இலங்கையில் ஜனநாயகத்துக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது!

 இலங்கையில் ஜனநாயகத்துக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது!

 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றிருக்கிறார்.

இதுவரை காலமும் பதவி வகித்த இலங்கையின் ஜனாதிபதிகள் (டி.பி.விஜேயதுங்கவைத் தவிர) மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலமே ஜனாதிபதியாகத் தெரிவாகி வந்த சூழ்நிலையில் ரணில் வேறு வழியில் ஜனாதிபதியாகி இருக்கிறார்.
அவர் யூலை 20 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்கள் மத்தியில் நடத்திய வாக்கெடுப்பில் அதிகப்படியான (134) வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகி இருக்கிறார்.
எதிர்ப்புக் கிளர்ச்சிகள் காரணமாக ஜனதிபதி பதவியைத் துறந்ததுடன், நாட்டையும் விட்டு வெளியேறிச் சென்றுள்ள கோத்தபாய ராஜபக்சவின் எஞ்சிய பதவி காலம் (2024 வரை) முழுவதும் ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். (சில வேளைகளில் கோத்தாவுக்கு எதிராக எழுந்தது போன்ற எதிர்ப்புகள் போன்று ரணிலுக்கும் ஏற்பட்டு, அதனால் ரணிலும் இடை நடுவில் பதவி விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
ரணில் ஜனாதிபதியான விடயம் மிகவும் சுவாரசியமிக்கதும் எதிர்பாராததுமாகும். (ரணில் கூட சில வேளைகளில் தனக்கு இவ்வாறு ஒரு அதிர்ஸ்டம் வரும் என எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம்) வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்ப்பது இந்தச் சூழலில் பயனுள்ளது.
 
ரணிலின் தலைமைத்துவ ஆற்றலின்மையால் ஐ.தே.க. தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த போது கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றி கோஸ்டி மோதல்கள் உருவாகின. கட்சி காப்பாற்றப்பட வேண்டுமானால் ரணில் தலைமைப் பதவியில் இருந்து விலகி கூடுதலான உறுப்பினர்கள் விரும்பும் ஒருவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என கட்சியின் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை பலரும் வலியுறுத்தினர்.
ஆனால் ரணில் பதவி விலக பிடிவாதமாக மறுத்ததால் கட்சி பிளவுபட்டது. பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் கட்சியின் பிரதி தலைவராக இருந்த சஜித் பிரேமதாச தலைமையில் பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தனர். அந்தக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 50 இற்கும் அதிகமான ஆசனங்களை வென்று நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாகவும் பதவி வகிக்கின்றது. அதன் தலைவர் சஜித் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார்.
மறுபக்கத்தில், ரணில் தலைமையிலான ஐ.தே.க. கடந்த பொதுத் தேர்தலில் ஒரு உறுப்பிரைக் கூடப் பெற முடியவில்லை. ஆனால் ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது 1978 இல் அறிமுகப்படுத்திய புதிய அரசியல் சட்டம் மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறை காரணமாக பொதுத்தேர்தலில் ஐ.தே.க. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் ரணிலுக்கு மட்டும் கட்சி சார்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி கிடைத்தது. அதன் மூலம் அவர் ஐ.தே.கவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க. அடைந்த படுதோல்வியை வைத்துக் கணக்கிட்ட பலர் இனிமேல் ஐ.தே.கவுக்கும் ரணிலுக்கும் எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கே வந்திருந்தனர். ஆனால் வரலாறு அதிசயிக்கத்தக்க முறையில் எதிர் திசையில் சென்றுள்ளது.
அதாவது, யாரும் எதிர்பார்க்காத வகையில் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில், இப்பொழுது அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ஆகி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத ஒரு கட்சியின் தலைவர் நாட்டின் அதியுயர் பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கிறார் என்றால், இதை அதிசயம் என்பதா அல்லது பலரும் சொல்வது போல விதி என்று சொல்வதா? ரணிலுக்கு இந்த அதிர்ஸ்டம் எவ்வாறு வாய்த்தது?
இலங்கையில் அதிகாத்தில் இருந்த ராஜபக்சாக்களின் அரசாங்கம் மேற்குலக சக்திகளுக்கு இசைவானதாக செயல்படவில்லை. அதே நேரத்தில் மேற்குலகின் (இந்தியாவினதும்) பரம வைரியான சீனாவுடன் நெருங்கிய நட்புறவுகளைப் பேண ஆரம்பித்தது. அதனால் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என அவர்கள் விரும்பினர். (2015 இல் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து இவ்வாறான மாற்றமொன்றை ஏற்படுத்திய போதிலும் பின்னர் நடந்த தேர்தல்களில் அவர்கள் தோல்வியடைந்திருந்தனர்)
முன்னைய அனுபவங்களைக் கணக்கிட்ட அவர்கள், தேர்தல்கள் மூலம் ராஜபக்சாக்களை வீழ்த்த முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தனர். எனவே, வேறு வழிமுறைகளைக் கைக்கொண்டு ராஜபக்சாக்களை வீழ்த்துவதற்கு அவர்கள் தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அதற்கான பொருத்தமான சூழலும் உருவானது.
கொவிட் தொற்றால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, டொலர் கையிருப்பு வற்றிப் போனது. அதனால் அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், மருந்து வகைகளை இறக்குமதி செய்ய முடியாத சூழல் தோன்றி அரசுக்கெதிரான மக்கள் எதிர்ப்பை உருவாக்கியது. இந்தச் சூழ்நிலையில் கோத்தபாய அரசு மேற்கொண்ட சில புத்திசாலித்தனமற்ற (உர இறக்குமதிக்குத் தடை, கொவிட் தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அவர்களது மத சம்பிரதாயத்தை மீறி எரித்தமை போன்ற) நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இன்னொரு பக்கத்தில் ரஸ்ய – உக்ரைன் மோதலும், அதன் காரணமாக ரஸ்யா மீது மேற்குலகம் விதித்த பொருளாதாரத் தடைகளும் எரியிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி விட்டன.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சாக்களின் குடும்பங்கள் நாட்டைக் கொள்ளையடித்ததும், சர்வாதிகார ஆட்சி நடத்துவதும், சீனாவினால் ஏற்பட்ட கடன் சுமையும்தான் காரணங்கள் என்ற பிரச்சாரத்தை முதலாளித்துவ ஊடகங்கள் பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தன. அந்தப் பிரச்சாரத்துக்கு மேற்கத்தைய ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன.
இந்தச் சூழ்நிலையில்தான் 'ராஜபக்சாக்கள் பதவி விலக வேண்டும்' என்ற கோசத்துடன் சில குழுக்கள் கொழும்பு காலிமுகத் திடலில் நிரந்தரமாகத் தங்கி போராட்டத்தை நடத்த ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்துக்கு இடதுசாரி போர்வையுடன் செயல்படும் ஜே.வி.பி. அதிலிருந்து பிரிந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சி என்பன பின்னணியிலிருந்து ஆதரவு கொடுத்தனர். அவர்கள் மட்டுமின்றி, சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன் போன்றவர்களும் பகிரங்க ஆதரவு வழங்கினர்.
அது மட்டுமல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலிமுகத் திடலில் கூடாரங்கள் அமைத்து உல்லாச வாழ்வு வாழ்வதற்காக மேற்குலக சக்திகள் கோடிக்கணக்கில் நிதியுதவியும் வழங்கினர். ஆரவும் வழங்கினர். (போராட்டம் உக்கிரமடைந்திருந்த வேளையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்கவை தேடிச் சென்று சந்தித்து, புகைப்படமும் எடுத்தார் என்றால், இந்தப் போராட்டத்தில் உந்துவிசையாக யார் யாரெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியும்)
போராட்டக்காரர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக முதலில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அவரது பதவி விலகல் ரணிலுக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் கோத்தபாயவும் ஜனாதிபதி பதவியைந் துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவரது பதவி விலகல் அரசியல் சாசன அடிப்படையில் ரணிலுக்கு இப்பொழுது ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இலங்கையின் படு பிற்போக்கான வலதுசாரிக்கட்சியும், அமெரிக்காவின் நீண்ட கால விசுவாசக் கட்சியுமான ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எவ்விதமான தேர்தல்களிலும் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெறாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், இலங்கையின் ஜனநாயகம் அற்ற அரசியல் அமைப்பாலும் குறுக்கு வழியில் ஜனாதிபதி ஆகி இருக்கிறார்.
மறுபக்கத்தில் 69 இலட்சம் மக்களின் நேரடி ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக வந்த கோத்தபாய ராஜபக்சவும், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைத்து பிரதமர் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவும் ஆட்சி செய்ய விடாது 'போராட்டம்' என்ற பெயரில் துரத்தப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இலங்கையில் ஜனநாயகத்தின் தற்போதைய நிலை.
ஆனால், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆட்சியில் இருந்த தனிநபர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதை விரைவில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியும் நிரூபிக்கும். அப்பொழுது இந்த காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களும், அவர்களது சர்வதேச எஜமானர்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நாட்டு மக்கள்தான் பாவம்!
Source: vaanavil 139 July 2022  

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...