குதிரை ஓடிய பின்னர்லாயத்தைப் பூட்டிப் பயனில்லை!

 

 

 

திர்கால சந்ததியினரை நோயற்றவர்களாக உருவாக்குவதற்கே செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை நிறுத்தியுள்ளோம்’.
இவ்வாறு கூறுகிறார் நமது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

‘ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான மரக்கறி வகைகளை தத்தமது வீட்டு வளவுகளிலேயே உற்பத்தி செய்யுங்கள்’.
இப்படிக் கூறுகிறார் அமைச்சர் பந்துல குணவர்த்தன.

‘நாட்டில் விரைவில் மக்கள் பட்டினியால் செத்து மடிவர்’.
எதிர்க் கட்சிகள் இப்படிப் பிரச்சாரம் செய்கின்றன.

‘டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்’.
இப்படிச் சொல்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.

‘எதிர்க் கட்சிகள் சொல்வது பெரும் டொலர் பற்றாக்குறை எதுவும் நாட்டில் இல்லை’.
மத்திய வங்கி ஆளுநர் கருத்து.

‘ஜனாதிபதி பிரயாணம் செய்த காரைப் பார்த்ததும், பால்மா வாங்க வரிசையில் நின்ற மக்கள் ‘கூ’ போட்டுச் சத்தம்’.
இப்படித் தெரிவிக்கின்றன ஊடகங்கள்.

‘இந்த அரசாங்கம் மிக விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும்’.
இப்படித் தெரிவிக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

‘அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கம்’.
ஊடகத் தலைப்புகள்.

‘நிதியமைச்சர் பதவிக்கு அடுத்ததாக பிரதமர் பதவி மீது பசில் கண் வைத்துள்ளார்’.
இதுவும் ஊடகங்களின் ஆருடம்.

இவை யாவும் அண்மைய சில மாதங்களாக நமது காதுகளில் வந்து விழும் செய்திகள். இந்தச் செய்திகளில் எவ்வளவு தூரம் உண்மை பொய் இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, நாடு இன்று சிக்கியுள்ள நெருக்கடி நிலையை இந்தச் செய்திகள் ஓரளவு பிரதிபலிக்கின்றன என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அதே நேரத்தில் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை ஓரளவு ஏற்றுக் கொள்ளும் அரச தரப்பினர், இந்த நெருக்கடிகளுக்கு காரணங்கள் எனச் சிலவற்றைச் சொல்கின்றனர்.

அதாவது, உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொவிட் பெருந்தொற்றால் உலகப் பொருளாதாரமே சரிந்துள்ள நிலையில், இலங்கைக்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தந்த சுற்றுலாத்துறையும் ஏனைய தொழிற்துறைகளும் வீழ்ச்சி அடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பு இது என்பது ஒரு காரணம்.

இன்னொரு காரணம், முன்னைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் எவ்வித திட்டமும் இல்லாமல் வெளிநாடுகளில் கண்டபாட்டுக்கு கடன் வாங்கியதால் வந்த வினை என்ற வியாக்கியானம்.

மேலுமொரு காரணமாக, உலகில் உள்ள பெரும் பெரும் செல்வந்த நாடுகளே கொவிட் தொற்றுக் காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க சின்னஞ்சிறிய இலங்கை மட்டும் எவ்வாறு தாக்குப் பிடிப்பது என்ற கேள்வி.

இவர்கள் சொல்லும் இந்தக் காரணங்கள் அல்லது நியாயங்களிலும் கூட ஓரளவு உண்மை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், கொவிட் தொற்றைத் தவிர மற்றைய காரணிகள் அல்லது நிலைமைகள் உருவாகலாம் என்பதைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் ஏன் முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டன? அப்படிக் கணித்திருந்தால் முன்கூட்டியே சில தற்பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாமே?

இது சம்பந்தமாக எமது நாட்டுக்கு ஏற்கெனவே ஒரு அனுபவம் கூட உண்டு. 1970 – 77 காலகட்டத்தில் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ‘மக்கள் முன்னணி’ அரசாங்கம் பதவியில் இருந்தபோதும் இந்த மாதிரியான ஒரு நிலைமை ஏற்பட்டது. உலகச் சந்தையில் திடீரென எண்ணெய் விலை பல மடங்காக அதிகரித்ததினாலும், பொருளாதார மந்த நிலையாலும் பல உலக நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டது. நமது இலங்கையிலும் அது ஏற்பட்டது. மக்கள் ஒரு துண்டு பாணுக்காக இரவிரவாக பேக்கரிகளின் முன்னால் தவம் கிடந்தனர். அரிசிச் சோறு முயற் கொம்பாகியது. உணவகங்களில் சோற்றுக்குப் பதிலாக மரவள்ளி, வற்றாளைக் கிழங்குகள் அவித்துப் பரிமாறப்பட்டன. சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கேநீர்க்கடைகளில் சீனி போடாத ‘காட்டை’ என்ற வெறும் தேநீர் பரிமாறப்பட்டது.

ஆனால் அன்றைய காலகட்டத்தில்பொருளாதார விற்பன்னர்களான பல இடதுசாரிகள் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்ததால் (அன்றைய அரசாங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்ததுடன், பொருளாதாரத்தில் இரட்டைக் கலாநிதியான டாக்டர் என்.எம்.பெரேரா நிதியமைச்சராகவும் பதவி வகித்தார்) அவர்கள் உணவில் தன்னிறைவு காண்பதற்கான தேசிய ரீதியிலான இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர். அந்த முயற்சி வெற்றியை நோக்கிச் சென்று நாடு உணவில் தன்னிறைவு அடையும் சூழலில் அரசாங்கத்தில் இருந்த வலதுசாரிப் பிரிவினர் அதைக் தடுத்து நிறுத்திக் குழப்பி விட்டனர். அதனால் இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் அரசாங்கத்தை விட்டு வெளியேற நேர்ந்து, 1977 பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் இரு வேறு அணிகளாகப் போட்டியிட்டு, ஐ.தே.கவுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்துத் தாமும் படுதோல்வி அடைந்தனர். இது என்றென்றும் மறக்கப்பட முடியாத ஒரு வரலாற்றுப் பாடம்.

அன்று அந்த உணவில் தன்னிறைவு காணும் இயக்கத்தை தொடர்ந்திருந்தால், தொடர்ந்தும் நாம் டொலரில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் தேவையே ஏற்பட்டிருக்காது. அது போல, தேசியக் கைத்தொழில் துறைகளும் கட்டியெழுப்பப்பட்டிருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். அதை விடுத்து ‘வெள்ளம் தலைக்கு மேலே போன பின்னர்’ வீட்டுத் தோட்டம் செய்யச் சொன்னால் பலன் கிடைக்குமா? அது போல, மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி, இரசாயன உரங்களுக்குப் பழக்கப்பட்டுப்போன விவசாயிகளைப் பார்த்து இரசாயன உரத்தைக் கைவிட்டுவிட்டு இயற்கை உரத்தில் விவசாயத்தைச் செய்யுங்கள் என்றால், பயிர்கள் எழுந்து நிற்குமா அல்லது விவசாயிதான் எழுந்து நிற்பானா?

அது ஒரு புறமிருக்க, 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் நாட்டின் விவசாயம் உட்பட தேசிய பொருளாதாரத்தை அழித்து அறிமுகப்படுத்திய ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ என்ற பெயரில் அறிமுகப்படுத்திய அந்த நாசகார நவ தாராளவாதக் கொள்கையைத்தானே தற்போதைய அரசாங்கம் உட்பட கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த எல்லா அரசாங்கங்களும் அட்சரப் பிசகின்றிப் பின்பற்றி வந்திருக்கின்றன. அந்தக் கொள்கையை அடிப்படையில் மாற்றாமல் புண்ணுக்குப் பவுடர் போட்டு மறைப்பது போல சில வெளிப்பூச்சு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பொருளாதாரம் நிமிர்ந்து

சுய சார்பு ஏற்பட்டுவிடாது.

அன்று எமது நாட்டைக் கைப்பற்றிய ஆங்கிலேய காலனித்துவவாதிகள் எமது நாட்டில் நிலவி வந்த சுய சார்புப் பொருளாதாரத்தை அழித்து தமது இலாபத்துக்காக நமது மலைப் பகுதிகளில் தேயிலை, இறப்பர், கோப்பி போன்ற பணப் பயிர்களை உற்பத்தி செய்தனர். அந்தப் பயிர்கள் மூலம் பெற்ற அந்நியச் செலாவணியே அன்றைய நிலையில் நாட்டின் பிரதான வருவாயாக இருந்தது. நாடு 1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட சுதந்திர நாட்டின் அரசுகள் அதை மாற்றியமைக்க எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அது போதாதென்று, 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆரின் அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதோடு, அந்நிய முதலீடுகளைக் கொண்டு சுதந்திர வர்த்தக வலயம் என்ற பெயரில் ஆடைத் தொழிற்சாலைகளையும் அறிமுகம் செய்தது. ஜே.ஆர். அரசின் இந்த முயற்சிகள் மேலும் மேலும் அந்திய சக்திகளின் தயவில் நமது நாடு தங்கி நிற்கும் நிலைக்கு இட்டுச் சென்றது.

அது மாத்திரமின்றி, ஜே.ஆர். காலத்தில் அறிமுகமான மத்திய கிழக்கு வேலை வாய்ப்பும், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பும் கூட நமது நாட்டை அந்நிய சக்திகளின் தயவில் தங்கி நிற்பதை மேலும் அதிகரித்தது. இருந்தும் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எவையுமே இந்த நிலைமையை மாற்றி அமைத்து, குறைந்த பட்சம் ஒரு சுய சார்பு விவசாயப் பொருளாதாரத்தைத் தன்னும் கட்டியெழுப்ப முயற்சிக்கவில்லை. அதன் காரணமாக, தற்பொழுது கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டு அந்நிய சக்திகள் மூலம் பெற்ற வருவாய் ஊற்று நின்று போனதும் நாடு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது.

 

இந்த உண்மையை இப்பொழுதாவது ஏற்றுக் கொண்டு, நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மறு சீரமைப்பதற்குப் பதிலாக, இரண்டு பிரதான ஆளும் கட்சிகளும் ஒருவர் மாறி ஒருவர் ஆளையாள் குற்றம் சாட்டுவதால் பிரச்சினை தீரப் போவதில்லை. நாட்டுக்கு இழைத்த குற்றங்களைப் பொறுத்தவரை இரண்டு பிரதான கட்சிகளும் மிகப்பெரும் கிறிமினல் குற்றவாளிகளே.

இந்த நிலையில் இலங்கை மக்கள் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் தமக்கான ஒரு சரியான தலைமையை ஏற்படுத்தி நாட்டையும் மக்களையும் நேசித்து, சரியான பாதையில் செயற்படும் ஒரு அரசாங்கத்தை உருவாக்கினால் தவிர, இந்தப் பிரச்சினை ஒருபோதும் தீரப் போவதில்லை.

Source:  வானவில் இதழ் 133,January 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...