லங்கைக்கு ஏற்பட்ட டொலர் தட்டுப்பாட்டால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டு, நாடு பெரும் பொருளாதார நெருக்கடியையும் மக்கள் பெரும் அவலங்களையும் சந்தித்து நிற்கின்றனர்.

இதன் காரணமாக பிரதமர் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவும் அவரது முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டிய சூழல் உருவானது. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு புதியதொரு அமைச்சரவையும் பதவி ஏற்றது.

ரணில் பிரதமரானதும் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடும் என பலர் நம்பினர். அதற்குக் காரணம், ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்கா உட்பட மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சி என்றபடியால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கு அந்த சக்திகள் பார்த்தும் பாராமல் அள்ளிக் கொடுத்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உருவாகி இருந்தது.

ஆனால் அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அதற்குக் காரணம், இன்றைய உலகில் அமெரிக்கா, இந்தியா உட்பட பலமான பொருளாதாரம் கொண்டுள்ள நாடுகளே பண வீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என்பனவற்றால் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு அவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளையே தீர்க்க முடியாமல் அவதிப்படுகையில் ரணில் விக்கிரமசிங்க தமது நண்பர் என்பதற்காக தம்மை ஒறுத்துக்கொண்டு அவருக்கு அவர்கள் எதையும் அள்ளிக் கொடுத்துவிடப் போவதில்லை. அதுவுமல்லாமல், தமக்கு எதாவதொரு பிரயோசனமும் இல்லாமல் முதலாளித்துவ நாடுகள் மற்றைய நாடுகளுக்கு உதவி செய்ததாக வரலாறும் இல்லை.

அதே நேரத்தில் நாட்டின் நிலைமையில் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் மேலும் மேலும் நிலைமை மோசமடைந்து செல்வது, ராஜபக்சாக்கள்தான் நாடு இந்த நிலைமைக்குச் சென்றதற்கு காரணகர்த்தாக்கள் என எதிர்க் கட்சிகள் இட்டுக்கட்டிச் செய்த பிரச்சாரத்தையும் தவிடுபொடியாக்கி உள்ளது.

உண்மையில், நாடு இத்தகைய ஒரு நிலைக்கு உள்ளானதில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அத்தனை அரசாங்கங்களுக்கும் பங்குண்டு. அப்படிப் பார்க்கையில் இன்று ராஜபக்சாக்களுக்கு எதிராக விரலை நீட்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ஆர்.பிரேமதாச, சந்திரிக குமாரதுங்க, ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்றவர்களும் இன்றைய நாட்டு நிலைமைக்கு காரணகர்த்தாக்கள். (குறிப்பாக ஜே.ஆர். அரசு 1977 இல் திறந்த பொருளாதாரம் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய நவ தாராளவாதக் கொள்கை) ஏனெனில், இவர்கள் எல்லோரும் கூட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்து கோலோச்சியவர்கள்தான்.

அதுவுமல்லாமல், இன்றைய பொருளாதார நெருக்கடியை தாம் ஆட்சிக்கு வந்தால் எப்படித் தீர்த்து வைப்பார்கள் என்பதை ஆட்சிக்கு வரத் துடிக்கும் சஜித் பிரேமதாசவோ, சந்திரிகவோ அல்லது ஜே.வி.பியினரோ கூறும் நிலைமையிலும் இல்லை. ஏனெனில், அவர்களது முழு நோக்கமும் ராஜபக்சாக்களுக்கு எதிராக பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களைச் செய்து, குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதேயொழிய, மற்றும்படி அவர்களிடம் உருப்படியான பொருளாதாரத் திட்டங்களோ அல்லது தூரநோக்கோ எதுவும் கிடையாது. உதாரணமாக, முன்னர் இவர்களுடன் இணைந்து நின்று அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்த ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது நாட்டின் பிரதமராக வந்து என்ன மாற்றத்தைச் செய்துவிட்டார். அதுவும் இவர்கள் எல்லோரையும் விட மேற்கு நாடுகளுக்கு மிகவும் வேண்டிய விசுவாசியான ரணிலால் கூட எதையும் சாதிக்க முடியவில்லை. ஏனெனில் அவரிடமும் ஒரு திட்டமும் கிடையாது. அப்படியிருக்கையில், இந்த வாய்ப்பந்தல் வீரர்களால் என்னத்தைச் சாதிக்க முடியும்?

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் இப்பொழுது எல்லோரும் ஏகோபித்த முறையில் சர்வரோக நிவாரணியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடி நிற்கின்றனர். சர்வதேச நாணய நிதியம் ஒரு ஏகாதிபத்திய வட்டிக்கடை என்பதைப் புரிந்து கொண்டு, முன்னர் அதன் உதவியை நாடுவதை எதிர்த்தவர்களும் கூட, இன்று அதன் உதவியைப் பெறுவதில் தவறில்லை என கருத்துத் தெரிவிக்கின்றனர். இதில் விநோதம் என்னவெனில், முன்னர் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களின் உதவிகளைப் பெறுவதைக் கடுமையாக எதிர்த்து வந்த இடதுசாரிக் கட்சிகள் கூட இப்பொழுது இலங்கை அரசாங்கம் அந்த நிறுவனங்களின் உதவியை நாடியது குறித்து மௌனம் சாதித்து வருகின்றன.

இலங்கை அரசு ஒரு நவ காலனித்துவ முதலாளித்துவ அரசு என்ற வகையில் தனது கையறு நிலையில் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் உதவியை நாடி நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்ற போதிலும், அவர்களின் உதவியைப் பெறுவது மட்டும் ஒரேயொரு நிரந்தரத் தீர்வாகிவிட முடியுமா? அத்துடன் எவ்வளவு காலத்துக்கு இந்த நிறுவனங்கள் இலங்கைக்கு தொடர்ந்து நிதி உதவியை வழங்க முடியும்? அது மட்டுமின்றி அந்த நிறுவனங்கள் நிதி வழங்குவதற்கு முன்வைக்கப் போகும் நிபந்தனைகளை இலங்கையால் தாங்க முடியுமா?

குறிப்பாக அவர்கள் தற்பொழுது மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் சேமநலத் திட்டங்களை நிறுத்தச் சொல்வார்கள். அதாவது, இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பனவற்றை நிறுத்தச் சொல்வார்கள். ஏழை மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் சமுர்த்திக் கொடுப்பனவை நிறுத்தச் சொல்வார்கள். அரச ஊழியர்களின் தொகையை சரி பாதியாகக் குறைக்கச் சொல்வார்கள். போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தச் சொல்வார்கள். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மானியங்களை நிறுத்தச் சொல்வார்கள். குளங்கள் சீரமைப்பு, நெடுஞ்சாலைகள் புனரமைப்பு போன்ற கட்டுமான வேலைகளை நிறுத்த அல்லது குறைக்கக் கோருவார்கள். வரிகளை அதிகரிக்கச் சொல்வார்கள். இப்படி இன்னும் பல நிபந்தனைகளை அவர்கள் முன்வைப்பதற்கு வாய்ப்புண்டு.

அவர்கள் முன்வைக்கப் போகும் நிபந்தனைகளை ஏற்றால் மக்களின் கதி என்ன? மக்களின் வாழ்க்கை இன்றிருப்பதை விட மோசமான ஒரு நிலையை அடையாதா? இன்றைய நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் ‘கோத்தா கோ கோம்’ என உரத்துக் கூச்சல் போடுபவர்கள், அப்பொழுது யாரை வீட்டுக்குப் போகுமாறு கோசம் எழுப்புவார்கள்?

இந்த இடத்தில் ஒரு வரலாற்று உதாரணத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். 1953 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியில் மிகுந்த அமெரிக்க விசுவாசியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிதியமைச்சராக இருந்தார். அப்பொழுதும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் உலக வங்கியின் உதவியை நாடியது. அவர்கள் உதவி செய்வதற்கு சில நிபந்தனைகளை முன்வைத்தனர்.

அந்த நிபந்தனைகளின்படி, 25 சதமாக இருந்த ஒரு இறாத்தல் அரிசியின் விலை 75 சதமாக அதிகரிக்கப்பட்டது. தபால் – தந்தி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மதிய போசனம் நிறுத்தப்பட்டது. இப்படி இன்னும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உலக வங்கியின் நிபந்தனையால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் மக்களைக் கடுமையாகப் பாதித்ததால் அவர்கள் கோபாவேசம் கொண்டார்கள்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. மக்கள் முழுமையாகப் போராட்டத்தில் குதித்ததால் நாடே ஸ்தம்பித்தது. அரசாங்கத்தால் நாட்டின் எந்தப் பகுதியிலும் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற ஒரு பிரித்தானிய கடற்படைக் கப்பலில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய பின்னர் டட்லி சேனநாயக்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசை விட்டு வெளியேறினார்.

தற்போதும் அத்தகைய ஒரு சூழ்நிலைதான் நாட்டில் நிலவுகின்றது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று மக்களின் நலன்களில் கை வைத்தால் மீண்டும் ஒரு 1953 ஆகஸ்ட் 12 ஹர்த்தால் போராட்டம் நிகழாது எனக் கூற முடியாது. சில வேளைகளில் வரலாறு திரும்ப திருப்ப நிகழ்வதை நாம் கண்டிருக்கிறோம்.

உண்மையில் இலங்கை போன்ற நில வளம், நீர் வளம், கடல் வளம், மலை – காடு வளம், மனித வளம் போன்றவற்றை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் ஒரு நாடு, சர்வதேச நாணய நிதியம் போன்ற கொடுமையான ஏகாதிபத்திய வட்டிக்கடைக்காரனிடம் உதவி கோருவது ஒரு நிரந்தரமான தீர்வல்ல. தனது வளங்களைப் பயன்படுத்தி சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே ஒரேயொரு தீர்வாக இருக்க முடியும்.

 

Source: vaanavil 138 June 2022