பொதுப் புத்தியும் மாற்று சக்தியும்! --இரா.சிந்தன் சி.பி.ஐ(எம்) – CPI(M) மாநிலக்குழு உறுப்பினர்


மது வாழ்க்கையின் சூழ்நிலைமைகள்தான் சிந்தனையையும், உணர்வுகளையும் தீர்மானிக்கிறது என்பது பொதுவான உண்மை என்கிற போதிலும், அந்த உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் தாக்கம் செலுத்துவதன் மூலம், வாழ்க்கைச் சூழ்நிலைமைகளை மறக்கடிப்பதுவும்  சாத்தியமாவது, இன்றைய காலகட்டத்தின் ஒரு சவாலாக எழுந்திருக்கிறது. 

இந்த நிலைமை ஒன்றும் விநோதம் அல்ல. நம்மை ஆளக்கூடிய வர்க்கங்கள், தங்களுடைய நியாயங்களை, பொருட்களை உற்பத்தி செய்வதிலும், சந்தைச் செயல்பாடுகளிலும் புகுத்துவதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. அதே சிந்தனைகளை,  அரசியலிலும், பண்பாட்டுத் தளத்திலும் புகுத்தி, ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே, முதலாளித்துவம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, அதன் சுமைகள் மக்களின் தலையிலே ஏற்றப்படுகிறது. ஆனால், அதற்கு எதிர்ப்பு உணர்வு எழாமல் மழுங்கடிக்கவும் படுகிறது. இது ஆளும் வர்க்கங்களுடைய கருத்தியல் மேலாதிக்கத்தின் விளைவே.

பெட்ரோல் டீசல் மட்டுமே பிரச்சனையா?

அண்மைக் காலத்தில், விலையேற்றம் மற்றும் வேலையின்மை பற்றிய கவலை மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தேவைப்படுகிற,  பொருளாதார மாற்று நடவடிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரம் மற்றும் போராட்டத்தை இடது சாரி கட்சிகள் நடத்தியுள்ளன. தமிழ்நாட்டிலும் அதற்கான பிரச்சாரமும், போராட்டமும் கவனம் பெற்றன. இடதுசாரிகளோடு விசிகவும் கரம் கோர்த்தது. இந்த பின்னணியில்தான் மோடி அரசாங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை குறைப்பதாக ஒரு ‘அதிரடி’ அறிவிப்பினை ஊடகங்கள் வழியாக வெளியிட்டது. பின், அதை மையப்படுத்திய பொது விவாதத்தை வடிவமைப்பதில், தங்கள் மொத்த பரிவாரத்தையும் களமிறக்கினார்கள். குறிப்பாக தமிழ் நாட்டில், பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம் என்று பா.ஜ.க அறிவிக்கிறது.

ஒரு பக்கம் கோமாளித்தனமான செயல்பாடுகளாக இவை பார்க்கப்பட்டாலும், இந்த நாடகத்தின் பனி மூட்டத்தில் மறைக்கப்படும் உண்மைகள் எவை என்பதை நாம் பார்க்க வேண்டும். 

முதலாவதாக, விலைவாசி உயர்வு என்பது ஏதோ ஒரு பொருளின் மீதான வரிக் கொள்கையினால் மட்டும் எழக்கூடிய பிரச்சனை அல்ல. ஆனால், பெட்ரோல் – டீசல் மீது அதீத வரிகளை சுமத்தி, 70% அளவிற்கு கடுமையான விலையேற்றத்தை ஏற்படுத்தி, அதன் தொடர் விளைவுகளாக அனைத்து பொருட்களும் விலை உயர்ந்ததன் காரணமாக, மொத்த கவனமும் பெட்ரோல் – டீசல் மீது குவிய நேர்ந்தது. இப்போது அதன் மீது சிறுகச் சிறுக ஏற்றிய விலையில் ஒரு பகுதியினை மட்டும் குறைத்ததன் மூலம், பெரிய அளவில் விலைக் குறைப்பு செய்யப்பட்டதான ஒரு பிரச்சாரத்தை மோடி அரசாங்கம் முன்னெடுக்கிறது.

உண்மையில் இந்த காலகட்டத்தில் சில்லறை விலைப் பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.79% அதிகரித்துள்ளது, அதே போல மொத்த  விற்பனை பணவீக்கம் 15.08% ஆக எகிறியுள்ளது.

பணவீக்கம் பற்றிய இந்த விபரங்கள் உணர்த்தும் செய்தி என்னவென்றால், மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் சிறு/குறு நடுத்தர தொழில்களில் பயன்படுத்தப்படும் கச்சா பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. இதனால், வறுமை அதிகரிக்கும், வேலையின்மை விகிதமும் உயரும். இரண்டுமே புதிய நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

இரண்டு உதாரணங்கள்

ஜவுளி உற்பத்தியாளர்களுடைய 15 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டால், நாட்டில் பஞ்சு உற்பத்தியில் வீழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. ஆனால் பருத்தியினை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து மோடி அரசாங்கம் நீக்கியதும், போதுமான அளவு அரசே கொள்முதல் செய்யாததுமான காரணங்களால் பதுக்கலுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது. உலகச் சந்தையில், கொள்ளை இலாபத்திற்கான வாய்ப்புகள் உருவானதும், பருத்தி விலை அதீதமான உயர் வினை சந்தித்தது. ‘சந்தையின் நியாயம்’ அதுதான் என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் பேசக் கூடும். இன்னொரு பக்கத்தில் அது உற்பத்திச்  சங்கிலியை கலைத்துப் போட்டுள்ளது. வேலை நாள் இழப்பு, உற்பத்தி வீழ்ச்சி என்ற மோசமான விளைவுகளை உருவாக்குகிறது.

கோதுமை கொள்முதலிலும் இதேதான் நடக்கிறது. மோடி அரசாங்கம் போதுமான அளவு கொள்முதல் செய்யாததால் பொது விநியோக அமைப்பில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. சந்தையில் விலை உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் வங்க தேசத்தின் கோதுமை ஒப்பந்தத்தை இந்திய முதலாளிகள் மிகக் குறைந்த விலைக்கு கைப்பற்றியுள்ளார்கள். எனவே விலையேற்றமும், வேலை இழப்பும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு முதலாளித்துவ பதுக்கல் மற்றும் இலாப வெறிக் கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதை மக்களிடம் கொண்டு செல்வது அவசியம். சில குறிப்பிட்ட பொருட்களின் விலை தொடர்புடைய பிரச்சனையாக மட்டும் அதனை சுருக்குவது ஆபத்து.

வரிகளும், விலையேற்றமும்

இரண்டாவது, பெட்ரோலியப் பொருட்களின் விலை பற்றிய விவாதத்தை எடுத்துக் கொண்டாலும், ஒன்றிய அரசின் வரிக் குறைப்பினால் மக்களுக்கு எந்த ஆறுதலுமே இல்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். வெளிநாட்டில் இருந்தும், நமது நாட்டிலேயும் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு பெட்ரோலியப் பொருட்களாக விநியோகிக்கப்படுகிறது. அதில் பெட்ரோல் – டீசல் மீது ஒன்றிய  அரசும், மாநில அரசும் வரி சுமத்தி வசூலிக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் ரூ.1 இலட்சம் கோடி வரியாக வசூலித்து வந்த ஒன்றிய அரசு தற்போது ரூ.3 இலட்சம் கோடிகளுக்கும் மேல் வரியாக உறிஞ்சுகிறது. இந்த வரி உயர்வின் பெரும்பகுதி மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவது இல்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும். இப்போது குறைக்கப்பட்டிருக்கும் தொகையை மீண்டும் அதே நிலைக்கு கொண்டு செல்ல 2 மாத காலமே போதுமானது. எனவே முதலாளித்துவ இலாப வெறித் தூண்டலே அதன் அடிநாதம். அது மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

ஆறுதலும் உண்மை இல்லை

விலை குறைப்பு ‘அதிரடியின்’ சில நாட்களுக்கு முன்புதான், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.53 ஆக இரண்டு முறைகள் உயர்த்தப்பட்டது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தும் எரிவாயு/பிற எரிபொருட்களின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டது. உணவு விடுதிகளில் பயன் படுத்தப்படும் வர்த்தக எரிவாயு விலை தடாலடியாக உயர்த்தப்பட்டது. எனவே, ஒரு குடும்பம் முன்பு செய்த செலவை விடவும் கூடுதலாகத்தான் செலவு செய்யப் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. மாறாக நம்முடைய விவாதம் ‘விலைவாசி’ பற்றியதாக இல்லாமல், ஒன்றிய – மாநில அரசுகளின் வரிக் கொள்கை மற்றும் வரிப் பங்கீடு பற்றியதாக திருப்பப்படுகிறது.

மாநில அரசாங்கங்களே, மக்கள் நல நடவடிக்கைகளுக்கான செலவில் பெரும் பகுதியை ஏற்கின்றன. ஆனால், தமக்கான வருவாயைத் திரட்டுவதற்கு, சொற்ப ஆதாரங்களையே பெற்றிருக்கிறார்கள். இந்த சூழலில், மாநில அரசின் வருவாயை சுருக்கிக் கொள்ள வற்புறுத்தும் விவாதங்கள் மக்களையே உடனடி பாதிப்புக்கு உள்ளாக்கும். அதே சமயம், இந்தப் பிரச்சனை பேசவே கூடாத ஒன்றல்ல, நேரடி அந்நிய முதலீடுகளுக்கு தரப்படும் வரிச் சலுகைகள், கனிம வளங்களை கையாள்வதில் வருவாயை திரட்டுவதற்கு உள்ள வாய்ப்புகள் என்ற திசையில் மாற்றுக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மாற்றுக் கொள்கைகள்

உழைப்பாளி வர்க்கத்தின் தரப்பில் நின்று, கொள்கை அடிப்படையிலான மாற்றுப் பார்வையோடு சிந்தித்தால் மட்டுமே இந்த சூட்சுமங்களை வெளிப்படுத்த முடிகிறது. விலைவாசி உயர்வும், வேலையின்மையும், ‘அறிவு ஜீவிகளுக்கு’ வெற்று விவாதங்கள் மட்டுமே. ஆனால், நாட்டின் பெரும் பகுதியாக உள்ள விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்த பிரச்சனையே உயிர் நாடியாகும். நம் ஊரகப் பகுதிகளில் விலையேற்றம் பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஆனால், உழைப்புக்கான கூலியோ ஒரே நிலையில் தொடர்கிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில், அடிமட்ட ஏழைகளாக இருக்கும் 25 கோடிப் பேருக்கு வருவாய் பாதிக்கும் மேல் சரிந்திருக்கிறது. இப்படியொரு கொடுமையான சூழலை மாற்றியமைப்பதில் இருந்து நமது கவனமும், விவாதமும் திசை திருப்பப்படுமானால், இந்தப் போக்கு ஒரு சுடுகாட்டை கட்டி எழுப்புவதில்தான் போய்  முடியும்.

கொடுமையான வாழ்நிலையில் இருந்து மீள வேண்டும் என்ற ஆசையும், கனவுகளும் மிக மிக இயல்பானவை. ஆனால் அந்த நிலைமைகளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லாதபோது, ஆளும் வர்க்கங்கள் குரூரமான முறையில் திசைதிருப்பலை செய்து முடிக்கிறார்கள். மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார்கள். நம்பிக்கையளிக்கும் கொள்கை மாற்றினை வழங்குவது, பாட்டாளி வர்க்க புரட்சியை முன்னெடுக்கும் சக்திகளுக்கே சாத்தியம். ஆம், நாம்தான் மாற்றத்திற்கான நம்பிக்கையை முன்னெடுக்க முடி. 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...