கொடாக்கண்டனும் விடாக்கண்டனும்!--பரிபூரணன்


க்கிய தேசியக் கட்சிக்குள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நடைபெறும் அதிகாரப் போராட்டம் தீவிரமடைந்திருந்தாலும் இப்போராட்டத்தில் ரணில் மீண்டுமொருமுறை வெற்றியீட்டியிருக்கிறார். அதாவது கட்சித் தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
இருவருக்குமிடையிலான போராட்டம் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இடையில் 2015இல் ஐ.தே.க. தலையிலான அணியினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் அதிகாரப் போட்டி சற்று தளர்ந்துபோய் இருந்தது. ஆட்சியை இழந்ததும் அது மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறது.
இந்த அதிகாரப் போட்டியின் மைய விடயம் ரணில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி அதை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே. ஆனால் ரணில் அதற்கு இடம் கொடுக்காமல் பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லியும், குள்ளத்தனமான தந்திரோபாயங்களை நடைமுறைப்படுத்தியும் தலைவர் பதவியை தக்கவைத்து வருகின்றார். இருப்பினும் விக்கிரமாதித்தன் கதைபோல சஜித் தனது முயற்சியைக் கைவிடாதவராகவே இருக்கிறார்.
கடந்த நொவம்பர் 16இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தை வேட்பாளராக நியமிப்பதற்கும் கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கும் அவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர். இரண்டையும் சஜித்துக்கு வழங்க முடியாது என விடாப்பிடியாக நின்ற ரணில் இறுதியில் பணிந்து வந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிடுவதற்கு மட்டும் சம்மதம் தெரிவித்தார். இதற்கும் ரணிலின் கள்ள நோக்கமே பின்னணியில் இருந்தது. அதாவது தானோ அல்லது சஜித்தோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துகொண்டே ரணில் சஜித்துக்கு வழிவிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்று அவரது அணியினர் அரசாங்கம் ஒன்றை அமைத்த பின்னர், யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பது என்பதில் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் மீண்டும் மோதல் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்காவிடின் தான் புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அதன் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக சஜித் மிரட்டியதால் ரணில் அந்தப் பதவியையும் அவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.


எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தும் கூட சஜித்தின் ‘பசி’ அடங்கவில்லை. எப்படியும் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதிலேயே சஜித் குறியாக இருந்தார். ஏனெனில் ஐ.தே.கவை பொறுத்தவரையில் கட்சியின் தலைவர் பதவியில்லாமல் வேறு எந்தப் பதவியை வகித்தாலும் அது செல்லாக்காசு என்பது சஜித்துக்கு தெரியும்.
ஆனால் மாமன் ‘குள்ளநரி’ ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை விட அரசியலில் பல மடங்கு குள்ளரான ரணில் சஜித்தின் தலைவர் பதவி ஆசைக்கும் வேட்டு வைத்துவிட்டார். அதாவது ஐ.தே.கவின் சர்வ வல்லமை வாய்ந்த ‘செயற்குழு’வைக் கூட்டி அங்கு தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி தானே தொடர்ந்தும் கட்சித் தலைவராகத் தொடர்வதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டார். இந்தக் கூட்டத்தை சஜித்துக்கு ஆதரவான உறுப்பினர்கள் பகிஸ்கரித்ததால் ரணிலுக்கு அது மேலும் வசதியாகப் போய்விட்டது.
அதேநேரத்தில், சஜித் தலைவர் பதவிக்கான தனது போராட்டத்தை நிறுத்தமாட்டார் என்பதும் ரணிலுக்கு தெரியும். எனவே அதை முறியடிப்பதற்கான வழிவகையையும் ஏற்படுத்திவிட்டார் ரணில். அதாவது, அடுத்த பொதுத்தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக கட்சியின் சார்பாக சஜித்தை நிறுத்துவது எனவும், அதற்காக உருவாக்கப்படும் பல கட்சிகள் கொண்ட முன்னணியின் தலைவர் பதவியையும் சஜித்துக்கே வழங்குவது எனவும் ரணில் தீர்மானித்துள்ளார்.
Afbeeldingsresultaat voor ranil and sajith cartoon
இந்தத் தீர்மானத்திலும் ரணிலின் குள்ளத்தனம் மறைந்துள்ளது. அதாவது, அடுத்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய அணியே அமோக வெற்றி பெறும் என்பதும், சஜித் மண் கவ்வுவார் என்பதும் ரணிலுக்குத் தெரியும். தான் தொடர்ந்து சுமார் 20 தேர்தல்களில் தோல்வியடைந்தது போல, சஜித்தும் ஜனாதிபதி தேர்தல், பிரதமர் பதவி தேர்தல் என்பனவற்றில் தொடர்ந்து தோல்வியடையட்டும் என்பதே ரணிலின் அந்தரங்க நோக்கம். பொதுத்தேர்தலில் சஜித் தோல்வியடைந்த பின்னர் சீர்குலைந்து போகும் ஐக்கிய தேசிய முன்னயின் தலைமைப் பதவியும் சஜித்தை விட்டு அகன்றுவிடும். அதன்பின்னர் கட்சிக்குள் சஜித்தின் செல்வாக்கு இறங்குதிசைக்கு சென்றுவிடும் என்பதே ரணிலின் எதிர்பார்ப்பு.
இவ்வாறு திட்டமிட்டு ரணில் சஜித்துக்கு எதிராகக் காய் நகர்த்தி வருகிறார். இதுவரை சஜித்திடம் தற்காலிகப் பதவிகள் என்ற ஆயுதங்களை ரணில் ஒவ்வொன்றாக இழந்து வந்தாலும், மார்புக் கவசம் என்ற கட்சித் தலைவர் பதவியை இழக்காமல் ரணில் தன்னைக் காப்பாற்றி வருகின்றார்.
ரணில் கொடாக்கண்டனாக நின்றாலும், விடாக்கண்டனான சஜித் கட்சித் தலைவர் பதவிக்கான போராட்டத்தை அடுத்த பொதுத்தேர்தல் தோல்வியின் பின்னரும் நிறுத்திக் கொள்வாரா என்பதுதான் கேள்வி.
Source: chakkaram.com

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...