தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பளக் கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டும்!

 லையக பெருந்தோட்டத் தொழிலார்களின் நாள் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பது என்ற பிரச்சினை கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பித்து தற்போதைய அரசாங்கம் வரை தொடர்கதையாக நீடிக்கின்றது.

கடந்த அரசாங்கத்தில் முற்போக்கு கூட்டணி என்ற மலையகத் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அரசில் அங்கம் வகித்தன. அவற்றின் தலைவர்கள் சிலர் அமைச்சர்களாகவும் பதவி வகித்தார்கள். அது மாத்திரமின்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் தோட்டத் தொழிற்சங்கமான தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் இருந்தது.


இத்தனை பேர் இருந்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாள் சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியாமல் போய்விட்டது. இவ்வளவுக்கும் பெரும்பாலான தோட்ட முதலாளிமார் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள். அது மாத்திரமின்றி, மலையகத் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் பாரம்பரியமாக ஐ.தே.கவுக்கே வாக்களித்தும் வருபவர்கள்.




இருந்தும் தோட்ட முதலாளிகளை 1,000 ரூபாவை நாள் சம்பளமாக வழங்குவதற்கு சம்மதிக்க வைப்பதற்கு ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தால் முடியாமல் போய்விட்டது. ஆனால் கடந்த அரசாங்கத்தை கிடுக்கிப் பிடிபிடித்து 1,000 ரூபா சம்பளத்தை தொழிலாளர்களுகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான சூழ்நிலை இருந்தது.

ஏனெனில், கடந்த அரசாங்கம் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே ஆட்சி செய்தது. மலையகக் கட்சிகளின் ஆதரவு மாத்திரமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. என்பனவற்றின் மறைமுக ஆதரவுடனும்தான் கடந்த அரசாங்கம் ஆட்சியைக் கொண்டிழுத்தது. எனவே, இந்தக் கட்சிகள் திடமாக நின்று அரசாங்கத்துக்கு நிர்ப்பந்தம் கொடுத்திருந்தால், ஐ.தே.க. தனது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகத் தன்னும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தை ஒரு வழிக்குக் கொண்டு வந்து 1,000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கக்கூடும். ஆனால் அரசை ஆதரித்த கட்சிகள் அவ்வாறு செய்யவில்லை. அது அவர்கள் செய்த மாபெரும் தவறு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் அது மலையக மக்கள் பிரச்சினையை எப்பொழுதோ கைகழுவி விட்டுவிட்டது. தமிழரசுக் கட்சி தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அதன் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 35 இலட்சம் தமிழ் பேசும் மக்களின் தலைவர் என்று வர்ணிக்கப்பட்டு வந்தார். வடக்கு கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லீம் மக்கள் ஆகியோரே அந்த 35 இலட்சம் பேரும்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை அணி திரட்டுவதற்காக ‘இலங்கைத் தொழிலாளர் கழகம்’ என்ற தொழிற்சங்கம் ஒன்றையும் தமிழரசுக் கட்சி தொடங்கி சில காலம் நடத்தியது. ஆனால் அது மலையகத்தில் எடுபடவில்லை. ஆரம்ப காலத்தில் தமிழரசுக் கட்சியை ஆதரித்த கிழக்கிலங்கை முஸ்லீம்கள் சிலர் தமிழரசுக் கட்சி சார்பாகத் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவானார்கள்.

ஆனால், தமிழிரசுக் கட்சித் தலைமை தொடர்ந்தும் யாழ்ப்பாண மேட்டுக்குடி மையவாதக் கொள்கைகளைப் பின்பற்றியதால் முஸ்லீம்களும் மலையகத் தமிழர்களும் தமிழரசுக் கட்சியில் நம்பிக்கை இழந்து அதைவிட்டு ஒதுங்கிவிட்டனர். பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியினர் முஸ்லீம்களைத் ‘தொப்பி பிரட்டிகள்’ என வையவும் செய்தனர். தமிழரசுக் கட்சியினர் விதைத்த இனவாத விதைகள்தான் புலிகளின் மனங்களில் முளைவிட்டு வளர்ந்து முஸ்லீம் மக்களைப் படுகொலை செய்யும் அளவுக்கு பிற்காலத்தில் இட்டுச் சென்றது.

எனவே, இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சகோதர இனம் என்ற வகையில் தன்னும் மலையகத் தோட்டத் தொழிலாளரின் 1,000 ரூபா சம்பளப் பிரச்சினைக்கு ஆதரவான முறையில் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்க முடியாது. இந்தப் பிரச்சினையில் அவர்கள் இதுவரையும் ஒரு வார்த்தை தன்னும் பேசாமல் மௌனம் காப்பதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றைய நிலையில் மலையகத்தில் செயற்படும் தொழிற்சங்கங்களாலும் இந்தப் பிரச்சினையில் ஒரு சுமூகமான தீர்வை எட்டப்படக்கூடிய சக்தி இருப்பதாகத் தெரியவில்லை. முழு மலையகத் தொழிற்சங்கங்களும் ஓரணியில் நின்று 1,000 ரூபா சம்பளக் கோரிக்கையை முன்வைத்து பொது வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டால் சில வேளைகளில் வெற்றி கிடைக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு மலையகத் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒற்றுமை கிடையாது.

தவிரவும், காலவரையறையற்ற பொது வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டால் அது உற்பத்தியைப் பாதிக்கும். அதைக் காரணம் காட்டி இப்பிரச்சினையில் அரசாங்கம் தலையிடக்கூடும். சில வேளைகளில் அரசாங்கத் தலையீடு என்பது தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருக்காமல், தோட்ட முதலாளிமாருக்கு சாதகமான முறையில், அதாவது தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கி, தோட்டத் தொழிற்துறையை அத்தியாவசிய சேவைகள் என அறிவிக்கும் நிலைக்குக் கொண்டுபோய் விடலாம். ஏனெனில் அரசாங்கம் உற்பத்தி பாதிப்படைந்து பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை ஒருபோதும் விரும்பாது.

எனவே இப்போதுள்ள ஒரேயொரு சாத்தியம், அரசாங்கம் மூலமாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தை வலியுறுத்தி சம்மதிக்க வைத்து 1,000 ரூபா சம்பளத்தை வழங்க வைப்பதுதான். தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதால் அரசாங்கம் நினைத்தால் இதைச் செய்ய முடியும்.

1,000 ரூபா சம்பளம் தம்மால் வழங்க முடியாது எனத் தோட்ட முதலாளிமார் வாதிடுவதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அப்படி வழங்கினால் தோட்டங்கள் நஸ்டமடைந்து இயங்க முடியாமல் போய்விடும் என்பதாகும். அவர்கள் கூறும் இந்தக் காரணம் உண்மைதானா என்பதை ஆராய்ந்து பார்ப்பதும் அவசியமாகும். அப்பொழுதுதான் அவர்கள் கூறுவது போல உண்மையில் தோட்டங்கள் நஸ்டமடைந்து விடுமா அல்லது அவர்கள் ஈட்டும் இலாபத்தில் குறைவு ஏற்படுவதைத்தான் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்களா என்பது தெரிய வரும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இழுத்தடித்துக்கொண்டு போவது நல்லதல்ல. இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வில் உண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 ரூபா வழங்கினால் கூட அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு
நடத்துவதற்கு அது போதாது. நிலைமை அப்படியிருக்க அவர்களது அத்தியாவசிய கோரிக்கையை உதாசீனம் செய்வது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் கூட தினசரி நாள் கூலியாக 1,500 ரூபா வழங்கப்படுகையில், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற, பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற மலையகத் தோட்டத் தொழிலாளர்;களின் 1,000 ரூபா சம்பளக் கோரிக்கையை எவ்விதத்திலும் தட்டிக் கழிக்க முடியாது. எனவே அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தது போல தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 ரூபா சம்பளம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இந்த விடயம் மலையக மக்களின், அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் கட்சிகளின், தொழிற்சங்கங்களின் பிரச்சினை தானே எனக் கருதாமல், நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும்.


courtesy: vaanavil. 120 -    December 2020 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...