சர்வாதிகாரத்தை விட வங்குரோத்து நிலை பயங்கரமானது--விக்டர் ஐவன் (Victor Ivan)


த்தியாவசியச் சீர்திருத்தங்கள் அலட்சியப்படுத்தப்பட்டதன் காரணமாக இலங்கை அரசு மற்றும் சமூக-அரசியல் அமைப்புக்குள் உருவான சிதைவின் உள்ளே அவை அனைத்தும் வீழ்ச்சியடைந்து, அதன் வழியாக நாட்டின் வீழ்ச்சிக்கும், அதைத் தொடர்ந்து இலங்கையின் திவால்நிலைக்கும் வழிவகுக்கும் என்ற கருத்து எனக்குள் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் ஏற்பட்டது. அப்போதைய நிலையில் , இலங்கை அரசு இரண்டு பெரிய உள்நாட்டு கிளர்ச்சிகளை எதிர்கொண்டு அவற்றை சிரமப்பட்டு தோற்கடித்திருந்தாலும், குறித்த கிளர்ச்சிகள் காரணமாக அரசுக்கும், சமூக-அரசியல் அமைப்புக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தது. மேற்சொன்ன இரண்டு கிளர்ச்சிகளும் அவை ஆரம்பிக்கப்பட்டவுடன் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக அவை வெகுதூரம் பரவி, கிளர்ச்சியாளர்கள் வெற்றியின் விளிம்பில் இருந்த நிலையிலேயே அவை தோற்கடிக்கப்பட்டன. ஜே.வி.பி.யின் இரண்டாவது சிங்களக் கிளர்ச்சியை 24 மாதங்கள் வரை கிளர்ச்சியாளர்களால் தாக்குப் பிடித்துக் கொள்ள முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் 24 வருடங்கள் வரையான நீண்ட காலம் வரை தமது தமிழ்க் கிளர்ச்சியைத் தாக்குப் பிடித்து முன்கொண்டு செல்ல முடிந்தது.

இந்த இரண்டு அச்சுறுத்தலான கிளர்ச்சிகளையும் மிகவும் தாமதித்தேனும் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்க முடிந்த போதிலும், குறித்த கிளர்ச்சிகள் மூலம் பாதுகாப்புப் படையினருக்கும், அரசிற்கும், சிங்கள, தமிழ் சமூகத்திற்கும், நாட்டின் சமூக அரசியல் அமைப்புக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. மேற்குறித்த கிளர்ச்சிகள் காரணமாக அழிந்து போன மனித உயிர்களின் எண்ணிக்கை 150,000க்கும் அதிகமானதாக இருக்கலாம். சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கையை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம். இந்த கிளர்ச்சிகளின் போது, கிளர்ச்சியாளர்களைப் போலவே, பாதுகாப்புப் படையினரும் போட்டி போட்டுக் கொண்டு சமூகத்தின் மீது அதிகபட்ச குரூரத்தனத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்ததுடன் அந்த நிலை ஒட்டுமொத்த சமூகத்தின் மனோநிலையை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சிதைத்து நோய்வாய்ப்படுத்திய ஒரு சூழ்நிலை உருவாகக் காரணமாக அமைந்தது. அவ்வாறான விசேட சூழலில், நாடு ஒரு பெரிய சீர்திருத்தத் திட்டத்தை நோக்கி முன்னகர்த்தப்பட ​வேண்டிய அத்தியாவசிய நிலையில் இருந்தது.

தேவையான மறுசீரமைப்புகளை புறக்கணித்தல்

மேற்குறித்த கிளர்ச்சிகள் காரணமாகவும் சட்டத்தை மேவி நிற்கும் ஜனாதிபதியைத் தலைவராகக் கொண்ட அரசியலமைப்பு காரணமாகவும், தேசத்திற்கும் சமூக-அரசியல் அமைப்புக்கும் நிகழ்ந்திருந்த கடுமையான சேதங்களை சீர்படுத்த ஒரு மறுசீரமைப்புத் திட்டத்தை தொடங்குவது நாட்டுக்கு ஒரு சிறந்த முன்னோக்கிய நகர்வுக்கு தவிர்க்க முடியாத நிபந்தனையாக இருந்த ​போதிலும், பிரபாகரனைத் தோற்கடித்ததன் மூலம் உருவான கொண்டாட்ட மனோநிலை அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதில் நாட்டின் திறனை இல்லாதொழித்து விட்டிருந்தன.

யுத்த வெற்றியின் இரண்டாம் ஆண்டு நிறைவை அண்மித்த காலப்பகுதியில், சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை நோக்கி நாட்டை வழிநடத்துவதன் முக்கியத்துவத்தை அரச தலைவர் (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) அவர்களுக்கு உணர்த்த நான் முயன்றேன். எனது வேண்டுகோளுக்கு இணங்க அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டது. அதில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர். அது தொடர்பான கலந்துரையாடல் சுமார் மூன்று மணி நேரம் நீடித்த போதிலும், ஆனால் ஜனாதிபதி எனது மறுசீரமைப்புத் தொடர்பான யோசனையை தெளிவாகப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.

அதன் பின்னர், ராவயவின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜனாதிபதி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்களை அந்நிகழ்வில் கலந்து கொள்ள வைத்து, சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு நாட்டை வழிநடத்த வேண்டியதன் அவசியத்தின் தீவிரத்தை அவர்களுக்கு வலியுறுத்திய போதிலும், அந்த வேண்டுகோள் வெற்றிகரமான உரையாடலாக மாற்றம் பெறவில்லை. அதன் பின்னர் எனது அவதானிப்பை சமூகமயமாக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு “இலங்கையை மீட்டெடுத்தல்” மற்றும் “தேசத்தின் சோகம்” என்ற இரண்டு புத்தகங்களை எழுத வேண்டியிருந்தது. குறித்த அவதானிப்பின் ஊடாக வலியுறுத்தப்பட்ட விடயம் யாதெனில் “தேவையான சீர்திருத்தங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், தேசம் மற்றும் சமூக-அரசியல் அமைப்பு சிதிலமடைதல் வளர்ச்சியடைந்து, சமூக – அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாட்டை திவால் மற்றும் வங்குரோத்து நிலைக்குள் தள்ளும்” என்பதாகும். அதன் பின்னர், அந்த அவதானிப்பை சமூகமயப்படுத்த நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுத வேண்டியிருந்தது.

மங்கள சமரவீர

கடந்த ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மங்கள சமரவீரவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் அந்த உரையின் தொனிப்பொருளாக இலங்கையின் எதிர்கால நெருக்கடி பற்றிய எனது அவதானிப்பை பயன்படுத்தினேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் நாட்டின் சமூக அரசியல் அமைப்பும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து நாடு திவாலாகி வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று நான் வலியுறுத்தி இருந்தேன். சுதந்திரமடைந்தது தொடக்கம் நாட்டின் விவகாரங்களின் குழப்பமான தன்மையைச் சுட்டிக்காட்டி நான் அந்த ஆய்வை முன்வைத்தேன். நன்றியுரையில் மங்கள எனது கருத்துக்களை ஏற்றுக்கொண்டதுடன், காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்களில் பங்காளியாகச் செயற்பட்டமை மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுக்கு தானும் ஒரு வகையில் பங்களித்துள்ளதால், அது குறித்து தாம் வருத்தமடைவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலொன்றின் போது, புத்தக வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை அவ்வப்போது தனக்குள் எதிரொலிப்பதாக மங்கள சமரவீர என்னிடம் கூறினார். பின்னர் அவர் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, முழு அமைப்பிலும் ஆழமான மாற்றத்தின் அவசியத்தை வலுவாக வலியுறுத்தும் ஒருவராக செயற்பட்டார். குறிப்பிட்ட சில முக்கிய தருணங்களில் சீர்திருத்தத் திட்டத்திற்கான வாயிலைத் திறப்பதில் தான் ஒரு முன்னோடி பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும் அவர் நம்பினார். அவர் எப்போதும் இளைய தலைமுறையினருக்கு ஆதரவாக முன்னின்றவர். ஆனால் நாட்டின் துரதிர்ஷ்டமாக இளைஞர்கள் எழுச்சி ஆரம்பிக்கப்பட முன்பே அவர் இறந்துவிட்டார். இளைஞர் எழுச்சியின் போது அவர் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? இளைஞர்களின் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை அடைவதற்காக அந்தப் போராட்டத்தை அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பொன்றுக்குள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்துவதுடன், அந்த இலக்கை அடைவதற்கு வலுவாக உறுதுணையாக இருக்கும் கொள்கையுடன் செயற்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.

வங்குரோத்து நிலையை வரவேற்றல்

மிக முக்கியமான விடயம் யாதெனில், இலங்கை நெருக்கடியின் போக்கைப் பற்றிய எனது கணிப்புகள் நிதர்சனமாகியிருப்பதன்றி, அதற்குள் உள்ளடங்கியிருந்த பயங்கரமான உண்மையான நாடு திவாலாகுவதுடன், அதனுடன் இணைந்ததாக பயங்கரமான, அழிவுகரமான தன்மையைப் புரிந்து கொள்ள நாடு தவறி விட்டதுதான். அராஜக நிலை என்பதன் மூலம் எதிர் அதிகார கட்டமைப்பொன்று உருவாக்கப்படாத நிலையில், அரசாங்கத்தின் அதிகாரக் கட்டமைப்பு சீர்குலையும் சந்தர்ப்பத்தில் ஏற்படக் கூடிய பயங்கரமானதும், குழப்பகரமானதுமான நிலையைக் குறிக்கும். பெர்ட்ரான்ட் ரஸ்ஸல், தனது அதிகாரம்: ஒரு புதிய சமூக பகுப்பாய்வு (“Power: A New Social Analysis” ) புத்தகத்தில், “சர்வாதிகாரத்தை விட அராஜக நிலை மிகவும் பயங்கரமானது மற்றும் அழிவுகரமானது” என்று கூறுகிறார். எனவே, அராஜகத்தை முறியடிக்க முதலில் சர்வாதிகார தன்மையான ஆட்சியொன்றேனும் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார். ஆனால், தற்போதைய ஊழல் நிறைந்த ராஜபக்சே குடும்ப ஆட்சியை விட அராஜக நிலையே சிறந்தது என்று இலங்கையின் கல்வியாளர்கள் கருதுவதாகத் தெரிகின்றது.

கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் நின்ற போராட்டக்காரர்கள் மீது அலரிமாளிகையில் இருந்து வந்த ஆளும் கட்சி ஆதரவாளர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியது சட்டவிரோதமான, கண்டிக்கத்தக்க, கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான சம்பவமாகவே பார்க்க முடியும். ஆனால் இதற்கு பதிலடியாக, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளர்களின் வீடுகள், உடைமைகள் மற்றும், அரிதாக, உயிர்கள் மீதான தாக்குதல்கள், காலிமுகத்திடலில் நடந்த தாக்குதல்களை விட பல மடங்கு கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமானதாக கருதப்படலாம். குறித்த தாக்குதல்களில் பொது மக்கள் சிலரும் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் அதனை முன்னெடுத்தவர்கள் பொதுமக்களாக இருக்க முடியாது.

கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாடு முழுவதும் தெளிவான சிந்தனையை இழந்து, ஆவேசமான நிலையில் செயற்படும் நிலைக்குள்ளாகி இருந்ததுடன், நாடு அராஜகத்தின் அதலபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. புதிய பிரதமரின் நியமனம் அடையாள ரீதியில் நாட்டில் அரசாங்கமொன்றை ஏற்படுத்தி அராஜகத்திற்கான பாதையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பிரதமராக பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட மாற்றத்தை, “குரல் வளை நெரிக்கப்பட்ட நிலையில் இருந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை” காப்பாற்றும் முயற்சியாக சிலர் வர்ணித்துள்ளனர். அந்த நடவடிக்கை ராஜபக்ச அரசாங்கத்திற்கு நன்மை பயப்பதாக இருந்த போதிலும், அதனை விடவும் அது நாட்டின் நன்மைக்கு ஏதுவாக இருந்ததாக குறிப்பிடலாம். ராஜபக்ச ஆட்சியை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளுக்கு அப்பால் சென்று தோற்கடிக்க முயற்சித்தால், அதன் விளைவு சிறந்த மாற்று ஆட்சிக்குப் பதிலாக மிகவும் ஆபத்தான அராஜக நிலையாகவே இருக்கும். இதை வாணலிக்குத் தப்பிஅடுப்பில் விழும் நிலைக்கு ஒப்பிடலாம்.

தெரிவு செய்யப்பட வேண்டிய பாதை

ராஜபக்ச குடும்ப ஆட்சி மட்டுமன்றி, நாட்டில் நிலவும் தீய, ஊழல் முறையும் தோற்கடிக்கப்பட வேண்டும். அது அரசியலமைப்பு கட்டமைப்பு சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டுமேயன்றி, நாட்டை சீர்குலைக்க ஏதுவாகும் பலவந்தமான முறையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வழிமுறையில் அல்ல. நாடு அராஜக நிலைக்குச் செல்லாமல் தடுப்பதே தற்போது நாடு எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாகும். அத்தகைய நிலைக்கு நாடு செல்வதைத் தடுத்து, நிலுவைத் தொகை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வலுவான சூழலை உருவாக்கி, முறையான கட்டமைப்பு மாற்றத்தை -system change- வெல்வதற்கும் ஒரே வழி, நாட்டை ஒரு கட்டமைப்பு ரீதியான சீர்திருத்த திட்டத்திற்கு வழிநடத்துவதுதான். இத்தகைய வேலைத்திட்டம் பிளவுபட்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கும் நம்பிக்கையற்ற மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். சீர்திருத்தத் திட்டத்தை தென்னாப்பிரிக்காவைப் போல இரண்டு முக்கிய கட்டங்களில் செயல்படுத்தப்படும் ஒன்றாக மாற்றலாம். கடன் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே வேளை, பொருத்தமான அரசியல் யாப்பொன்றை வகுத்துக் கொள்வதற்கான பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, அந்த அரசியல் யாப்புக்குத் தேவையான பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்வதற்கான சுதந்திரமாகனதும் நியாயமானதுமான தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுத்துக் கொள்வதற்கான நிலைப்பாட்டை எட்டிக் கொள்ளலாம். அரசியல் கட்சிகளின் உட்கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தேர்தல் கமிஷனுக்கு தேவையான அதிகாரங்களை வழங்க முடியும். தேர்தல் பிரச்சாரங்களுக்காக கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் நன்கொடை நிதி மற்றும் செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வைக்கலாம். அதையெல்லாம் சீர்திருத்த திட்டத்தின் முதல் கட்ட வேலையாக மேற்கொள்ளலாம்.

சீர்திருத்தங்களின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் தொடர்ச்சியான சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டு கட்டங்களாக இருக்க வேண்டும், மேலும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமானது, தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இரண்டாம் கட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அதே வடிவத்தில் நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க முடியாத அரசியலமைப்பு ரீதியான பொறுப்பாக மாற்றப்பட வேண்டும். அந்தச் சீர்திருத்தத் திட்டத்தின் பார்வையாளராக ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதன் மூலம், அது ஒரு துணைச் சட்டம் மற்றும் பொதுப் பங்கேற்பு அரசியலமைப்பை உருவாக்கத் தேவையான வழிகாட்டுதல்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டமைப்பில் நேர்மறையான மற்றும் ஆழமான மாற்றத்தைக் கொண்டுவரும் சீர்திருத்தத் திட்டத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்கும் ஆற்றல் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப்போவதில்லை. அதன் காரணமாக சிலவேளை சீர்திருத்தத் திட்டம் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் ஒன்றாக மாற்றம் பெறவும் கூடும்.

மூலம்: Anarchy is more dangerous than dictatorship

Source: chakkram.com 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...