தேர்தல் வருகிறது ! - பாகவியார்




                

வருகிறது – தேர்தல்
வருகிறது
நம் ஐந்தாண்டுத் தலையெழுத்தை
நிர்ணயிக்க வருகிறது.


அரசியல்வாதிகள் – இவர்கள்
ஓட்டு வாங்கும்வரை
நீலிக்கண்ணீர் வடித்துவிட்டு
ஒட்டு வாங்கியவுடன்
நோட்டை சுருட்டுவதிலேயே
நோட்டம் பார்ப்பர்;
நாட்டைக் கவனியார்;
நாட்டு மக்களையும் கவனியார்.

தொகுதிக்கே வராத,
தொண்டு ஏதும் செய்யாத
ஆவண அரசியல்வாதிகளும்
இங்குண்டு.

பதநீர் பருகியநின்
பனை ஓலைக்கு
என்ன மதிப்பு?

தேநீர் பருகியபின்
காகிதக் கோப்பைக்கு
என்ன மதிப்பு?

ஓட்டு வாங்கியபின்
ஓட்டுப் போட்ட
ஓட்டாண்டிகளுக்கு
என்ன மதிப்பு – என
எண்ணிக்கொள்ளும்
அரசியல் குள்ளநரிகளே
ஆட்சி தேடி வருகிறார்கள்.

நோட்டு வாங்கிக்கொண்டு
ஓட்டுப் போடும்
ஓட்டாண்டிகளே ! – சில
நோட்டைக் கொடுத்து
நாட்டையே கைப்பற்றிக்கொள்ளும்
நாட்டமுள்ளோர்க்கா
உங்கள் ஓட்டு?

ஒரு ஓட்டைக்
கொடுத்துவிட்டு
ஒரு கோடி நோட்டாக
உருவாக்கிக்கொள்ளும்
ஊழல் பெருச்சாளிகளுக்கா
உங்கள் ஓட்டு?

இந்திய நாட்டுச்
சொத்தையெல்லாம் – தம்
வீட்டுச் சொத்தாக்கும்
நாட்டமுள்ளோர்க்கா
உங்கள் ஓட்டு?

உங்கள் சொத்தை எடுத்துத்
தம் உறவினரைத்
தன்வந்தராக்கும்
சுயநலவாதிகளுக்கா
உங்கள் ஓட்டு?
இத்துணை காலம்
சிந்திக்கவே நேரமில்லாமல்
சீரழிந்துவிட்டோம்
இனியாவது
சிந்தித்துச் செயல்படுவோம்
ஏழைகளின்
நண்பனென்று சொல்லி
முதுகில் குத்துவோரைப்
புறக்கணிப்போம் !

ஏழைகளின்
பாதுகாவலன் எனச்சொல்லி
அவர்களின் வாழ்வையே
வினாக் குறியாக்கும்
வீணர்களைப்
புறக்கணிப்போம் !

சாதி, மதம் பாராமல்
பொதுத்தொண்டு செய்வோரைப்
பொதுவாய்க் கண்டறிவோம் !
பொதுத்தொண்டு செய்வோருக்கே
எங்களின் வாக்கு – எனப்
பொது அறிவிப்புச் செய்திடுவோம் !

நம் ஒவ்வொரு வாக்கால்
நாளைய இந்தியாவின்
தலையெழுத்தையே
தலைகீழாய் மாற்றிடுவோம் !


நன்றி :

இனிய திசைகள்
பிப்ரவரி 2014
குறிப்பு: இலங்கை தேர்தல்களையும் நினைவூட்டுகிறது.    

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...