பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் சாதனை படைப்பார்களா?டுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாகவே இப்பொழுது பலரினதும் அக்கறை திரும்பியுள்ளது. குறிப்பாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்ற தமிழ் மக்கள் இந்தத் தேர்தல் முடிவுகளை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் காத்திருப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
இதுவரை காலமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ தேசியக் கூட்டமைப்பே தனிப்பெரும் கட்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. ஆனால் பொதுமக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததிற்கு ஏதுவாக கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதில் உறுதியாகச் செயல்பட்டதா என வினவினால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
புலிகள் மிகவும் வலிமையுடன் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த வேளையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உருவாக்கினர். ஆயுதப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை வைத்திருந்த புலிகள் ஏன் நாடாளுமன்றவாத அமைப்பொன்றை உருவாக்கினர் என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.
அதற்கான காரணங்களாக இரண்டு விடயங்களைக் கூறலாம். ஒன்று, தமக்கு வேண்டியவர்கள் யாராவது நாடாளுமன்றத்துக்குப் போகாமல் விட்டால், அந்த இடத்தை “துரோகிகள்” (டக்ளஸ் தேவானந்தா போன்ற) நிரப்பிவிடுவார்கள் என்ற பயம். இன்னொன்று, புலிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பகிரங்கமான, நாடாளுமன்றவாத அமைப்பொன்றை வைத்திருந்தால் அதன் மூலம் அரசியல் ரீதியாகப் பிரச்சாரம் செய்யவும் சில இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படும் என்பதாகும்.
இலங்கையில் இதற்கு முதல் இருந்த தமிழர்களின் அரசியல் கட்சிகளான தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர விடுதலைக் கூட்டணி என்பன அரசியல் ரீதியாக பிற்போக்கு மற்றும் சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே அரசியல் கூட்டு வைத்துச் செயற்பட்டு வந்துள்ளன. புலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் இரண்டு பிரதான ஆளும் கட்சிகளையும் ஓரளவு சம தூரத்திலேயே வைத்திருந்தனர்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராக மகிந்த ராஜபக்சவும், ஐ.தே.க. வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட்டனர். ஆனால் புலிகள் இவ்விருவரில் எவரையும் ஆதரிக்காமல் தமிழ் மக்களை தேர்தலில் வாக்களிக்கவிடாது தடுத்தனர்.
புலிகள் தேர்தலைப் புறக்கணித்ததால்தான் மகிந்த அந்தத் தேர்தலில் வெற்றி பெறும் சூழ்நிலை உருவானதாக பின்னர் ஐ.தே.க. குற்றம் சாட்டியது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஏனெனில் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க விட்டிருந்தால் அவர்கள் தமது முன்னைய தலைமைகள் சொல்லிக் கொடுத்த வழமைப்பிரகாரம் ஐ.தே.கவுக்கு வாக்களித்து ரணில் வெற்றி பெற்றிருகக்கூடும். தேர்தல் முடிவும் அதைக் காட்டுகிறது. வெற்றி பெற்ற மகிந்த 50.29 வீதமும், தோல்வியடைந்த ரணில் 48.43 வீதமும் வாக்குகள் பெற்றனர். இருவருக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் சொற்ப வீதமே. இந்த நிலைமையில் தமிழ் மக்களை புலிகள் வாக்களிக்விட்டிருந்தால் அவர்கள் நிச்சயம் ரணிலுக்கு வாக்களித்து அவரே வெற்றி பெற்றிருப்பார்.
ஆனால் புலிகள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரித்தது தந்திரோபாய ரீதியிலானது என வாதிடுவோரும் உண்டு. அதாவது, ரணில் வெற்றி பெற்றால் சமாதானம் என்ற நாடகத்தை நீண்ட காலம் நடத்தி புலிகளை நீர்த்துப்போகச் செய்துவிடுவார் என்ற பயம் புலிகளின் தலைமைக்கு இருந்தது. அதேநேரத்தில் மகிந்த வெற்றி பெற்றால் யுத்தத்தைக் கடுமையாக நடத்த முற்படுவார். அது புலிகளின் நோக்கத்துக்குச் சாதகமாக அமைந்துவிடும் என புலிகளின் தலைமை கருதியது. ஆனால் முடிவு புலிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக அமைந்துவிட்டது அவர்களது தூரதிஸ்டம்.
புலிகள் 2005 ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரித்து, ஐ.தே.க. வெற்றிபெற வழியேற்படுத்தாது மகிந்த வெற்றி பெற வைத்தது சம்பந்தமாக ஐ.தே.கவுக்கு மட்டுமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் உள்ளுர வருத்தம் உண்டு. அந்த வருத்தத்தின் வெளிப்பாட்டை பின்னர் நடந்த சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.
2009இல் புலிகள் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டதும், பழையபடி ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய’ கதையாக தமிழ் தலைமை தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியது.
2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகள் 2005 தேர்தலின் போது வகுத்த வரையறையை மீறி ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு தமிழ் Nதுசியக் கூட்டமைப்பு தனது பகிரங்க ஆதரவை வழங்கியது. அதுவும் ஐ.தே.க. வேட்பாளர் யார்? இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து இறுதி யுத்த நேரத்தில் புலிகளுக்கு எதிரான போரை வழிநடத்திய சரத் பொன்சேக! இவரை முன்னர் ஒருமுறை புலிகள் தற்கொலைக் குண்டுதாரி மூலம் கொலை செய்யவும் முயன்றிருந்தனர். (இன்று தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக வரவிருக்கும் சுமந்திரன் புலிகளைக் கடுமையாக விமர்சிப்பதைப் பார்த்தால், புலிகளை ஒழித்ததிற்கு சன்மானமாகத்தான் 2010 ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு பொன்சேகவை ஆதரித்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது)
அதுமட்டுமின்றி, 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் ஐ.தே.க. நிறுத்திய வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மகிந்த ராஜபக்ச தோல்வியடைவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. அதுமாத்திரமல்லாமல், பின்னர் ரணில் தலைமையில் அமைந்த ஐ.தே.க. அரசுக்கு சுமார் நான்கரை வருடங்கள் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கி அரசின் பங்காளி போலச் செயற்பட்டது.
புலிகளின் அழிவுக்குப் பின்னர் பூனையில்லாத வீட்டில் எலிகள் கும்மாளம் அடித்தது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னிச்சையாக ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கிய போதிலும், தமிழ் பொதுமக்கள் அதை ஆதரிக்கவில்லை என்பதை கடைசியாக நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் போது கூட்டமைப்பின் வாக்குவங்கி வீழ்ச்சி எடுத்துக் காட்டியது.
இருந்தும் தமது தவறில் இருந்து பாடம் படிக்காத, மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத கூட்டமைப்புத் தலைமை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐ.தே.க. வேட்பாளரான சஜித் பிரோமதாசவுக்கு பூரண ஆதரவு வழங்கியது. ஆனால் மூக்குடைபட குப்புற விழுந்தது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் அடுத்த பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் – குறிப்பாக வடக்கு கிழக்கில் – என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதற்கு காரணம் உண்டு. அந்தக் காரணம் கூட்டமைப்பின் வீழ்ச்சி பற்றி எழுந்துள்ள ஊகங்களால் விளைந்தது.
கடந்த முறைத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வடக்கு கிழக்கில் 16 உறுப்பினர்கள் தெரிவானார்கள். இம்முறை இத்தொகை சரி பாதியாகக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ இம்முறைத் தேர்தலில் தமக்கு 20 உறுப்பினர்கள் கிடைப்பார்கள் எனக் கூறியிருக்கிறார். அவர் இவ்வாறு கூறியது ஒன்றில் மக்கள் மனநிலையை அறியாததால் இருக்கலாம் அல்லது மக்களை அவர் இன்னமும் மந்தைக் கூட்டம் எனக் கருதுவதால் இருக்கலாம்.
அதேநேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழ் தேசியவாதிகளும் இருக்கிறார்கள். கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு இரண்டு விடயங்கள் காரணங்களாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஒன்று, கூட்டமைப்பு பேரினவாத ஐ.தே.கவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தமை. மற்றது தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை அளித்து வந்தது.
ஏறத்தாழ இதே மாதிரியான ஒரு சூழ்நிலைதான் 1970 பொதுத் தேர்தலின்போதும் நிலவியது. அ.அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.சிவசிதம்பரம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் என தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைவர்களை அத்தேர்தலில் மக்கள் மண்கவ்வ வைத்தனர். அன்றும் அவர்களது தோல்விக்குக் காரணமாக இருந்தது அவ்விரு கட்சிகளும் 1965இல் அமைந்த டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. அரசில் இணைந்திருந்தமைதான்.
இப்பொழுதும் ஏறத்தாழ அதே நிலைமை நிலவுவதால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல தலைகள் உருளக்கூடும். தமது தோல்வியை ஓரளவு ஊகித்து விளங்கிக் கொண்டதால்தான், கடந்த தேர்தல்களின் போது வழமையாக் கதைத்த தமிழ் தேசியம், வெள்ளைவான், இராணுவ ஆட்சி என்பவற்றை கைவிட்டு அபிவிருத்தி பற்றியும், அரசாங்கத்தில் நேரடியாக இணைவது பற்றியும் கூட்டமைப்பு தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
கூட்டமைப்புத் தலைவர்கள் என்னதான் தந்திரங்களைக் கைக்கொண்டாலும், சர்வ வல்லமை பொருந்திய வாக்காளப் பெருமக்களின் கைகளில்தான் முடிவு தங்கியிருக்கிறது. வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு சாதனை படைக்கிறார்களா என்பதை ஓகஸ்ட் 05 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: vanavil 115 July 2020

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...