Saturday, 16 June 2012

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர் 
"நீ என் எலும்புகளை நொறுக்கலாம்
என் ஆத்மா வெல்லற்கரியது.
நீ என் பார்வையைப் பறிக்கலாம்
என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது "
பாலஸ்தீன 
பெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்

ஜூன் மாதம்   2ஆம் திகதி   கொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற "வேர் அறுதலின் வலி" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு  விழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட "வேர் ஆறுதலின் வலி " எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது. 

புலிகளால் வெளியேற்றப்பட்ட  வட புல முஸ்லிம்களின்  பௌதீக இழப்புக்களுக்கப்பால் அவர்களின் உயிரிழப்புக்களையும்ஊடாடி   நின்ற துயரங்களையும்  அவர்களின் உணர்வுகளைப் பாதித்த சகல வித  வாழ்வுரிமை பறிப்புக்களையும்அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடாவடித்தனங்களையும்  , அம்மக்களின் துயர நீட்சியையும் அதனோடு இழையோடும் உணர்வுகளையும் , உளக் குமுறல்களையும் பிரதிபலிக்கும் கவிதைத் தொகுதியாக "வேர் அறுதலின் வலி"  எனும் கவிதைத்தொகுதி மிகப் பொருத்தமான தலைப்புடன் அம்மக்கள் வெளியேற்றப்பட்ட இருபத்தியோராவது வருட நினைவாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.வடக்கு முஸ்லிம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட இருபத்தோராவது வருட நினைவினை உணர்வுகளை ஊடுருவும் ஒரு கவிதை நினைவாக நினைவு கூறும் வகையில் யாழ் முஸ்லிம் இணையம் நடத்திய கவிதைப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைச் சரடுதான் இந்த வேர் ஆறுதலின் வலி என்பதும், இக்கவிதைத் தொகுப்பினை கையேந்த வைக்க வேண்டும் என்பதில் கடின முயற்சியினை யாழ் முஸ்லிம் இணையத்தின் ஆசிரியர் , ஏ .ஏ .எம் அன்சிர்  மேற்கொண்டிருந்தார் என்பதும் இந்நூலின் முன்னுரைகளிலும் ஆசியுரைகளிலும் அடங்கிக் கிடக்கும் செய்தி. 
இந்நூலின் முன்னுரையை கவிஞர் வி ஐ.எஸ். ஜெயபாலன் (நோர்வே) எழுதியுள்ளார். அவரது நீண்ட முன்னுரையில்  " இன்று நினைத்துப்    பார்க்கையில் உடனடியாகவே விடுதலைப் புலிகளால் வட மாகான முஸ்லிம் மக்கள் அகதிகளாக விரட்டப்பட்ட கொடும் செயலை எதிர்த்தவர்களுள் நானும் ஒருவனாய் இருந்தேன் என்பதுவும் எனது நிலைப்பாட்டை தொடர்வதற்காக எந்தச் சிலுவையிலும் ஏறத் தயாராகவிருந்தேன் என்பது மட்டும்தான் எனக்குள்ள மன ஆறுதலாக இருக்கிறது .இது மட்டுமே தமிழனத்தின் கூட்டுக் குற்ற உணர்வு என்கிற  மனக்காயம் படாமல் என்னைக் காப்பாற்றுகிறது. " என்று தற்காப்பு செய்து கொள்கிறார். முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் கவிஞர் ஜெயபாலன் குரல் கொடுத்திருந்தமை கூட்டு குற்ற உணர்விலிருந்து அவரை விடுவிக்கிறது என்பது அவர் தன்னைப்பற்றி செய்யும்  ஒரு சுய விமர்சனமுமாகும்.
.
இக்கவிதைத் தொகுப்பு வெறுமனே வட புல முஸ்லிம் கவிஞர்களினதோ , அல்லது பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் சகோதரக் கவிதை குரலாக மட்டுமல்லாமல் , அந்த துயரத்தினை தமதாக்கிக் கொண்ட , கவிதை உணர்வூடாக வரித்துக் கொண்ட  தமிழ் முஸ்லிம் சகோதரக் கவிஞர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. நூலின் தலைப்புப் போல் , அந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கும் கவிதைகள் பலவும் மனதில் வலியை வருவிக்கின்றன. "சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களின் துயரங்களைப் பதியும் கவிதைகள் என்ற நூலின் முதற்ப் பக்க  சிறு குறிப்பு  " இரத்தினச் சுருக்கமாக இந்நூலின் உள்ளடக்கத்தை சுட்டி நிற்கிறது, அத்தோடு அதே முதற்ப் பக்கத்தில்  " விடுதலைப் புலிகளால் வட்க்கிலிருந்து  பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு சமர்ப்பணம் என்ற குறிப்பு , யாரால் (புலிகளால்)  யார் (முஸ்லிம்கள் )  வெளியேற்றப்பட்டனர் என்ற  செய்தியைக் கூறி , துயரக் கவிதைப் பதிவுகளின் வரலாற்று பின்புலத்தையும் சுட்டி காட்டி நிற்கிறது.

"
வேர் அறுதலின் வலி" கவிதைத் தொகுதியில் இலங்கையிலும் புலம் பெயர் நாடுளிலும் வாழும் பல கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. மொத்தமாக ஐம்பத்தியைந்து கவிதைகள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன , அக் கவிதைகளின் தலைப்புக்கள் கூட அடுத்தடுத்து வாசிக்கும் போது சிறு சிறு கவிதைகளாக தோன்றும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. துயரங்கள்  நிரம்பித் தளும்பும் கவிதைகளின் தலைப்புக்களைக் கோர்த்தால் போதும் , அதுவே ஒரு கவிதையாகிவிடும் என்பதை இந்த நூலின் உள்ளடக்கம் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. மறுபுறத்தில் கவிதைத் தலைப்புக்கள் பல  உணர்வுகளை  தூண்டி   கவிதைகளைத் தேடி வாசிக்கப்பன்னுகின்றன.
            

 
இந்நூலின் முதற் கவிதையாக  ஏ .எம்.எம். அலி (கிண்ணியா) எழுதிய " கறைபடிந்த வரலாற்றை கண்ணீரால் வாசிக்கும் என்ற கவிதையில் "
"கறைபடிந்த வரலாற்றைக் கண்ணீரால் வாசிக்கும்
வடபுலத்து முஸ்லிம்கள் வசந்தத்தை இழந்தவர் தாம்
இழத்தற்கு காரணமாய் இருந்தவர்கள் எல்லாரும்
இறந்தவர்கள் ஆனார்கள் இன்றவர்கள் இருந்தாலும் ... !" 
என்று முஸ்லிம்களை "தேசப் பிரஷ்டம்" செய்தவர்கள் யாரும் இன்று உயிருடனிருந்தாலும்  அவர்களும் இறந்தோரே என்று  அக்கொடிய செயலை செய்தோரை இறந்தவராக காணும் கவிஞனின் தார்மீக கோபத்தை பிரதிபலிப்பதுடன் அவரின் தர்க்க நியாயத்தை அவரின் கவிதை முழுவதிலும் தரிசிக்க முடிகிறது. 

கலாபூஷனம்  மௌலவி  எம்.எச் எம். புஹாரி (காத்தான்குடி) "என்ன குற்றம் செய்தாரோ ஏன் விரட்டப்பட்டாரோ?"  என்ற தனது கவிதை மூலம்  சுய அங்கலாய்ப்பு வினாத்தொடுத்து தனது வியாகூலத்தை மரபுக்கவிதை ஊடே  வெளிப்படுத்தி உன்னத எதிர்கால சக வாழ்வு குறித்து நம்பிக்கை தெரிவிக்கிறார். அதேவேளை வட புலத்து முஸ்லிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கர்பலா துயரக் கனதியாக்கி  ,  பாலஸ்தீன  மண்ணை இஸ்ரேலுக்கு பறிகொடுத்த  பரிதாப நிலையை  காட்சிப்படுத்தி " வடபுலத்து வக்கிரத்தில் வாழ்விழந்த சோதரர்க்காய் " எனும் அழகிய கவிதையூடே கவிஞர் கே எம். ஏ அசீஸ்(சாய்ந்தமருது ) சோகம் பிழிந்து கவிதை கண்ணீர் வடிப்பதுடன் , எதிர்கால இலங்கையை குறித்தான நேர்மறை சிந்தனையையும் விதைக்க முயல்கிறார்.  கவிஞர் கலாபூஷணன் லத்தீப் (புத்தளம் ) அகதியாய் வந்த வட மாகான முஸ்லிம் மக்களுக்கு தாங்கள் அளித்த ஆதரவை இரு பகுதியினரும் கொண்டிருந்த  பரஸ்பர நல்லுணர்வை தமது கவிதை மூலம் மீட்டிப் பார்க்கிறார்.   ..   
         

மிகவும் காட்டமாக தம்பிராஜா பரமலிங்கம் (யாழ்ப்பாணம்) பாவடிவில் வடித்துள்ள கவிதையில் அறம்பாடும்  வகையில் அமைத்தாலும்,   அமைந்துவிட்ட நிலைக்கு நியாயம் தேடுகிறார் .  

"
உறைவிடம் உணவு , உடுப்பென்னும் நாகரீகமுறும்
இறைபடை மேற்கொண்ட தமிழினமே -கறைபட
முஸ்லிம்களை வெளியேற்றி முற்றுமவர்  இழந்திடவே
பஸ்பமாக முள்ளிவயல் பாடு " மேலும் அவர்

"
புலித்தலைமை தமிழினத்து பாற்படும் புகழாரத்தை
குழிதோண்டிப் புதைத்ததோ குழி" என்று தனது கவிதையின் இறுதி வரியில் குறிப்பிடுவதும் அவரின் ஆதார நிலைப்பாட்டிற்கு சுருதி சேர்க்கிறது.  

மொத்த வரலாறு பற்றி தொடாமல் வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிம் குடும்பத்தின் கதையை - அதனோடு பின்னிபினைந்த சம்பவங்களை தனதாய் வரித்துக் கொண்டு  சம்பவ திரட்டுக் கவிதையாக (Narrative poetry படிமத்தில் மாற்றி , அதிலும் அந்த பாதிக்கப்பட்ட சமூக பிரதிநிதியாக  தன்னையே  நிலை நிறுத்தி எமது மனக்கண்களைத் திறந்து விடும் கவிதையாக யாழ்ப்பாணம் முருகேசு பகீரதனின் கவிதை குறிப்பிட்டு கூறும்படி தனித்து நிற்கிறது.
அது போலவே   முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சூழலில் நிலவிய ஜனநாயக மறுப்புச் சூழலை , அச்சம் தழுவிய தமிழ் மக்களின் இயலாமையை
" பசித்தோருக்கு   உணவு தர
பார்த்தோருக்கு
மனதுமில்லை
பாவம் என்று சொல்வதற்கும்
பயந்தருக்கு
வார்த்தையில்லை "
 
என்றும் , மேலும்
"
இஸ்லாமியர் வட திசையில்
என்ன பாவம்
செய்தனரோ..?
இன்றுவரை இக்கேள்விக்கு
எவ்வித பதிலுமில்லை "

என்று தனது "வசந்த காலம் வருமோ  வாழ்வின் நிலை மாறுமோ"என்ற இந்நூலின் இறுதிக் கவிதையில் வாழைச்சேனை மூத்ததம்பி மகாதேவனின்  கவிதை அங்கலாய்க்கிறது. கவிதை நடையிலும் ஆங்காங்கே பாடல் (lyrics) படிமங்களை கொண்டதாக இவரின் கவிதைகள் அமைந்தாலும் பொருத்தமான நூலின் இறுதிக் கவிதையாய் நூலுக்கு முத்தாய்ப்பு வைக்கிறது.  தம்மை பாதிக்கப்பட்ட வட புல முஸ்லிம் அகதியாக வரித்துக் கொண்ட இன்னுமொரு இளம் கவிஞர் மன்னார் மதனரூபன் "இலங்கைத் திரு நாட்டில் இஸ்லாமியராக பிறந்தது குற்றமா..?" எனும் தலைப்பில் கேள்வி எழுப்பியே  அன்று நிர்கதியாக்கப்பட்ட முஸ்லிம் அகதிகளின் நிலைக்காக ஏங்கித் தவித்து இன்று நேர்மறையாக வாழ்வை எதிர்கொள்ள ஆறுதல்  சொல்கிறார்.
இந்த அனுதாபமும் அடாவடித்தனத்தை கண்டிக்கும் மனப்பாங்கும் , மனவலிமையும் கொண்டு இந்நூலில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் புலம் பெயர் கவிஞர்களாக இடம் பெற்றிருப்பவர்கள்  ஜெர்மனியிலிருக்கும் வீ .சிவராஜா சின்னத்தாவத்தை சீவரத்தினம் (ஜூனியர்) ஆகியோராகும். "வேர் ஆறுதலின் வலி" என்ற தலைப்பிற்கு  தகுந்தவாறு பல கவிதைகளின் வரிகள் வேரோடு (மக்கள் ) பிடுங்கப்பட்டார்கள் என்றவாறான சொற்றொடர்களையும், இன சம்ஹாரம் , இனச் சுத்தி என்ற பதப் பிரயோகங்களும் இக்கவிதைகளில் கட்டமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.   
    
இநூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கவிதை மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்து உணரவுகளை உயிர்பித்த யாழ்ப்பான கவிஞன் " யாழ் அசீம் " எனப்படும் கவிஞனின் 'கனவுகள் உன் கையில் " என்ற கவிதை தனது மத நம்பிக்கையை . அதனோடு தொடர்புபட்ட வரலாற்று ச்மபவங்களுடன் மேற்கோள் காட்டி சொல்லப்பட்டாலும் , தமது மக்களின் சோகத்தை மீண்டும் உரசிப் பார்த்து , தமது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இறுக்கமாக எமது கண்முன்  கொண்டுவருகின்ற கவிதையை இந்நூலில் இணைத்துள்ளார்.     
"
கையென்ன ..கழுத்தென்ன
காதினில் கிடந்த
மஞ்சாடி நகை கூட
மிஞ்சாது பிடுங்கினர் "

என்று பல விரிவான சங்கதிகளை , அனுவபங்களை தனது  சுருக்கமும் இறுககமுமான கவிதை ஆளுமையினூடாக எம் கண் முன்பே மீள் உருவாக்கம் செய்து விடுகிறார்.
 
"யார் கேட்பார் யார் யாரைக் பார்ப்பார் " என்ற கவிதை ஒன்றும் இத்தொகுதியில் கவிஞரின் பெயர் குறிபபிடப்படாமலே பதிவிலிடப்பட்டுள்ளது. ஒரு வேளை இது கவிஞரின் வேண்டுதலாக இருக்கலாம் , அல்லது பதிப்புத் தவறாகவும் இருக்கலாம். ஆயினும் இக்கவிதையும் துரத்தியடிக்கப்பட்ட மக்களின் துயரத்தை பதிவு செய்வதுடன் புலிகளின் அழிவையும் ஒரு தண்டனையாக காண்கிறது . சில கவிஞர்கள் புலிகளின் அழிவை ஒரு தண்டனையாக , தமிழ் முஸ்லிம் மக்களின் மீளினக்கத்துக்கு சாதக சூழ்நிலையாக் காணும் போக்கு ஆங்காங்கே கவிதைகளில் தொனிக்கும் வகையில் கவிதை வடித்துள்ளார்கள் என்பதையும் காண்க கூடியதாகவுள்ளது. ஆயினும் இக்கவிதைத் தொகுப்பில் சில கவிதையாக்க உத்திகளும் ஆங்காங்கே சில கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன , அவ்வாறான கவிதைகளில் ஒன்று "மண்ணின் க(வி) தை " எனும் யூ . நிஷாரின் ( மாவனெல்லை) கவிதையாகும். உருவகக்  கவிதையாய் மண்ணிலிருந்து துரத்தப்பட்ட தமது மக்கள் குறித்தும் அம்மக்கள் வாழ்ந்த மண்/நிலம் கண்ணீர் விடுவதாக  , மீண்டும் அவர்களை வாழ அழைப்பதாக  காண்கிறார் . இது போலவே பாத்திமா நஷ்மா ஷாமில் (பாணந்துறை) எழுதிய "இன சம்ஹாரம்"  ஒரு உருவகக் (கதைப் ) பாணியிலான கவிதையாக அமைந்துள்ளது.  மிருகங்களை பறவைகளை கதாபாத்திரமாக்கி  வட புல  முஸ்லிம் மக்களின் துயரத்தை கவிதையாக்கியுள்ளார் அவர். எதிர்காலம் குறித்து நம்பிக்கையையும் மிக அழகாக சித்தரித்துள்ளார்.

 
எங்களை வரலாற்றிலிருந்து வெளியேற்றும் திட்டத்திற்கெதிராக வெற்றி கொண்டுள்ளோம்” - என்ற பாலதீனிய கவிஞன் மஹ்மூத் தர்வீஷின் கவிதைப் பிரகடனம் எதோ விதத்தில் இத்தொகுப்புக் கவிதைகள் சிலவற்றில் ஆதார சுருதியாக உள்பொதிந்திருக்கிறது , சில கவிதைகள் நேற்றைய துயரை சாசுவதமாக்கியிருக்கிறது. இன்னும் சில கவிதைகள் மீண்டும் துடித்தெழும் மனித இயக்கத்தின் அசைவியலுக்கு அழைப்புவிடுத்து நிற்கிறது. கவிதாயினிகள் சிலரின் காத்திரமான கவிதைகள் இந்நூல் தொகுப்பிற்கு அணி சேர்க்கிறது. பல இளம் கவிஞர்களின் கவிதைகள் சில சிலாகித்து சொல்லும்படியான கவிதைகளாக இல்லை என்பதும் , ஆயினும் இந்நூலின் கருப்பொருள் அவர்களின் கவிதை படைக்கும் ஆற்றலுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது , அவர்களும் , கவிதை எழுதும் உணர்வுகளுடனும் சொற்களுடனும்  , ஒரு வரலாற்று சோகத்தை வளம்படுத்த முயன்றிருக்கிறார்கள். கவிதைகளில் பரவலாக காணப்படும் இன்னுமொரு அம்சம் , அன்றைய அராபிய சூழ்நிலையை இஸ்லாமிய ஆரம்பகால ஹிஜ்ரத் அனுபவங்களை ஒப்பீடு செய்கின்றதான தன்மை கொண்ட கவிதைகள். இது குறித்த ஒரு ஆழமான பார்வையையும் விவாதத்தையும்   தேவைப்படுத்துகிறது. தமது மத நம்பிக்கையின் பாற்பட்ட வரலாற்றை தமது கவிதைகளுக்கு துணைக்கழைக்கும் போது கவிஞர்கள் உணர்வு வயப்பட்டவர்கள் என்பதை இவ்வாறான ஒப்பீடுகள் மூலம் சகஜமாக காணக் கூடியதாகவுள்ளது.

ஆனால் மொத்தத்தில் ஆற்றல் மிகு கவிஞர்கள் பலரின் மன வலியுடனான படைப்பு வாசிப்போரின் நெஞ்சில் நிச்சயம் பிரதிபலிக்கும் அவர்களின் நினைவுகளையும் சூழ்ந்து கொள்ளும் எனபது எனது நம்பிக்கை. இந்தக் கவிஞர்களுள் பலர் வட புலத்தை சேர்ந்தவர்கள் அல்ல ஆயினும் அவர்கள் எல்லோரும் பார்வையாளராக அல்லாது பாதிக்கப்பட்ட ஏதிலிகளாக அந்த துயரச் சிலுவைகளை சுமந்தவர்களாக தங்களை வருத்தியே எம்முன் கவிதை குரலில் பேச விழைகிறார்கள் என்பது இந்நூலின் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.    

முன் அட்டையில் நிலவிருட்டில் பனைமரம் இருண்ட பின்னணியில் நிற்பது பாஞ்சாலி துகிலுரியப்பட்ட போது பாரதி சொன்ன "நெட்டைநெடு மரங்களென நின்றனர்" என்பதையும் எனக்கு ஞாபகப் படுத்தியது. வெளியேற்றப்பட்ட -வெளியேறிச் செல்லும்- வட புல முஸ்லிம்களின் துயர நிலையையும் இரவின் இருளாய் இருண்ட வாழ்வின் பயணமாய் அமைந்த வரலாற்றுச் சோகத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. பின் அட்டைப்படத்தில் கவிஞர் அல்லாமா இக்பாலின் கவிதை வரிகளும் , அந்த நூலின் அட்டைப்பட நிறமும் இயல்பாகவே பார்வையை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.

 http://www.jaffnamuslim.com/2012/06/blog-post_7004.html

1 comment:

  1. Its not my first time to go to see this website, i am visiting
    this website dailly and obtain good information from here everyday.

    ReplyDelete

Twitter and Facebook censor New York Post report on Hunter Biden- By Kevin Reed

  Kevin Reed 16 October 2020 Social media censorship prior to the 2020 US presidential elections reached new heights on Wednesday, when both...