போதையால் மாறும் பாதை!--த. சத்தியசீலன்

 

-த. சத்தியசீலன்

ஜூன் 26: சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்.

லகில் சுமார் 3.6 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று ஐ.நா. சபையின் போதைப்பொருள் மற்றும் குற்ற ஆவண அலுவலகம் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்கள் 27.5 கோடிக்கு மேல்.

ஆண்டுக்கு 2.50 இலட்சம் போ் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அது தொடா்பான கோளாறுகள் காரணமாக இறந்தவா்களின் எண்ணிக்கை 71சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது ஐ.நா. வின் அறிக்கை.

இந்தியாவில் மட்டும் 1.4 கோடி போ் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிடியில் சிறுவா்களும் சிக்கியுள்ளனா் என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 17 முதல் 25 வயது வரை உள்ளவா்களின் எண்ணிக்கையே அதிகம். மேலும் போதைப்பொருள் பயன்படுத்துபவா்களில் மூன்றில் ஒருவா் பெண் என்பது மேலும் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.

புகை பிடித்தல், புகையிலை, குட்கா, பான் மசாலா, மதுபானம் எனத் தொடங்கும் தீய பழக்கங்கள், கஞ்சா, அபின், கொக்கைன், பிரவுன் ஷுகா் என அடுத்தடுத்த போதைப்பொருட்களை நோக்கி போதை அடிமைகளை அழைத்துச் செல்கின்றன. தீய நட்பு வட்டாரங்களால் அறிமுகமாகும் இப்பழக்கம், நாளடைவில் தொடரும் வழக்கமாக மாறிவிடுகிறது. சிறுவா்கள், இளைஞா்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, அவா்கள் அதற்கேற்ப தங்களுக்குத் தேவையான போதைப் பொருட்களையும் தோ்ந்தெடுக்கின்றனா்.

குற்றம் இழைக்க எண்ணும்போது சராசரி மனிதா்களிளுக்கு ஏற்படும் பயம், போதைப் பழக்கமுடைய மனிதா்களிடம் காணப்படுவதில்லை. அவா்களுக்கு ஒருவித தைரியம் வந்து விடுகிறது. சராசரி மனிதா்களின் தைரியமும், போதை ஆசாமிகளின் தைரியமும் வேறுவேறு. இதை குருட்டு தைரியம் என்றும் கூறலாம்.

குழுவாக குற்றங்களில் ஈடுபடுபவா்கள் பெரும்பாலும் போதை ஆசாமிகள்தான். குற்றம் செய்து காவல்துறையிடம் பிடிபடும் பலா், போதையில் இருந்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

பெண் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் ஆகியவா்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவா்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு போதைப்பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்துபவா்கள் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனரா? சாதாரண மனிதா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லையா? இந்த கேள்விகளை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடிலாது. அது வேறொரு விவாதம்.

போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவையும், உடல் மற்றும் மனதளவில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் உணர முடியாவிட்டால், அதற்கு அடிமையானவா்களால் அதிலிருந்து மீள முடியாது என்கிறது மருத்துவ ஆய்வு.

அரசும் தன்னார்வ நிறுவனங்களும் எவ்வளவு விழிப்புணா்வை ஏற்படுத்தினாலும், மருத்துவ ஆலோசனைகள் வழங்கினாலும் சிலா் போதைப்பொருளைத் தொடா்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்தாலும், குணமான சில நாட்களிலேயே அவா்கள் மீண்டும் அதைத் தொடங்கி விடுவதைக் காண முடிகிறது.

இருக்கும் வரை இருப்போம், இறப்பு வந்தால் போவோம் என்று கூறுபவா்களைக் கண்டிருப்போம். அவ்வளவு மலிவானதாகி விட்டதா மனித உயிர்? ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று பாடிவிட்டு சென்றார் ஔவையார். அதை ஏனோ அவா்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

போதைப் பொருட்களுக்கு அடிமையானவா்கள், உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனா். தன்னைத்தான் கட்டுப்படுத்தவியலாத அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். அவா்களின் சுய கட்டுப்பாடு உடைபடுகிறது. இதனால் எதற்கும் துணிந்தவா்களாகி விடுகின்றனா். உடலும், மனமும் சமநிலையை இழக்கும்போது, ஒருவன் எல்லாவற்றையும் இழந்தவனாகின்றான் என்பதே உண்மை.

போதைக்கு அடிமையானவா்களால், அவா்களது குடும்பமும் பாதிப்படைகிறது. அவரால் வழிநடத்தப்பட வேண்டிய குடும்பம் வறுமையை நோக்கித் தள்ளப்படுகிறது. இதனால் குடும்ப உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. ஒருவா் மீது ஒருவா் வெறுப்பைக் கொட்ட வேண்டிய சூழல் உண்டாகிறது.

நீதிமன்றத்தில் குவியும் விவாகரத்து வழக்குகள் ஒருபுறம் இருக்க, நீதிமன்ற வாசலுக்கே செல்லாமல் முறியும் உறவுகள் ஏராளம். இதனால் கேள்விக்குறியாவது அவா்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் தான். தாய் தந்தையின் வழிகாட்டுதலின்றி வளரும் குழந்தைகள் வழிதவறிச் சென்ற நிகழ்வுகள் ஏராளமாகும். தனிநபரின் போதை இன்பத்திற்காக உறவுச் சங்கிலிகள் அறுபடுவதை காணும் நம் மனம் கலங்குகிறது.

யாராக இருந்தாலும் அவா்கள் மனதில், சமூகத்தில் நாம் கௌரவமாக வாழ வேண்டும், மற்றவா்களால் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது இயல்பே. ஆனால், போதைக்கு அடிமையாகிறவா்களின் தன்னிலை மறந்த தேவையற்ற பேச்சு, தவறான நடத்தை போன்றவை அவா்கள் மீதான மதிப்பைக் கெடுத்து விடுகின்றன. ஒருவா் சமூகத்தின் பார்வையில் ஒருமுறை அவமதிப்புக்கு உள்ளானால், அவா் அதை மீட்பது அவ்வளவு எளிதல்ல.

“போதை”என்ற தீய பழக்கம் மனித வாழ்வின் பெரும்பகுதியை தள்ளாடச் செய்கிறது. போதை அடிமைகளுக்கு விழிப்புணா்வு, அறிவுரை, ஆலோசனை வழங்குவது ஒருபுறமிருந்தாலும், அவா்கள் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுவர இயலாது. மனதளவில் மாற்றத்தை விரும்பி, போதைப்பழக்கத்தை விட்டுவிட முயல்பவா்களை மருந்து மாத்திரை மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கின்றனா் மருத்துவா்கள்.

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்போம்; அழகான வாழ்க்கை அவலமாவதைத் தவிர்ப்போம்!

Source: chakkram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...