எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன?

லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்ணயித்துள்ளது. கொடிய கொரனோ நோயின் தாக்கமே இந்தத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாமைக்குக் காரணம் என வெளியுலகத்திற்கு கூறப்படுகிறது. ஆனால் ‘வானவில்’ பத்திரிகைக்கு அது மட்டும் காரணம் அல்ல எனத் தெரிய வருகிறது.
கடந்த வருடம் நொவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றியீட்டி ஜனாதிபதியானார்.
மறுபக்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த அதே தமிழ் – முஸ்லீம் கட்சிகளினது ஆதரவைப் பெற்றிருந்தும் கூட தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
அதன் மூலம் இலங்கையில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் அரசியல் அமைப்பின் பிரகாரம் சிறுபான்மை இனங்களின் ஆதரவின்றி எவரும் ஆட்சிக்கு வர முடியாது என கூறிவந்தவர்களின் இறுமாப்புப் பேச்சு தவிடுபொடியாகிப்போனது.
உண்மை என்னவெனில் 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரியை பிரித்தெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தியதின் மூலமே அவர்களால் வெற்றியீட்ட முடிந்தது. அதை விடுத்து சிறுபான்மை இனங்களின் ஆதரவால்தான் மைத்திரி வெற்றி பெற்றார் என்றால் 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் சஜித் பிரேமதாச அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?
ஆனால் ஈ.பி.டி.பி. தவிர்ந்த மற்றைய எல்லா தமிழ் – முஸ்லீம் கட்சிகளும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக ஒன்று திரண்டு நின்று படுமோசமான எதிர்ப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதும் கோத்தபாய வெற்றி பெற்றார் என்றால், அது நிச்சயமாக சிங்கள மக்கள் வழங்கிய ஆதரவினால்தான். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
கோத்தபாயவின் வெற்றியும், அதற்கு முதல் 1970 பொதுத் தேர்தலில் சிறீமாவோ பண்டாரநாயக்க பெற்ற வெற்றியும், பின்னர் சந்திரிக குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச போன்றோர் பெற்ற வெற்றிகளும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களின் ஆதரவால்தான் பெற்ற வெற்றிகள் என்பதில் சந்தேகம் இல்லை.
2015 ஜனாதிபதித் தேர்தல் ஒரு விதிவிலக்காக அமைந்தமைக்குக் காரணம் அரசியல் சதி நடவடிக்கைகளே. அதாவது, அவர்கள் மைத்திரியை சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரித்தெடுத்ததின் மூலமும், மேற்கு நாடுகள் – இந்தியாவும் கூட – தமது சகல வளங்களையும் பயன்படுத்தி மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டதின் மூலமும், சகல தமிழ் – முஸ்லீம் பிற்போக்கு சக்திகளையும் ஓரணியில் திரட்டியதின் மூலமும், இடதுசாரிப் போர்வையில் இருக்கின்ற ஐந்தாம் படையான ஜே.வி.பியை தமது பக்கம் இழுத்ததின் மூலமும்தான் அந்த வெற்றி ஈட்டப்பட்டது.
எனவே உண்மையான மக்கள் அபிப்பிராயம் என்பது எப்பொழுதும் முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக – தேசபக்த சக்திகள் உள்ளடங்கியதும், தற்பொழுது சிறீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலானதுமான அதே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வின் காரணமாகவே வெளிப்பட்டு வந்திருக்கிறது. இதில் நாட்டின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள மக்களே எப்பொழுதும் பெருமைப்படும் வகையில் முன்னணிப் பாத்திரம் வகித்து வந்திருக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் சார்ந்த கட்சியே வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே கட்டியம் கூறிவிட்டது. அதுவும் இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அணிகளாகப் போட்டியிடும் சூழலிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னைய காலங்களைப் போல தீவிரமான ஐ.தே.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காத சூழலிலும், பொதுஜன பெரமுனவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே அணியாகப் போட்டியிடும் சூழலிலும் கோத்தபாய அணியினரின் வெற்றி திட்டவட்டமான ஒன்று. இருக்கின்ற ஒரேயொரு பிரச்சினை கோத்தபாய அணியினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பதே.
ஆனால் அதிலும் கூட தேர்தல் முடிவடைந்து கோத்தபாய அணியினரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தேர்தல் முடிவடைந்த பின்பு தோல்வியடையும் இரண்டு ஐ.தே.க. அணிகள் மத்தியிலும் மேலும் முரண்பாடுகள் தீவிரமடையும். அதன் காரணமாக இரண்டு அணிகளிலும் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அடுத்த ஐந்து வருடங்களும் வெறுமனே ‘காய்ந்து’ கொண்டிருக்க விரும்பாமல் அரசாங்கத்தின் பக்கம் தாவக்கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறலாம்.
மொத்தத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட சரிவு நிலையும், அதன் பின்னரான பிளவுகளும், அக்கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அக்கட்சியின் எதிர்காலம் இருள் சூழ்ந்துள்ளது. அடுத்த சுமார் 20 வருடங்களுக்கு அக்கட்சி தலைநிமிரவோ அல்லது தேர்தல்களில் வெற்றி பெறக்கூடிய சூழலிலோ இல்லை. அதற்கு இன்னொரு காரணம், அக்கட்சியில் மக்களைக் கவரக்கூடிய தலைமைத்துவம் இல்லாதிருப்பது. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் காலாவதியாகிப்போன ஒன்று. சஜித் பிரேமதாசவினாலும் கட்சியை ஒற்றுமைப்படுத்தும், மக்களைக் கவரும் ஆற்றல் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. எனவே, ஐ.தே.க. என்பது எதிர்காலத்தில் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒரு சவாலாக இருக்கப் போவதில்லை.
மறுபக்கத்தில், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள் முரண்பாடுகளாலும், மக்கள் செல்வாக்கு இழந்தும் காணப்படுகின்றது. கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் அக்கட்சிக்கு ஏற்பட்ட சரிவு அதற்கு ஒரு உதாரணம். அதன் பின்னர் கூட்டமைப்பு மேலும் மேலும் மக்கள் செல்வாக்கை இழந்தும், உள் முரண்பாடுகளால் பலவீனப்பட்டும் உள்ளது. கூட்டமைப்பின் வருங்காலத் தரைவர் எனக் கருதப்படும் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக் கட்சியினதும், கூட்டமைப்பினதும் கொள்கைகளிலும் வியூகங்களிலும் மாற்றங்கள் செய்ய விரும்புவதால், கூட்டமைப்புக்குள் மேலும் குழப்பங்கள் உருவாகி, அது அடுத்த பொதுத் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய நிலை தோன்றியுள்ளது. கூட்டமைப்பு வழமையாகக் கையாளும் தமிழ் இனவாத உசுப்பேத்தல்களோ, ‘துரோகி’ வசைபாடல்களோ இனிமேலும் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடும் சூழல் இல்லை.
முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமைத்துவங்களும் பிளவுபட்டும், மக்கள் செல்வாக்கு இழந்தும் பலவீனப்பட்டே காணப்படுகின்றன. அத்தலைமைகள் வழமையாகக் கையாளும் ஆட்சியிலிருப்பவர்களை மிரட்டி அணிபணிய வைத்து தமது இலக்குகளை அடையும் தந்திரோபாயம் தற்போதைய அரசாங்கத்திடம் எடுபடாது என்பதால் அவை ஒரு கையறு நிலையிலேயே இருக்கின்றன. அத்தலைமைகள் இனிமேலும் ஐ.தே.கவில் நம்பிக்கை வைக்கும் சூழல் இல்லாததால், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் அமையப்போகும் அரசாங்கத்துடன் எப்படி ஒட்டி உறவாடலாம் என்பதிலேயே மண்டையைப் பிசைந்து வருகின்றன.
இத்தகைய ஒரு அரசியல் சூழலில் மிகவும் அவதானமாகச் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நிலைமையில் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் இருக்கின்றன. ஏனெனில் விரும்பியோ விரும்பாமலோ, சிறீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கங்களே அடுத்த பல வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கப்போகின்றன. அந்த அரசில்தான் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், சில தேசபக்த – ஜனநாயகக் கட்சிகள், மலையகத்தின் பிரதான அரசியல் கட்சி, வடக்கிலும் கிழக்கிலும் இரண்டாவது நிலையிலுள்ள கட்சிகள் என்பன இருக்கப் போகின்றன.
இந்த நிலைமையில் பாரம்பரியமாக ஐ.தே.கவை ஆதரித்து வந்த தமிழ் – முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சிகள் தற்போதைய அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு எதையும் செய்தால் அது விவேகமானதாக இருக்காது என்பதுடன், தற்கொலைப் பாதையாகவும் இருக்கும்.
எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் யதார்தத நிலையை உணர்ந்து செயல்பட வேண்டியது சிறுபான்மையின மக்களினதும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளினதும் முடிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பழைய பாணியிலேயே தொடர்ந்து தவறு செய்தால் அதற்கு மக்களும் அனுமதிக்கமாட்டார்கள், வரலாறும் அனுமதிக்காது.
வானவில் இதழ்-114 

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...