தூண்டலும் தொக்கிய விளைவுகளும் ! (2)எஸ்.எம்.எம்.பஷீர் 

சுதந்திர வேட்கை கொண்ட கிராமிய சிங்கள மக்கள் ஆங்கிலேயர்களின் கிரிக்கட் விளையாட அழைக்கும்  சவாலை ஏற்று அவர்களை   போட்டியிட்டு வெற்றி கொள்ளும்  கதையைக் கொண்ட  சிங்கள திரைப்படம் "சின்ஹவலோகணய" வாகும்.. இத்திரைப்படத்தின் கதையை ஒத்த " லக்கான்"  (வரி) எனும் திரைப்படம் இந்தியாவில் 2002 ஆம்  அமீர் கான் நடித்து வெளி வந்தது.  இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களின் ( ஆட்சி நிர்வாகிகளின் ) சவாலை ஏற்றுஇந்திய கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து , ஆங்கில  அதிகாரி  ஒருவரின் சகோதரியின் இரகசிய உதவியினால்  கிரிக்கட் விளையாட்டைக் கற்றுக் கொண்டு   ஆங்கிலேயர்களை வெற்றி கொள்வதும் , அதன் மூலம் வரி விதிப்பை இல்லாமல் செய்வதுமாகும். மிக அட்டகாசமான முறையில் "லக்கான்"  தயாரிக்கப்பட்டது உலகின் பல நாடுகளில் திரையிடப்பட்டது. ஆனால் இந்த இரண்டு கற்பனைப் படங்களிலும் ஆங்கிலேயரை கிரிக்கட்  விளையாட்டில் தோற்கடிப்பது என்பதுவே மூலக் கருவாக இருந்தது. சின்ஹவலோகணய திரைப்படத்தில் ஆங்கிலேயரின் கிரிக்கட் அணிக்கு தலைவராக நடிக்கும் ஆங்கிலேயர் " நீங்கள் ஒரு காலத்தில் உலகின் மிகச் சிறந்த கிரிக்கட் அணியாக வருவீர்கள் (“One day you will become the best Cricket Team in the world”) என்று அப்போட்டியின் இறுதியில் கூறுவது பின்னர் இலங்கை அணி உலக வெற்றிக் கிண்ணத்தை பெறப் போவதை இறந்த காலத்தில் சொன்னதாக கதை சுட்டிக் காட்டுகிறது. என்றாலும் இப்படம் வெளிவந்த பின்னர் பெற்ற 20/20 உலக வெற்றிக் கிண்ணமும் , நேற்றைய இங்கிலாந்து அணியினரை தோற்கடித்ததும் இலங்கையர் என்ற வகையில் யதார்த்தத்தில் ஒரு மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வுகளாகும்.  ஆனால் காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட கிராமிய சிங்கள மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு வடிகாலமைக்கும் ஒரு கற்பனைக் கதையில் "சின்ஹவலோகணய திரைப்படம் மெலிதாக முஸ்லிம் மக்கள் மீதான ஒரு எதிர்வினைப் பார்வையை அவசியமின்றி ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது.   இந்தத் திரைப்படத்தில் கூட" பலசெனா" என்ற பதம் பாடல் ஒன்றில் பிரயோகிக்கப் பட்டுள்ளது. "பல சேனா"  (சக்திமிகு அணி)  என்பது உள்ளூர் கிரிகட்  அணியினர் தங்களை சுய உற்சாகப்படுத்தும் பாடலில் சொல்வதாக வருகிறது. ஆனால் "  பொது பல சேனா " எனப்படும் இனவாத அமைப்பு "பௌத்த சக்திமிகு அணி" என்று   தங்களை அடையாள படுத்தி பௌத்த மதத்தை தங்களின் தீவிரவாத , இனவாத அடையாளத்துக்கு முன் வைக்கின்றனர். பௌத்தம் உண்மையில் எப்படிப்பட்ட சக்திமிகு அணியாக திகழ வேண்டும் என்பதில் பொது பல சேனா அமைப்பினர் அக்கறை கொண்டவர்களாக தெரியவில்லை.   

இந்நிலையில் இப்படம் வெளியான சரியாக இரண்டு வருடங்களின் பின்னர்   புத்தரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியான சித்தார்த்தர் எனும் இளவரசன் எப்படி கவுதமரானார் என்ற வரலாற்றை சித்தரிக்கும் வகையில் "ஸ்ரீ சித்தார்த்த கவுதமர் "  எனும்  சிங்கள திரைப்படம் வெளிவந்தது. இலங்கையில் தயாரிக்கப்பட்டு சிங்கள மொழியில் வெளிவந்த புத்தர் பற்றிய ஒரு சினிமாத் திரைப்படம் இதுவேயாகும்.   

குறிப்பாக இலங்கையில் பௌத்த மதம் போதிக்கும் நற்கருத்துக்களை போதிக்கும் சில பௌத்த மத குருக்கள் , இனவாதமாக நடந்து கொள்கிறார்கள் , புத்தரின் அகிம்சைக் கோட்பாடுகளை புறந்தள்ளி வன்முறையாக செயற்படுகிறார்கள் முஸ்லிம் , கிறித்தவ மதங்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டுகிறார்கள்  என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள்  எழுந்துள்ள கால கட்டத்தில் ஒருபுறம் சிங்கள சினிமா தொலைக்காட்சி நாடகங்கள் . வெகுசன தொடர்பு சாதனங்கள்  சிறுபான்மை மக்கள் மீதான காழ்புணர்ச்சி வெளிப்படுத்தப்படும் சூழ்நிலையில், புத்தர் இலங்கைத் திரைகளில் தோன்றினார். ஆட்சியை மட்டுமல்ல தனது மனைவியையும்  , தனது மகனையும் பிரிந்துஅரண்மனையை விட்டு நீங்கிகட்டுக்களற்ற சுதந்திரம் தேடிச் செல்லும் ஒரு ஆத்மாவாகக் காண விழையும்  சித்தார்த்தனின் கதையை , அவனுக்கு ஞானம்  கிடைத்து கவுதமனாகும் வரலாற்றை கண் முன் நிறுத்தும் முயற்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெற்றி கண்டிருந்தார்கள் . மிகுந்த ஆய்வின் பின்னர் இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் இந்திய தொலக்காட்சிகளில் நடிக்கும் மாலிக் ககன் எனப்படும் நடிகர் நடித்திருந்தார். இவர் இந்திய தொலைகாட்சி தொடரான இராவணன் தொடரிலும் நடித்து புகழ் பெற்றவர்.     
 பௌத்த மதத்தை பின்பற்றும் பல ஆசிய நாடுகளில் பௌத்த மத ஸ்தாபகரான கவுதம புத்தர் பற்றி ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பேசாப்படமாக 1925ம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதுவே சித்தார்த்தர் எனப்படும் கவுதம புத்தர் பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் . ஆனால் இந்தத் திரைப்படத்தை பௌத்த நாடான தாய்லாந்து நாட்டில் திரையிட அனுமதிக்கவில்லை என்பது ஆச்சரியமானதே !. அந்த அனுமதி மறுப்பை 2012ஆம் ஆண்டுதான் தாய்லாந்து நீக்கியது.


"ஸ்ரீ சித்தார்த்த கவுதமர் சித்தார்த்தர்"  2013 டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக திரைப்பட   விழாவில் சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்றது. மேலும் இவ்வருடம் புத்தர் பிறந்த ,   விழிப்புநிலை  (நிர்வாணம்)  எய்திய , மறைந்த தினமாக நம்பி கொண்டாடப்படும் வெசாக்  தினத்தை முன்னிட்டு இவ்வருட மே மாதம் ஐக்கிய நாடுகளின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குககளை (Millennium Development Goals)     பௌத்த கண்ணோட்டத்தில் எப்படி அடைந்து கொள்வது என்ற தலைப்பில் வியட்நாமில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் சினிமா விழாவில்  "ஸ்ரீ சித்தார்த்த கவுதமர் " திரைப்படம் சிறந்த திரைப்படம் ,சிறந்த இயக்குனர் (சமந்தா வீரகோன்) ,.இணை திரைப்பட கதையாசிரியர் (நவீன் குணரத்ன )  , சிறந்த ஒளிப்பதிவாளர் ,சிறந்த இசை அமைப்பாளர் விருது  ஆகியன இந்தத் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டன. 

புத்தரைப் போற்றுதல்!

தமிழகத்தில் ஈ வே .ரா பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை பிரச்சாரப்படுத்திக் கொண்டு , புத்தரை கூட ஒரு கடவுள் மறுப்பாளராகக் காட்டினார். ,ஒரு சமூக சீர்திருத்தவாதியாக புத்தரைப் போற்றினார். அவர் முகம்மதுவையும் (ஸல்) போற்றினார். உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காகப் போராடிய, சமூக சீர்திருத்தங்களை சவால்களுடன் எதிர்கொண்டவர்களை , தமது கொள்கைகளில் வெற்றி கொண்டவர்களை  போற்றுகின்ற பாணியிலே அவரின் இயக்கம் பயிற்றுவிக்கப்பட்டது. அந்த வகையில் புத்தர் திராவிடக் கழக பிரச்சாரங்கள் , அவர்களின் ஆதரவு திரைப்படங்கள் யாவும் புத்தரின் சிலை ஒன்றையாவது திரைப்படத்தில் எங்கேயாவது காட்டும் வகையில் செயற்பட்டனர். பெரியாரின் இயக்கத்தில் இருந்த எம்.ஆர் ராதா , தனது இரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் தான் இறந்த பின்னர் தான் வாழ்ந்த இழிவு வாழ்க்கை பலருக்கு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கு ஒரு சிலை வைக்குமாறு தனது நண்பரிடம்  கூறுவார். அவர் திரைப்படத்தில் இறந்ததும் அவரின் நண்பர் அவருக்கு புத்தரின் சிலை முன்பாக அவரின் சிலையை நிறுவி வாழ்க்கையின் இரு வேறுபட்ட மனித வாழ்க்கை இலக்குகள் பற்றி ஒரு போதனை செய்வது போல் அப்படத்தில் அக்காட்சி காட்சி இடம்பெறும்.
பெரியார் தனது `விடுதலை", (11.-6.-1956) இதழில் "இவர்கள் புத்தர் கொள்கைகளை ஆதரித்திருந்தால், அது ஜப்பான், மலேயா, பர்மா, சயாமுக்கு ஏன் போகிறது? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சரித்திரங்களிலும் புத்தநெறி விரட்டி அடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பவுத்தர்களுடைய மடம், கலாசாலைகளைத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறார்கள். பவுத்தர்களைக் கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள்" என்று எழுதினார்.  அது மட்டுமின்றி 1954 இல் ஈரோட்டில் பெரியார் புத்தர் மாநாட்டைக் கூட்டி, இலங் கையிலிருந்து பேராசிரியர் மல்லலசேகராவை, அழைத்து மாநாடு நடத்தினார்.


திரைப்படத் துறையில் திராவிட கழக கொள்கை வழிநின்ற சில நடிகர்கள் ஒருபுறம் புத்தரின் சிலையை அல்லது உருவப்படத்தை காண்பிக்கும் வழக்கம் ஒருபுறம் காணப்பட மறுபுறத்தில் கடவுள் நம்பிக்கையும்  சனாதன உறவும் கொண்ட சிலர் புத்தரை போற்றினர். ( ஆனால் இந்து மதத்தில் புத்தர் திருமாலின் அவதாரமாக -ஹிந்துமயப்படுத்தப்பட்டார்  என்பது ஒரு புறம் இருக்க )  ஹிந்து மத அடையாளத்தைப் பேணும் பிரபல நடிகரும் பாடகருமான M. K. தியாகராஜ பாகவதர் (தோற்றம் ஜனவரி 3, 1909 - மறைவு நவம்பர் 1, 1959), புத்தர் பற்றி பாடிய பாடல் புத்தரைப் பற்றிய  மிகச் சிறந்த தமிழ் சினிமா பாடலாகும்.  


பூமியில் மானிட ஜன்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பதி
காலமும் செல்ல மடிந்திடவோ (பூமியில்)
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே (பூமியில்)
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லை எனில் நர ஜன்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரனே”


எம்;ஜி ஆர் கூட தனது ஒரு சில பாடல்களில் புத்தரை போற்றும் விதத்தில் குறிப்பிட்டு பாடல்கள் பாடுவதனை உறுதி செய்தார். ஆனால் இன்று உலகம் வெகுவாக மாறி விட்டது. தமிழ் நாட்டில் புத்த மதம் இருந்தததா இல்லையா என்பதை கண்டுகொள்ள அங்கு பௌத்தர்கள் இல்லை , சிலப்பதிகாரமும்  மணிமேகலையும்குண்டலகேசியும் , என சில பௌத்த தமிழர்களின் படைப்புக்கள் தவிர .அவர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சான்றுகள் தவிர பௌத்த தமிழர்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது இலங்கை மீதான தமிழ் தொப்புள்கொடி உறவுகளின் எதிர்ப்பும் வெறுப்பும் சிங்கள பௌத்தர்களின் மீது மட்டுமல்ல , பௌத்த மதத்தின் மீதும் புத்தரின் மீதும் எகிறிப் பாய்ந்துள்ளது. இப்பொழுதெல்லாம் தமிழ் நாட்டில் வெளிவரும் புலி அனுசரணையுடன் வெளிவரும் "ஈழ " ஆதரவுப் பாடல்கள் யாவும் புத்தனை ஒரு கை பார்க்கிறார்கள் ! அண்மையில்  மட்டக்களப்பில்   நடந்த வெசாக் பற்றி பெட்டி இணையம் (battinews.com   பிரசுரித்த வெசாக் படங்கள் செய்திகளைப் பார்த்து பீ பீ சீ உலக சேவையில் பணியாற்றும் இலங்கைத் தமிழர் ஒருவர்  வயிற்றெரிச்சலுடன் " புத்தரின் பெருமையைப் பாடி அதன் பின் மடி  என்று பின்னூட்டம் விட்டிருந்தார். இதுவே போதும் தமிழ் நாட்டில் தமிழ் பௌத்தர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொள்வதற்கு.  சமணர்களை கழுவில் ஏற்றிய வரலாறும் உண்டல்லவோஉலக ஊடகத்தில் இப்படிப்பட்ட மத விரோதிகள் பணியாற்றினால் எப்படி ஊடக தர்மம் நிலைக்கும்!
தொடரும்


01/05/2014


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...