வரலாறு எழுதி வரலாறானவன் : முற்போக்கு அரசியல் சிந்தனையாளன் எரிக் ஹோப்ஸ்போம் (ERIC HOBSBAWM)




                                                      
எஸ்.எம்.எம்.பஷீர்

"சமூக அநீதிகள் இன்னமும் கண்டிக்கப்படவும் போரடப்படவும்  வேண்டும்"
                                            எரிக் ஹோப்ஸ்போம் 
 ( "Social injustice still needs to be denounced and fought," Eric Hobsbawm -மேற்சொன்ன கருத்து அவர் இலண்டனிலும் மேற்குலகிலும் அண்மைக்காலங்களில் அவ்வப்போது ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டது.

உலகின் புத்திஜீவித்தளத்தில், முற்போக்கு அரசியல் சிந்தனைத்தளத்தில் , நவீன உலக வரலாற்று எழுத்துக்களில்  தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்த அரசியல் சிந்தனையாளர் எரிக் ஹோப்ஸ்போம்  இம்மாதம் (அக்டோபர்) முதலாம் திகதி தனது  95 வயதில் இலண்டனில் காலமானார்.



ஐரோப்பாவின் முதலாளித்துவ சமூக பொருளாதார அரசியல் ஒழுங்கமைப்பில் இடதுசாரி சிந்தனைகளின் கருத்தாளுமையை சுமார் ஐம்பது தசாப்தங்களுக்கு மேலாக வெளிப்படுத்திய ஒரு மாபெரும் சிந்தனையாளரான  , நவீன ஐரோப்பிய வரலாற்றின் பிதாமகரான எரிக் ஹோப்ஸ்போமின் இழப்பு மேற்குலகின் முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கு முறை சந்திக்கும் சவால்களுக்கு மத்தியில் உணரப்படக் கூடியதொன்று. சமவுடமைப் பொருளாதாரத்திற்கும் , மேற்குலகின் இலாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட  பொருளாதார ஒழுங்கு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள  சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட சேம நலன்களை கருத்திற் கொண்டு , அந்த இடைவெளியை அடையாளம் கண்டு பிரித்தானிய தொழிற் கட்சியிலுள்ள ஒரு சில இடதுசாரி சிந்தனையாளர்களுக்கும் இவர் ஒரு ஆதர்ஷன கருத்தியலாளராக திகழ்ந்துள்ளார். ஆனாலும் தன்னை எப்பொழுதும் மார்ச்சிஸ்ட் ஆகவே  அவர் அடையாளப்படுத்திக் கொண்டார். அவ்வாறே அவரும் அடையாளம் காணப்பட்டார். ஆனாலும் , அவர் ஒரு சிறந்த வரலாற்றாசிரியன் என்ற அடையாளம் அவரை சகல் மட்டத்திலும் , சகல முகாம்களிலும் அணுகப்பட வேண்டிய ஒருவராக ஆக்கியிருந்தது.

ஒரு பிரித்தானிய காலனித்துவ அரச சேவையாளராக இவரது தந்தை எகிப்தில் பணியாற்றிய பொழுது எரிக் அங்கு பிறந்தார் , சேவை இடமாற்றத்தின் காரணமாய் வியன்னாவிலும், பெர்லினிலும் இவரின் இளமைக்காலங்கள் கழிந்தன. ஹிட்லரின் நாட்சி ஆட்சி ஜேர்மனியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதை தொடர்ந்து இவரின் குடும்பம்  மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்பியது. இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ பல்கலைக் கழகத்தில் பயின்றார். அங்கேயே பின்பு விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் பிர்பெக் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.  

அவர் ஒரு சியோனிஸ எதிப்பாளராக , இஸ்ரேலிய அரசின் விரும்பத்தகாத யூதனாக விளங்கினார். சாமான்ய மக்களின் , உழைக்கும் மக்களின்  வாழ்வியலோடு தன்னை கருத்தியல் ரீதியில் பிணைத்துக் கொண்டு அவர் நிரம்பவே சிந்திக்கத் தூண்டும் பெறுமதிமிக்க கருத்தாக்கங்களை வெளியிட்டார். பிரித்தானிய உழைக்கும் வகுப்பினர். பிரித்தானிய தொழிலாளர் இயக்கங்கள் , கைதிகள் , அரசிலிக் கோட்பாட்டாளர்கள்  (அரசு தேயில்லை என்று கருதுபவர்கள் செயற்படுபவர்கள்-ANARCHIST ) சமூக கொள்ளைக்காரர்கள் (Social Bandits) என சமூகத்தின் பொருளாதாரா அரசியல் சித்தாந்தங்களுக்கு புதிய ஒரு அணுகுமுறையினை ஏற்படுத்தும் விதத்தில் அவரின் எழுத்துக்கள் அமைந்தன. குறிப்பாக அவரின் பத்தொன்பதாம் இருபதாம்  நூற்றாண்டுகளின் ஐரோப்பிய வரலாறு பற்றிய எழுத்துக்கள் ( புரட்சிகர யுகம் ( Age of Revolution) , கைத்தொழில் யுகம் , (Age of Industry) வல்லரசு யுகம் , ( Age of empire) மூலதன யுகம் , (Age of Capital) தீவிரங்களின் யுகம் (Age of Extremes) ) அவரை உலகின் தலை சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவராக உலகின் பார்வையைஅவரின் மீது குவிக்கச் செய்தது. மேலும் அரசியல் இடதுசாரி , மார்க்சிய கருத்துக்களுக்கெதிரான வரலாற்றாசிரியர்கள் , அரசியல் கருத்தியலாளர்கள் என அவரின் எதிரிகளையே அவரை புகழும் நிலைக்குக் இட்டுச் சென்றது.

தனது எழுத்துக்கள் , அவரின் நியாயப்பாடுகள் கொண்ட எதிர்வாதங்களைக் கொண்டு  நின்று நிலைக்கும் என்று அவர் கருதினார். உண்மையில் அவர் தன்னையே மிகுந்த சிரமத்துடன் சுய கற்பித்தல் செய்து கொண்டே  நன்றாக எழுதுவதற்கு முற்பட்டார்  மேலும் வரலாற்றாசிரியர்கள் கடந்த காலத்தை பார்க்கும் வழிமுறையை மீள் உருவாக்கம் செய்தவர் எரிக் ஹோப்ஸ்போம் என்று பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வரலாற்றாசான் டேவிட் ப்ரிச்ட்லாந்து ( David Priestland) விதந்துரைத்துள்ளார்.
 
எரிக் ஹோப்ஸ்போம் சியோனிஷம் உட்பட்ட சகல தேசியவாத இயக்கங்கள் , அமைப்புக்கள் பற்றிய காட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். யூத தேசியவாத இஸ்ரேல ஸ்தாபிதம் பற்றி  கூட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான எதோ ஒரு வரலாற்றை வைத்துக் கொண்டு இஸ்ரேல நாடு உருவாக்கப்பட்டது குறித்து தனது விமர்சனங்களை கூட  முன்வைத்தவர் எரிக் ஹோப்ஸ்போம் . அதனால் அவர் பாரிய சியோனிஸ எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். ஆனால் தனது கருத்துக்களில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்காத   இஸ்ரேலை அவர் எதிர்த்தார். பல்லின சூழலை அங்கீகரிக்காத  , இஸ்ரேலிய குறும் தேசிய வாதத்திற்கெதிரான கருத்துக்களை அவர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்.


இராக்கிய யுத்ததிற் கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு செயற்பாடுகள், இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும்  தனது காட்டமான கருத்துக்களை அவ்வப்போது முன் வைத்து வந்துள்ளார். ஏகாதிபத்திய குகைக்குள் வாழ்ந்து கொண்டு அவர்களின் அரசியல் ஏகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு எதிராக மிகவும் துணிச்சலுடன் கருத்துக்களை முன்வைக்க அவர் எப்போதும் முன்னணியில் நின்றார். வரலாற்று ரீதியான தனது ஆய்வறிவைக் கொண்டு வரலாற்று ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் சியோனிஷத்தை , அதன்  பாலஸ்தீன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை இஸ்ரேலிய அரச கொள்கைகளை கடுமையாக iவிமர்சனம் செய்தார். பிரபல பிரித்தானிய இஸ்ரேலின் சியோனிஸ எதிர்ப்பு யூதர்களைக் உள்ளடக்கி "சுதாதீன யூதக் குரல்கள் " ( Independent Jewish Voice) என்ற பெயரில் தமது சியோனிஸ எதிர்ப்பினை , இஸ்ரேல அரசு  பாலதீனர்களுக்கு ஆதரவான  யூதர்களை மௌனிக்க செய்யும் அடக்குமுறைக் கெதிராக குரல் எழுப்பியிருந்தார். இஸ்ரேலிய அரசு இனச் சுத்திகரிப்பின பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்கிறது என்று இவர் குற்றம் சாட்டினார். அவர் ஒரு யூதனாக , இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பவனாக இல்லாமல் இருக்கலாம் என்பதையே அவர் ஏனைய யூதர்களுக்கும் சொல்ல விழைந்தார்.  

ஒரு மார்க்ஸ்சிட் என்ற வகையில்   1998ஆம் ஆண்டு  " கவுரவமிக்க   தோழர்" ( Companion of Honour) என்ற கவுரவம் தொழிற் கட்சியினால்  அவருக்கு வழங்கப்பட்டது. பிரித்தானிய புதிய தொழிற் கட்சி சிந்தனைகளில் இவரின் செல்வாக்கு காணப்பட்டது . ஆயினும் டோனி பிளயரின் அரசு தனக்கு ஏமாற்றத்தைத் தந்ததாக இவர் குறிப்பிட்டார். மேலும் தொழிற் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை டோனி பிளேயர் -கோர்டன் பிரவுன் இருவரும் காற்சட்டை அணிந்த தட்சர் என குறிப்பிட்டார்  ( மரபுவாத கட்சியின் பிரதமரான மார்கரட் தாட்சரின் கொள்கைகளையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்). டோனி பிளயரின் ஈராக்  யுத்த செயற்பாடுகளை முன்வைத்து அவரை ஒரு  யுத்த பிரபு ( War Lord)  என்று விமர்சனமும் செய்தார்.  

அரபு வசந்தம் எனப்படும் அரபுலக மக்கள் எழுச்சியின் பலம் கண்டு தனது தந்து இறுதிக் காலத்தில்  மகிழ்ச்சியடைந்தார். புதிய மக்கள் எழுச்சியின் பரிணாமம்  அவரை வரலாற்றை பின்னோக்கி ஒப்பீட்டு மகிழச் செய்தது. புரட்சிகர உலகின் சகல  கால கட்டங்களிலும் வாழ்ந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். மீண்டும் ஒரு தடவை மக்களால் வீதியிலிறங்கி  ஆர்ப்பாட்டம் செய்து  அரசாங்கங்களை கவிழ்க்க முடியும் என்பதை காண்பது மிகப் பெரும் சந்தோஷத்தைத் தருகிறது என்று குறிப்பிட்டார்  ("It was an enormous joy to discover once again that it's possible for people to get down in the streets, to demonstrate, to overthrow governments," ) மேலும்  அரபு வசந்தம் " உலகை எப்படி மாற்றுவது " (How to Change the world)  எனும் நூலை எழுதுவதற்கு அவருக்கு உந்துதலாய் அமைந்தது. 

அவரின் எழுத்துக்கள் அதிகம் உலகில் வாசிக்கப்படுகின்றது . அவரின் Age of Extremes எனும் நூல் நாற்பது மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவரின் நூல்களில் மரபுகளின் கண்டுபிடிப்பு (  The Invention of Tradition ) தேசங்களும் தேசியவாதமும் ( Nations and Nationalism ) ஆகிய நூல்களும் அவரின் நீண்ட நெடிய வரலாற்று அனுபங்களை தான் ஒரு அனாதையாய் பெற்றோரை இளைமையில் இழந்து, பதின்நான்கு வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து  இங்கிலாந்துக்கு சிறுவனாய் ஜெர்மனியிலிருந்து வந்து வாழத்தொடங்கிய காலம் முதல் தனது அந்திம காலத்தில் குருதிப் புற்றுநோயால்  துயருற்ற காலம் வரை , நோயினால் தளும்பாது , தனது சுய சரிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அதுவே இரண்டு நூற்றாண்டின் உலக சரிதையை தனிமனித அனுபவங்களினூடாக எம்முன் காட்சிப்படுத்துகிறது.

 “யூதனல்லாத யூதன்

எரிக் தன்னை ஒரு "யூதனல்லாத யூதன்" என்று வகைப்படுத்தப்பட்டவர். அவரின் எழுத்துக்களில்  ஐரோப்பாவில் ஹிட்லரின் காலத்தில் யூதர்கள் அனுபவித்த துயரங்களை பற்றி எழுதும் பொழுது அவர்கள் தங்களின் துயரங்களில் வாழ்ந்து கொண்டிராமல் தாங்கள் அடைந்த சாதனைகளில் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதை விரும்பினார்.
ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு அவரின் தாய் " நீ எது செய்தாலும் பரவாயில்லை , நீ ஒரு ஒரு போதும் யூதன் என்பதை மறந்துவிடாதே" என்று சொல்லியிருந்தார். ஆனால் அவர் அதற்கான சொந்த தாற்பரியத்தை நடைமுறையில் செயற்படுத்தினார்.
எரிக் ஹோப்ஸ்போம் மரணமடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் உலக முதலாளித்துவ நெருக்கடியை தான் காணும் காலம் வரை வாழ்ந்துவிட்டதாக அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார் . அந்த நெருக்கடி தனக்கு ஆச்சரியமானதொன்றல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.   கம்முனிசம் சர்வதேச இயக்கம் என இறுதிவரை அவர் நம்பினார் . பூர்சுவாக்களின்  தோல்விகளை , தேசியவாதங்களின் தோல்விகளை ஆய்வுக்குட்படுத்தினர். புதிய சமூக அரசியல் பொருளாதாரப் பார்வை வீச்சினை ஏற்படுத்தினார். இவரின் சோவியத் சார்பு நிலைப்பாடு இவர் மீது பாரிய எதிர் விமர்சனத்தினை  ஏற்படுத்தியது. ஆனாலும் இவர் அது குறித்தும் தனது விமர்சனங்களை  மிக நாசூக்காக முன்வைத்தார். இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் கட்சி 1991 ஆம் ஆண்டு கலைக்கப்படும் வரை இவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே இருந்தார். ஆகவேதான் இவர் "தான் கட்சியை விட்டு நீங்கவில்லை கட்சிதான் என்னைவிட்டு நீங்கிவிட்டது" என்று சாதுர்யத்துடன் குறிப்பிட்டார். அதிகம் வாசிக்கப்பட்ட , இனிமேலும் வாசிக்கப்படுகிற ஒரு வரலாற்றாசானாக எரிக்  ஹோப்ஸ்போம்  திகழ்கிறார். 


 
பின்னுரை

எரிக் ஹோப்ஸ்போமின் அரசியல் சமூக கருத்தியல்கள் சிந்தனைகளை தூண்டுபவை. எழுதுவதற்கு அப்பால் அவர்  பொஸ்னிய -யூகோஸ்லாவியா பொஸ்னிய சமாதான முயற்சிகளில் ஈடுபட்டார். அங்கு ஏற்படுத்தப்பட்ட சமாதானம் நிலையானதா என்ற கேள்வி எழுப்பப்பட்ட பொழுது யுத்தத்தை விட சமாதனம் சிறந்தது , அது நிலைக்குமா என்பதல்ல முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார். .
அவரின் பொஸ்னிய சமாதானம் குறித்து சொன்ன முழுமையான கருத்தினை நான் "நோர்வேயின் சமாதான முயற்சியும்  கிழக்கு முஸ்லிம்களும் " என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் மேற்கோள் காட்டி  எழுதியிருந்தேன். அக்கட்டுரை 2001 ஆம் ஆண்டு மத்திய பகுதியில் இலங்கையில் வெளியிடப்படும் ரவைய குழுப் பத்திரிக்கையின் தமிழ் பதிப்பான "ஆதவன்"  பத்திரிக்கையில் பிரசுரமான பொழுது எரிக் ஹோப்ஸ்போம்  என்ற பெயருக்குப் பதிலாக எரிக் சொல்ஹேயம் சொல்லிய கூற்றாக அந்த மேற்கோளை திருத்தி வெளியிட்டிருந்தார்கள் . அப்போதைய சூழலில் பத்திரிக்கையாளர்களின் மண்டைக்குள் பிரபாகரனும் எரிக் சொல்ஹெய்மும் ஆட்சி செலுத்திய காரணத்தினால் , மேலும் அந்தக் கட்டுரையில் பல இடங்களில் எரிக் சொல்ஹேமின் சமாதான முயற்சிகள் குறித்தும் சிலாகித்திருந்தபடியினால் , ஒரு வேளை நான் பிழையாக எரிக் சொல்ஹேமை , “எரிக் ஹோப்ஸ்போம் என்று எழுதிவிட்டேன் என்று ஆதவன் ஆசிரிய பீடம் அல்லது அக்கட்டுரையை வெளியிடுவதற்கு பொறுப்பானவர் நினைத்து திருத்தி இருக்கலாம். பத்திரிகை ஆசிரியரே ஒரு முன்னாள் ஈ பீ ஆர் எல்.ப் உறுப்பினரான மறைந்த சிவஞனாம் (ஒரு இடதுசாரி.)  அக்கட்டுரை வெளியான பின்னர் எரிக் ஹோப்ஸ்போம் யார் என்றும் அவரின் புகைப்படம்,  அவர் குறிப்பிட்ட கருத்தின் அச்சுப்பிரதி வடிவம் (நான் மேற்கோள் காட்டிய கருத்துக்களைக் கொண்டது )  என அவர்களின் திருத்தம் பிழையானது. என்பதையெல்லாம் எழுதி முதலில் பொஸ்னிய சமாதானத்திற்கும் எரிக் சொல்ஹேமிற்கும் சம்பந்தமில்லை என்பதையும் காட்டமாக குறிப்பிட்டு சிவஞானத்திற்கு எழுதினேன். இப்போது  தோழர்  சிவஞானம் உயிருடனில்லை , அவருக்கு எழுதிய எனது கடிதம்  மற்றும் ஆவணங்கள் இன்னமும் என்னிடம் உள்ளன. எரிக் ஹோப்ஸ்போமின் மறைவின் பின்னர் , அந்த நினைவும் ஞாபகத்திற்கு வர இக்கட்டுரையும் அவர் பற்றி எனது மதிப்பை வெளியிடும் வகையில் எழுதும் தேவையை ஏற்படுத்தியது.
13/10/2012


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...