இந்து என்பது அரசியல் ஆயுதம்! ஆதிக்கத்தின் குறியீடு!--சாவித்திரி கண்ணன்



ந்து என்பது ஆதிக்கத்திற்கான மந்திரம்! அரசியல் பிழைப்பாளர்களின் தந்திரம்! இன்னும் சிலருக்கு வயிறு வளர்க்கும் உபாயம்! இதை நாம் அம்பலப்படுத்தினால் வருகிறது கோபம்! எழுகிறது வன்மம்! எல்லா மதங்களையும் தின்று செறித்ததே இந்து மதம்? ராஜராஜ சோழனை யாராவது இந்து எனச் சொல்லி இருந்தால் தலையை சீவீ இருப்பான்!

மூச்சுக்கு முன்னூறு முறை இந்து, இந்து எனச் சொல்பவர்கள், இந்து மதம் தான் பழமையானது என பீற்றிக் கொள்பவர்கள் இதற்கு மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும்!

சனாதனிகளின் மூன்று பிரதான நீதி நூல்கள் உபநிடதம், பகவத் கீதை, வேதாந்திர சாஸ்திரம்! இந்த மூன்றில் எது ஒன்றிலுமே இந்து என்ற வார்த்தை கிடையாது!

சனாதனிகள் போற்றும் சாஸ்திரங்களான  கர்ம சாஸ்திரம், மோட்ச சாஸ்திரம், யோக சாஸ்திரம், பக்தி சாஸ்திரம், ஞான சாஸ்திரம்,அ மரத்துவ சாஸ்திரம் ஆகிய ஒன்றிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா?

சனாதனிகள் பெரிதாக மதித்து போற்றுகிறார்களே ரிக் வேதம், யஜூர்வேதம், சாம வேதம், அதர்வண வேதம்..இந்த நான்கிலுமே இந்து என்ற வார்த்தையே இல்லை!

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், சனாதனிகள் கொண்டாடும் நான்கு வேதங்களிலோ, ஸ்ருதிகளிலோ, 108 உப நிடதங்களிலோ, 36 புராணங்களிலோ, இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலோ.. நூற்றுக்கணக்கான சாஸ்திரங்களிலோ, யோக சூத்திரங்களிலோ…இன்னும் என்னென்னவெல்லாம் உண்டோ அனைத்திலுமே எங்கும், எதிலும் இந்து என்ற வார்த்தை இல்லை.

ஏனெனில், இந்த மண்ணில் எண்ணிடலங்கா மதங்கள் இருந்தன! எண்ண முடியாத தெய்வங்கள் இருந்தன! விதவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தன! அதில் ஒன்று தான் ஆர்ய மதம் அல்லது சனாதன தர்மம். இது பார்ப்பனர்கள் மட்டுமே பின்பற்றியதாகும்! நீங்கள் வேள்விகள் செய்தீர்கள், யாகங்கள் வளர்த்தீர்கள்! இந்திரன் முதலான தெய்வங்களை வழிபட்டீர்கள்!

வெகுஜன மக்களில் சைவர்கள் சிவனை வழிபட்டனர், திரு நீறு பூசினர். சிவனை வழிபட்டவர்கள் தேவாரம், திருவாசகம், திருவருட்பா ஆகியவற்றை பாடி சிவனை வணங்கினர்! அப்பரும், சுந்தரரும், திருநாவுகரசர், மாணிக்க வாசகரும், வள்ளல் ராமலிங்க அடிகளும் இந்து மதம் என்ற வார்த்தையை எங்காவது உச்சரித்துள்ளனரா? 63 நாயன்மார்களில் யாரேனும் நான் இந்து மதத்திற்காக பாடுபட்டேன் எனக் கூறியுள்ளனரா?

வைணவர்கள் பெருமாளை வழிபட்டனர்! நாமம் தரித்தனர்! 12 ஆழ்வார்களில் யாரேனும் ஒருவர் தன்னை இந்து எனக் கூறியுள்ளாரா? இவர்களில் யாரையேனும் நீங்கள் கேட்டு இருந்தால் ”தாங்கள் சுத்த வைணவர்கள்” என்றே சொல்வார்களே அன்றி, இந்து எனச் சொன்னால் சொன்னவன் தலையை சீவி இருப்பார்கள்! ஆண்டாளின் திருப்பாவையில் எங்கே இந்து மதம் வந்தது?

சாக்ய மதத்தினர் சக்தியை வழிபட்டனர்! கெளமார மதத்தினர் முருகனை வழிபட்டனர்! யார் தங்களை இந்து எனச் சொல்லிக் கொண்டனர்!

முனீஸ்வரனை வணங்குறவர்களை, முனியாண்டியை கும்பிடுகிறவர்களை, மதுரை வீரனையும், அய்யனாரையும், சுடலை மாடனையும் சூடம் கொளுத்தி வணங்கி வந்தவர்களை எல்லாம், நீங்கள் இந்து என ஏற்றுக் கொள்ள மறுத்தீர்களே.. அன்று! ‘தீண்டவே தகாதவன்’ என்று தானே விலக்கி வைத்தார்கள்!

‘இந்து’ என்ற பெயரும், ‘இந்தியா’ என்ற பெயரும் ஆங்கிலேயேர்கள் வைத்ததாகும். சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி – அதாவது, ஒரு கிறிஸ்துவர் – சூட்டிய நாமகரணமே இந்து என்பதாகும். பற்பலவான மதங்கள் இந்த மண்ணிலே இருப்பதால் அவற்றை எல்லாம் ஒரே பொதுப் பெயரில் குறிப்பிடுவது நிர்வாக ரீதியாக வசதியாக இருக்கும் என்பதால், சிந்து நதிக்கு அப்பால் உள்ள இந்த பிரதேசத்தில் தோன்றியுள்ள மதங்கள் அனைத்தையும் இந்து என அரசாங்க கெஜட்டில் குறிப்பிட்டார்.

‘இந்தியா’ என்று ஆங்கிலேயேர் பெயர் வைத்த போது, அதை முதலில் எதிர்த்தது பார்பனர்கள் தான். இது ஆரிய தேசம், பிரம்மதேசம், பாரத தேசம் என்றெல்லாம் தான் நீங்கள் குறிப்பிட்டு வந்தீர்கள்!

”வைதீக மதத்தை, சனாதன தர்மத்தை எப்படி நாங்கள் கைவிட முடியும்? இந்து மதமாவது, சந்து மதமாவது ஒரு மிலேச்சன் வைத்த பெயரை நாங்கள் ஏற்போமா..?” என்றெல்லாம் துடித்தீர்கள், ஆவேஷப்பட்டீர்கள்! ஆகவே இந்தியாவை ஏற்க மறுத்தீர்கள்? இன்று இந்தியா என்று உருகுகிறீர்கள்! இந்து என்று மருகுகிறீர்கள்! ஏனென்றால், இந்த பரந்துபட்ட தேசத்தை ஆளுவதற்கு உங்களுக்கு இது சாதகமாக இருக்கிறது. இன்றைக்கு ‘தேசபக்தி’ என்பதும் ‘இந்து’ என்பதும் உங்கள் அரசியல் ஆயுதமாகிவிட்டது!

இந்து மதம் என்ற பெயரால் இங்கு அனைவரையும் ஒன்றிணைப்பது கூடத் தவறில்லை. அது அரசின் நிர்வாக வசதிக்கு உதவினால் அதற்கு ஒத்துழைக்கலாம். ஆனால், ஒவ்வொரு மதத்தில் உள்ள தனித்தன்மை, வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் அழித்து, அவற்றை பிராமண மதமாக்குவது தான் பிரச்சினையே! இந்து மதத்தின் ஒரே மொழியாக சமஸ்கிருதத்தை நிறுவ முயல்வது தான் சிக்கலே!

வரலாற்று காலத்திற்கு முன்பே தோன்றி, இன்று வரை நிலைத்திருக்கும் மதங்களான யூத மதம், கிறிஸ்துவ மதம் என இரண்டை எடுத்துக் கொள்வோம். யூத மதத்தில் இருந்து பிரிந்து தான் கிறிஸ்துவ மதம் உருவானது! இந்த இரண்டு மதங்களும் இன்றளவிலும் தனித்து தான் இயங்குகின்றன! இவற்றில் எதுவும் ஒன்றையொன்று விழுங்கத் துடிக்கவில்லை! ஆனால், இந்த பிராமணமதம் மட்டும் நம் நாட்டில் உள்ள எல்லா மதங்களையும் உண்டு செறிக்க நினைக்கிறதே?

நிர்வாக வசதிக்காக பார்பனர்களை முன்னேறிய சாதி என்கிறோம். நிர்வாக வசதிக்காக ‘பார்வர்டு கேஸ்ட்’ என்பதை குறிக்க ‘எப்.சி’ என்கிறார்கள்! நாம் எந்த பிராமணரிடமாவது, ”நீங்கள் எந்த சாதி?” என்றால், நான் ‘எப்.சி’ எனச் சொல்லுவதில்லை. தங்களை ‘ஐயர்’ என்றோ, ‘ஐயங்கார்’ என்றோ தான் குறிப்பிட்டுக் கொள்வார்கள்! மிகவும் பிற்பட்டவர்கள் என்ற வகையில் வன்னியர்கள், முக்குலத்தோர் இருவரும் உள்ளனர். ”நீங்கள் எந்த சாதி?” என்றால், இவர்கள் ‘வன்னியர்’ என்றோ, ‘முக்குலத்தோர்’ என்றோ அல்லது அவற்றின் உட்பிரிவையும் சேர்த்தோ சொல்வார்களே அன்றி, எம்.பி.சி என சொல்லமாட்டார்கள்! அரசாங்கம் கெஜட்டிலே போட்டுவிட்டது என்பதற்காக சாதியை இந்த நாட்டில் யார் ஒருவரும் மாற்றி பெயர் சொல்லத் தயாராக இல்லை. ஆனால், மதத்தை மட்டும் பெயர் மாற்றி வைத்தால் எப்படி ஏற்பார்கள்?

இராஜராஜ சோழன் காலத்தில் எங்கே இந்து மதம் இருந்தது? ஆனால், இஸ்லாமிய மதம் இருந்தது. அந்த இஸ்லாமிய மதத்திற்கு ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நிறைய உதவிகள் செய்த செய்திகள் உண்டு! ஆக, நாம் வேண்டுவதெல்லாம் அவரவர்களை அவரவர்களின் தனித்தன்மையோடு வாழவிடுங்கள்! நாம் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டி வாழ்வோம்! மாறாக உங்கள் அதிகாரத்திற்காக, பிழைப்பிற்காக எங்களை விழுங்கி செறிக்காதீர்கள்!

Source: chakkram.com 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...