மக்களின் நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

 

நாடு கடந்த சில மாதங்களாக முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் கொதிநிலை வரை வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் காரணமாக அரச நிர்வாக செயற்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் இடையூறுகளும் பாதிப்புகளும் ஏற்படக் கூடிய நிலைகளும் உருவாகியுள்ளன.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் ஏற்கனவே பலவித அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில், மணித்தியாலயக் கணக்கில் காத்திருக்கும் நிலைக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பொருளாதார நெருக்கடியின் பலவித அசௌகரியங்களுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அவர்களை மேலும் அசௌகரியங்களுக்குள் தள்ளிவிடும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் பிரதேசங்களில் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடுமையான நெரிசல்களை எதிர்கொண்டுள்ளன. இதன் விளைவாக பயணிகள் மணித்தியாலயக்கணக்கில் பஸ் வண்டிகளுக்குள், வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணத்தினால் வைத்தியசாலைகளிலும் ஏனைய பொதுநிறுவனங்களிலும் உரிய நேர காலத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத அசௌகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இவை இவ்வாறிருக்க, நாட்டின் நிர்வாக செயற்பாடுகளுக்கும் பொது சேவைகளும் கூட இடையூறுகளும் பாதிப்புகளும் கூட ஏற்படக் கூடிய வகையில் நிலைமை அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனநாயக நாடு என்ற வகையில் தம் கோரிக்கைகளின் நிமித்தம் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் முன்னெடுப்பதற்கு உரிமைகள் காணப்படுகின்றன. ஆனால் மக்கள் அசௌகரியங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கும் வகையில் நிலைமை அமைந்து விடக் கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இந்நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சில வாரங்களுக்கு பின்னர் தற்போது நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனைப் பாவனையாளர்களுக்கு விரைவாகவும் துரிதாமாகவும் கிடைக்கப்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகளுக்கும் கூட இந்த ஆர்ப்பாட்டங்கள் சில பிரதேசங்களில் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளன. இது மக்கள் ஏற்கனவே முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே காணப்படுகின்றது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள சூழலிலும் பலவித சிரமங்களுக்கு மத்தியில் எரிவாயுவைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தும் எரிவாயுவுக்காக பல நாட்களாகக் காத்திருக்கும் மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடையூறாக அமைந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டில் தங்களது கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உரிமைகள் இருப்பது போன்று மக்கள் தங்களது சேவைகளை இடையூறுகள் இன்றி பெற்றுக் கொள்ளவும் உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சர்வமதத் தலைவர்கள், மக்கள் தமக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய உரிமைகளை பாதிக்கக் கூடிய வகையில் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், சட்டம், ஒழுங்கை மதித்து செயற்படத் தவற வேண்டாம் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் வன்முறைகள் மற்றும் கலவரங்களை நாட வேண்டாம் என்றும் பொறுமையுடனும் தூர நோக்குடனும் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதே வேண்டுகோளை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விடுத்திருக்கின்றனர்.

இவற்றின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் மக்களின் இயல்பு வாழ்வில் எவ்வளவு தூரம் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன என்பது தெளிவாகின்றது. நாடும் மக்களும் பொருளாதார நெருக்கடியின் பலவித அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள தற்போதைய சூழலில், நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்படத் தவறலாகாது. அதுவே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்விடயங்களில் கவனம் செலுத்தத் தவறும் பட்சத்தில் நாடும் மக்களும் மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகவே நேரிடும்.

ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவது ஒவ்வொருவரது பிரஜையினதும் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றால் அது மிகையாகாது.

-தினகரன் ஆசிரியர் தலையங்கம்

 

Source: chakkram.com
2022.07.14

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...