கெடுகுடிச் சிறுபிள்ளை வேளாண்மை-ரவீந்திரன் நடேசன்




முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னே, நான் பணியாற்றிய பாடசாலையில் மூத்த ஆசிரியர் ஒருவர் ‘சிறுபிள்ளை வேளாண்மை…’ என்ற பழமொழியை முழுமைப்படுத்தச் சொன்னார்; எல்லோரையும்போல ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்றேன்.

அப்படியல்ல என்றவர் முழுமையான அந்தப் பழமொழியைச் சொன்னார்:
“சிறுபிள்ளை வேளாண்மை
விளைந்தாலும்
வீடு வந்து சேராது!”

அப்போதுதான் இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் யுத்தத்தைத் தொடங்கி இருந்தார்கள்; ‘இவர்களுடைய போராட்டம் வென்றுவிட்டது போல வரும், ஆனால் பலனைக் கையிலெடுக்க மாட்டார்கள்’ என்ற விளக்கத்தையும் சொன்னார்.

அரசியல் ரீதியாக அந்தப் புரிதல் ஏற்கனவே இருந்தாலும் பொது மக்களது அனுபவ வார்த்தையாக அவர் சொன்னது இதயத்தைத் தொடுவதாக இருந்தது!

இப்போது மார்க்சிய வழிகாட்டலுள்ள முன்னிலைச் சோசலிசக் கட்சி (மு.சோ.க.) இன்றைய போராட்டத்தை முன்னெடுப்பதால் இது சோடைபோகாது என்று கங்கணம் கட்டுகிறவர்களைக் காண இயலுமாக இருக்கிறது;
கால தேச நிலவரங்களுடன் ஒத்து இயங்கும் (வளர்த்து எடுக்கப்பட்டதான) மார்க்சியப் பிரயோகமாக இல்லாத  கிழடுதட்டிப்போன வறட்டு வசனங்களை மார்க்சியமாக மயங்குவதால் வரும் கெடுபுத்தி இது!

மு.சோ.க. மார்க்சியம் என்ற பெயரில் ரோஹண விஜயவீரவால் குறுகத்தறிக்கப்பட்ட (சிறுமுதலாளி வர்க்க நோக்கு நிலைக்குரிய) அரைவேக்காட்டு அரசியலைப் பின்பற்றும் அமைப்பு!

ரோஹண விஜயவீரவை மதித்தால் தவறில்லை; அவரது பாதையை அப்படியே பின்பற்றுவது மீண்டும் இளைஞர் சக்தியை நெருப்பாற்றுக்குள் மூழ்கடிக்கவே வழிகோலும்.


புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்து கொண்டே பாராளுமன்ற (திரிபுவாத) மார்க்கத்தில் இயங்கிய கொம்யூனிஸ்ட் கட்சியின் ‘மசாலா தோசை வடை வேண்டாம் (எப்பா)’ என்ற கோசத்துடன் முன்னெடுக்கப்பட்ட இனவாத ஊர்வலத்தில் பங்கெடுத்தமைக்காக கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் ரோஹண விஜயவீர!

இன்று அவரால் தொடக்கப்பட்ட ஜே.வி.பி. இன் வரலாற்று நூல்களைப் பார்த்தால் இந்த விலக்கலுக்கு இரண்டொரு வருடங்களுக்கு முன்னரே (1965 இல்) இரகசியமாகத் தனக்கான அமைப்பை உருவாக்கி உள்ளார் என்று தெரிய வருகிறது. கட்சி அமைப்பு முறைக்கு விரோதமான குழுச் சேர்ப்பு, சிங்களத் ‘தேசியவாத மார்க்சிய’ திரிபு என்ற முதல் கோணல்களுடன் தான் அவர் அமைப்பைத் தொடக்கி வைத்துள்ளார்,

தொடர்ந்தும் அதேவகைத் தவறுகளுடன் வளர்த்தும் இருக்கிறார்!

அவர் முன்னெடுத்த வழிமுறை, இளைஞர்களை அணிதிரட்டிப் போராட்ட வளர்ச்சி எட்டப்பட்டால் மக்களும் வந்து கலந்துவிடுவர் என்பது; இன்று அதே பாதையில் மு.சோ.க. காலிமுகத் திடலில் தொடக்கிய போராட்டம் மக்கள் போராட்டமாகப் பரிணமித்துவிட்டதாக கருதுபவர்களை என்ன சொல்ல இயலும்?

நாட்டின் அதிகார சக்தி/மேலாதிக்கவாத சக்திகள் என்பன இதுவரை போராட்ட (அரகலய) ஒழுங்குகளை அனுமதித்து வளரவிட்டது போலத் தொடர்ந்தும் வாழாதிருப்பரா; 1971 இல் மூன்று மாதங்களும் 1987-89 மூன்று வருடங்களும், ஈழப்போராட்டத்தில் முப்பது வருடங்களும் களமாட அனுமதித்து இரத்த ஆறு ஓட விட்டார்கள் என்றால் - அவற்றை வைத்தே (இதையே உரமாக்கி) மேலும் நீண்ட காலம் தமக்கான சுரண்டல் அமைப்பைப் பேணுவதற்கு  இயலும் என்பதாலே தான்!

சிறு முதலாளி வர்க்கப் ‘புரட்சியின் அவசர நோய்க் கூறு’ உடையதான போராட்டங்கள் கவர்ச்சிகரமாக இருக்கிற அளவுக்கு பயன்களை விளைப்பதில்லை.

இலங்கையின் குழப்பங்கள் இந்தியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எனக்கூறி மேலாதிக்கத்தின் ஒட்டுத்துணியாக இந்த நாட்டை மாற்றவே இந்தக் கலவரச் சூழல் வழிசமைக்கும்.
மக்கள் அரசியலுக்கான இயங்கு தளங்களை வன்முறையால் அகற்றிய இளைஞர் அமைப்புகள் கருத்தியல் அராஜக வன்முறையுடனேயே இன்று வரை செயற்படுகின்றனர்!

திருத்திக்கொள்ள இன்னமும் அவகாசம் உள்ளது.
சரியான
    கருத்தியல்
     கோட்பாடு
       மார்க்கம்
என்பவற்றைக் கண்டடைந்து வெகுஜன மார்க்க வேலைப்பாணி ஒன்றை முன்னெடுக்க ஏற்ற கற்றலைக் கடந்த கால அனுபவங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள முயல்வோம்!

-Raveendran Nadesan (Facebook)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...