சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

 


சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார்.

1936 ஒக்டோபர் 01ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு புளியந்தீவு, சிங்களவாடி பிரதேசத்தில் பிறந்த கைலாயர் செல்லநைனார் சிவகுமாரன், கொழும்பு நகரில் நீண்டகாலம் வாழ்ந்து வந்த நிலையில் இவர் 15.09.2022 அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

மரணிக்கும் போது அவருக்கு 85 வயதாகும்.

இவரது பெற்றோர் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர், மாலைதீவிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பில் தனது பணியை முன்னெடுத்து வந்துள்ளார்.

இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கிய இவர், 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழிகளிலும் எழுதி வந்த அவர், ரேவதி என்ற புனைபெயரிலும் திரைப்படம் சம்பந்தமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் இவர் எழுதி வந்துள்ளார்.

1959 இல் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஜீவநதி சஞ்சிகை கே. எஸ். சிவகுமாரனுடைய பவள விழாச் சிறப்பிதழாக ஓர் இதழை வெளியிட்டுள்ளது.

சிரேஷ்ட தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பன்னூலாசிரியரும் , வானொலி அறிவிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமென பல்வேறு முகங்களைக் கொண்ட கே.எஸ். சிவகுமாரன், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லிநியூஸ் பத்திரிகையில் கடமையாற்றியதோடு, தினகரன், வாரமஞ்சரி, சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைகளில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வந்தார்.

கொழும்பு 10 புனித ஜோசப் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்த அவர், பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.

சாகித்திய ரத்னா விருது பெற்ற இவர் ஒரு ஆங்கில ஆசிரியருமாவார்.

சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கிய விமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியவர். ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார்.

Thamil Writing in Srilanka, Aspects of Culture in Srilanka ஆகிய நூல்களிலும் தமிழில்  எழுதியிருக்கும் ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்,  நாவல் இலக்கியம் தொடர்பான நூல் உட்பட பல நூல்களிலும் எம்மவர்களின் படைப்புகளை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்தியிருக்கும் இவரது இயல்பு ஏனையவர்களுக்கு குறிப்பாக விமர்சகர்களுக்கு முன்மாதிரியானது.

அவரது மறைவு தொடர்பில் சிரேஷ் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“1966 முதல் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராக இணைந்தவர். தனக்குப் பின்னே வந்த இளைய தலைமுறை அறிவிப்பாளர்களான எம்போன்றோரை வாழ்த்தி வரவேற்ற பண்பாளர். தமிழில் மட்டுமன்றி ஆங்கில சேவையிலும் அறிவிப்பாளராகப் பணிபுரிந்த முதல் சாதனையாளர். சிறிது காலம் வானொலி நிலையத்தின் செய்திப் பிரிவிலும் ஒரு செய்தி ஆசிரியராகப் பங்களிப்பினை நல்கியவர்….”

என்று கூறியுள்ளார்.

source; chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...