லகின் உண்மையான ஆட்சியாளர்கள் ஒரு சில இலட்சாதிபதிகளும், பெரும் பணக்கார ஆதிக்கவாதிகளும் என்பது நன்கறிந்த விடயம். அவர்களே அமெரிக்காவின நிதி வளத்தைக் கட்டுப்படுத்துவதுடன், தமது நிதி சக்தியைப் பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதியாக வருபவரைத் தீர்மானிப்பதுடன், அதன் அரசாங்கத்தை உருவாக்குபவர்களாகவும் உள்ளனர். நீண்ட காலமாக அமெரிக்கா உலகின் முதல்நிலை பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதுடன், உலக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் நிலையிலும் இருக்கின்றது. அமெரிக்காவின் டொலரே உலகளாவிய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நாணயமாக இருக்கின்றது. அமெரிக்கா சீனாவுக்கு பெரும் கடனாளியாக (3 றில்லியன் – Trillion – டொலர்கள் என கணிக்கப்படுகிறது) இருந்த போதிலும், அதைச் சமாளிக்க மேலதிக டொலரை அச்சிடுகின்றது. இந்த நிலைமையால் சீனா உலகின் முதல்தர பொருளாதார நிலைக்கு உயர்வதுடன், அதன் யுவான் (Yuan) நாணயம் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நிலையும் உருவாகும். இது உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், பெரும் பல்தேசிய நிறுவனங்கள் (Multinational Corporations) மூலம் அது நடத்தும் சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டு வரும். அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சி முதலாளித்துவத்துக்கு உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், கொவிட் – 19 (Covid – 19) பெருந்தொற்று நிலைமையையும் மேலும் மோசமாக்கும்.

அமெரிக்கா தனது செல்வாக்கு மிக்க நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள சகல வழிகளிலும் முயற்சிக்கிறது. சதித்தனமாகவும் திட்டமிட்டும் நடத்தப்படும் இந்தத் திட்டத்தால் தூரதிஸ்ட்டவசமாக இலங்கையும் தவிர்க்க முடியாமல் இதன் ஒரு பங்காளி ஆகி இருக்கிறது. அவர்கள் கிழக்காசிய நாடுகளான சீனா, வியட்நாம், தென் கொரியா போன்ற நாடுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தக விரிவாக்கத்தைத் தடுக்கின்றனர். அமெரிக்க கைத்தொழில் முதலாளிகள் தமது இலாபத்தை அதிகரிப்பதற்காக சீனா உட்பட கிழக்காசிய நாடுகளுக்கு தமது முதலீடுகளையும் தொழில்நுட்பத்தையும் மாற்றியதன் காரணமாகவே சீனா தலைமையிலான கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரங்கள் விரிவடைந்தன. இப்பொழுது அமெரிக்கா இதைத் தடுப்பதற்காக சீன இறக்குமதிகள் மீது மேலதிக வரிகளை விதித்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு வர்த்தகப் போர் உருவாகியுள்ளது. இதன் விளைவு நிச்சயமற்றதாகும். அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடையுமானால் அது ஒரு இராணுவ யுத்தம் என்ற தீவிர நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

ஐ.நா. முறைப்படியும், சர்வதேச சட்டங்களின் படியும் பசுபிக் சமுத்திரமும் இந்து சமுத்திரமும் வௌ;வேறான இரண்டு மண்டலப் பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யப்பான் என்பன பசுபிக் மண்டல நாடுகள். இந்தியா, இலங்கை என்பன இந்து சமுத்திர மண்டல நாடுகள். சர்வதேச சட்டப்படியும், ஐ.நா. சாசனப்படியும் நாடுகள் தமது சொந்த மண்டலங்களில் இராணுவத் தளங்களை வைத்திருக்கும் உரித்துடையவை. சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமை தாங்கிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி – லங்கா சமசமாஜக் கட்சி – கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டரசாங்க காலத்தில் ‘இந்து சமுத்திரம் ஒரு சமாதானப் பிராந்தியமாக இருக்க வேண்டும்’ என்ற ஒரு தீர்மானம் இலங்கையால் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அது பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்கா டியாகோ – கார்சியாவில் (Diego-Garcia) வைத்திருந்த இராணுவ தளத்தை இழந்ததுடன், அந்தத் தீவுக்குரிய மொரிசஸ் (Mauritius) நாட்டிடம் மீளவும் ஒப்படைக்குமாறு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Court) உத்தரவும் இட்டது. அப்பொழுதே அமெரிக்கா இந்து சமுத்திரத்துக்கான தனது இராணுவத் தளத்தை இலங்கையில் அமைப்பது என தெளிவாகத் தீர்மானித்துவிட்டது. அமெரிக்கா இரண்டு சமுத்திரங்களையும் இணைத்து தனது இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணத்துடன் இந்தோ – பசுபிக் சமுத்திரம் (Indo – Pacific) என்ற வார்த்தைப் பதத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. பசுபிக் சமுத்திர மண்டல நாடுகளான அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஆஸ்திரேலிய, யப்பான் என்பனவும் அதன் மூலம் இலங்கையில் தமது இராணுவத் தளத்தை நிறுவ முடியும். ஏற்கனவே அமெரிக்கா இந்தியாவையும் கொண்டு வந்துவிட்டபடியால், அந்த நான்கு நாடுகளும் இணைந்து ‘குவாட்’ (Quad) என்ற அமைப்பை உருவாக்கிவிட்டன. இலங்கையையும் இந்தக் கூட்டில் கொண்டு வருவதே நோக்கமாகும்.

2015 இல் ‘நல்லாட்சி’ (Yahapalanaya) அரசாங்கம் அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் ஏசிஎஸ்ஏ (ACSA) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுவிட்டது. ஆனால் அதிர்ஸ்டவசமாக எம்சிசி (MCC) மற்றும் சோபா (SOJA) உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக அந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அந்த எம்சிசி மற்றும் சோபா உடன்படிக்கைகளில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் கைச்சாத்திடாமைக்காக லங்கா சமசமாஜக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. எம்சிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இருந்தால், அதன் மூலம் அமெரிக்காவின் பல்தேசியக் கொம்பனிகள் இலங்கையின் பொருளாதாரத்தைச் சுரண்ட முடிந்திருப்பதுடன், இலங்கை ஒரு ‘வாழைப்பழ குடியரசாக’வும் (Banana Republic) மாறியிருக்கும். சோபா உடன்படிக்கை முழு இலங்கையையும் அமெரிக்க இராணுவத் தளமாக மாற்றியிருக்கும். லங்கா சமசமாஜக் கட்சி தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பங்காளியாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

யுகடனவி (Yugadanavi) சம்பவம்

ஆனால் எமது மகிழ்ச்சி குறுகிய காலமுடையது எனத் தெரிகிறது. யுகடனவி சம்பவம் என்பது எமது வளங்களை கள்ளத்தனமான முறையில் அமெரிக்க கொம்பனி ஒன்றுக்கு விற்ற சம்பவமாகும். இது அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் மூலமாக இரட்டைக் குடியுரிமையுள்ள அமெரிக்க பிரஜை ஒருவர் நிதியமைச்சராக வந்ததைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஒன்றாகும். இதன் மூலம் இவர்கள் குள்ளத்தனமான முறையில் அமெரிக்காவின் எண்ணத்தை நிறைவேற்ற அதன் உள்ளுர் கூட்டாளிகளுடன் இணைந்து இந்த அரசாங்கத்தின் ஊடாக எம்சிசி மற்றும் சோபா உடன்படிக்கைகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்டதாகும்.

‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் அலரி மாளிகையுடன் (Temple Trees) இணைந்த சீஐஏ (CIA) அலுவலகத்தில் அரசியல், பொருளாதார, இராணுவத் துறைகளில் ஆலோசகர்ளும் ஆய்வாளர்களும் செயல்பட்டது அரசியல் வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட விடயமாகும். 2018 ஒக்ரோபரில் ஒரு குறுகிய காலம் பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவிக்கு வந்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தொடர முடியாமல் போனபோது, அவர் அதை ஏற்க மறுத்து அலரிமாளிகையில் இருந்த தனது அலுவலகம் மற்றும் வசிப்பிடத்தில் இருந்து நகர மறுத்ததிற்குக் காரணம், இந்த அமெரிக்க சிந்தனைக் குழாம் (Think Tanks) அங்கிருந்தமையினால் ஆகும். இந்த நிலைமை 2020 ஓகஸ்டில் பொதுத் தேர்தல் நிகழ்ந்து மகிந்த ராஜபக்ஸ பிரதமராகப் பதவி ஏற்கும் வரை தொடர்ந்தது. அலரி மாளிகையில் அவர்கள் இருந்த காலத்தில் ‘நல்லாட்சி’ அரசாங்கம் நவ தாராளவாதக் (Neoliberal) கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியது. அவர்கள் முன்னைய மத்திய – இடதுசாரி (Centre – Left) அரசாங்கத்தால் வகுக்கப்பட்டிருந்த முற்போக்கான தேசிய பொருளாதாரக் கொள்கையை தேசிய ரீதியிலும் சர்வதேசிய ரீதியிலும் செயலிழக்க வைத்து சந்தைச் சக்திகளை (Market Forces) ஊக்குவித்தார்கள். இதன் விளைவாக எமது உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திக்குப் பதிலாக வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களை, குறிப்பாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பொருட்கள் தங்குதடையின்றி நாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட்டது. உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது தொழில்களை மூடினார்கள் அல்லது தமது ஊழியர்களை நிறுத்தினார்கள். இதனால் சுய- சார்பை இலக்காகக் கொண்டிருந்த தேசிய பொருளாதாரம் நொருங்கிப் போனது. இதன் விளைவாக முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த வெளிநாட்டு வர்த்தகச் சமநிலை பாதிக்கப்பட்டு, எமது அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்தது. வெளிநாட்டு கடன் பெறுகை அதிகரித்து நாடு கடனாளியாகியது. சராசரியாக 8 பில்லியன் (Billion) டொலர்களாக பேணப்பட்டு வந்த எமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு 1.5 பில்லியனாக வீழ்ச்சி அடைந்தது. கடனை அடைப்பதற்காக எமது வளங்கள் மிகவும் மலிவான விலையில் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு விற்கப்பட்டன. ‘நல்லாட்சி’ அரசாங்கம் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் நலன்களுக்காக இந்த நவ – தாராளவாதக் கொள்கைகளை எமது நாட்டு மக்களின் பணத்தில் நடைமுறைப்படுத்தியது. அதிர்ஸ்ட்டவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார். இதனால் எழுந்த பொருளாதார, சமூக நெருக்கடியால் நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்சிசி மற்றும் சோபா உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதின் மூலம் இலங்கையும் அதன் மக்களும் பாதுகாக்கப்பட்டார்கள்.

அமெரிக்க நவ தாராளவாதக் கொள்கைகள்

அமெரிக்க நவ தாராளவாதக் கொள்கைகளால் அழிவுக்குள்ளானதன் காரணமாக அவர்களை நிராகரித்த மக்களைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு, தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அந்த சக்திகளை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட வேண்டும். வறிய மக்களின் செலவில் சில தனிப்பட்ட செல்வந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலையை மாற்றி இலங்கையின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட முறையில் பாரம்பரிய மனிதாபிமான மற்றும் கூட்டுறவு முறையிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். எல்லா மக்களினதும் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் முன்னரிமை வழங்கப்பட வேண்டும். சிறீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராகவும், டொக்டர் என்.எம்.பெரேராவை நிதியமைச்சராகவும் கொண்டிருந்த மத்திய – இடதுசாரி கூட்டரசாங்கம் 1972 – 73 காலகட்டத்தில் ஏற்பட்ட பாரிய நெருக்கடியை (எண்ணெய் விலை 7 மடங்காகவும், உணவுப் பொருட்களின் விலை 10 மடங்காகவும் அதிகரித்திருந்த நேரத்தில்) எடுத்த நடவடிக்கைகளின் பாடங்களை லங்கா சமசமாஜக் கட்சி மிகவும் காத்திரமான முறையில் முன்வைக்க விரும்புகிறது. டொக்டர் என்.எம்.பெரேரா சுமையை ஏழை மக்களின் மேல் சுமத்தாமல் செல்வந்தர்கள் மேல் சுமத்துவது எனத் தீர்மானித்தார். அவர் இறக்குமதிகளைக் கடுமையாகக் குறைத்து, விவசாயத்திலும் கைத்தொழிலிலும் உள்ளுர் உற்பத்தியை அதிகரித்து, தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுத்தார். அவர் பெரும் செல்வந்தர்கள் மீதான வரியை 70 சத வீதம் வரை உயர்த்தினார். ஆனால் தற்போதைய நெருக்கடி நிலையிலும் இது 14 வீதமாகவே இருக்கின்றது. தற்பொழுது 60 வீதத்திற்கும் அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழ் போராடிக் கொண்டிருக்கும் ஏழை மக்கள் மீது இந்தச் சுமை விழுந்துள்ளது. சில மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவையே உட் கொள்கின்றனர். போசாக்கின்மை 18 வீதத்தால் அதிகரித்து அதன் காரணமாக சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை நாட்டை எதிர்காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கும்.

முன்பு கூட்டுறவு முறை பலப்பட்டிருந்ததால், உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, இடைத் தரகர்கள் இலாபம் பெறுவதைத் தடுத்திருந்தது. இன்று எல்லாப் பொருட்களினதும், குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின், விலைகள் அதிகரித்து அதன் காரணமாக மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு பிரசைகளுக்கும், அவர்கள் எந்த இனம், சமயம், சாதி சார்ந்தவர்களாக இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின கடமையாகும். அத்துடன், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாராந்தம் உலர் உணவு வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு அபிவிருத்தித் திட்டம் வகுக்கப்பட வேண்டும். நஸ்டத்தில் இயங்கும் எல்லா நிறுவனங்களையும் அதன் உரிமையாளர்களும் ஊழியர்களும் இணைந்து ஒருமைப்பாட்டுடன் செயற்படுத்தி அதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பங்கை சம்பளத்திற்கு மேலாக வழங்க வேண்டும். இது பல ஐரோப்பிய நாடுகளிலும், ஆர்ஜன்ரீனா, இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகளிலும் வெற்றிகரமாகச் செயற்படுகின்றது. இந்தியாவில் டாட்டா (TATA) நிறுவனத்துக்குச் சொந்தமான 63,000 ஹெக்டெயர்கள் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவை நஸ்டத்தில் இயங்கியதால் அதனால் வரிகளைச் செலுத்த முடியவில்லை. இந்த நிலைமையில் மாநிலத்தில் இருந்த இடதுசாரி அரசாங்கம் ஒருமைப்பாட்டுக் கொள்கையைப் பிரயோகித்ததால், இப்பொழுது உற்பத்தி அதிகரித்துள்ளதுடன் பெரும் இலாபம் ஈட்டி வருகின்றது.

சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தனது நவ தாராளவாதக் கொள்கைகளின் அடிப்படையிலான நிபந்தனைகளை ஏற்க வைத்து வழங்கும் கடன்கள் இலங்கைக்கோ அதன் மக்களுக்கோ தேவையில்லை. இது அமெரிக்க மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் நலன்களுக்கு உதவுதே தவிர, எமது நாட்டு ஏழை மக்களுக்கு உதவாது. அன்றைய லங்கா சமசமாஜக் கட்சித் தலைவரும், நிதியமைச்சருமான டொக்டர் என்.எம்.பெரேரா அவர்களின் உதாரணத்தைப் பின்பற்றுவதன் மூலம், இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு முன் செல்ல முடியும்.

(பேரரசிரியர் திஸ்ஸ விதாரண கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதிய ஒரு கட்டுரையின் சாராம்சமே மேலே தரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான திஸ்ஸ விதாரண, தற்போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகின்றார். அவர் காலஞ்சென்ற முன்னாள் நிதியமைச்சர் டொக்டர் என்.எம்.பெரேராவின் மருமகன் முறையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

தமிழில்: மணி

Courtesy: vaanavil 133 January 2022