வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்-– அ. மார்க்ஸ்



ஜுலை 5: ஸ்டான் சாமி நினைவு நாள்

நீதியரசர் மதன் லோகூரிடம் இரு கேள்விகள்:
அருட்தந்தை ஸ்டான் சாமி (Stan Swamy) மரணத்திற்குத் தள்ளப்பட்ட சூழலைக் கடுமையாக விமர்சித்து வருபவர் நீதிபதி மதன் லோகூர். உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், இரு மாநிலங்களில் தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வு பெற்றபின் தற்போது ஃபிஜி யின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் உள்ள மதன் லோகூர் தொடர்ந்து ஸ்டான் சாமிக்கு இழைக்கப்பட்ட நீதியைக் கண்டித்து வருபவர். ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் NIA மற்றும் பீமாகொரேகான் வழக்கு விசாரணை நீதிமன்ற அணுகல் முறை ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இரண்டு கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் மட்டும் இங்கே:
கேள்வி (i) : சட்டவிரோத நடவடிக்கைச் சட்டத்தின் 43[டி]5 பிரிவு (UAP Section 43[D] 5) குற்றச்சாட்டு நிரூபிக்கப் படுவதற்கு முன்பே வெறும் ஊகத்தின் பேரில் ஜாமீனில் விடுதலையை மறுப்பதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. ஸ்டான் சாமி உயிருக்குப் போராடிய நிலையிலும் அவருக்குப் பிணை வழங்காவில்லை. அது மட்டுமல்ல கடைசிக் கட்டத்திற்கு முன்புவரை அவருக்கு உரிய மருத்துவ வசதி அளிக்கப்படாமல்தான் அவர் மரணத்திற்கு ஆளாகியுள்ளார். சிறைச்சாலைக்கு வரும்போது அவர் அந்நிலையில் இல்லை. இந்த ஆறு மாதாகால சிறை அவலங்கள்தான் ஓரளவு கட்டுப்பட்டிருந்த இருந்த பார்கின்சன் நோய் அவரைக் கொல்லக் காரணமாகியுள்ளது. இந்த அதிகாரத்தை அரசின் விசாரணை அமைப்பிற்கு வழங்கும் UAP Section 43[D] 5 பிரிவை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்குமா?

நீதிபதி மதன் லோகூர்: பரிசீலிக்கப்படுதல் அவசியம். ’எந்தக் காரணத்திற்குக் கொண்டும் ஒருவருக்கு பிணையில் (‘பெயில்’) விடுதலை அளிக்கக் கூடாது எனச் சொல்லும் எந்தச் சட்டமும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எவ்வளவு விரிவாக இந்தப் பிரிவை நாம் உதறித் த்ள்ளுகிறோமோ அத்தனைக்கும் அது நல்லது. “பிணை விடுதலை அளிக்கப்பட முடியாத குற்றங்கள்” எனும் கருத்தை அப்படியே பொருள் கொண்டு நீதிமன்றங்கள் செயல்படுமேயானால் அது இன்னும் ஆழமான சிக்கலுக்குள் நம்மைத் தள்ளும்.

கேள்வி (ii) : அரசியல் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகிய பலர் இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கின்றனர். தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இவர்களை விடுதலை செய்யக் கூடாது எனவும் கூறப்படுகிறது. இதற்கான UAPA போன்ற கொடும் சட்டங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றதா?

மதன் லோகூர்: நீதித்துறை இதில் தலையிடுவது மிக மிக அவசியம். அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது நீதிமன்றம் தலையிடுவது அவசியம். அப்படி இல்லாதபோது நம் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு நாம் “குட் பை” சொல்ல வேண்டியதுதான்.

இரண்டு

எல்லோராலும் மதிக்கப்படும் டாக்டர் பினாயக் சென் அவர்கள் ஆயுள் தண்டனை வரை சென்று பின் விடுதலை ஆன வரலாறை நாம் அறிவோம். ராய்ப்பூர் நீதிமன்றத்தில் அவர் மீதான அந்த வழக்கு நடந்தது. அப்போது பினாயச் சென்னின் குடும்ப நண்பரும் டெல்லியில் உள்ள Indian Social Institute (ISI ) இன் தலைவராகவும் இருந்த வால்டர் ஃபெர்னாண்டசுக்கு பினாயக் சென்னின் இணையரும் செயல்பாட்டாளருமான டாக்டர் இலினா சென் அவர்கள் அனுப்பிய ஒரு இமெயில் அனுப்புகிறார். அதில் வால்டர் ஃபெர்னாண்டசின் பெயருக்கு அடுத்து அவரது நிறுவனமான ISI அதில் குறிப்பிடப்படுகிறது. டெல்லி லோடி சாலையில் அந்த நிறுவனம் இன்றும் உள்ளது. பினாயக் சென்னுக்கு எதிராக வாதிட்ட அரசு வழக்குரைஞர் டி.சி.பாண்டியா என்பவர், அந்தக் கடிதத்தை ஒரு குற்ற நிரூபண ஆதாரமாக முன்வைத்தார். அதெப்படி என்கிறீர்களா, அது பெரிய நகைச்சுவை.. பாகிஸ்தானின் ISI நிறுவனத்திற்கும் பினாயக் சென் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது என அரசுத்தரப்பு முக்கிய சாட்சியங்களில் ஒன்றாக அவர் அதை முன்வைத்தார். இப்படியான ’தேசத்துரோக, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான சாட்சியங்கள்’ என்றெல்லாம் அபத்தங்களை முன்வைத்துத்தான் UAPA சட்டத்தின் கீழ் இன்று பல நூறு பேர்கள் பல ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து அவர்கள் மீதான குற்றம் நிறுவப்படவில்லை என அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அதற்குள் அவர்கள் வாழ்க்கை அழிந்து குட்டிச் சுவராக ஆகியிருக்கும். இது மிகையில்லை.

மூன்று

கைதின்போது ஸ்டான் சாமி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியது: “என் கம்ப்யூட்டரில் இருந்து எடுத்ததாகச் சில ஆவணக்களைக் காட்டி மாவோயிஸ்ட் ‘சதியில்’ நானும் ஓர் அங்கம் எனக் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியான ஆவணங்களை நான் பார்த்தது கூடக் கிடையாது. அப்படி எதையும் நான் கணினியில் வைக்க இல்லை”. அதன் பின் ”வாஷிங்டன் போஸ்ட்” அதிரடியாக ஒரு உண்மையை அம்பலப்படுத்தியது. நான் அதை அப்போதே என் முக நூல் பக்கத்தில் எழுதி இருந்ததை நீங்கள் பாத்திருக்கலாம். லேப் டாப் பயன்படுத்துபவர்களுக்கே தெரியாமல் அவர்களின் லேப் டாப்களுக்குள் தந்திரமாக அவர்களைச் சிக்க வைக்கும் போலி ஆவணங்களை வெளியிலிருந்து திணிக்கும் ஒரு கொலைகார உத்தி பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சட்டப்பட்ட சிலர் லேடாப்களில் பயன்படுத்தப்பட்டுள்ள உண்மையை ஆதாரங்களுடன் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நிறுவியது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான சதிகள் செய்தவராக ரொனா வில்சன் முதலானோர் இப்போது குற்றம் சாட்டப்பட்டது அப்படித்தான்.

வாஷிங்டன் போஸ்ட் இதை எல்லாம் ஏதோ சும்மா போகிற போக்கில் சொல்லிச் செல்லவில்லை. Arsenal Consulting எனும் தொழில்நுட்ப நிறுவனம் இதை ஆதாரபூர்வமாக நிறுவி உலகறியச் செய்தது. இப்படியான கொடூரமான “குற்றத்தை நிறுவும் ஆவணங்களை” (Net wire Malware) பயன்படுத்தி லேப் டாப் வைத்திருப்பவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கணினிக்குள் திணிக்கும் வித்தையை ’ஆர்சனல் கன்சல்டண்ட்’ நிறுவனம் எல்லோர் முன்னும் செயல்படுத்திக் காட்டியது.

(அருட்தந்தை ஸ்டான் சாமி குறித்து அ.மார்க்ஸ் எழுதிக் கொண்டிருக்கும்  குறு நூலிலிருந்து)

Source: chakkram.com

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...