இலங்கையில் எட்டாவது அதிசயம் நிகழுமா?

 

 

லகில் மனிதர்களைப் பிரமிக்க வைக்கும் எட்டு அதிசயங்கள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டு வந்திருக்கிறோம் அவற்றில் சில மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதையும் நாம் அறிவோம். எனவே மனிதர்கள் நினைத்தால் எந்தவொரு அரும் பெரும் சாதனைகளையும் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகிறது.

அவ்வாறான ஒரு முயற்சி தற்பொழுது இலங்கையில் ஆரம்பமாகி இருக்கிறது. அது நிறைவேறினால், உலகின் எட்டாவது அதிசயமாகக்கூட அது திகழலாம். அது வேறொன்றுமல்ல, இலங்கையில் சுமார் ஒரு நூற்றாண்டாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சி.

திருவாளர் (ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டின் நீண்டகாலப் பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுகண்டு, தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாகக் ‘கங்கணம்’ கட்டியிருக்கிறது.

இதன் பொருட்டு நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் கூட்டியிருக்கிறது. வழமைபோல, ஜே.வி.பி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இல்லையாயினும், ஏனைய பெரும்பாலான கட்சிகள் கலந்து கொண்டு ஜனாதிபதியின் முயற்சிக்குத் தமது ஆதரவை (ஓரளவு தன்னும்) தெரிவித்துள்ளன.

‘சோசலிஸம்’ பேசும் ஜே.வி.பி. கலந்து கொள்ளாததிற்குக்காரணம் அவர்களது வழமையான சிங்களப் பேரினவாத நிலைப்hடாகும். குட்டி முதலாளித்துவ இடதுசாரித்துவம் பேசும் அவர்கள் இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என அடிக்கடி கூறுவார்கள். ஆனால் பதவியில் இருக்கும் ஏதாவதொரு அரசு சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் தன்னும் அந்த வழியில் ஏதாவது நடவடிக்கைகள் எடுத்தால் அவர்கள் தமது குட்டி முதலாளித்துவத்துக்கு உரிய தன்மையில் சந்தர்ப்பவாத ரீதியில் அதைக் குழப்பி அடிப்பார்கள். 2000 ஆம் ஆண்டில் சந்திரிக கொண்டுவந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) சேர்ந்து குழப்பியடித்தமை இதற்கொரு உதாரணம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையிலும் கூட, அவர் சொல்வது போல இனப் பிரச்சினைக்கு ஒரு உரிய தீர்வை அல்லது குறைந்தபட்ச தீர்வைத்தன்னும் காண்பாரா என்ற சந்தேகம் பலர் மத்தியில் இருக்கிறது. இப்படியான சந்தேகம் எழுவதற்கு அவரதும், அவரது ஐ.தே.கவின் கடந்தகால வரலாறும் காரணம்.

ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவின் நீண்டகால உறுப்பினர். இன்று எவராலும் அசைக்க முடியாத அதன் தலைவராகவும் இருக்கிறார். அது மட்டுமின்றி ரணில், அக்கட்சியில் முன்பு தலைவராக இருந்தவரும், இலங்கையில் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருந்து (1977 – 1990) பலராலும் வெறுக்கப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டு வந்தவரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈடாட்டமில்லாத விசுவாசியும், சிங்களப் பேரினவாதியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சகோதரி வழி மருமகனும் ஆவார். இது அவருக்கு மிகப்பெரிய பாரம்பரிய பிதுரார்ஜிதச் சொத்தாகும்.

ரணில் விக்கிரமசிங்க, தனது மாமனார் ஜே.ஆரின் அமைச்சரவையிலும், பின்னர் ஆர்.பிரேமதாசவின் அமைச்சரவையிலும் முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்தவர். 2002 இலும், 2015 இலும் பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர்.
தற்பொழுது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவியையும் வகிக்கிறார். சரியோ, பிழையோ இலங்கையிலுள்ள மிகுந்த அனுபவமுள்ள அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். ஆனால் அவரது ஐ.தே.கட்சியினதும் அவரதும் கடந்தகால இனவாத வரலாறு, அவரை ஒரு புதிய மனிதராக, இனவாதமற்ற உண்மையான தேசியத் தலைவராக, செயல்பட அனுமதிக்குமா என்ற கேள்வி நியாயமாகச் சிந்திக்கும் அனைவருக்கும் இருக்கிறது.

ஏனெனில், ரணிலின் மாமனார் ஜே.ஆர். தான் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் பிரித்தானியர் ஆட்சி செய்த காலத்திலேயே அன்றிருந்த இலங்கை சட்டசபையில் ‘தனிச்சிங்கள’ மசோதா ஒன்றை முதன்முதலாகக் கொண்டு வந்து அந்தக் கருத்தின் பிதாமகனாக விளங்கியவர். பின்னர் 1956 தேர்தலில் வெற்றிபெற்று எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க பிரதமராகி, தனது தேர்தல் வாக்குறுதிப் பிரகாரம் ‘தனிச் சிங்கள’ச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது ஐ.தே.கவும் அதை ஆதரித்து வாக்களித்தது. மொழிப் பிரச்சினையில் மட்டும் ஐ.தே.க. சிங்களப் பேரினவாத நிலைப்பாட்டைப் பின்பற்றியது என்றில்லை.

1948 பெப்ருவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்று முதலாவது சுதந்திர அரசாங்கம் அன்றைய ஐ.தே.க. தலைவர் டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் பதவி ஏற்றது. அப்படிப் பதவி ஏற்ற அவரது அரசாங்கம்தான் ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்பது போல, இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்களின் பிராஜாவுரிமையைத் திட்டமிட்டுப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. அது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்ததும் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கமே. டி.எஸ்.சின் சிங்களப் பேரினவாதக் கொள்கைகளையே பின்னர் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கங்களும் பின்பற்றின. (ஜே.ஆர். 1977 இல் முதன் முதலாக நாட்டின் தலைவரான போது, ‘டி.எஸ்.சேனநாயக்கவின் கொள்கையே எனது கொள்கை’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர்) இனப் பிரச்சினையைத் தீர்க்க காலத்துக்குக் காலம் எடுத்த நடவடிக்கைகளையும் குழப்பிய பெருமையும் ஐ.தே.கவையே சாரும்.

அந்த வகையில் பார்த்தால், 1957 இல் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்த பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையையும், 2000 ஆம் ஆண்டில் சந்திரிக அரசாங்கம் கொண்டு வந்த நல்லதொரு (சமஸ்டிக்கு ஒப்பான) தீர்வுத் திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல் இனவாதத்தைத் தூண்டிக் குழப்பியது ஐ.தே.கட்சியே. அது மட்டுமல்லாமல் ஐ.தே.க. கட்சி இனப் பிரச்சினைத் தீர்வுக்கென தானே 1965 இல் முன்வைத்த மாவட்ட சபை முறையையும், 1977 இல் முன்வைத்த மாவட்ட அபிவிருத்தி சபை முறையையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி நடந்து கொண்ட வரலாறும் ஐ.தே.கவுக்கு உண்டு. அதுவுமல்லாமல், 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தன உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை இடை நிறுத்தி, காலில் போட்டு மிதித்த பெருமையும் ஐ.தே.க. ஜனாதிபதி பிரேமதாசவையே (சஜித் பிரேமதாசவின் அப்பா) சாரும்.

அது மட்டுமின்றி, 2015 இல் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் அமைந்த அரசாங்கத்தின் பிரதமராக இருந்த இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குக் கொடுத்து ஏமாற்றியது மட்டுமல்ல, தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க்கூட எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

ஐ.தே.க. இனப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் குழப்பிய வரலாற்றை மட்டும் கொண்டிருக்கவில்லை. அந்தக் கட்சிக்கு இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கெதிராக இன வன்செயல்களை நடத்திய ஒரு வரலாறும் உண்டு என்பது மறக்கப்பட முடியாதது.

தமிழ் மக்களுக்கெதிராக 1958 இல் நடத்தப்பட்ட முதல் இன வன்செயல், ஐ.தே.க. ஆட்சியின் போது 1977 இல் நடத்தப்பட்ட இன வன்செயல், 1981 இல் நடத்தப்பட்ட (பெரும்பாலும் மலையகப் பகுதிகளில்) இன வன்செயல், இலங்கையின் வரலாற்றிலேயே 1983 இல் நடத்தப்பட்ட மிக மிக மோசமான இன வன்செயல் என்பனவற்றுக்கு ஐ.தே.க. நேரடியாகப் பங்காற்றியுள்ளது அல்லது பின்னணியில் இருந்துள்ளது. (1983 இல் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட இன சங்காரத்தின் போது, அன்றைய ஜே.ஆர். தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் தமிழ் மக்களுக்கெதிரான தாக்குதல்களுக்காக ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுத்த போது, கொழும்பு மாவட்டத்து இன வன்செயல்களை நடத்தும் பொறுப்பை ரணிலிடம் கொடுத்ததாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன)

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளாலும், அவை பின்னின்று நடத்திய ‘அரகலய’ போராட்டத்தாலும், சட்டபூர்வமாக மக்கiளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தைக் கவிழ்த்து, பின் கதவால் ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்க, தற்பொழுது இனப் பிரச்சினைத் தீர்வைக் கையில் எடுத்துள்ளார். இந்த முயற்சிக்கும் நிச்சயமாகச் சில உள்நாட்டு – வெளிநாட்டுக் பின்னணிக் காரணிகள் உண்டு. அதைப் பற்றி ஆராய்வதை இப்போதைக்கு ஒரு பக்கம் வைத்து விடுவோம்.

இந்தச் சூழ்நிலையில், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், ஒரு நூற்றாண்டுகால இனப் பிரச்சினையை ரணில் ஒன்றரை மாதங்களில் தீர்த்து வைக்க – அதாவது 2023 பெப்ருவரி 4 இல் நடைபெறவுள்ள இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் – எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெறுமா அல்லது வழமைபோலத் தோல்வியடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ற போதிலும், அவரது முயற்சிக்கு இன்றைய சூழலில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமானதாகும்.

இன்றைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்கு முன்னொருபோதும் இல்லாத சில அனுகூலமான நிலைமைகளும் காணப்படுகின்றன. அவையாவன:

ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்தாலும், அவரது பதவி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவிலேயே தங்கியிருக்கிறது. அதன் தலைவர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும், ரணில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக எடுத்து வருகின்ற முயற்சிகளை பகிரங்கமாக வரவேற்றுள்ளனர். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

அடுத்ததாக, வழமையாக இலங்கையில் ஆட்சியில் இருக்கின்ற கட்சி இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஏதாவதொரு முயற்சியில் ஈடுபட்டால், அதை எதிர்க்கட்சி அரசியல் ஆதாயம் கருதிக் குழப்புகின்ற ஒரு நிலைமை இருந்து வந்தது. ஆனால் சஜித் பிரேமதாச தலைமையிலான இன்றைய எதிர்க்கட்சி அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருப்பதாகத் தோன்றவில்லை.

அதற்கடுத்தாக, தமிழ் தலைமைகளைப் பொறுத்தவரையில் தமிழ் இனவாதத்தையே அவர்களது அரசியல் மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வருவதால், கடந்த காலங்களில் இனப் பிரச்சினை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளை சிங்களப் பேரினவாத சக்திகள் குழப்பிய போது, தமிழ்த் தலைமைகளும் அதற்குத் தமது பங்களிப்பை வழங்கி வந்தன. இனப் பிரச்சினை தீராமல் போன பிரதான காரணிகளில் அதுவும் ஒன்று. ஆனால்,இன்றைய தலைமை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதானமாக தமிழரசுக் கட்சி) இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதைக் காண முடிகிறது.

அது தவிர, நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் 30 வருடப் போரினால் களைப்பும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்து விட்டதாலும், தமது பட்டறிவின் மூலம் நியாயத்தை ஓரளவு உணர்ந்துள்ளதாலும், அரசாங்கம் எடுக்கும் இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சியை எதிர்க்கும் நிலைமை இன்று இல்லை. (இனவாத ஜே.வி.பி. மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து பலம் குன்றி இருப்பதால் அதனால் பெரிய அளவில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்ட முடியாது)

எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் இனப் பிரச்சினை உருவானதிற்கும், வளர்ந்ததிற்கும், அது யுத்தமாக மாறியதற்கும், ஏகாதிபத்திய சார்பு மேற்கு நாடுகளுக்கும், பிராந்திய வல்லரசான (விஸ்தரிப்புவாத) இந்தியாவுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தற்பொழுது அந்த சக்திகளுக்குப் பிடித்தமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவி வகிப்பதாலும், அவரது அரசாங்கம் ஏகாதிபத்திய சார்பு, இந்திய சார்பு கொள்கைகளைப் பின்பற்றுவதாலும், தற்போதைய அரசின் இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சியைக் அவர்கள் குழப்பும் ஏது நிலை எதுவும் இல்லை எனலாம்.

எனவே, ரணில் இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக (பெரும்பாலும் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளை முழுமையாக செயற்பட வைக்கும்) எடுக்கும் முயற்சிகளுக்கு வாய்ப்பான ஒரு சூழ்நிலையே காணப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தையும் தவற விட்டால், நாட்டிற்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்கப் போவதில்லை.

 source: vaanavil 144 December  2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...