உணவுக்காக ஏங்கும் உலகம் – ஆயுதங்களைத் திணிக்கும் நேட்டோ

 

ரலாறு காணாத அளவிற்கு உலக அளவிலான பட்டினியில் நாம் சிக்கித் தவிக்கிறோம் என்று அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) தெரிவித்திருக்கிறார். சுற்றுச்சூழல் மாற்றங்கள், அசமத்துவம், வறுமை, உலக நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் மற்றும் நாடுகள் மீது தடைகளைப் போடும் கொள்கைகள் ஆகியவற்றால் உணவுப் பற்றாக்குறை பெரும் அளவில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோடிக் கணக்கான மக்கள் உணவு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நெருக்கடியால் உருவாகும் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது என்று குட்டரெஸ் எச்சரிக்கை விடுக்கிறார்.  2022 ஆம் ஆண்டில் ஏராளமான பகுதிகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இதை விட மோசமாக இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து குட்டரெஸ் கூறுகையில், “ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் உலகம் சிக்கியிருந்த நிலையில், உக்ரைன் போர் அதை அதிகரிக்கச் செய்துவிட்டது. கட்டுக்குள் அடங்காத அளவுக்கு உணவு மற்றும் எரிபொருள் விலைகள் எகிறியதற்கு முக்கியமான காரணங்களில் இந்தப் போரும் ஒன்றாகும். உக்ரைனில் அமைதி ஏற்பட ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் அதிகரிக்க வேண்டும். போரில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகளிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றை விடுவிக்க வேண்டும்” என்கிறார்.

2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உலக அளவிலான உணவு இறக்குமதியின் மதிப்பை விட, நடப்பாண்டில் 5 ஆயிரத்து 100 கோடி அமெரிக்க டாலர் அதிகமாகக் கொடுக்க வேண்டியது வரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தனியார் துறை உதவி செய்ய வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைகள் கண்டு கொள்ளப்பட வில்லை. குறைவான அளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் பாதிக்கப்பட்ட நாடுகள், அதிகமான அளவு  பணத்தை செலவழிக்கும் அவல நிலை உள்ளது.

ஆயுதங்களை வாங்குங்கள்

அமைதிக்கான அறைகூவல்கள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை நீக்குங்கள் என்று உலகமே கேட்டுக் கொண்டிருக்கையில், அமெரிக்கா  தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணி, ஆயுதங்களை வாங்குங்கள் என்று அறைகூவல் விடுத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் ஜனவரியில் இருந்து மே மாதம் வரையில் மட்டுமே உக்ரைனின் தலையில் 4,000 கோடி (40 பில்லியன்) அமெரிக்க டொலர்  மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா  கட்டிவிட்டிருக்கிறது. மேலும், ஐரோப்பிய யூனியனின் தரப்பிலிருந்து 2 ஆயிரத்து 700 கோடி (27பில்லியன்) யூரோக்கள் மதிப்பிலான ஆயுதங்களும் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு மட்டுமல்ல, பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதங்களை வாங்க இந்த நாடுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் இலாபம் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஆயுதங்களைத் திணிப்பதில் முனைந்து நிற்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் உலக உணவு நெருக்கடியைத் தீர்க்க வெறும் 500 கோடி (5 பில்லியன்) டொலர் மட்டுமே பங்களிப்பு செய்துள்ளன.

அமெரிக்காவின் கவனம் முழுக்க போர் நின்று விடாமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது. அவர்கள் மற்றும் அவர்களின் நெருக்கமான கூட்டாளிகள் விடும் அறிக்கைகள் அனைத்தும் அகங்காரத்தையே வெளிக்காட்டுகின்றன. பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவது பற்றியே அந்த அறிக்கைகள் பேசுகின்றன. ரஷ்யா, சீனா, கியூபா,  ஈரான், சிரியா மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளுக்கு எதிரான போக்கைக் கடைப் பிடிக்குமாறு பிற நாடுகளைக் கட்டாயப்படுத்துகிறார்கள். அண்டை நாடுகள் மீது  தாக்குதல்கள் தொடுக்குமாறு இஸ்ரேலைத் தூண்டிவிடுகிறார்கள்.

எதிர்த்திசையில் நேட்டோ

மனிதகுலத்தையே அச்சுறுத்தும் பிரச்சனைகள் இருக்கும் நிலையில்,  போர்த் தளவாடத்துறையில் முதலீடு, மாஸ்கோவை முற்றுகையிடுவது, ஐரோப்பிய நாடுகளில் புதிய அமெரிக்க படைத்தளங்கள் உள்ளிட்டவை பற்றிப் பேச உச்சிமாநாடு ஒன்றை நேட்டோ ஏற்பாடு செய்தது. இதில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போலந்து, ருமேனியா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் அமெரிக்காவின் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகக் குறிப்பிட்டார். இந்த நேட்டோவின் உச்சிமாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் வல்லுநர் ஒருவர், நேட்டோ  “மூளைச்சாவு” அடைந்துவிட்டதாக பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உக்ரைனைப் பலி கொடுத்து நேட்டோவின் விரிவாக்கத்திற்கான முயற்சி நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: chakkaram.com 27 July 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...