Sunday, 10 November 2013

தேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்!
எஸ்.எம்.எம். பஷீர்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
     பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
                                                                                           உலகநாதர்

அண்மையில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் ( கண்களைத்  தவிர்த்து  முகத்தின் பெரும் பாகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் புர்க்கா எனப்படும் ( கண்களையும் சேர்த்து மறைக்கும் உடை )  அணிவது தொடர்பிலும்  சர்ச்சைகள்  ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்க்கா தடை செய்யப்பட்டதை  தொடர்ந்து சூடு பிடித்தது. சில கல்லூரிகளில் புர்க்கா அணிய  தடை விதிக்கப்பட்டது. நீதி மன்றுகள் கூட வழக்குகளில் சாட்சி வழங்கும் அல்லது , விசாரிக்கப்படும்  பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்ற விடயத்தில் பெண்கள் தங்களின் முகத் திரையை விலக்கி தங்களின் அடையாளத்தை ஒரு  பெண் காவல் துறை அதிகாரியிடம் உறுதி செய்த பின்னர் புர்க்கா அணிந்து  சாட்சி வழங்கலாம் அல்லது  விசாரிக்கப்படலாம் என்று இலண்டன் குற்றவியல் நீதிமன்ற வழக்கொன்றில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. சரி சுற்றி வளைக்காமல் எமது தலைப்புக்கு வருவோம்.இந்த புர்க்கா எனப்படும் சமாச்சாரம் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதுவும் இம்முறை  பயங்கரவாத நபர் என்ற வகையில் பிரித்தானிய அரசு முஹம்மது அகமது முஹம்மது என்ற பிரித்தானிய பிரஜையை நீதிமன்றில் நிறுத்தி அவர் மீது மின்னியல் கண்காணிப்பு சாதனம் பொருத்தி கண்காணிக்கும் விதத்தில் செயற்பட்டு வந்த வேளையில் இரு வாரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை  பள்ளிவாசலுக்கு சென்ற  முஹம்மது அகமது முஹம்மது பள்ளி வளாகத்திலிருந்து தமது காலில் காவல் துறையினரால் அணிவிக்கப்பட்டிருந்த மின்னியல் கண்காணிப்பு சாதனத்தை அகற்றிவிட்டு அங்கிருந்து புர்க்கா அணிந்து தப்பிச் சென்று விட்டார் என்று காவல் துறை சொல்கிறது.

ஆனால் பள்ளி நிர்வாகம் இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்பதை வலியுறுத்தியும் அங்கு மின்னியல் சாதனம் உடைக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவுமின்றியும் பொலிசார் தங்களின் குற்றச்சாட்டை வலியுறுத்தி வருகின்றனர். பிரித்தானிய உளவுப் படை காவல்துறை உட்பட பாரிய தேடுதல்களை  தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
27 வயதான முஹம்மது அகமது முஹம்மது ஒரு சோமாலியர் பிரித்தானியாவில் தஞ்சமடைந்து பிரித்தானிய பிரஜா உரிமை பெற்றவர் .  2007ஆம் ஆண்டு அவர் சோமாலியாவிற்கு சென்றார் என்றும் அங்கு அவர் சில காலம் வாழ்ந்தார் என்றும் , பின்னர் அவர் பயங்கரவாத சந்தேக நபராக சோமாலிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு அங்கு சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் , அவ்வாறு அங்கு தடுப்புக் காவலில் இருந்த பொழுது இன்னுமொரு பிரித்தானியப் பிரஜையான முன்னாள் சோமாலிய பிரஜையான இளைஞர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டு அங்கு  சித்திரவதை செய்யப்பட்டார் என்றும்  அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பொழுது  பிரித்தானிய உளவுப்பிரிவான எம் ஐ 5  MI5)அதிகாரிகள் அங்கிருந்தனர் , தாங்கள்  அங்கு சித்திரவதை செய்யப்பட்ட பொழுது அதற்கு உடந்தையாக அவர்கள் இருந்து தமது மனித உரிமைகளை மீறி உள்ளனர் என்பதாக முஹம்மத் அகமது முஹம்மது தப்பிச் சென்றுள்ள சூழலில் அவரைத் தேடும் படலம் விஸ்தரிக்கப்பட்ட சூழலில் அவருடன் கூட சோமாலிலாந்தில் கைதியாயிருந்த இளைஞர் பிரித்தானிய உயர் நீதி மன்றில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நிவாரணம் கோரி பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராகவும் , சட்டமா அதிபருக் கெதிராகவும் வழக்கு தொடுத்துள்ளார். கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய் இவ்வழக்கு விவகாரம் அரசை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசு இக்குற்றச் சாட்டினை  மறுத்துள்ளது.

இவ்வாறான பயங்கரவாத சந்தேக  நபர்களைக் கண்காணிக்கும் சாதனம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டவர்களில் தற்பொழுது எட்டுப் பேரே இருக்கின்றனர் என்றும் பலர் நீதிமன்றங்களால் தகுந்த ஆதாரமின்றி கண்காணிக்கப்படுவதாக கண்டு விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளனர். எனினும் உளவுத்துறையின் பயங்கரவாத நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளார் என்ற கண்காணிப்புக்கான  மதிப்பீடு குறித்த அணுகு முறைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேள்விக்குட்படுத்தி வந்துள்ளனர். எது எவ்வாறெனினும் ஏற்கனவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட பிரித்தானிய பொலிசார் உளவுப் பிரிவினர் கணிசமான பணத் தொகையினை  முன்னர் நஷ்டஈடாக வழங்க வேண்டி நேரிட்டது போல் இந்த வழக்கில் என்ன நடக்கப் போகிறது என்பது வழக்கின் முடிவுகளில் மிக விரைவில் தெரிய வரும்.

பிரித்தானியரான சோமாலி சமூக  பத்திரிக்கையாளரான ஒஸ்மான் என்பவரை எம்.ஐ 5  தங்களுக்கும் தகவல் தருமாறு பணித்ததாகவும் அவர்களுடன் ஒத்துழைக்காவிட்டால் அவரின் பிரஜா உரிமையைப் பறிக்கப் போவதாகவும் எச்சரித்ததும் பற்றி அவர் கூக்குரலிட்டும் அது பிரித்தானியாவின் ஜனநாயகக் காதுகளை எட்டவில்லை. வெகுசன ஊடகங்களை சென்றடையவில்லை . காவல் துறையினர் , உளவுப் பிரிவினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் தங்களின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்வது என்பது இது போன்ற மறைக்கப்படும் , புறக்கணிக்கப்படும் பல சம்பவங்களுடன் தொடர் கதையாகவே உள்ளது.

முஹம்மது அகமது முஹம்மது கைது செய்யப்பட்டால் அவரின் பிணை முறிவுக்கும் மின்னியல் கண்காணிப்பு சாதன உடைப்பு  போன்ற  குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்பது ஒருபுறமிருக்க பிரித்தானிய உளவுப் பிரிவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் மனித உரிமையும் மனித நாகாரீகமும் பேசிக்கொண்டு மனித உரிமை மீறல்களை  செய்யும் பிரித்தானிய அரசின் முகத்திரையும் கிழியும்.   

இன்று பிரித்தானியாவில் தேசிய விளையாட்டு வீரனாக மதித்து போற்றப்படும் மோ எனப்படும் முஹம்மது பாரா எட்டு வயதில் பிரித்தானியாவிற்கு வந்தவர். இங்கு வந்து தனது விடா முயற்சியால் வேகமாக ஓடும் திறமையின் காரணமாக இன்று உலகின் சிறந்த நீண்ட தூர  ஓட்டக்காரராக தன்னை நிலை நிறுத்தி ஐரோப்பிய உலக ஒலிம்பிக் சாம்பியனாக திகழ்பவர்.

ஒருபுறம் மோ பாரா ( Mo Farah ) எனப்படும் முஹம்மது பாரா சோமாலியாவிலிருந்து ஏதிலியாக பிரித்தானியாவிற்கு வந்து , பிரித்தானியப் பிரஜையாகி ஒலிம்பிக்கிலும் ஓடி பிரித்தானியாவிற்கு உலக விளையாட்டு அரங்குகளில் தேசிய அந்தஸ்தைப் பெறுக் பெற்றுக் கொடுத்து இன்று பிரித்தானியாவின் தேசிய வீரனாக மதிக்கப்படுகிறார். ஓடி ஓடியே அவர் பெருமை சேர்க்க , மறுபுறம் முஹம்மது அகமது தமது தாய்  நாட்டிற்கு ஓடி அங்கு சிறைவாசம் அனுபவித்து சித்திரவதை செய்யப்பட்டு பிரித்தானியாவிற்கு பிரித்தானிய அதிகாரிகளால் கடத்திக் கொண்டு  வரப்பட்டு இங்கும் கைதியாகி சிறைவாசம் அனுபவித்து இப்பொழுது புர்க்கா வேடமிட்டு மீண்டும் பிரித்தானிய கடவுச் சீட்டு பறிக்கப்பட்ட நிலையில் ஓடத் தொடங்கியுள்ளார். மோ பிரித்தானியாவிற்காக ஓட அகமது பிரித்தானியாவை விட்டு ஓடியிருக்கலாம் அல்லது பிரித்தானியவிற்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கலாம் , அவரைத் தேடி பிரித்தானிய உளவுப் படை , காவல் துறை , எல்லை முகவராண்மை என எல்லோரும் ஓடத் தொடங்கி உள்ளார்கள். மோவின் பந்தய வெற்றியில் கைதட்ட காத்திருப்பவர்கள் , முஹம்மதுவின் கைகளைக் கட்டக் காத்திருக்கிறார்கள். !

No comments:

Post a Comment

Sri Lanka, China relations to face an exciting future, says Central Bank Chief

Colombo, Jan 16 (newsin.asia) – Sri Lanka and China, on Tuesday jointly launched a book on Sino Lanka relations titled ‘The Island of the...