நல்லதும் புதிதுமான பார்வையும் பாதையும் -எஸ்.எம்.எம்.பஷீர்


                                                                                            


( முருகேசு ரவீந்திரனின் "வாழ்க்கைப் பயணம்" சிறுகதைத் தொகுப்பு = ஒரு விமர்சனப் பார்வை )


எஸ்.எம்.எம்.பஷீர்

நாங்கள் எங்களின்  வழக்கமான பாதைகளிலிருந்து தூக்கி எறியப் பட்டவுடன்  , எல்லாம் முடிந்துவிட்டது என்று  நினைக்கிறோம் , ஆனால் இங்குதான் புதிதும் நல்லதும் ஆரம்பிக்கிறது.  “
                                                         லியோ டால்ஸ்டாய்
(Once we’re thrown off our habitual paths, we think all is lost, but it’s only here that the new and the good begins.  -Leo Tolstoy)

இப்போதெல்லாம்இலங்கையில் இலக்கிய நிகழ்வுகள் , நாவல்கள்  சிறுகதை , கவிதைத் தொகுப்பு வெளியீடுகள் என்று நாடு களைகட்டியுள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கோலாகலமாக   2011 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்று முடிந்த பின்னர் பாரதி விழாவும்  உலகத் தமிழ் இலக்கிய விழாவும் இணைந்தே 2012 ல் நடந்து முடிந்துள்ளது. எங்கு பார்த்தாலும் புத்தக வெளியீடுகள் இலக்கிய நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழல் இலக்கிய ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. 




 படம்: ஜி டி. கேதாரநாதன், முருகேசு ரவீந்திரன் , கட்டுரையாளர்   

அண்மையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்துகொண்டபோது திரு ரவீந்திரனையும் அவரின் வாழ்க்கைப் பயணம் சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கிய ஜி ரீ கேதாரனாதனையும் ஒரு சேர சந்திக்க நேரிட்டது. அவ்விருவர்களினுடனான  படைப்பிலக்கியம்  , அரசியல் பற்றிய கருத்துப்பகிர்வு என்னை இச் சிறுகதைத் தொகுப்பினையும் வாசிக்கத் தூண்டியது. இக் கதைகள் பற்றி எனது விமர்சனத்தை எழுதுமாறும் அவர்கள் என்னை அன்புடன் வேண்டிக் கொண்டனர்
நாளாந்த வாழ்வில் நாம் காணும் சாமான்ய மனுஷர்களின் வாழ்க்கையோடு அமைந்ததான பண்பியல்புகளை ;  தான் வாழ்ந்த பிரதேச சமூக பொருளாதார , சமய , சூழலுக்குள்  நின்று ; எடைபோடுகின்ற போக்கினை இக்கதைகளில் காணலாம் .  பொதுவாக  படைப்பிலக்கியவாதிகளிடம் காணப்படும் பிரச்சாரம் , உன்னத வாழ்க்கையை ஆகர்சிக்கும் கருத்து வெளிப்பாடு என்பன ஏதுமற்று  ஒரு நடுநிலை பார்வையாளனாக நின்று தான் தரிசித்த அல்லது அவ்வாறான தரிசனத்தினூடாக சிருஷ்டிக்க முடிந்த கற்பனை மாந்தர்களை , உயிரோட்டத்துடன் நம்முன் கொண்டுவர முயன்றுள்ளார்.  தன்னையொத்த ஒரு சாமான்ய நடுத்தர மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பிரதான சம்பவங்களையே, தனது கதைப்புலனாக கொண்டுள்ளார்.  விடலைப்பருவம்,   கல்வி.  இளமை. காதல் , உத்தியோகம் , திருமணம் , முதுமை என  வாழ்வின் சுழற்சிக்குள் தனது கதைகளின் பகைப்புலனை  கட்சிதமாக கட்டமைத்துக் கொண்டு  கதா பாத்திரங்களைச் சிருஷ்டித்துள்ளார். கதையை வாசித்து முடித்தபின்னர் சில கதாபாத்திரங்கள் எங்களுக்கு மிகப் பரிச்சயமானவர்களாகி விடுகிறார்கள். எங்களின் நினைவுகளில் இடம்பிடித்து விடுகிறார்கள் உதாரணத்துக்கு இந்த உணர்வு எனக்கு ஜெயகாந்தன் , வல்லிக்கண்ணனை வாசித்தபோது ஏற்பட்டிருக்கிறது. மிகமிக நீண்ட இடைவெளியின் பின்னர் நல்லதொரு சிறுகதைத் தொகுதியினை வாசிக்க கிடைத்தமை மனதுக்கு சந்தோசமளிக்கிறது.  

இரண்டு தசாப்தங்களாக ரவீந்திரன் கட்டுரைகள் சிறுகதைகள் என எழுதியிருப்பினும் இத்தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் பல கடந்த ஓரிரு ஆண்டுகளில் இலங்கையில் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் எழுதிய கதைகளாக உள்ளன. இலங்கையின் பிரபல தினசரிகளில் பிரசுரமான தனது கதைகளில் பன்னிரண்டு கதைகளை தேர்ந்து இவர் தொகுப்பாக்கியுள்ளார். நீண்ட காலம் கொழும்பில் வாழ்ந்த தனது அனுபவங்களையும் ; , தனது பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் திரும்பி மீண்டும் வாழும் புறச் சூழல்களில்  ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கருத்தியல்களுக்கு அப்பால் நின்று யுத்தத்தின் பின்னரான மக்களின் நாளாந்த வாழ்வியல் கூற்றின் அம்சங்களை அழகிய சிறுகதைகளாக ஆக்கித்  தந்துள்ளார். கதை நிகழ்சிக் கூறுகளை அபரிதமாக விவரிக்காமல் , பாத்திரங்கள் அதீத உணர்ச்சி விளைவினை தோற்றுவிக்கச் செய்யாமல் வாசகர் மனதில் பதியும் வண்ணம் மிக கவனமாக கதையோட்டத்தை , கதை மாந்தர்களை வார்ப்புச் செய்துள்ளார்.     

இவரின் இச் சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் போது கதைசொல்லிக்கும் வாசகனுக்குமிடையே ஓர் மெலிதான பரிச்சயம் ஏற்பட்டுவிடும் வகையில் வாசகனை தனது கதைகளுடன் நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். தன காணும் மாந்தரின் சமூக பொதுமைப்பாட்டு  அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு , அவர்களின் போலித்தனங்களையும் அடையாளப்படுத்தி , அவற்றின் குறியீடுகளாகவே தனது கதாபாத்திரங்களை அமைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் என்று கூறலாம். ஆயினும் தனது ஆழ்ந்த வாசிப்பின் மதிப்பீடுகளை ஆங்காங்கே மெலிதானதாக சில கதைகளில் சொல்ல வருவது பிரச்சாரத்தன்மையாக விமர்சர்களால் கண்டு கொள்ளப்படலாம் . 
ஆணாதிக்க சிந்தனை  மேவிய குடும்ப உறவு , ஜி. கிருஷ்ணமூர்த்தி பற்றிய  இவரின் வாசிப்பு , பாரதியின் உயிர்கள்  மீதான வாஞ்சையை தானும் வரித்துக் கொண்டு நிஜ உலகில் தேடும் அங்கலாய்ப்பு , .மு.பொன்னம்பலத்தின் கவிதை என பல , அவரின் வாழ்க்கை பற்றிய சொந்த மதிப்பீட்டுக் கருத்தியல்களை சுமந்ததாக கதாபாத்திரங்கள் பேசுவதும் , எதார்த்தத்துக்கும் , உன்னத தன்மைக்குமிடையிலான ஒரு பிரிவுக்கொட்டின் மீதான வாழ்க்கைப் பயணம் பற்றிய தீர்க்கமான முடிவினை எதார்த்த முடிவுகளை கைக்கொள்ளும் நடைமுறை மனிதர்களை நம்முன் அடையாள படுத்துகிறார். மு.வ வின் பல சிறு கதைகளில்  , நாவல்களில் காணப்படும் உன்னத மனிதர்கள் உன்னத உலகு பற்றிய சிந்தனைகள் போற்றுதல்குரியவையாயினும் சிறுகதை , நாவல் உலகில் சாகாவரம் பெறுவதில்லை . அந்த வகையில் இளம் படைப்பாளியான ரவீந்திரன் தனது தோளுக்கு மேல் எதார்த்த உலகை தனது உன்னத உலகு பற்றிய அகவய சிந்தையுடன் பார்க்கும் திறன் கொண்டவராக உள்ளார் , அவ்வாறான பார்வையினூடாக ஒரு அனுபமிக்க படைப்பாளியின் திறனை கண்டுகொள்ள முடிகிறது என்பது எனது அபிப்பிராயமாகும் .கதாசிரியர் மனித இருத்தலின் இயங்கு தளத்தை அடையாளம்  காண முயன்றிருக்கிறார் , அந்த முயற்சியில் அவரின் சிறுகதை இலக்கியப் படைப்பாற்றல் அவரின் அடையாளத்தை ஆக்க இலக்கியப்பரப்பில் உறுதி செய்யும் என்பது மிகைக் கூற்றல்ல. .

இத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் எல்லாமே சிறப்பானதாக அமைந்திருந்தாலும் சில கதைகள் வாசகர்களின் தர வேறுபாடுகளை மீறி சகல் தரப்பு வாசகனையும் கட்டிப்போடும் கதைககளை.  கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக
சின்ன அரும்பு எனும் கதை மூலம் ஒரு சிறிய மத்திய தர குடும்பத்தினரின் குழந்தை ஒன்று இன்றைய நவீன பாடசாலைக் கல்விச் சூழலில் பாடசாலை கனனிக் கல்விக்கு காசில்லாமல் , தண்டிக்கப்படுவதும; , கலைவிழாவுக்கு காசில்லாததால் கலந்து கொள்ளாமல் போவதும் ;  என்ற ஒரு சராசரி நடைமுறை குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினையை சுற்றி எழுப்பியுள்ள உணர்வுக் கொப்பளிப்புக்கள் உள்ளத்தை நெருடுகின்றன .
கன்னங்கரா இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார். அதனால்த்தான் ஏழைகளான அப்புஹாமி ஐயாத்துரை அஸ்லம்   போன்றவர்களின் பிள்ளைகள் பெரிய  படிப்பு படிக்க முடிஞ்சது, அதனாலதான் அவர் மக்களின்ர மனங்கலில இன்றைக்கும் நிறைஞ்சிருக்கிறார் போன்ற கருத்து வார்ப்புகளும்  பிரபஞ்சனின் பாடசாலைகள் பற்றிய கருத்துக்களும் இக்கதையின் பிரச்சாரப் பகுதியாகவன்றி , இக்கதைக்கு மெருகூட்டும்  பாணியில் இயல்பாகவே சொல்லப்பட்டிருப்பதும் இங்கு கவனிக்கப் படவேண்டியதே.

இக்கதைகளில் சில நம்முடைய கதையும்தான் இது என்ற பிரதிபலிப்பினை மத்திய தர வர்க்க வாசகர்கள் பலருக்கு ஏற்படுத்தலாம். ஆயினும் இக்கதையில் ஆசிரியர் -பெற்றோர் -குழந்தைகள் , அன்னியமாகிப்போகும் , அரவணைக்கும் உறவுகள் பற்றிய படிமங்களை மனதில் கொண்டு மெல்லிதான ஒரு பிரச்சார  இழைப்பினூடே   , பிரச்சார நெடியில்லாமல்  கதைசொல்லி மிகக் கவனமாக தனது கதையோட்டத்தை  உணர்வினை ஊடறுக்கும் வகையில் இறுக்கமாக கொண்டு செல்கிறார்.
"இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு வேலை நிமித்தம் கொழும்பு வந்தேன் .ஆனால் எனது நினைவுகள் எப்போதும் யாழ்ப்பாணம் பற்றியதாகவே இருக்கிறது. உலகில் வேறந்தப் பிரதேசமும்  அதற்கு இணையாக மாட்டாது" என்ற தனது முகவுரையில் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் ரவீந்திரனின் மனப்பாங்கினை கதை மாந்தர்கள் சிலரும் பிரதிபலிக்கிறார்கள். , அவ்வாறே  அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் ஊடே அவதானித்தை , அனுபவித்ததை தனது கற்பனையை இழைத்தே இக்கதைகளில் சிலவற்றை பின்னியுள்ளார் எனபதையும் ஒரு விமர்சகன்  என்ற வகையில் என்னால் கண்டு கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக "பிறந்த மண்"  " மறக்க முடியேல்லை "  "பாசம்" போன்ற கதைகளை கூறலாம்.  மண்மீதான அவரின் பிடிப்பு பற்றியதான கருத்துக்களை வெளிப்படுத்தும் பாத்திரங்களாக சிலர் படைக்கப்பட்டுள்ளனர் .
கனடாவில் வாழும் மகளுடன் சென்று வாழாது புதிய உறவுகளை தேடி பரஸ்பரம்  உதவி ஒத்தாசையுடன் வாழும் வயோதிபர் வேதநாயகம்  மலர் குடும்பத்தினர் : , கனடாவுக்கு முழுக் குடும்பமும் போகும் போது யாழ்ப்பாணத்திலே  தனித்தே வாழ விரும்பும் குமார் ;’  சைக்கிள் கடை திருத்துனர் தம்பு போன்ற பாத்திரங்கள்  அதற்கு சான்றாக அமைகின்றன . தனது நூல் தொகுப்பின் தலைப்பாய் அமைந்த கதையான வாழ்க்கைப் பயணம் சிறுகதை இந்நூலின் ஒன்பதாவது கதையாக  இடம் பெறிருக்கிறது , இக்கதையே நூலின் தலைப்பாக அமைந்ததன்  முக்கியத்துவத்தை கண்டு கொள்ள முடிகிறது. உளவியற் சிக்கலான தாழ்வுச் சிக்கலுடன்  தவிக்கும்  இளைஞன்   ஒருவனுக்கு "தாழ்ந்த சாதிப் பெண் " சுமதி அளிக்கும் ஆதரவுடன் மன உறுதியும் , சுய மதிப்பீடும் தான் வழிபடும் தெய்வத்தின் அனுக்கிரகமும் கிடைத்ததாக  சித்தரித்துள்ள கதை  ரவீந்திரனின் சாதி சார்ந்த சிந்தனைகளை , எதிபார்க்கும்  உள்ளக (குடும்ப) மாற்றங்களை   மிக இறுக்கமாக , ஆர்ப்பாட்டமில்லாமல்  நாசூக்காக சொல்லும் கதையாகும்.  ஆனால் " அந்த தாழ்ந்த சாதிப் பெட்டையோடு பயணிக்க இவன் தயாராகி விட்டான்" என்று குறிப்பிடுவதன் மூலம் ரவீந்திரன் சாதீய கெடுபிடி கொண்ட "உயர்"  சமூகத்தின் பாஷையில் சொல்லாமல் , அந்த சொல்லைத் தவிர்த்து அவளை நேசிக்கும் இளைஞனின் புரிதலுடனான மொழியில் சொல்லியிருக்கலாம் என்பது எனது திண்ணமான கருத்து


முக நூல் பயன்பாடு பற்றிய பல சாதக பாதக விவாதங்களுக்கு அப்பால் , முக நூல் மூலம் தனது இளமைக்கால நண்பர்களை மீண்டும் கண்டு கொண்டதையும் , அதனடிப்படையில் ரவீந்திரன் தனது சிறுகதைத் தொகுப்பின் இறுதிக் கதையான "இதம்"  கதையினை அமைத்திருக்கிறார். தனது பாடசாலை விடலைப்பருவ நண்பர்களை மீண்டும் இளைஞர்களாக சந்தித்து தமது இளமைக்கால நினைவுகளை மீட்டிக் கொள்ளும் சிறுகதை  முக நூல் பற்றி குறிப்பிட்டே பேசுகிறது.இவரின்
இக்கதைத் தொகுதியில் குறிப்பாக , வடபகுதியிலிருந்து   மேற்கு நாடுகளுக்கு  புலம்பெயரும் மக்களின் வாழ்நிலை சூழலில் ஏற்படும் நெருக்குவாரங்கள் சவுகரியங்கள்  , அவை  மனித உறவுகளில் சிந்தனைகளில் ஏற்படுத்தும்   மாற்றங்கள் பற்றி "தயக்கம் " கதை சித்தரிக்கிறது
இக்கதைகள் யாழ்ப்பாண மண்வாசனை கனதியுடன் ஆக்கப்பட்டிருப்பினும் , கொழும்பு வாழ்க்கை பற்றியும்  , யுத்தம் பற்றியும் யுத்தத்திற்கு பிற்பட்ட சூழல் பற்றியும்  ஒரு தனி மனித அனுபவங்களை , அவனின் மனோவோட்டங்களை, ஆசைகளை ஏக்கங்களை , எதிர்பார்ப்புகளை படம்பிடித்து  கட்டுகின்றதான பகைபுலனை மையமாகக் கொண்டு பின்னபபட்டுள்ளன . அண்மைக்காலத்தில் அரசியல் பிரச்சார நெடி வீசும் இலக்கியத்தினூடே  கருத்துக்களை வார்க்கின்றதான எழுத்துக்களையே படைபிலக்கியங்கள் என்று பல்கலைக் கழக ஆசான்கள் பட்டியல் போடுகின்ற காலத்திலும்  யுத்தத்தினால் சிதைந்து போன வடக்கிலிருந்து புதிதாக படைக்கப்பட்ட  சராசரி வாழும் மனிதர்களின் வாழ்க்கை கதையிது. இது புனை கதைதான்  என்றாலும் , கதையில் காட்சிப்படுத்தப்படும் சம்பவங்களும் , பாத்திரங்களும் , கதை சொல்லியின் இறுக்கமும் இலாவகமான மொழியாட்சியும்  யுத்த அவலங்கள் தொட்டுச் சென்ற நினைவுகளுக்கப்பால் வாழும் சாதாரண மனிதர்களை நிமிர்ந்து பார்க்கச் சொல்கிறது. இதுவே இக்கதாசிரியரை யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சிறுகதை இலக்கியப் படைப்பாளிகள் பலரிலிருந்தும் வேறுபடுத்தி பார்க்க வைக்கிறது . இந்த வகையில்தான் பிரபல இரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாயின் கருத்தினை நினைவு கூரச் செய்கிறது.  

மொத்தத்தில் இக்கதைத் தொகுதி இன்றைய நவீன சிறுகதை இலக்கிய படைப்புகளில் ஒரு இடத்தை நிச்சயம் பெறும் எனபது எனது நம்பிக்கை. முதற்தர ஒளிபரப்பாளரான மு. ரவீந்திரன் சிறுகதை இலக்கிய பரப்பில் ஒரு முதற்தர சிறுகதை எழுத்தாராக தன்னை நிலை நிறுத்திக்  கொள்வார்  என்பதற்கான வீச்சினை அவர் வெளிப்படுத்தி நிற்கிறார் .(23 June 2012)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...