கை மாற்றமாக தோன்றும் ஒன்றாக முன்னர் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தைரியமான பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அதிகாரப் பகிர்வுக்கு ஒரு அலகாக மாகாணசபையை ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி முறைக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகக் கூறினார். இந்த நிலைப்பாடு தான் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து விலகிய பின்பு மேற்கொண்டது என்று அவர் தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:

 • கேள்வி: தற்போது கட்டவிழ்ந்து வரும் அரசியல் நிலமையை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
பதில்: அடிப்படையில் அரசாங்கமானது நிதி நிலவரங்கள், வெளிநாட்டு சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் என்பனவற்றைப் பொறுத்தமட்டில் மோசசமான சூழ்நிலையில் உள்ளது. எனவே எதிர்க்கட்சி பலம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தக் கட்டத்தில் அரசியல் அரங்கில் கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமான நிலை தோன்றியுள்ளது. ஜேவிபிக்கு செயலாற்றுவதற்கும் ஒரு பங்கு உள்ளது. இப்போது அது அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது. இருப்பினும் ஒரு தீர்க்கமான தருணம் வரும்போது,ஜேவிபி அவர்களது சொந்தக் காரணங்களுக்காக அரசாங்கத்தைக் காட்டிலும் கூட்டு எதிர்க்கட்சிமீது அதிக எதிர்ப்பைக் காட்டிவருகிறது. இதன் விளைவாக ஜேவிபியிடம் இருந்து அரசாங்கத்துக்கு ஒரு அரசியல் அணைவு கிட்டி வருகிறது.
 • கேள்வி: அரசாங்கம் போராடி வருபவைகளில் கடன் நெருக்கடியும் ஒரு பகுதி என நீங்கள் குறிப்பிட்டீர்கள். அரசாங்க தலைவர்கள் கடன் நெருக்கடியானது, நீங்களும் பிரதிநிதித்துவம் வகித்த முந்தைய அரசாங்கத்தால் தங்களின்மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு சுமை என தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். இதுபற்றிய உங்கள் எண்ணம் என்ன?
பதில்: காரணம் எதுவாக வேண்டுமாகவும் இருக்கலாம், அவர்கள் பலத்த கடன்களுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளது. எந்தக் காரணமாக இருந்தாலும் கடந்த இரண்டு வருட காலத்தில் கடன் பல மடங்காக உயர்ந்துள்ளது. அது பற்றி நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. இந்த விடயத்தின் உயிர்நாடியான பிரச்சினை அரசாங்கமானது தீவிர கடன் சேவை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்? அவர்கள் சர்வதேச நாணய நிதியம் அல்லது உலக வங்கி என்பனவற்றிடம் இருந்து சலுகை நிதிகளை கண்டுபிடிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் பண உதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அரசாங்கம் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டியுள்ளது. அதன் கருத்து அரசாங்கம் செலவுகளை குறைக்க வேண்டும் அல்லது வருவாயை அதிகரிக்க வேண்டும். வரி மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் கருத்து வரி வலையமைப்பு விரிவாக்கப்பட உள்ளது என்பதாகும். வரி செலுத்தாத பெருமளவு மக்களை அந்த வலையமைப்புக்குள் கொண்டுவர வேண்டும். அதைச் செய்வதற்குப் பதிலாக என்ன நடைபெறுகிறது என்றால் ஏற்கனவே வரிச்சுமையில் அவதிப்படுபவர்கள் மீது மேலும் வரி சுமத்தப்படுகிறது. ஏற்கனவே வரி செலுத்தும் தனிப்பட்டவர்கள் அதேபோல நிறுவனங்கள் இலக்கு வைக்கப் படுகிறார்கள். அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் இலக்குக்குள் அவர்கள் உள்ளார்கள்.

இதற்கிடையில் வரி பெறும் வழிகள் விரிவாக்கப் பட்டுள்ளன. அரசாங்கம் அதன் வருவாயை அதிகரிக்கும் பணிக்கு முகம் கொடுக்கிறது. அப்போது வருவாயை சேகரிக்கும் ஒழுங்கில் அரசாங்கம் மக்கள் மீது பாரிய வரிச்சுமையை செலுத்தியாக வேண்டும். சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனையும் அதுதான். இங்கு சர்வதேச நாணய நிதியம் கறுப்பு பணம் வைத்திருக்கும் பெருமளவானவர்களை குறி வைக்கிறது. அவர்கள் வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு முரணாக,நேரடி வரி மற்றும் கட்டணங்களை அதிகரிப்பது, விசேட பொருட்களுக்கான தீர்வை அதிகரிப்பு போன்றவைகளால் மக்கள் சுமையில் அகப்படுகிறார்கள். இவையாவும் தீவிர வழிகளில் மக்கள்மீது ஒட்டுமொத்த சுமையையும் சுமத்துவதாகும். இந்தப் பின்னணியில் பின்னர் வாழ்க்கைச் செலவு எவ்வளவு உயரத்துக்கு அதிகரிக்கப் போகிறது என்பதை என்னால் கற்பனை செய்யவும் முடியாதுள்ளது.
 • கேள்வி: உங்களது கண்ணோட்டத்தில் தற்போதைய நெருக்கடிக்கான காரணம் என்ன?
பதில்: சுலபமாக சொல்வதானால் உலகப் பொருளாதாரம் ஒரு இருண்ட வெளித் தோற்றத்தை கொண்டுள்ளது. எதிர்பார்த்தபடி அமெரிக்க பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டுள்ளதுக்கான எந்த சமிக்ஞையையும் அது காண்பிக்கவில்லை. ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியும்  மந்தமாகவே உள்ளது. யப்பானிய பொருளாதாரம்கூட மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே உலகப் பொருளாதாரத்தின் சரிவினால் முழு உலகமுமே பாதிக்கப்பட்டுள்ளது. முதன்மை பொருட்கள் குறைக்கப்பட்ட ஒரு நிலைக்கு வந்துள்ளது இது நம்ப முடியாதது. பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இப்போது தள்ளாடும் நிலைக்கு வந்துள்ளன. இது தொடர்பாக பிரேசில் தீவிர நெருக்கடியை எதிர்கொள்கிறது, உதாரணமாக அது எங்கள் தேயிலை, இறப்பர் மற்றும் இதர விவசாய உற்பத்திகளைப் பாதிக்கிறது. அரசாங்கம் சிறிது நம்பிக்கை வைத்துள்ள சில பகுதிகளில் ஒன்று, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவது என்பது. நாங்கள் அறிந்தமட்டில் அது பெருமளவில் வந்து சேரவில்லை. எனவே எங்கள் கையிருப்பு ஒரு மோசமான வடிவத்தில் இருக்கிறது. மறுபக்கத்தில் நுகர்வோரின் தேவை காரணமாக எங்கள் பொருளாதார நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. வட்டி விகிதங்கள் அதிகரிக்கின்றன. அத்துடன் மக்களுக்கு கஷ்டங்களும் ஏற்பட்டுள்ளன. கடன் கிடைப்பது செலவுமிக்கதாக உள்ளது. நுகர்வை கீழிறக்கவேண்டி அவர்கள் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது வளர்ச்சியை தூண்டுவதற்கு வேறு காரணிகள் இல்லை. எப்படியாயினும் நுகர்வோர் சார்ந்த பொருளாதார வளர்ச்சி இருப்புக்கள் நலிவடைகின்றன. அரசாங்கத்துக்கு கடினமான ஒரு தெரிவே உள்ளது. ஒருபக்கம் அது நுகர்வினைக் கட்டுப்படுத்த வேண்டும், மறுபக்கம் பொருளாதார வளர்ச்சி இடம்பெறுவதற்கு மாற்று வழிகள் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது. இந்த மிகவும் கஷ்டமான சூழலில் அரசாங்கத்து ஒரே ஒரு தெரிவே இருக்கும். அது மக்களிடம் இருந்து அதிகமானவற்றை உறிஞ்சி எடுப்பதுதான். அவர்கள் வேறு எந்த நாட்டிடமிருந்தும் சிறப்புச் சலுகைகள் எதையும் பெறாவிட்டால் அதுதான் உள்ள ஒரே வழி. அந்த வகையான நிதி உதவி புரியக்கூடிய நிலையில் எந்த ஒரு நாடும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால் அது இராணுவ உதவி வடிவத்தின் மூலமே கிடைக்க முடியும். இந்து சமுத்திர கடல் பாதையில் அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஒரு எண்ணம் இருக்கலாம். இந்த இணைப்பு காரணமாக இறுதியில் அமெரிக்கர்கள் ஸ்ரீலங்கா கடற்படையுடன் இணைந்து கடற்பாதைகளை பாதுகாக்கும் செயற்பாட்டிற்காக, தங்கள் கப்பல்களை நிறுத்தும் தளமாக பயன்படுத்துவதற்கு திருகோணமலையை கொடுக்கவேண்டி நேரலாம். இந்த மூலோபாயம்  உயர் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அப்போது இராணுவ உதவியின் வடிவத்தில் பணம் வந்து சேரும்.

அந்த உறவு இந்தியாவுடன் சுமுகமாச் செல்லுமா என்பது எனக்குத் தெரியாது. இந்தியர்களுக்கு அது மகிழ்ச்சி அளிக்காது, தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வட மாகாணசபை என்பனவற்றுடன் நேரடியாக ஈடுபட்டிருப்பதைப் போல அமெரிக்கர்கள் ஸ்ரீலங்காவை நேரடியாகக் கையாள்வது அவர்களுக்கு பிடிக்காது. அது வடக்கிற்கு பெரிய சுயாட்சி கிடைப்பதற்கு வழி வகுக்கும். அது இந்தியாவுக்கு மகிழ்ச்சியை தராது.
 • கேள்வி: அப்படியானால் இந்த  நிலையை கூட்டு எதிர்க்கட்சி எப்படி எதிர்கொள்ளும்?
பதில்: கூட்டு எதிர்க்கட்சி இந்த நிலையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் விரைவாகவே அரசாங்கத்தை இடம் பெயரச் செய்வதுதான். அது எப்படி நடக்குமென்றால் முரண்பாடுகள் சரிவடையும் ஒரு நிலையை அடையும்போது. அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையில் இழப்புகள் அதிகரிக்கும்போது அது விரைவாகவே நடக்கும். அது உள்ளுராட்சி தேர்தல்கள் தனது முடிவுகளை வெளிக்கொண்டு வரும்போது, அரசாங்கத்துக்கு ஒரு பாரிய தோல்வி ஏற்பட்டால் அது நடக்கும்.
 • கேள்வி: அரசாங்கத்தை அந்த வகையில் கவிழ்ப்பதாக எப்படி உங்களால் சவால் விட முடியும்?
பதில்: அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியின் கைகளில் ஒரு பாரிய தோல்வியை சந்தித்து தனது சட்டபூர்வ தன்மையை இழக்கும்போது, அந்த புள்ளியிலிருந்தே அரசாங்கம் மக்கள் எழுப்பும் தங்கள் கோரிக்கை தொடர்பாக முரண்பாடுகளைச் சந்திக்க தொடங்கும். உதாரணமாக  விமானப் போக்கு கட்டுப்பாட்டாளர்கள் ஒரு மோதல் போக்கை கடைப்பிடித்தார்கள். பின்னர் அதற்குப் பொறுப்பான மந்திரி அவர்களுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து கல்வியாளர்கள் அல்லாதோர் அதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள் மற்றும் அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அதேபோல தோல்வி மற்றும் சட்டபூர்வ இழப்புக்குப் பின் அது நடக்கும். அரச துறைகளை அரசாங்கம் ஒரு தனியார் அரசாங்க பங்காளி மாதிரியில் மறுசீரமைப்பு செய்ய முற்படும்போது, தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். தனியார் துறைக்கு அதிக ஏற்றம் தரும் ஒரு மாதிரியை தொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.
 • கேள்வி: நீங்கள் தேர்தலில் வெற்றி பெறுவது எந்த அளவுக்கு நிச்சயம் ஏனென்றால் நாட்டின் மத்திய ஆட்சி வேறுபக்கம் உள்ளதே?
பதில்: நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம். எவ்வளவு வலிமையாக நாங்கள் வெல்ல முடியும் என்பது இன்னும் நிச்சயமாகவில்லை. எப்படியும் நாங்கள் வெற்றியடைவோம். கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி வந்துள்ளனவே.
 • கேள்வி: அத்தகைய கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதித்துவம் பொதுமக்களின் கருத்தைப் பொறுத்தமட்டில் எப்படியாக இருக்கும்?
பதில்: அது பொதுமக்களின் மனங்களில் சிறிது ஒளியை பாய்ச்சும். அது ஒரு வகையான அளவுகோல். சமூக ஊடகங்கள் அரசாங்க விரோதப் போக்கினை தெரிவிக்கின்றனவே.
 • கேள்வி: கூட்டு எதிர்க்கட்சிக்கு ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கும் திசையில் நீங்கள் எப்படி முன்னேறுகிறீர்கள்?
பதில்: பதிவு செய்வதற்காக நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்குவோம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு சின்னத்தை தெரிவு செய்வோம்.
 • கேள்வி: இதில் எவ்வளவு தூரம் நீங்கள் முன்னேறியுள்ளீர்கள்?
பதில்: இப்போது எல்லாம் அமைக்கப்பட்டு விட்டது. கூட்டணியை பதிவு செய்வதற்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றியாகிவிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்கத்தவர்களைப் பொறுத்தமட்டில் புதிதாக ஒன்றை உருவாக்குவதைவிட கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்காக அவர்களைப் போராடும்படி நான் கேட்டு வருகிறேன்.
 • கேள்வி: ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக உள்ளவரை கட்சியை கைப்பற்றுவது அவர்களுக்கு கடினமாக இருக்காதா?
பதில்: சட்டப்படி எங்களால் அதைப் பெற முடியாது, ஆனால் ஐதேக வின் இணைப்பில் ஜனாதிபதியுடன் இருக்கும் ஸ்ரீலசுக பிரிவு உள்ளதால் நிச்சயமாக அது தோற்கடிக்கப்படும். வெகுஜனங்களின் பதில்தான் ஆட்சி செலுத்தும். அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை அது முடிவு செய்யும்.
 • கேள்வி: அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் பற்றிய ரி.என்.ஏ யின் கோரிக்கை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: ரி.என்.ஏ உடனான ஏற்பாடுகள் நாட்டின் ஒற்றையாட்சி பாத்திரத்தை குறைமதிப்பிட்டு விடும்  மற்றும் பிரிவினைவாத போக்குகள் எழுவதற்கு வழியமைத்துவிடும் என கூட்டு எதிர்க்கட்சி எண்ணுகிறது.
 • கேள்வி: அதன் கருத்து அரசியலமைப்பின் ஒற்றையாட்சி பாத்திரத்துக்கு சார்பாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதா?
பதில்: ஆம் நான் அதற்கு சார்பாகவே இருக்கிறேன்.
 • கேள்வி: ஒரு இடதுசாரி அரசியல்வாதி என்கிற வகையில் இது நீங்கள் பின்னர் எடுத்த நிலைப்பாடா?
பதில்: ஆம் பின்னர் எடுத்த ஒரு நிலைப்பாடுதான். நான் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன். நவ சம சமாஜக் கட்சியில் இருந்தபோது நாங்கள் சுய நிர்ணய உரிமைக்கு சார்பாக இருந்தோம். ஒற்றையாட்சி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒரு கூட்டாட்சி அரசாங்கம் கூட எங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. நாங்கள் நவ சம சமாஜக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் நாங்கள் தேசிய பிரச்சினை மற்றும் இறுதியாக எப்படி நாங்கள் நாட்டை ஐக்கியப்படுத்துவது என்பன பற்றி கலந்தாலோசித்தோம், தமிழர்கள் அதிகாரப் பகிர்வு மூலமாக உள்ளுராட்சி அமைப்புகள் மற்றும் மாகாணசபைகள் மூலமாக ஆட்சி செய்யும் உரிமையை கொண்டுள்ளார்கள் என்பதைச் சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதன்படி பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுடன் ஒற்றையாட்சி கட்டமைப்பின்கீழு; படிப்படியாக அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டும். சிங்களவர்களிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடிய உயர்ந்த பட்சம் அவ்வளவுதான். மறுபுறத்தில் தமிழர்களின் சம்மதம் இல்லாமல் ஐக்கியம் ஏற்படாது. ஆகவே இந்த பரஸ்பர ஒப்புதல் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சிங்களவர்களின் பாதுகாப்பற்ற உணர்வு என்பனவற்றின் இடையே கண்டறியப்படவேண்டிய ஒன்று. பாதுகாப்பற்ற உணர்வு கண்டறியப்பட்டு முடிவில் அதை இல்லாமல் செய்யவேண்டும். தமிழர்கள் சிங்களவர்களையும் மற்றும் சிங்களவர்கள் தமிழர்களையும் வென்றெடுக்க வேண்டும். அந்த சந்திப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சி கட்டமைப்பின் கீழ் வரும் மாகாணசபைகளை நாம் பார்க்கிறோம். ஒற்றையாட்சி அமைப்பு கைவிடப்பட்டால் நாடு சிதைவடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
 • கேள்வி: மாகாணசபைகளுக்கு ஏற்கனவே சில அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. இன்னும் அதிகமானவற்றுக்கு நீங்கள் கோரிக்கை வைப்பீர்களா?
பதில்: ஒற்றையாட்சி கட்டமைப்பின் கீழ் வருகிற மாகாணசபைகள் என்பதுதான் அடிப்படை. எது கொடுக்கப்படவேண்டும் மற்றும் எது எடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு செயல்முறை. எங்கள் செயல்பாட்டில் ஒற்றுமை வந்து சேரும்.
 • கேள்வி: மற்றவர்களின் கண்ணோட்டத்தில் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்
பதில்: லங்கா சம சமாஜக் கட்சி எங்களோடு உள்ளது. கம்யுனிஸ்ட் கட்சி பிளவுபட்டுள்ளது. அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சிலர் ஆதரவளிக்கிறார்கள். நாங்கள் சொல்வது எல்லா வழிகளிலும் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்று. ரி.என்.ஏ உடன் செய்துகொண்டுள்ள சில உடன்பாடுகளின் ஒரு பகுதியாகத்தான் அரசியலமைப்பு சீர்தீருத்தங்கள் கோரப்பட்டுள்ளன. அது ஒற்றையாட்சி அமைப்புக்கு குழி பறித்துவிடும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 http://www.thenee.com/241016/241016-1/241016-2/241016-2.html

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...