உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபிசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில், தோழர் ஷிச்சின்பிங் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் அறிக்கை வழங்கினார்.

அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் கட்சி மற்றும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 3 சாதனைகள் பெறப்பட்டுள்ளன. முதலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 100ஆவது ஆண்டு நிறைவை வரவேற்றது. இரண்டு, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் புதிய யுகத்தில் நுழைந்தது. மூன்று, வறுமை ஒழிப்பு, குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தின் உருவாக்கம் ஆகிய கடமைகளை நிறைவேற்றி, முதல் நூற்றாண்டு குறிக்கோளை நனவாக்கியது. இந்த சாதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் ஒற்றுமையுடன் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி மட்டுமல்லாமல், உலகத்துக்கும் செல்வாக்கு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியும் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு, உலக மொத்த பங்கில் 18.5 விழுக்காடு வகிக்கிறது;7.2 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரிப்புடன், உலகின் 2ஆவது இடம் பிடித்துள்ளது. 140க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. இவற்றுடனான மொத்த வர்த்தக மதிப்பு, உலகின் முதல் இடம் பிடித்தது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, வெளிநாடுகளில் முதலீடு செய்வது ஆகியவற்றிலும் சீனா முன்னணியில் உள்ளது. மேலும் பெருமளவில் விரிவான ஆழமான முறையில் வெளிநாட்டுத் திறப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், தூய நீரும் பசுமை மலையும் செல்வம் என்ற கருத்தில் சீனா ஊன்றி நின்று, சுற்றுச்சூழல் நாகரிக அமைப்பு முறையின் கட்டுமானத்தை மேலும் முழுமைபடுத்தியுள்ளது. இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரலாறு காணாத அளவில் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டு நிர்வாகத்தை சீனா ஆழமாக முன்னேற்றி, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் தரத்தைத் தொடர்ந்து பேணிக்காத்து வருகிறது.

மேலும், சீனாவின் சில முக்கிய தொழில் நுட்ப ஆய்வுகள் முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளன. புதிய தொழில்கள் செழுமையாக வளர்ந்து வருகின்றன. மனிதர்கள் விண்வெளி பயணம், உயிரியல் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளன. சீனா புத்தாக்க நாடாக மாறியுள்ளது.

சீன மக்களுக்குத் தலைமை தாங்கி, சோஷலிச வல்லரசாக சீனாவைக் கட்டியமைப்பது, 2ஆவது நூற்றாண்டு இலக்கை நனவாக்குவது, சீனத் தேசத்தின் மறு மலர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவை தற்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியக் கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் குடியரசு-ஜனநாயகக் கட்சிகள் மாறி மாறி  நடத்தும் மாநாடுகள் அதிக ஊடக கவனத்தைப் பெறுவதில்லை. இங்கிலாந்து, இந்தியா மற்றும் பிற நாடுகளின் நிலையும் வேறுபட்டதல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் குறித்து ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இவற்றில் எதிலும்  ஒரு நாடு முன்னேறும் போது பின்பற்ற வேண்டிய பொருளாதார – சமூக – அரசியல் – கலாச்சாரக் கொள்கை அணுகுமுறைகள் இல்லை என்பதே உண்மை. அல்லது ஏதேனும் விவாதம் நடந்தால், தற்போதைய சுரண்டல் பொருளாதார அரசியல் கொள்கைகளில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதோடு நின்றுவிடும். மீதமுள்ள அனைத்து அளப்புகளும் தனிப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பெய்ஜிங்கில் ஒக்ரோபர் 16 ஞாயிறன்று தொடங்கியுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கட்சி மாநாடு, அந்த நாடும்  கம்யூனிஸ்ட் கட்சியும் கூறப்பட்ட தங்களின் இலக்குகளை எவ்வளவு சிறப்பாக அடைந்து ள்ளன என்பதை ஆய்வு செய்கிறது. சாதனைகளை ஆய்வு செய்த பின், கூட்டாக எதிர்கால செயல் திட்டங்களை வகுப்பார்கள். ஒக்ரோபர் 9 முதல் 12 வரை நடை பெற்ற மத்தியக் குழுவின் முழுமையான அமர்வு, கட்சி மாநாட்டின் நடவடிக்கைகளை இறுதி செய்தது.

கட்சி மாநாட்டின்  முக்கிய நிகழ்ச்சி நிரல்

ஒக்ரோபர் 16 முதல் ஒரு வாரம் நடைபெறும் 20ஆவது மாநாட்டில், பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் முன்வைக்கும் முக்கிய வேலை அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. தேவையான திருத்தங்களுடன் இது அங்கீகரிக்கப்படும். அதன்பின்  மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு ஆணை யத்தின் ஆய்வு அறிக்கை பரிசீலிக்கப்படும். கட்சி அமைப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும். புதிய மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு ஆணையமும் தேர்ந்தெடுக்கப்படும். 20ஆவது கட்சி மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் இவை. உலகில் உள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும், அமைப்பை வலுப்படுத்தவும், உட்கட்சி ஜனநாயகத்தை மேலும் மேம்படுத்த பல புதிய நடைமுறைகளை உருவாக்கி சோதனை செய்து வருகின்றன. இது தொடர்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சில உதாரணங்களைப் பார்ப்போம்:

கட்சி காங்கிரசுக்கான அனைத்து பிரதிநிதிகள் குறித்தும் தற்போதுள்ள குழு முன்மொழியும் பட்டியலின் மீது பிரதிநிதிகள் மேலும் சில பெயர்களை பரிந்துரைத்தால்தானே போட்டி இருக்கும். ஆனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை கூடுதலான தோழர்கள் மாநாட்டுப் பிரதிநிதிகளின் முன்னால் வைக்கப்பட்டு, அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுப்பதற்கும் மற்றவர்களை நிராகரிப்பதற்கும் போதிய வாய்ப்பு கொடுக்கிறார்கள். உதாரணமாக, 19ஆவது கட்சி மாநாட்டிற்கு முன்பு, ஜியான்ஷி மாகாணக் குழு 69 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருந்தது, ஆனால் தற்போதைய குழுக் கூட்டத்தில் 90 பெயர்கள் முன்வைக்கப்பட்டன. தேவையைவிட இது 30 சதவிகிதம் அதிகம். எனவே, 30 சதவிகித வேட்பாளர்கள் விலக்கப்பட்டு 69 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திய குழு உள்ளிட்ட பல்வேறு நிலைக் குழுக்களின் தேர்தலிலும் இதே  முறை பயன்படுத்தப்பட்டது. 2017 ஆம்  ஆண்டில், 19 ஆவது மாநாட்டின் மத்தியக் குழுத் தேர்தலில், கூடுதலாக முன்வைக்கப்பட்ட வேட்பாளர்களில் எட்டு சதவிகிதம் போட்டியின் மூலம் வெளியேற்றப்பட்டது. 18ஆவது மத்திய குழு தேர்தலும் அவ்வாறே நடைபெற்றது.

20ஆவது கட்சி மாநாட்டிற்கு முன்னோடியாக முக்கிய வேலை அறிக்கை பல்வேறு மட்டங்களில் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் தலைமையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, 2022 ஓகஸ்ட் மாதம் இறுதியில் வரைவு அறிக்கையின் முக்கிய பகுதிகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், கட்சி அணிகள் செயல்படும் நாட்டின் அனைத்து மொழிகளிலும் அரசியல் பகுப்பாய்வு அடங்கிய நீண்ட ஆவணம் (வரைவு அரசியல் தீர்மானம்) வெளியிடப்படுகிறது. சிபிஐ(எம்), சிபிஐயில் நடை முறையாக உள்ளதை இதனுடன் இணைத்து மதிப்பீடு செய்யத்தக்கதாகும்.

தீவிர வறுமை ஒழிப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது  மாநாட்டின் முடிவின்படி, சீனாவில் எஞ்சியிருந்த பொருளாதார இடைவெளியின் ஒரு பகுதியாக நீடித்த தீவிர வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான மாபெரும் இயக்கம் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழா 2021 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது, கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் துணிச்சலான முயற்சிகள் மட்டுமல்ல, அதை மக்கள் இயக்கமாக மாற்றிய கட்சியின் வியூகமும் முக்கியப் பங்கு வகித்ததாக மதிப்பிடப்பட்டது. 1980 முதல் தொடர் முயற்சியின் விளைவாக 77  கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 20ஆவது கட்சி மாநாட்டில் இதுதொடர்பான அனுபவங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செயலாளர் ஆனதில் இருந்து, மூன்று துறைகளில் குறிப்பிடத்தக்க தலையீடுகள் மற்றும் திருத்தங்கள் தேவை  என்பதை ஜி ஜின்பிங் தெளிவுபடுத்தியுள்ளார். சீனாவை ஒரு சமத்துவ சமூகமாக மாற்றும் முயற்சியில், தனிநபர்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடை யிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் சமத்துவமின்மையை விரைவாகக் குறைப்பதன் முக்கியத்துவத்தை ஜின்பிங் வலியுறுத்தினார். 

சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க மிகவும் கவனமாக தலையிட வேண்டியதன் அவசியத்தை மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக அவர் வலியுறுத்தினார். பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வரும் ஊழலுக்கு எதிராக வலுவான திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜின்பிங் கூறினார்.

பொருளாதார  வல்லரசான சீனா

டெங் சியோ பிங்  தலைமையில் தொடங்கிய புதிய பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் சீனாவை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பொருளாதார வல்லரசாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அதன் ஒரு பகுதியாக உருவாகும் புதிய பிரச்சனைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பார்க்கிறது என்பதை ஜி ஜின்பிங்கின் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘சீனப் பார்வையாளர்’ என்று கூறிக்கொள்ளும் சில வர்ணனை யாளர்களும் வல்லுநர்களும், இந்த மாநாட்டின் மூலம் ஜி ஜின்பிங் சர்வ அதிகாரங்களையும் கொண்ட தலைவராக மாறுவாரா என்று மாநாடு விவாதிக்கப் போவதாக குறிப்பிட்டு முக்கியமாக விவாதிக்கின்றனர். 1980 களில், கட்சித் தலைமை மற்றும் தலைவர் பதவிக்கு இரண்டு ஐந்தாண்டு கால வரம்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி பதவிக்கான அந்த விதியை சீன நாடாளுமன்றம் முன்பு நீக்கியது. 20 ஆவது கட்சி மாநாட்டில் கட்சியின்  பொதுச்செயலாளர் பதவி குறித்து விவாதித்து முடிவு எடுக்கலாம்.

எச்சரிக்கையும் அவதூறுகளும்

கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டுத் தலைமை என்ற அமைப்புக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. சில தனிநபர்கள் தங்கள்  தனித்துவமான திறமைகளை அங்கீகரிப்பதில் அதிக முக்கியத்துவம் பெறலாம். அப்போதும் கட்சி கூட்டுத் தலைமையாக செயல்பட வேண்டும். லெனின், ஹோ சி மின் மற்றும் பிற கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதற்கு உதாரணம். அதனுடன், தனிப்பட்ட செல்வாக்கின் பரவல் சில சந்தர்ப்பங்களில் சில கட்சிகளுக்குள் நுழையாமலுமில்லை. அதை முறியடிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாவோ மற்றும் டெங் சியோ பிங்கிற்குப் பிறகு, சம முக்கியத்துவம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜி ஜின்பிங் வலம் வருவதை காண முடிகிறது. அதே சமயம், சில வாரங்களுக்கு முன், ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் இருப்பதாக, கண்ணுக்கு தெரியாத ஆதாரங்களில் இருந்து சிலர்  பொய்யைப் பரப்பினர். சுரண்டும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஊடகங்களின் வழக்கமான செயல்பாடு இது. 60 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்து வகையான தீய  பிரச்சாரங்களையும் முறியடித்து, சமத்துவ  மற்றும் வலிமையான சீனாவை உருவாக்குவதில் முன்னேறும் என்று நம்புவோம். இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் தற்போதுள்ள பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வதன் மூலம் நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்ள சாதகமான சூழ்நிலை உருவாகும் என்றும் கருதலாம்.

-தமிழில்: சி.முருகேசன்

Source: chakkram.com

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...