லங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடம் இருந்து கிளம்பி இருக்கிறது. அதன் பொருட்டு 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகிறார்கள்.
அவர்களது இந்தக் கோரிக்கை சம்பந்தமாக பிரதான எதிர்க்கட்சியான சஜீத் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஜே.வி.பியோ கூட வாய் திறக்காது மௌனமாக இருக்கின்றன. ஏன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட சிங்களப் பேரினவாதிகளின் இந்தக் கோரிக்கை பற்றி தமது வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்காமல் ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்து வைத்திருப்பது போல தலையை இழுத்து வைத்திருக்கின்றது.


இந்த மாகாண சபை முறைமை ஏன் கொண்டு வரப்பட்டது, என்ன சூழலில் கொண்டு வரப்பட்டது என்பதை மறந்துவிட்டது போல பெரும்பாலான அரசியல்வாதிகள் நடித்தாலும், பொதுமக்களும் மறந்து போய் இருப்பது கவலைக்குரிய விடயம்.

இலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து 1948 பெப்ருவரி 04ஆம் திகதி சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சியதிகாரம் ஏகாதிபத்திய சார்பு சிங்களப் பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடம் போய்ச் சேர்ந்தது. அந்தக் கட்சி செய்த முதல் வேலை மலையகத் தமிழத் தோட்டத் தொழிலாளர்களின் பிராஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்ததுதான். அடுத்ததாகச் செய்த வேலை வடக்கு கிழக்கில் இருந்த தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்தமை.

இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக எதிர்த்திருக்க வேண்டிய தமிழ் தலைமை (ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சி), அதற்கு பதிலாக அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு அரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்கியது. எனவே இன்றைய தமிழ் தலைமுறையினர் தவறாக நினைப்பது போல சிங்கள அரசியல்வாதிகளால் மட்டும் இலங்கையில் இனப்பிரச்சினை வளர்க்கப்பட்டது அல்ல. இனப் பிரச்சினை உருவாவதற்கும், பின்னர் அது பூதாகர உருவம் எடுத்ததிற்கும் தமிழ் தலைமைகளும் காலத்துக்காலம் கைகொடுத்து உதவியிருக்கின்றன.

ஆனால் தமிழரசுக் கட்சி உருவான பின்னர் இனப்பிரச்சினை தமிழ் மக்களின் மையப் பிரச்சினையாகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக எழுப்புவதற்குப் பதிலாக சிங்கள விரோத, தமிழ் இனவாதக் கோரிக்கையாக முன்னெடுத்தது. அதன் விளைவாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை சிங்கள மக்களை ஏற்க வைப்பதற்குப் பதிலாக அவர்களை எதிர்த் திசையில் நிறுத்தி வைத்தது.

இருந்தும் 1956இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் ஒன்று ஏற்பட்ட பின்னர், பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்ற பெயரில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். அந்த ஒப்பந்தப் பிரகாரம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களால் நிர்வகிக்கப்படும் பிராந்திய சபைகள் உருவாக இருந்தன. ஆனால் ஐ.தே.க. செய்த எதிர்க் குழப்ப வேலைகளால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

1965 தேர்தலின் பின்னர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்றை அமைந்தது. அந்த அரசு அமைவதற்கு தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவும் தேவையாக இருந்ததால், தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ‘மாவட்ட சபைகள்’ என்ற அமைப்பை உருவாக்குவதாக டட்லி தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்தபடி கடைசி வரை மாவட்ட சபைகளை அமைக்காமல் தமிழரசுக் கட்சியை ஏமாற்றிவிட்டார்.

1970இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ‘மக்கள் முன்னணி’ அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி சிறீமாவோ அரசுக்கு எதிராக பல சட்ட மறுப்புப் போராட்டங்களை நடத்தியதுடன், 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ‘தனித் தமிழீழம்’ என்ற கோரிக்கையையும் முன் வைத்தது. தமிழரசுக்கட்சியின் இந்தத் தீவிரவாதப் போக்கு தமிழ் இளைஞர்களை வன்முறைப் பாதையில் செல்லத் தூண்டிவிட்டது. முதலாவது அரசியல் கொலையாக யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா தமிழ் இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தொடர்ந்தும் பல கொலைகள் நிகழ்த்தப்பட்டு, கொலைக் கலாச்சாரம் தமிழர் அரசியலில் துவக்கி வைக்கப்பட்டது.

தனித் தமிழீழத் தீர்மானத்தின் காரணமாக அடுத்து வந்த 1977 பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கின் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஆனால் தேர்தலின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுருதி மாறத் தொடங்கியதுடன், தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றிய அவர்கள் 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசியடம் சோரம்போய் எதுவித அதிகாரமும் அற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்கும் அளவுக்குச் சென்றனர். ஆனால் ஜே.ஆர். அரசு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் கூட இயங்க அனுமதிக்கவில்லை.

தமிழ் தலைமையின் இந்தத் துரோகமும், தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றி வந்த ஐ.தே.க. தலைமையுடன் தமிழ்த் தலைமை தொடர்ந்தும் கூடிக்குலாவியதும், தமிழ் இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும் கோபத்தையும் தூண்டிவிட்டது. எனவே அவர்கள் 

படிப்படியாக ஜே.ஆர் அரசுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கினர். ஆனால் ஜே.ஆர். அரசு நிலைமையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகின் உதவியுடன் இராணுவ ஒடுக்குமுறையைத் தமிழ் மக்கள் மேல் ஏவிவிட்டது. அதன் காரணமாக இலங்கை அரசுக்கும் தமிழ் இளைஞர்களின் ஆயுத இயக்கங்களுக்கும் இடையில் முழு அளவிலான போர் ஆரம்பமானது.

அந்தக் காலகட்டத்தில் உலக அளவில் அமெரிக்க – சோவியத் வல்லரசுகளுக்கிடையில் ‘பனிப்போர்’ நிலவியது. இந்தப் போரில் இலங்கையின் அயல்நாடான இந்தியாவில் இருந்த இந்திராகாந்தி அரசாங்கம் தன்னை சோவியத் அணியில் இணைத்துக் கொண்டது. அதன் காரணமாக இலங்கையில் அமெரிக்கா காலூன்றுவதற்கு ஜே.ஆர். அரசு உதவி புரிவதை இந்திராகாந்தி அரசு விரும்பவில்லை. எனவே ஜே.ஆர். அரசை வழிக்குக் கொண்டுவர எண்ணிய இந்திய அரசு தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கைகளை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த எண்ணி அவர்களுக்கு இந்திய மண்ணில் ஆயுதப் பயிற்சி வழங்கியதுடன், ஆயுதங்கள், பணம் உட்பட பல வழிகளிலும் உதவியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஆடிப்போனது ஜே.ஆர். அரசு. அமெரிக்காவாலோ அல்லது மேற்குலகாலோ ஜே.ஆர். அரசைக் காப்பாற்ற முடியவில்லை. வேறு வழியின்றி இந்தியாவின் காலில் விழுந்து சரணாகதி அடைந்தது ஜே.ஆர். அரசு. அதன் விளைவாக உருவானதே 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையின் அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் பெற்றெடுத்த குழந்தைகளே இந்த மாகாண சபைகள்.

இலங்கை தமிழ் தலைமைகள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக ஆரம்பத்தில் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையையும், பின்னர் சமஸ்டி கோரிக்கையையும், அதன் பின்னர் தனிநாட்டுக் கோரிக்கையையும் முன்வைத்தன. ஆனால் அந்தக் கோரிக்கைகள் எவற்றையும் அவையால் அடைய முடியவில்லை. மறுபுறத்தில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், ஜே.ஆர். – அமிர்தலிங்கம் ஒப்பந்தம் என பல ஒப்பந்தங்கள் இலங்கை அரசுகளுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் உருவான போதும் அவையும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

முன்வைத்த கோரிக்கைகளை அடைய முடியாமலும், எழுதிய ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமலும் இருந்த சூழலில், உருவான ஆயுதப் போராட்டம் மத்தியில் உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒன்றே தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிகக்கூடியதாக இருந்தது. தோல்வியுற்ற முன்னைய ஒப்பந்தங்களுக்கும் இந்த ஒப்பந்தத்துக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் என்னவெனில், முன்னைய ஒப்பந்தங்கள் யாவற்றிலும் இலங்கை அரசும் தமிழர் தரப்புமே கைச்சாத்திட்டன. அதனால் இலங்கை அரசுகள் ஒப்பந்தத்தை மதிக்காமல் ஒருதலைப்பட்சமாக அதை முறித்து ஏமாற்றக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசுடன் இலங்கைத் தமிழர்கள் சார்பாக பலம் வாய்ந்த இந்திய அரசே கைச்சாத்திட்டது. எனவே இந்தியாவை இலங்கை ஏமாற்றுவது சுலபமான விடயமல்ல.

வரலாற்றில் இலங்கைத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு இது. இதை இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள் நன்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவை என்ன செய்தன?

போராட்டக் களத்தில் நின்ற பிரதான இயக்கமான விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை நிராகரித்ததுமல்லாமல், பிரேமதாச தலைமையிலான ஐ.தே.க. அரசிடம் ஆயுதங்களும் பணமும் வாங்கிக்கொண்டு இந்தியாவுடன் யுத்தத்துக்குப் போனார்கள். அது மாத்திரமின்றி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தார்கள். அதன் மூலம் இந்திய அரசை இலங்கைத் தமிழர் பிரச்சினையிலிருந்து எட்ட நிற்க வைத்தனர். அவர்களது இந்த நடவடிக்கை ஐ.தே.க. அரசுக்கும் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. புலிகளின் மேற்கத்திய சார்பு, சியோனிச இஸ்ரேலிய சார்பு போக்கே அவர்களை இவ்வாறெல்லாம் செய்யத் தூண்டியது.

சரி, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள், 2000 ஆண்டில் சந்திரிக அரசாங்கம் கொண்டு வந்த, ஏறத்தாள சமஸ்டியை ஒத்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையாவது ஆதரித்தார்களா? இல்லை, அதையும் புலிகள் ஐ.தே.கவுடனும் இதர சிங்கள இனவாத இயக்கங்களுடனும் சேர்ந்து நடைமுறைப்படுத்த விடாமல் குழப்பியடித்தார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு இன்று மாகாண சபை பறிபோகப் போகிறதே என்று ஒப்பாரி வைப்பதில் என்ன பிரயோசனம்? இதைத்தான் சொல்வது, “பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோவணத்தையும் இழந்த கதை” என்று.

தமிழ்த் தலைமைகளின் வங்குரோத்து அரசியல் இப்படியிருக்க, இன்றைய அரசுக்கு தமிழ் மக்கள் சம்பந்தமான பாரிய கடமை ஒன்றுண்டு. அதாவது அவர்களது பிரச்சினைக்கு இன்றைய சூழலில் முழுமையான தீர்வு காண்பது சாத்தியமில்லை என்றாலும், இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பகிர்வுத் தீர்வான மாகாண சபை முறைமையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், மாகாண சபை முறை தமிழ் பகுதிகளுக்கான இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல. அது ஒன்பது மாகாணங்களிலும் இயங்குவதால் பிராந்திய அடிப்படையிலான சிறந்த அதிகாரப் பகிர்வும் கூட. எனவே அரசாங்கம் அதில் கை வைக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் முற்றுமுழுதான நம்பிக்கையை இழந்து அவர்களின் வெறுப்பைச் சம்பாதிப்பதுடன், அரசாங்கத்தின் தற்கொலை முயற்சியாகவும் அமைந்துவிடும்.

இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது தனியே சிங்கள இனவாத வாக்குகளால்தான் என்ற ஒரு எண்ணம் சில பேரினவாத சக்திகளிடம் இருக்கின்றது. சிங்கள முற்போக்கு – ஜனநாயக சக்திகளினதும், தமிழ் – முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களினதும் கணிசமான வாக்குகளும் இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற உதவியிருக்கிறது என்பதை அரச தலைவர்கள் மறந்துவிடக்கூடாது. எனவே அவர்களின் ஆதரவு மூலம் பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அவர்களது தலையில் மண்ணள்ளிப் போட நினைத்தால் அதற்கு வரலாறு தகுந்த பாடம் புகட்டத் தவறாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தற்போது மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து சில இனவாத சக்திகளால் கிளப்பப்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கு ஒரு முடிவு கட்டுவதானால் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்கும் ராஜபக்சாக்கள் மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து தங்கள் அரசின் நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...