தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா-– இணைப்பேராசிரியர் சோம்தீப் சென் (Somdeep Sen)ந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக இந்து கவுன்சில் போன்ற இந்துத்துவா அமைப்புகளைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு கிளைகளும் இதற்கு உதவியுள்ளன.

இப்போது, இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டரில் நடந்த அண்மை நிகழ்வுகள், இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள நகரங்களின் தெருக்களில் அவர்களின் அரசியல் தத்துவமான இந்துத்துவாவை, பரப்புரை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கனவு புதிய வழிகளில் – வன்முறையில் நனவாகி வருவதை நமக்கு எடுத்தது காட்டுகினறன.

செப்டம்பர் 17 அன்று, இந்து இளைஞர்கள் லீசெஸ்டர் தெருக்களில் அணிவகுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற இந்து தேசியவாத போர் முழக்கமிட்டு, இஸ்லாமியர்களை தாக்கியுள்ளனர். இது இந்து தேசியவாதிகள் எப்போதும் விரும்பும் இந்து பெருமை மற்றும் பேரினவாதத்தின் வன்முறை அடையாளமாகும்.

இது போன்ற மேலும் பல பதற்றமான நிகழ்வுகள் தற்போது வெளியில் வந்துள்ளன. மே மாதம், லீசெஸ்டரில் ஒரு இஸ்லாமிய இளைஞன் ஒரு இந்து கூட்டத்தின் தாக்குதலுக்கு ஆளாகி, பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதம் நடந்த கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற பிறகு, “பாகிஸ்தானுக்கு மரணம்” என்று முழக்கமிட்டபடி தெருக்களில் சென்ற ஒரு இந்துக் குழு, சீக்கியர் ஒருவரைத் தாக்கியது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்தியா தோல்வியடைந்த போதும் இதே போன்ற செய்திகள் வந்தன. இதற்கு பதிலடியாக, இஸ்லாமிய ஆண்களின் குழுக்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஒருவர் இந்து மத அமைப்பின் கட்டிடத்திற்கு வெளியே இருந்த கொடியை கீழே இறக்கினார்.

நிச்சயமாக, ஏற்கனவே இங்கிலாந்தில் இந்து தேசியவாத மற்றும் கன்சர்வேடிவ் கட்சி ஒத்துழைப்பின் நீண்ட வரலாறு உள்ளது. 2016 லண்டன் மேயர் தேர்தல்களுக்கு முன்னதாக, கன்சர்வேடிவ் வேட்பாளர் சாக் கோல்ட்ஸ்மித் தனது எதிர் வேட்பாளரான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கானை வீழ்த்துவதற்காக இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு முஸ்லிம் விரோத பரப்புரைச் செய்திகளை அனுப்பியுள்ளார்.

2019 இங்கிலாந்து பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கன்சர்வேடிவ் வேட்பாளர்களுக்காக நாட்டில் இந்து தேசியவாத குழுக்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. ஏனெனில் தொழிற்கட்சியின் அப்போதைய தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் 2019 ஒடுக்குமுறையை விமர்சித்திருந்தார். இந்தக் குழுக்களில் பல பாஜகவுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளன. அவர்களின் நடவடிக்கைகள் வெளிநாட்டுத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இருப்பினும், இது இங்கிலாந்து பிரச்சினை மட்டுமல்ல. இந்து தேசியவாதத்தின் கோரம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

‘வெள்ளை மாளிகையின் உண்மையான நண்பர்கள்’

இங்கிலாந்தைப் போலவே, அமெரிக்காவிலும் இந்து தேசியவாதிகள் வலதுசாரி, இஸ்லாமிய வெறுப்பு வேட்பாளர்களுக்காக தீவிரமாக பரப்புரைச் செய்தனர். 2016 குடியரசுத் தலைவர் தேர்தல்களின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்காக இந்து அமெரிக்கர்களை அணிதிரட்ட இந்து குழுக்கள் முழு முயற்சியில் ஈடுபட்டபோது இது தெளிவாகத் தெரிந்தது.

2015 ஆம் ஆண்டில், மோடியுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த சிகாகோவைச் சேர்ந்த இந்திய- அமெரிக்க ஆதரவு குழுவைச் சேர்ந்த தொழிலதிபர் ஷலப் குமார் என்பவரால் குடியரசு இந்து கூட்டணி (RHC) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரப்புரைக்கு அதன் உறுப்பினர்கள் நன்கொடை அளித்தனர். மேலும் அவர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது குடியரசு இந்து கூட்டணி அவருக்கு ஆதரவளித்தது. வாக்கெடுப்புக்கு முன்னதாக குழுவுடனான ஒரு நிகழ்வில், டிரம்ப், “இந்திய மற்றும் இந்து சமூகத்திற்கு வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பர் இருப்பார்.” என அவர் மோடியைப் பாராட்டினார். அவரை “சிறந்த மனிதர்” என்று அழைத்தார். அத்துடன் இந்து அமெரிக்கர்களை கவர்ந்திழுக்கும் பரப்புரை காணொளியை வெளியிட்டார்.

2020 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக, மோடி கிட்டத்தட்ட டிரம்பின் பரப்புரையாளராகச் செயல்பட்டார். நிலவிற்பனை முகவராக மாறிய ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து இந்தியாவின் அகமதாபாத்தில் ஒன்றும், டெக்சாஸின் ஹூஸ்டனில் மற்றொன்றும் என இரண்டு கூட்டுப் பேரணிகளை நடத்தினார். பிந்தைய நிகழ்வில், மோடி ட்ரம்பின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு மறைமுக ஆதரவைக் கொடுப்பதாகத் தோன்றியது. “இந்த முறை, இது ஒரு டிரம்ப் அரசாங்கமாக இருக்கும் (அப் கி பார், டிரம்ப் சர்க்கார்))” என்றும் பேசினார்.

எவ்வாறாயினும், இங்கிலாந்தைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்து வலதுசாரிகளும் இப்போது தேர்தல் செல்வாக்கிலிருந்து தெருமுனைப் போராட்டங்களுக்கு நகர்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்டில், நியூஜெர்சியில் உள்ள எடிசனில் நடந்த இந்தியச் சுதந்திர தின அணிவகுப்பில், மோடி மற்றும் உத்தரபிரதேசத்தின் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சுவரொட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட புல்டோசர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் உள்ளூர் அரசாங்கங்களின் குழப்பமான போக்கைக் கொண்டாடியது. விமர்சனங்களைத் தொடர்ந்து, அமைப்பாளரான இந்திய வணிக சங்கம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டது.

வெளிப்படையான அச்சுறுத்தல்கள் :

கனடாவிலும் இந்து தேசியவாதிகள் இந்துத்துவா அலைகளை உருவாக்கி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் சீக்கிய பள்ளிக்கு வெளியே இந்து ஸ்வஸ்திகாவுடன் சீக்கியர்களுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்தியாவில் மோடி அரசாங்கத்தை விமர்சித்ததற்காக புலம்பெயர் இந்துத்துவ ஆதரவாளர்களால், கனடா நாட்டு கல்வியாளர்கள் துன்புறுத்தப்பட்டு, கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஜூன் மாதம், கனடா நாட்டு இந்து தேசியவாதியான ரான் பானர்ஜி இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களின் இனப்படுகொலைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். வலையொளியில் அவர் அளித்த பேட்டியில், “மோடி செய்வது அருமையாக இருக்கிறது. இந்தியக் குடியரசில் இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்படுவதை நான் ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவர்கள் சாக தகுதியானவர்கள்,” என்று பானர்ஜி கூறினார்.

ஆஸ்திரேலியாவிலும் இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்கள் செய்யும் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய தாக்குதல்களை நடத்திய விஷால் சூட், சீக்கியர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்காக இறுதியில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது விசா காலாவதியானதால் தண்டனை பெற்று நாடு கடத்தப்பட்டார். இந்தியா திரும்பியதும் அவருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

மோடி மற்றும் அவரது இந்து தேசியவாத கொள்கைகளை விமர்சிப்பவர்களை வாயடைக்க ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அதிகாரிகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியத் தூதரக தலைமை ஆணையரின் குறுக்கீடு மற்றும் இந்திய “புகழ் பாடாத” ஆராய்ச்சி மற்றும் எழுத்தை தணிக்கை செய்வதற்கான முயற்சிகளை மேற்கோள் காட்டி மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனத்திலிருந்து 13 கல்வியாளர்கள் பதவி விலகினர்.

இந்துத்துவா உலகமயமாவது ஏன்?

ஐயத்திற்கு இடமின்றி, உலக அளவில் இந்து தேசியவாதத்தின் எழுச்சிக்கும் மோடியின் எழுச்சிக்கும் நிறைய தொடர்பு உண்டு.

2014 இல் மோடி பிரதமரானதில் இருந்து, இஸ்லாமியர்களின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் மிகவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுயாட்சியை ரத்து செய்தார். மேலும் 1992 இல் இந்து தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயிலைக் கட்டினார். இவையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோரை மீறி நடத்தப்பட்டன.

உள்நாட்டில் இந்துத்துவ வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோடி பெற்ற வெற்றி, புலம்பெயர் நாடுகளில் உள்ள அவரது ஆதரவாளர்களை வெளிநாட்டில் பேரினவாதப் பெருமிதத்தை வெளிப்படுத்தத் தூண்டியது.

இருப்பினும், மோடியை சட்டப்பூர்வமாக்கியதன் மூலம் உலகத் தலைவர்களும் குற்றவாளிகளாக மாறியுள்ளனர். இந்து வெளிநாட்டவர்களின் இந்த உட்பிரிவுக்கு அவர்களின் மதவெறி பார்வை ஓரளவு உலகளாவிய பிடிப்பைக் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கிறது. டிரம்ப் முதல் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் பிரேசில் குடியரசுத் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ வரை, பல வலதுசாரி அரசியல்வாதிகள் தங்களை மோடியின் “நண்பர்களாக” காட்டிக் கொண்டனர்.

வலதுசாரி செயல் திட்டத்தை குறிப்பாக ஆதரிக்காத மேற்கத்திய தலைவர்கள் கூட மோடி அரசாங்கத்தின் மோசமான மனித உரிமைகள் சாதனையை கண்டும் காணாத வகையில் இந்தியாவுடன் தங்கள் பொருளாதார மற்றும் போர்த்தந்திர உறவுகளை நிறுவி வளர்த்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

அடுத்தது என்ன?

இஸ்லாமோஃபோபியா இப்போது இந்தியாவின் பொது மற்றும் வெளியுறவுக் கொள்கையின் கூறாகத் தோன்றுகிறது. இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரக தலைமை ஆணையகம் லீசெஸ்டரில் நடந்த நிகழ்வுகளுக்கு பதிலளிக்கையில் அங்குள்ள இந்து சமூகத்தின் கவலைகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், லீசெஸ்டர் நிகழ்வு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்து தேசியவாதத்தை உள்நாட்டு, இந்தியப் பிரச்சினையாக புறக்கணிக்க முடியாது. இந்த இயக்கம் பன்னாடுகளுக்குச் சென்றுவிட்டது. பிற நாடுகளிலும் பெருகிய முறையில் வன்முறை வடிவத்தை எடுத்து வருகிறது. அது இப்போது ஜனநாயகக் கோட்பாடுகள், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு எல்லா இடங்களிலும் அச்சுறுத்தலாக உள்ளது. மோடியின் கீழ் இந்தியா அதை சரி செய்யாது. உலகம்தான் அதைச் சரி செய்ய வேண்டும்.

மூலம்: Hindu nationalists now pose a global problem

ALJAZEERA இணையதளத்தில் ரோஸ்கில்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மேம்பாட்டு ஆய்வுகளின் (International Development Studies at Roskilde University) இணைப் பேராசிரியரான சோம்தீப் சென் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

மொழிபெயர்ப்பாளர் : நாராயணன்

Source: chakkram.com

 

No comments:

Post a Comment

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபி

அக்டோபர் 16, 2022 சீ னக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில...