நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைய இடமளிக்கலாகாது!

 

நாட்டில் எரிபொருள் நெருக்கடி படிப்படியாகத் தணிந்து செல்லுமென்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூவரிசை இன்னும் முடிவுக்கு வரவில்லை. முன்னரைப் போன்று கிலோ மீற்றர் தூரமான கியூ வரிசை தற்போது இல்லை. அவ்வரிசைகளின் தூரம் பெரிதும் குறைந்து காணப்படுகின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான மோதல்களும் பெரிதும் குறைந்திருக்கின்றன.

இந்நிலையில் எரிபொருள் நெருக்கடியானது படிப்படியாக முடிவுக்கு வந்து விடுமென்ற நம்பிக்கை தற்போது மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. முன்னரைப் போலன்றி தற்போது கூடுதலான எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகின்றன. எரிபொருள் விநியோகமும் ஓரளவு சீரமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை படிப்படியாக நீங்கி விடுமென்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேசமயம் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஓரளவு நீங்கியுள்ளது.

ஆகவே மக்கள் பொறுமையைப் பேணி இன்றைய நெருக்கடி நிலைமையைக் கடப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம். மக்களின் எரிபொருள் தேவை அரசாங்கத்துக்குப் புரியாததல்ல. எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அனுபவிக்கின்ற சிரமங்களும், வேதனையும் அனைவருக்குமே புரிகின்றது. ஆனால் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக மக்களின் தேவைக்குப் போதுமான அளவு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் தற்போது சிக்கல்கள் காணப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடியானது படிப்படியாக நீங்குமென்ற நம்பிக்கைகள் தென்படுவதால் நாட்டுக்கான எரிபொருளை போதுமான அளவு கொண்டு வருவதற்கான நிலைமையும் படிப்படியாக ஏற்பட்டு விடுமென்பதே நம்பிக்கையாக உள்ளது. பொருளாதார நெருக்கடியும், எரிபொருள் பற்றாக்குறையும் எந்நாளும் நாட்டில் தொடரப் போகின்றதென்ற அவநம்பிக்கையிலிருந்து மக்கள் விடுபட வேண்டியதும் அவசியமாகின்றது.

கடந்த காலத்தில் அரசினால் கடைப்பிடிக்கப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமென்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவ்வாறான தவறான பொருளாதாரக் கொள்கைகளைச் சீரமைத்து, நடைமுறைச் சாத்தியமான வழியில் நாட்டை முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதனாலோ அல்லது எரிபொருள் வழங்குமாறு கோரி பெற்றோல் நிலையங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாலோ நெருக்கடி நிலைமைக்கு தீர்வு ஏற்பட்டு விடப் போவதில்லையென்பதை மக்கள் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய இக்கட்டான நிலைமையிலிருந்து விடுபடுவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டியதே நாட்டின் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாகும்.

எது எவ்வாறாயினும் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சரிவரப் பேணப்படுவது மிகவும் அவசியம். எரிபொருள் நிலையங்களில் குழப்பம் விளைவித்து வன்முறையில் ஈடுபடுவதால் எவ்வித பயனும் இல்லை. அவ்வாறு வன்முறையில் ஈடுபட்டு சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது சட்டப்படி குற்றமாகும். சட்டம் சீர்குலைவதற்கோ, சட்டத்தை தனிமனிதர்கள் தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு அராஜகச் செயல்களில் ஈடுபடுவதற்கோ இடமளித்தால் ஒட்டுமொத்த நாடும் களேபரமாகி விடுமென்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் சமீப காலத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் ஏராளமான உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொதுச்சொத்துகளும் அடங்குகின்றன. பொதுச்சொத்துகள் களவாடப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் சில தரப்பினர் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தனிநபருக்குச் சொந்தமான சொத்துகளையும் அரச உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் சட்டத்தின்படி மோசமான குற்றச் செயல்களாகும். இவற்றுக்கு மன்னிப்பளித்தால், எதிர்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான துணிச்சல் எவருக்குமே இலகுவாக வந்து விடும்.

குழப்பநிலைமையை கட்டுப்படுத்துவதற்குச் சென்ற பொலிசாரை மோசமாகத் தாக்கியுள்ளனர். பல இடங்களில் பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது கடமையைச் செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்களுக்கு வன்முறை வேளைகளிலும், அனர்த்தங்களின் போதும் பாதுகாப்பு தருபவர்கள் பொலிசாரும் பாதுகாப்புப் படையினருமே என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தமது பாதுகாப்புக்கு ஆபத்து வருகின்ற போது முதலில் பொலிசாரையே உதவிக்கு அழைக்கின்றனர்.

ஆனால் மக்களுக்குப் பாதுகாப்பு தருகின்ற உத்தியோகத்தர்களே தாக்கப்படுகின்ற போது அவர்கள் எவ்வாறு மக்களுக்குப் பாதுகாப்புத் தர முடியும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசாங்கத்துக்கு எதிராக சாத்விக ரீதியில் நடவடிக்கைகளில் ஈடுபட எவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் எதிர்ப்பு நடவடிக்கை என்பதன் பேரில் நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கலாகாது!

தினகரன் ஆசிரியர் தலையங்கம்
2022.07.29

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...