மக்கள் சீனமும், சீன மக்களின் வாழ்க்கையும் !-– இரா. சிந்தன்

 சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புதிய நகரத்தையே கட்டியமைத்து வருகிறார்கள். அது மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு முன் மாதிரியாக அமையப்போகிறது. அதன் பெயர் ‘ஜியோங்கன் நியூ ஏரியா’.

இந்த நகரம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பல இலட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் இந்த நகரம் குறித்த திட்டத்தை வெளியிட்ட சீன குடியரசின் தலைவர் ஜி ஜின்பிங் ‘வரும் ஆயிரம் ஆண்டுக்கான பெரிய உத்தியாக இது அமையும்’ என்றார்.

உண்மையிலேயே, முன்னேறிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்டதாக அந்த நகரத்தை கட்டமைக்கிறார்கள். மனித நடமாட்டத்திற்காக சாலைகள், சரக்குப் போக்குவரத்துக்காக பாதாள போக்குவரத்து என இரண்டையும் திட்டமிட்டு அமைக்கிறார்கள். மக்களுக்கு தேவையான தண்ணீர், ஆற்றல் வளங்களை கொண்டு வந்து சேர்ப்பதை ஒரு பக்கம் கட்டமைத்துக்கொண்டே, கழிவு மேலாண்மையையும், மறுசுழற்சியையும் திட்டமிட்டுச் செய்கிறார்கள். பொதுப்போக்குவரத்தையும், நகரத்தின் எரிபொருள் செலவினத்தையும், ஆற்றல் வள பராமறிப்பையும் கணிணி கட்டமைப்பின் மூலம் மேலாண்மை செய்யவுள்ளார்கள். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, சூழலியல் சீர்கேடுகள் இல்லாத வகையில் அந்த நகரம் திட்டமிட்டு அமைக்கப்படுகிறது. அதைச்சுற்றி அமைந்த நீர் நிலைகளின் தரம் மேம்படுத்தப்படுவதுடன், தொடர்ந்து கண்காணிக்கும் ஏற்பாடுகளும் உள்ளன.

இவற்றையெல்லாம் கொண்ட ஒரு நகரத்தை கண்களை மூடிச்சிந்தித்தால், சற்று பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. இதே போல,சீனா பல்வேறு வியப்புகளுக்காக ஊடகங்களில் இடம் பிடித்திருக்கிறது. அதே சமயம்,சீனாவை விமர்சித்த கருத்துக்களும் ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன. விமர்சித்தாலும், பாராட்டினாலும், ஒன்றை மறுக்க முடியாது. இனிவரும் நாட்களில், சீனபொருட்கள் வருவதைப் போல, சீனாவைக் குறித்த கருத்துக்களும் வந்தே தீரும். எனவே நாம் சீனாவை புரிந்துகொள்ள முயற்சிப்பது கட்டாயமான தேவையாகவே ஆகியுள்ளது.

கவனம் குவிய வேண்டிய ‘மந்திரச்’சொல் !

ஆயிரம் ஆண்டுகளுக்கான நகரம் பற்றிய செய்தி ஒரு சுவாரசியமான தொடக்கம் மட்டுமே. இப்படித்தான் அவர்கள் சில பத்தாண்டுகளுக்கு முன் சென் சென் என்ற மீனவ கிராமத்தை, ஒரு நகரமாக, புதிய இலக்குகளுடன் கட்டமைக்கத் தொடங்கினார்கள். இப்போது அது உலகின் தலைசிறந்த தொழில்நுட்பவல்லுனர்களின் கனவுப் பகுதியாக இருக்கிறது. எனவே, இப்படியான நகரங்களை அண்ணாந்து பார்ப்பதில் பொருளில்லை. நமது கவனம் வேறு இடத்தில் குவிய வேண்டும். அதுதான் சோசலிசம் !.

இந்தியாவும், சீனாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள். கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் விடுதலையைச் சுவைத்த நாடுகள். இந்தியா, தனக்கு முதலாளித்துவபாதையைத் தேர்வு செய்தது. நமது நாட்டில் கம்யூனிஸ்டுகள் முன் நின்று போராடிய பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் நிலவுடைமைக் குவியலும், சுரண்டல் வடிவங்களும் பெருமளவில் மாற்றமில்லாமல் தொடர்ந்தும், புதிய வடிவங்களை எடுத்தும் வருகின்றன. சீனாவிலோ, கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம், பழைய சுரண்டல் அமைப்பு நொறுக்கப்பட்டு, சோசலிசத்தை கட்டமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

A New Capital City (Xiongan)

இருப்பினும், 1980 ஆம்ஆண்டுகள் வரை, இரண்டு நாடுகளும் ஒன்று போலவே தோற்றமளித்தன. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 276.4 டாலர்களாக இருந்தது. சீனாவின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 300 டாலர்களாக இருந்தது. அந்த சமயத்தில் இரண்டு நாடுகளுமே பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதாக அறிவித்தன. பிறகு உலகமயத்தை பயன்படுத்திக்கொள்ளவும் முனைந்தனர்.

இப்போது சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகிவிட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இரண்டாம் இடத்தை தக்கவைத்து, மேலும் வளர்ந்து வருகிறது. தன்னுடைய மக்கள் தொகையை, மனித வளமாக மாற்றியமைத்திருக்கிறது.

அந்த நாட்டில் இப்போது 50 லட்சம் தொழில்நுட்பவல்லுனர்கள் இருக்கிறார்கள். உலகிலேயே மிக அதிகமான காப்புரிமை விண்ணப்பங்கள் சீனாவில் இருந்து பதிவாகின்றன (2020 ஆம்ஆண்டில் 68 ஆயிரத்து 720 விண்ணப்பங்கள்). உலகின் முதன்மையான 500 தொழில் நிறுவனங்களில், சீனாவில் தான் மிக அதிக எண்ணிக்கையில் 133 நிறுவனங்கள்செயல்படுகின்றன. அந்த நாட்டின் மொத்தஉ ள்நாட்டு உற்பத்தியானது 15.5 லட்சம் கோடி டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 ஆயிரம் டாலர்கள் என்ற அளவை 2019 ஆம் ஆண்டில் தாண்டியது. 1952 ஆம்ஆண்டில், முதல் ஐந்தாண்டு திட்டத்தின் போது சீனாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட்டால் இப்போது அவர்கள் அடைந்திருப்பது 1500 மடங்கு வளர்ச்சி ஆகும்.

இந்த ஆண்டுகளில் நம்மால் சாதிக்க முடியாததை சீனா செய்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர்கள் போட்டு வைத்த அடித்தளம் தான். எனவே நாம் கவனிக்க வேண்டியது, சில மினுமினுப்புகளை அல்ல.

விஞ்ஞான சோசலிசம், ஒரு குறிப்பிட்ட நாட்டின் சொத்து அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கானது. இது நாள்வரை நாம் கண்ட சமுதாய அமைப்புகளிலேயே மேம்பட்ட ஒன்றாக சோசலிசம் உள்ளது. அனைத்து மக்களின் நல வாழ்வை சாத்தியப்படுத்தும் வல்லமையை தன்னுள்ளே கொண்டுள்ளது.

நாட்டிற்கும் இதயம் உண்டு:

சோசலிச அமைப்பின் தனித்துவங்களில் முக்கியமானது ‘கம்யூனிஸ்ட் கட்சி’ தான். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர 8 கட்சிகள்செயல்படுகின்றன.

சீனகோ மிண்டாங்க் புரட்சிக் குழு- உறுப்பினர்கள்: 1,51,000
சீன ஜனநாயக லீக்- உறுப்பினர்கள் : 3,30,000
சீன தேசிய ஜனநாயக கட்டமைப்புக்கான சங்கம் – உறுப்பினர்கள்: 2,10,000
சீனத்தில் மக்களாட்சியை முன்னெடுக்கும் சங்கம் – உறுப்பினர்கள்: 1,82,000
சீன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் ஜனநாயக கட்சி – உறுப்பினர்கள்: 1,84,000
ஜி காங் ஜீனா கட்சி (வெளிநாடு வாழ் சீனர்கள் உருவாக்கியது) – உறுப்பினர்கள்: 63,000
ஜூசன் சமூகம் (கல்வியாளர்கள்)- உறுப்பினர்கள்: 1,95,000
தைவான் ஜனநாயக சுயாட்சிக்கான லீக் – உறுப்பினர்கள்: 3,300

இந்த கட்சிகளுக்கிடையிலும், இவை தவிர செல்வாக்கான தனிநபர்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பை உருவாக்கி, அரசாங்கத்தையும், சமூகத்தையும், அரசியலையும் வழி நடத்தும் பணியை கம்யூனிஸ்ட் கட்சி செய்கிறது. இவ்வகையில், அந்தநாட்டின்இதயமாகவும், இரத்த நாளங்களாகவும் கம்யூனிஸ்ட் கட்சி அமைந்திருக்கிறது.

வரலாற்றின் சுருக்கம்:

1840 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓபியம் போர், சீனாவை அரைக் காலனிய அரை நிலவுடைமையாக மாற்றியது. 1911 ஆம்ஆண்டில், டாக்டர் சன்யாட்சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி, முடியாட்சி முறைக்கு முடிவு கட்டியது. இருப்பினும் அவர்கள் சீனநாட்டின் நிலைமைகளை முழுமையாக மாற்றியமைத்திடவில்லை. எனவே பழைய சமூகஅமைப்பின் அநீதிகள் தொடர்ந்தன. எனவே, அந்த நாட்டின் புரட்சிகர சக்திகள் மார்க்சியத்தை தேடிக்கற்றார்கள். இவ்வாறு உருவான கம்யூனிஸ்டுகள், 1921 ஜூலை 23 முதல்ஆகஸ்ட் 2 வரை சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்த ஜியாக்சிங் நகரத்தின் நான் ஹூஏரியின் நடுவே ஒரு படகில், கடிதங்களுடைய முதல் மாநாட்டை நடத்தினார்கள்.

1924 – 1927 வரை சீன கம்யூனிஸ்டுகள், சன்யாட்சென்னின் கோமிண்டாங் கட்சியுடன் கைகோர்த்தார்கள். ஆனால் சன்யாட்சென் மறைவிற்கு பின் வலதுசாரி தலைமையின் கைவசம் கோமிண்டாங் சென்றது. அவர்கள் கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்க முயன்றார்கள். ஜப்பானிய ஆக்கிரமிப்பும் அதே காலத்தில் தொடங்கியது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, தனக்கு எதிரான முற்றுகையில் இருந்து தற்காத்துக்கொண்டு, தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு நெடும் பயணத்தை தொடங்கியது. வழி நெடுகிலும் மாபெரும் உயிர்த் தியாகங்களை அந்தக் கட்சி செய்ய வேண்டியிருந்தது. சராசரியாக ஒவ்வொரு 300 மீட்டருக்கும் ஒரு வீரரை அவர்கள் இழந்தார்கள். 1935 ஆம்ஆண்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மாசேதுங் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவோவின் தலைமையில் நெடும்பயணம் தொடர்ந்தது. மக்கள் கம்யூனிஸ்டுகளின் தனித்தன்மையை உணரத்தொடங்கினார்கள். மெல்ல மெல்ல கம்யூனிஸ்டுகளால் ஈர்க்கப்பட்டார்கள். 1945 ஆம்ஆண்டு, ஜப்பான் படைகள் சரணடைந்தன. உள்நாட்டுப் போரிலும் கம்யூனிஸ்டுகள் வெற்றியடைந்தார்கள். மக்கள் செல்வாக்கே இந்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்தது. 1949 வரையில், கட்சி மற்றும் கட்சி சார்ந்த அமைப்புகளின் 37 லட்சம் உறுப்பினர்களுடைய உயிர்த் தியாகத்தில் தான் புரட்சி வெற்றியடைந்தது. மா சேதுங் குடும்பத்தில் 5 பேர் இப்போராட்டத்தில் உயிர் நீத்தார்கள்.

பாட்டாளிகளும்,விவசாயிகளுமே கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய உந்து சக்தி என்ற போதிலும், அவர்கள் எப்போதும் நேச சக்திகளுடன் கைகோர்க்க தயாராக இருந்தார்கள். அனைத்து வர்க்கங்களையும் சேர்ந்த நாட்டுப்பற்றாளர்களை ஒருங்கிணைத்தார்கள். சுரண்டல் தன்மை மிகுந்த நிலவுடைமை அமைப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சீன பண்புகளுடன் கூடிய சோசலிசத்தை வளர்த்தெடுத்தார்கள். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் சோசலிசசந்தைப் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டன.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது வயது 100 ஆகிவிட்டது, சுமார் 9.19 கோடி உறுப்பினர்களைக் கொண்ட, உலகிலேயே மாபெரும் கட்சியாக இயங்குகிறது (அதாவது வியட்நாம் நாட்டின் மக்கள் தொகைக்கு நிகரான எண்ணிக்கை). சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு 48.6 லட்சம் கிளை அமைப்புகள் இருக்கின்றன. இந்த கிளை அமைப்புகள் கிராமங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கட்சி அமைப்புகள்,பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், துணை மாவட்ட நிலைகள், சமுதாயங்கள், சமூக அமைப்புகள், ராணுவ அமைப்புகள் என அனைத்திலும் பரந்து விரிந்துள்ளன. கட்சி உறுப்பினர்களில் 40 வயதுக்கும் இளையவர்கள் எண்ணிக்கை 3.3 கோடி. 60 லட்சம் கட்சி உறுப்பினர்கள் தொழிலாளர்களாகவும், 2.58 கோடி உறுப்பினர்கள் வேளாண்துறையில் பணியாற்றுவோராகவும் உள்ளார்கள். 30 லட்சம் உறுப்பினர்கள் மாணவர்கள்.

டாக்டர் சன்யாட்சென் (Sun Yat-sen)

46 சதவீதம் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். 25 சதவீதம் பெண்கள், 7 சதவீதம் இன வழி சிறுபான்மையினராக உள்ளனர்.

சீன தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. மா-சேதுங்,டெங்ஜியோபிங், ஜியாங்ஜெமின், ஹுஜிந்தா மற்றும் ஜிஜின்பிங் ஆகிய தலைவர்கள் அந்தக் கட்சியை வழி நடத்தியுள்ளார்கள். மார்க்சியத்தை சூழ்நிலைகளுக்கு தக்க அவர்கள் முன்னெடுக்கிறனர். நூற்றாண்டிற்கான முதல் இலக்கை முடித்து, அடுத்த இலக்குகளை நோக்கி திட்டமிட்டு முன்னேறிவருகிறார்கள்.

மேலே பட்டியலிடப்பட்ட தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கோர்’ எனப்படும் மையமாக செயலாற்றியுள்ளனர். பொதுவாக ‘கோர்’ என்பதை தனிநபர் வழிபாடாக முதலாளித்துவ ஊடகங்கள் பரப்புகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தனது அமைப்பில் தனிநபர் வழிபாட்டை தொடர்ந்து எதிர்க்கிறது. கட்சியையும்,நாட்டையும் வழி நடத்தும் கடும் பணியையே அந்ததலைவர்களுக்கு பணிக்கிறது. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டுக்கு உட்பட்டும், நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுமே அவர்களால் செயல்பட முடியும்.

சீனத்தில் ஜனநாயகம் உண்டா இல்லையா?

சீனத்தில் நிலவக்கூடிய சோசலிசம் பற்றிய, விவரிப்புகளை படிக்கும்போது சிலருக்கு உடனடியாக ஒரு கேள்வி தோன்றுகிறது. சோசலிசத்தில் ஜனநாயகம் உண்டா இல்லையா? கட்சிகளுக்குள்ளான ஒருங்கிணைப்பை வைத்து ஜனநாயகம் இருப்பதாக நினைத்துக் கொள்ள முடியுமா? அது மிக முக்கியமான பண்பு, ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்சிகளின் ஒருங்கிணைப்பால் மட்டும் சாத்தியமாவது அல்ல.

ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கு ஏற்ப, அந்த நாட்டின் மக்களாட்சி வடிவம் பெருகிறது. அதில் மேற்சொன்ன ஒருங்கிணைப்பு மட்டுமல்லாது ‘கலந்தாலோசனை’ ‘கருத்துப் பகிர்வு’ ஆகியவை சீன மக்களாட்சியின் தனித்துவமான பண்புகளாக இருக்கின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சி, அந்த ஜனநாயகத்தின் மைய விசையாக இருக்கிறது. உதாரணமாக, நகரமயமாதல் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் ‘வீடுகள் வாழ்வதற்குத்தான், ஊக வர்த்தகம் மூலம் லாபம் சேர்ப்பதற்கு அல்ல’ என்ற கொள்கையை சமூகத்தில் கட்சி முன்னெடுக்கிறது.

சீனத்தில் நடக்கும் தேர்தல்கள்:

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் மாநாடுகளில் தான் அந்த நாட்டின் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாநாடுகள் பல்வேறு நிலைகளில் நடக்கின்றன.தேசிய அளவிலான மாநாடு நடப்பதுடன், மாநிலங்கள் (ப்ராவின்ஸ்), நகரங்கள், கவுண்டிகள், ஊர் மற்றும் ஊரகம் (கிராமம்) என பல்வேறு நிலைகளில் மாநாடுகள் நடக்கின்றன. இவற்றில் பங்கேற்கும் பிரதிநிதிகள் நேரடி வாக்களிப்பு மற்றும் பிரதிநிதிகள் வாக்களிப்பின் வழியாக தேர்வாகிறார்கள்.

கவுண்டி மற்றும் அதற்கு கீழான நிலையில் நடக்கும் மாநாடுகளுக்கு மக்களால் நேரடியாக வாக்களிக்கப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தார்கள். 25 லட்சம் மக்கள் பிரதிநதிகளை அவர்கள் தேர்வு செய்தார்கள். இப்போது அந்த நாட்டில் மொத்தம் 26 லட்சம் பிரதிநிதிகள் செயல்படுகிறார்கள்.

மேலும், சமுதாய அளவில் சுய மேலாண்மைக் குழுக்கள் இருக்கின்றன. நகர்ப்புற குடியிருப்போர் குழு மற்றும் ஊரக மக்கள் குழு ஆகிய அந்த குழுக்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவையாகும். இவற்றிலும் தேர்தல்கள் நடக்கின்றன. 95 சதவீதம் வாக்காளர்கள் இந்த தேர்தல்களில் பங்கேற்கிறார்கள். இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் இந்த தேர்தல்களில் பங்கேற்க முடியாத சூழலை உணர்ந்து அதை எப்படி சாத்தியமாக்கலாம் என்ற விவாதங்கள் சீனத்தில் நடந்து வருகின்றன.

தேர்தல்கள் தவிர, அந்த நாட்டின் ஜனநாயகத்தில் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பது கலந்தாலோசனைகள் ஆகும். சிற்றூர்களில் கூட, அந்த ஊருக்கான திட்டங்களை மக்களோடு விவாதித்து கருத்துக்களை பெற்று செயல்படுத்துவது என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பாக, வறுமை ஒழிப்புக்கான சிறப்புத் திட்டங்கள், உள்ளூர் மக்களிடம் ஆலோசனை செய்துதான் அமலாக்கப்பட்டன. அதில் அவர்கள் வெற்றியையும் சாதித்தார்கள்.

18வது தேசிய மாநாட்டுக்கு பிறகு 187 சட்டங்கள் வரைவு நிலையிலேயே மக்களிடம் கருத்துக்கள் கேட்க விடப்பட்டன. 11 லட்சம் பேர் 30 லட்சம் திருத்தங்களை அவற்றிற்கு வழங்கியிருக்கின்றனர். நாட்டின் குடிமைச் சமூக விதிகளை உருவாக்கும் விவாதத்தின் போது 10 முறை பொதுமக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அந்த விவாதத்தில் மட்டும் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடுகளும் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. 2012 முதல் 2021 வரையில் அதன் தேசியக் குழுவிற்கு மொத்தம் 58 ஆயிரத்து 786 ஆலோசனைகள் பெற்றுள்ளார்கள். அவற்றில் 48 ஆயிரத்து 496 ஆலோசனைகளை பரிசீலனை செய்து அதற்குதக்க அரசின் செயல்பாட்டில் மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு துறைகளில் கலந்தாலோசனைகளை நடத்துகிறது. 2012 ஆம் ஆண்டிலிருந்து 170 கலந்தாலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

மேலும், சீனத்தில் பொது நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் ஜனநாயக அடிப்படையில் நடத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. அந்த ஏற்பாட்டை தொழிலாளர் மாநாடுகள்/ ஊழியர் மாநாடுகள் என்கின்றனர். ஒவ்வொரு மாகாணத்திலும் இந்த மாநாட்டுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பில் முன் நிற்பதுடன், கண்காணிப்பு வழிமுறைகளையும் வகுக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் பண்புகளாக, கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைவர் ஜி ஜின்பிங் கீழ்க்கண்டவைகளை வரிசைப்படுத்துகிறார்.

• தலைமையில் ஏற்படும் மாற்றங்கள் சட்ட முறைப்படி அமைய வேண்டும்.
• அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி அமைய வேண்டும்
• மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்னெடுக்க சுதந்திரம் வேண்டும்
• நாட்டின் அரசியல் செயல்முறையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும்
• முடிவுகள் ஜனநாயகமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்
• நியாயமான போட்டிச்சூழலில் தனித்துவம் வாய்ந்த தனிநபர்களுடையதிறன்களை அனைத்து முனைகளிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
• ஆட்சி செய்யக்கூடிய கட்சி, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே அரசாங்க விசயங்களை கையாள வேண்டும்
• அதிகாரத்தை செயல்படுத்துவோருக்கு உரிய கட்டுப்பாடுகளும், மேற்பார்வை ஏற்பாடும் இருக்க வேண்டும்.

சீனத்தின் படிப்படியான முன்னேற்றம்:

சோசலிசத்தின் இன்னொரு பிரிக்க முடியாத அம்சம் ‘திட்டமிடல்’ ஆகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு ஒன்றுதான் எனினும்,சோசலிச கட்டமைப்பை அந்தந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்டுத்தான் முன்னெடுக்க முடியும். தொடக்கத்தில் இருந்து ஐந்தாண்டு திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட்டார்கள்.

1960ஆம் ஆண்டுகளில் சோசலிசப் புரட்சியின் தொடக்க நிலை வெற்றிகள் கிடைத்து வந்தபோது – தொழில், விவசாயம், ராணுவம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் நவீனமயத்தை எட்டவேண்டும். இந்த இலக்கினை 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் எட்ட வேண்டும் என்ற திட்டத்தை முடிவு செய்தார்கள்.

1970களில் ஒப்பீட்டளவில் ஆறுதல் தரும் வாழ்க்கையை மக்களுக்கு தர வேண்டும் என்று முடிவு செய்தார்கள். 1980களின் மத்தியில் பொருளாதார வளர்ச்சிக்கான 3 படிநிலை வளர்ச்சியை திட்டமிட்டார்கள். 1990களின் மத்தியில் 3 படிநிலை வளர்ச்சித் திட்டத்தை மேம்படுத்தினார்கள். புதிய நூற்றாண்டில் நுழைந்தபோது தான் அவர்கள் உயர் வளர்ச்சி நிலைகளை பற்றிய திட்டங்களை உருவாக்க முனைந்தனர். 2012 ஆம் ஆண்டில் தேசிய மாநாடு கூடியபோது, கட்சியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது ஓரளவு முன்னேறிய நிலையை எட்டியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

மேலும், 1990வாக்கில் ஐந்தாண்டு திட்டங்களோடு சேர்த்து பத்தாண்டுக்கான வரைவு திட்டத்தையும் கட்சி முன்வைக்கத் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டில் நடந்த தேசிய மாநாடு, 2035 ஆம் ஆண்டுக்குள் அடிப்படை சோசலிச நவீன கட்டமைப்பை சாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்தது, அதன் திசையில் கட்சியும், சீன நாடும் பயணிக்கிறது.

அதீத வறுமை ஒழிப்பு:

இவ்வாறு திட்டமிட்ட அறிவிப்புகளை மட்டும் செய்யவில்லை. அதன்படி நடந்தும் காட்டினார்கள். அதன் உச்ச சாதனையாகத்தான் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் சீனா ஒரு அதிசயக்கத்தக்க அறிவிப்பை மேற்கொண்டது.

அந்தக் காலகட்டத்தில் தான் உலகில் கொரோனா பெருந்தொற்று அபாயமான விதத்தில் பரவிக்கொண்டிருந்தது. இந்த சூழலை பயன்படுத்தி, தொழிலாளர்கள் எந்த பணிப்பாதுகாப்பும் இல்லாமல் சுரண்டப்பட்டார்கள், வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். உலக அளவில் பசியும் வறுமையும் அதிகரித்தது. ஆனால் சீனா, கொரோனாவை வெற்றி கொண்டு மக்களை பாதுகாத்ததுடன், அதீத வறுமையை ஒழித்துவிட்டோம், ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த இலக்கினை பத்து ஆண்டுகள் முன்கூட்டியே நிறைவேற்றிவிட்டோம் என்றார்கள்.

உலகத்தில் கடந்த 70 ஆண்டுகளில், வறுமையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் 100 கோடிப் பேர் ஆவர், அதில் 70 கோடிப்பேர் சீன சோசலிசத்தினால் மீண்டுள்ளார்கள். வறுமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் காட்டிய ஈடுபாடு மிகப்பெரும்பங்களிப்பாக அமைந்தது. பல பின் தங்கிய கிராமங்களுக்கு நேரில் சென்று, பல மாதங்கள் தங்கியிருந்து அந்தப் பகுதிகளை அவர்கள் முன்னேற்றினார்கள்.

வாங்வென்பெங் என்பவர் கன்சு என்ற மாகாணத்தில் இயற்கை வளங்கள் துறையில் பணியாற்றுகிறார். கட்சி உறுப்பினர். மின்சியான் என்ற கவுண்டியில். ஜுகாய் என்ற கிராமத்திற்கு அவரை கட்சி முதல்நிலை செயலாளராக அனுப்பியது. வறுமை ஒழிப்பு பணிகளை வழி நடத்தும் கடமையை ஏற்றார். அந்த கிராமத்தில் இருந்த 11 குடும்பங்களில் வாழ்ந்த 31 பேர் வறுமையில் இருந்தார்கள். ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்தபின், உள்ளூர் நிலைமைகளையும் கணக்கிட்டு வறுமை ஒழிப்புத் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி கூட்டுறவு ஒன்றை உருவாக்கி கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அதன் மூலம் விற்பனை செய்தார்கள். வருவாய் உயர்ந்தது (மொத்த வருவாயாக சுமார் ரூ. 7 லட்சம் கிடைத்தது). 2 ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து, நிலைமை சீரானபிறகு தனது முந்தைய வேலைக்கு திரும்பினார் வாங்வென்பெங்.

இந்தப் பணிகளின் போது உயிர் நீத்த கட்சியினர் மற்றும் சோசலிச அரசின் பணியாளர்களுடைய எண்ணிக்கை 1800 ஆகும். சீனத்தில் செயல்படும் பிற கட்சிகளும் இந்த முயற்சிகளில் ஆலோசனைகளை வழங்கினார்கள் (மொத்தம் 2400). அந்த கட்சிகளில் இருந்து 36 ஆயிரம் பேர் நேரடியாக வறுமை ஒழிப்பு பணிகளில் இணைந்து செயல்பட்டார்கள்.

முதலில், சோசலிச புரட்சி அவர்கள் நாட்டில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது. அதன் பிறகு உற்பத்தி சக்திகளை முடுக்கிவிட்ட பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை செழிப்பாக்கின. பிறகு, வளர்ச்சி தேவைப்படும் பிராந்தியங்களில் திட்டமிட்ட முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அனைத்து முயற்சிக்கு பிறகும் வறுமை நிலை நீடித்த பகுதிகளுக்கு சென்று குறிவைத்த திட்டங்களை மேற்கொண்டு அந்த மக்களை மீட்டார்கள். இப்போது, ஊரக பகுதிகளை நோக்கி வளர்ச்சியை பரவலாக்கும் திசையில் நாடு பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

வறுமையை அவர்கள் மார்க்சியப் பார்வையோடு பகுத்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இரண்டு விதமான வறுமை நிலைமைகள் இருக்கின்றன. முதலாவது அதீத வறுமை. இரண்டாவது ஒப்பீட்டளவிலான வறுமை. ஒப்பீட்டளவிலான வறுமை, தனிச்சொத்துடைமையின் விளைவு ஆகும். ஆனால், சமுதாயத்தின் சாதாரண அங்கமாகக் கூட செயல்பட முடியாத பின்தங்கிய நிலைமையை அதீத வறுமை எனலாம். அதற்கு அளவு கோலாக குறைந்தபட்ச வருமானம் மட்டுமே இல்லை. அதனால் தான் ‘சியாகங்’ சமுதாயம் என்பதை அளவு கோலாக வகுத்துக்கொண்டார்கள்.

சியாகங் என்றால் என்ன?

சியாகங் (Xiaokang), என்ற சீனமொழிச் சொல்லிற்கு ‘ஓரளவிற்கு முன்னேறிய நிலை’ என்றுபொருள். ஏழ்மையுமில்லை, பணச்செழிப்புமில்லை ஆனால் வாடித் துயரத்தில் உழலாத நிலைமைஆகும்.

சியாகங் சமூகமாக சீனாவை மாற்ற வேண்டும் 1979 ஆம்ஆண்டில் சீனகுடியரசின் தலைவராக இருந்த டெங்சியோ பிங் முன்வைத்தார். அதன் படி,

1) உணவு உரிமை
2) பாதுகாப்பான குடிநீர் உரிமை
3) கட்டாய இலவச கல்வி
4) அத்தியாவிசய மருத்துவ சேவை வழங்கல்
5) பாதுகாப்பான வீடு

ஆகியவைகளை உறுதி செய்திட வேண்டும். இப்போது அந்த இலக்கினை அவர்கள் எட்டிவிட்டார்கள். நாட்டில் அதீத வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ வசதிகளை அனைவருக்கும் உறுதி செய்துள்ளார்கள். கல்வி நிலைமை உயர்ந்துள்ளது. தனிநபர் தலா வருமானம் உயர்திருக்கிறது.

கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் நாம் மேலே சொன்ன அனைத்தும் இணைந்து வெளிப்பட்டதைப் பார்த்தோம். ஊகான் நகரத்தில் தான் கொரோனா முதன் முதலில் பரவத் தொடங்கியது. அது என்ன வைரஸ் என்பது தெரியாது, சிகிச்சை முறை தெரியாது, தொற்றுநோயா என்பதும் கூட உறுதியாகவில்லை. ஆனால் அவர்கள் அதிவிரைவாக அந்த வைரசின் வடிவத்தை ஆராய்ச்சி செய்து உலக விஞ்ஞானிகளுக்கு அளித்தார்கள். நோய் பரிசோதனைக் கருவியை உருவாக்கினார்கள். ஊரடங்கு செய்வது என்ற முடிவை எடுத்து செயல்படுத்தினார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற முன் தயாரிப்பு இல்லாத ஊரடங்கு அல்ல அது. 42 ஆயிரத்து 600 மருத்துவ பணியாளர்களைக் கொண்ட 346 மருத்துவ குழுக்கள் நோய் பாதித்த மாகாணத்திற்கு அனுப்பப்பட்டனர். 40 ஆயிரம் கட்டுமான பணியாளர்கள் அவசரத் தேவைக்கான மருத்துவமனையை கட்டியமைத்தார்கள். இப்படி, ஒரு போர்க்களத்தில் போராடுவது போல அனைத்து மக்களும் இணைந்தார்கள். உயிர் ஆபத்து நிறைந்த பணிகளை, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன்கை எடுத்து மேற்கொள்ள வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிஅறிவித்தது. அதே வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் செயல்பட்டார்கள். இந்த போராட்டத்தில் 400க்கும் அதிகமான கட்சி உறுப்பினர்களை அவர்கள் இழந்தார்கள்.

கொரோனா தொற்றை தடுத்ததுடன், நோய் பாதிக்கப்பட்ட 100 வயதைக் கடந்த நோயாளிகள் 7 பேர் உட்பட 80 வயதைக் கடந்த 3 ஆயிரம் நோயாளர்களை காக்க முடிந்தது என்பது அவர்கள் சாதனைக்கு ஒரு அளவுகோள் ஆகும். பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிக்கான மொத்த செலவுகளையும் அரசே மேற்கொள்கிறது.

சீனத்தின் முன்னேற்றமும், மக்கள் வாழ்நிலையும்:

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதில் அவர்கள் புதிய உச்சத்தை தொட்டுவிட்டார்கள். செவ்வாய் கிரகத்தில் தானியங்கி இயந்திரத்தை இயக்குகிறார்கள். விண்வெளியில் ஒரு ஆய்வகம் அமைத்து, விஞ்ஞானிகளை அனுப்பி வைத்துள்ளார்கள். செயற்கை சூரியனை உருவாக்கிக்காட்டியுள்ளார்கள்.

சீனத்தின் அனைத்து ஊரகங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. ரயில்பாதைகள் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளன. அதிவேக ரயில் தொடர்கள் உலகிலேயே மிக உச்சமாக 38 ஆயிரம் கி.மீ தொலைவுகளை இணைக்கின்றன. ஒவ்வொரு 100 பேருக்கும் 113.9 அலைபேசி இணைப்புகள் இருக்கின்றன. மொத்த மக்களில் 70.4 சதவீதம் பேர் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். 5ஜி அலைபேசி கட்டமைப்பு சீனாவை அடுத்த நிலைக்கு உயர்த்தும் பெரும் பாய்ச்சல் வேக தொழில்நுட்பமாக இருக்கிறது. இணையம் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறார்கள்.

இவ்வாறு சோசலிசத்தை நோக்கிய வளர்ச்சிப் பாதையில், முதலாளித்துவ தனியுடைமை உற்பத்தி உறவுகள் கூட சோசலிச கட்டமைப்பிற்கு அடி பணிந்ததாகவும், சமூக, மக்கள் நல்வாழ்விற்கு பணியாற்ற உந்தப்படும் விதத்திலும் இருப்பதோடு, புதிய சாதனைகளையும் படைக்கிறது

அதே சமயம், மக்களிடையே பணிப்பாதுகாப்பு, இணக்க வாழ்வினை உறுதி செய்தல், கலை இலக்கியம், முதியோர் நலன், சூழலியல், தனிநபர் உரிமை பாதுகாப்பு ஆகியவைகளை உதாரணமாக எடுத்து, சீனத்தின் நிலைமைகளை பரிசீலிப்போம்.

வேலையும், பணிப்பாதுகாப்பும்:

இப்போது ‘ஓரளவு முன்னேறிய’ நிலைமையை எட்டியிருக்கும் சீனாவின் சோசலிசம், கொரோனா காலத்திலும் கூட 1 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் காட்டியுள்ளது. அங்கே மொத்த மக்கள் தொகையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 75.1கோடிகள் ஆகும். அவர்களில் 46 கோடிப்பேர் நகரங்களில் வாழ்கிறார்கள். நகர்ப்புறவேலை வாய்ப்பில் 80 சதவீதம் தனியார்நிறுவனங்களில் அமைந்திருக்கின்றன. வேலைவாய்ப்பு பெற்றவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய தலா வருமானம், 2012 ஆம் ஆண்டு இருந்த நிலைமையில் இருந்து இரட்டிப்பாகியுள்ளது. இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் 94.8 சதவீதம் பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளார்கள். 67 சதவீதம் பேர் குளிர்சாதன பெட்டிகள் வைத்துள்ளனர். அதேசமயம் 30 சதவீதம் பேர் தான் சொந்த வாகனம் வைத்திருக்கிறார்கள்.

பணிச்சூழலில் ஏற்படும் நோய்களுக்கென்று காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 27.4 கோடிப் பேர் பலனடைகிறார்கள். திடீர் வேலை இழப்பு ஏற்படுமானால், அந்தக் காலத்தில் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கும் காப்பீட்டு திட்டத்தில் 22.2 கோடிப்பேர் உறுப்பினராக உள்ளனர்.

சிறுபான்மை இனங்களும் இணக்க வாழ்வும்:

சீனாவை பற்றிய ஏகாதிபத்திய பொய் பிரச்சாரம் பெரும்பாலும் அங்கு வாழும் இனவழி சிறுபான்மையினர்கள் பற்றியதாக உள்ளது. திபெத், உய்குர் முஸ்லிம்கள் குறித்தான பல பிரச்சாரங்களையும் நாம் படித்திருக்கிறோம். உண்மையிலேயே அங்கே இணக்க வாழ்விற்கு எடுக்கப்படும் முயற்சிகள் என்னென்ன?

சீனாவில் 55 சிறுபான்மை இனங்கள் இருக்கின்றார்கள். சீனத்தின் அரசமைப்புச் சட்டத்திலேயே பிராந்திய சுயாட்சி உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், இனவழி சிறுபான்மையோர் அதிகம் வாழும் பகுதிகள் சுயாட்சிப் பகுதிகளாக கூடுதல் அதிகாரங்களுடன் செயல்படுகின்றன.

இது தவிர சிறு எண்ணிக்கையில் உள்ள இனங்களுக்கு, மாநாடுகளில் ஒரு பிரதிநிதியாவது இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என தேர்தல் சட்டம் சொல்கிறது. அதன் அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறார்கள். 13வது தேசிய மாநாட்டில் பங்கேற்றவர்களில் 14.7 சதவீதம் பிரதிநிதிகள் சிறுபான்மை இனத்தினர் ஆவர்.

சீனத்துடைய மேற்கு பிரதேசங்களிலும், எல்லைப்பகுதிகளிலும் இன வழி சிறுபான்மையோர் அதிகமாக வாழ்கிறார்கள். எனவே அப்பகுதிகளில் சிறப்புத் திட்டங்கள், வளர்ச்சி முதலீடுகள் செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இன்னர் மங்கோலியா, குவாங்சி, திபெத், நிங்சியா, ஜிங்சியாங் ஆகிய தன்னாட்சிப் பிரதேசங்களிலும், இன வழி சிறுபான்மையோரை அதிகம் கொண்ட குய்சோ, யுன்னான், கிங்ஹாய் ஆகிய மாநிலங்களிலும் வளர்ச்சி வேகமடைந்துள்ளது.

இன வழி சிறுபான்மையோர் வாழும் பகுதிகளில் 9 ஆண்டுகள் கட்டாயக் கல்வி தரப்படுகிறது. திபெத் தன்னாட்சி பிரதேசம், ஜிங்சியாங் தன்னாட்சிப் பகுதியின் குறிப்பிட்ட பகுதிகளிலும் 15 ஆண்டுகள் வரை கட்டாயக் கல்வி தரப்படுகிறது.

படிப்பும் விளையாட்டும்:

இலக்கிய வாசிப்பிலும், அறிவியல் முன்னேற்றத்திலும் சீனா தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. மக்களிடையே அறிவியல் சிந்தனையை பரப்புவதிலும், அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதிலும் பொது முதலீட்டை பலமடங்கு அதிகரித்துள்ளனர். புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும் அரசின் கொள்கையாக இருக்கிறது.

சீனாவில் 3 ஆயிரத்து 212 பொது நூலகங்கள் அமைந்திருக்கின்றன. 5 ஆயிரத்து 788 அருங்காட்சியங்களும், 3 ஆயிரத்து 321 பண்பாட்டுமையங்களும்உள்ளன. நகரங்களில் 32 ஆயிரத்து 825 பண்பாட்டு நிலையங்கள் செயல்படுகின்றன. கிராமங்களில் 5 லட்சத்து 75 ஆயித்து 384 கலாச்சார சேவை நிலையங்கள் செயல்படுகின்றன. ஆண்டுக்கு 2700 கோடி செய்திப் பத்திரிக்கைகளும், 20 கோடி இதழ்களும் 1 கோடிபுத்தக பிரதிகளும் அச்சாகின்றன.

சீனத்தில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்கள் மொத்தம் 202 ஆகும். ஆண்டுக்கு 531 திரைப்படங்கள் வெளியாகின்றன. அறிவியல் பிரச்சாரம், ஆவணப்படம், சிறப்புத் திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன் சித்திரப்படங்கள் 119 வெளியாகின்றன.

இனவழி சிறுபான்மையோர் வாழும் பகுதிகளில் 729 ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் இயங்குகின்றன. அவற்றில் 279 தொலைக்காட்சி சேனல்களும் 188 ரேடியோ நிகழ்ச்சிகளும் சிறுபான்மை மொழிகளில் இயங்குகின்றன.

மாற்றுத்திறன் கொண்டோருக்காக 25 ரேடியோ நிகழ்ச்சிகளும், தொலைக்காட்சிகளில் 32 சைகை மொழி நிகழ்ச்சிகளும், கண்பார்வையற்றோருக்காக பிரெய்லி மற்றும் ஒலி புத்தகங்களைக் கொண்ட 1,174 படிப்பகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், புத்தக வாசிப்பிலும் தாக்கம் செலுத்துகின்றன. 39 டிஜிட்டல் நூலகங்கள் மாகாண அளவிலும், நகர அளவில் 376 டிஜிட்டல் நூலகங்களும் செயல்படுகின்றன. கவுண்டி அளவில் 2760 மையங்களில் டிஜிட்டல் சேவைகள் கிடைக்கின்றன. சீனாவில் 11 பண்பாட்டு பாதுகாப்பு பகுதிகள் உள்ளன. பண்டைய இலக்கிய படைப்புகளை தொகுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு சுமார் 3 லட்சம் புத்தகங்கள் தொகுத்துள்ளனர். சீன நாட்டில் யுனெஸ்கோ பட்டியலில் உள்ள உலக பண்பாட்டு சின்னங்கள் மொத்தம் 42 ஆகும் அவற்றில் 15 இனவழி சிறுபான்மையோர் சின்னங்கள் ஆகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் சீனா படைக்கும் சாதனைகளும் கூட, சோசலிச அமைப்பினால் முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நடவடிக்கைகளின் விளைவே ஆகும். உடல் உறுதியை மேம்படுத்துவது அரசின் கொள்கையாக உள்ளது. சீனத்தில் 37 லட்சம் விளையாட்டு நிலையங்கள் இருக்கின்றன. மக்கள் தொகையில் 37.2 சதவீதம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டுள்ளார்கள். இதற்கான சிறப்புத்திட்டம் அனைத்து கிராமங்களிலும் செயல்படுகிறது.

கவனம் ஈர்க்கும் சமூக நல ஏற்பாடுகள்:

சீன மக்களில் 130 கோடிப் பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 100 கோடிப் பேருக்கு முதுமைக் காலத்திற்கான அடிப்படைக் காப்பீட்டை அரசு வழங்கியுள்ளது. சுமார் 3 கோடி முதியவர்கள் அரசின் மானிய உதவியைப் பெறுகிறார்கள். செவிலியர் உதவி தேவைப்படுவோருக்கு அதற்கானமானியத்தை அரசு தருகிறது.

முதியோருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை வழங்கும் விதத்தில் வீடுகள், சமுதாய அமைப்புகளுக்கு இடையிலான இணைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. முதியோரை பராமறிக்கும் குடும்பத்திற்கு வருமான வரிச்சலுகை தருகிறார்கள். முதியோருக்காக செயல்படும் 2 லட்சத்து 80 ஆயிரம் சமுதாய அமைப்புகளில் 82 லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

மாற்றுத்திறனாளர்களுக்கு 2 ஆயிரத்து 811 வேலைவாய்ப்பு நிறுவனங்களும், 478 சிறப்பு பயிற்சி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இதில் பயிற்சி பெற்ற 86 லட்சம் மாற்றுத்திறனாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

நகரங்களின் கட்டமைப்பையே மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிட முடிவு எடுத்து, 469 நகரங்கள், கவுண்டிகள், ஊர்கள் மற்றும் ஊரகப் பகுதிகளை மேம்படுத்தியுள்ளார்கள். 81 சதவீதம் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள் மாற்றுத்திறனுடையோர் அணுகும் விதத்தில் மாற்றப்பட்டுள்ளன. 56.6 சதவீதம் சேவையகங்களும், 38.7 சதவீதம் கழிப்பறைகளும் மாற்றுத்திறனாளர் பயன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டுள்ளன.

தூய சுற்றுச்சூழல்:

பசுங்கூட வாயுக்கள் உலகிற்கு பெரிய அச்சுருத்தலாக எழுந்திருக்கின்றன. கழிவு மேலாண்மை, மறுசுழற்சியை மேம்படுத்துவது மற்றும் தூய ஆற்றல் உருவாக்கம் ஆகியவைகளை ஊக்குவித்தால் தான் சூழல் மேம்பாட்டை சாத்தியமாக்க முடியும். உலகநாடுகள் அனைத்திற்கு இந்த பொருப்பு உள்ளது. சீனா அதற்கான இலக்குகளை ஏற்றிருப்பதுடன், தனது நகர, கிராம அமைப்புகளை அதிவேகமாக மாற்றியமைத்து வருகிறது.

ஹெபெய் என்ற மாகாணத்துடைய வடக்கு பகுதியில் சாஹ்யன்பா என்ற பெரும் காட்டுப்பகுதியில் வறட்சி அதிகரித்து, கடும் பாலைவனமாக ஆகியிருந்தது. அதீத குளிரும், வெப்பமும் நிலவிக் கொண்டிருந்த அந்தப் பகுதியில் வாழும் மக்கள், காடு வளர்ப்புச் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். சுமார் 40 ஆண்டுகளாக கடும் முயற்சி எடுத்ததன் காரணமாக அப்பகுதி பசுமையான காட்டுப் பகுதியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் ‘பூமியின் சாதனை வீரர்கள்’ என்ற உயர்ந்த விருதினை சாய்ஹன்பா மக்கள் பெற்றுள்ளார்கள். உலகத்திலேயே பாலை நிலம் அதிகரிக்காத பகுதியாக சீனா மாறியதற்கு மக்கள் பங்கேற்புடன் கூடிய இதனை ஒத்த பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாகும்.

இப்போது, சீனாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 25% தூய வழி முறைகளில் உற்பத்தியாகிறது. 202 நகரங்களில் காற்று மாசு கட்டுப்படுத்தியுள்ளார்கள். 90 சதவீதம் ஊரகப் பகுதிகளில் உற்பத்தியாகும் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதேபோல நகரங்களில் 94.6 சதவீதம் குப்பைகள் உரியமுறையில் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறார்கள்.

மிக அதிக ஆற்றல் பயன்பாடும், பசுங்கூட வாயு உற்பத்தியும் ஏற்படுத்தும் திட்டங்களை முன்னெடுப்பதில்லை, புதிதாக வரக்கூடிய திட்டங்களையும் அனுமதிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். அதற்கேற்ப கொள்கைகளை தொடர்ந்து மாற்றியமைக்கின்றனர். 2030 ஆம் ஆண்டிற்குள் பசுங்கூடவாயு உற்பத்தியில் அதிகபட்ச அளவை எட்டுவது, 2060வாக்கில் படிப்படியாக குறைத்து பூஜ்ஜிய நிலையை எட்டுவது என இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். புதிது புதிதாக முன்னெடுக்கப்படும் சூழலியல் ஆராய்ச்சிகளும், மேம்பாட்டை மையப்படுத்திய கண்டுபிடிப்புகளும் நம்மை வியக்க வைக்கின்றன.

இணையவெளியும், தனிநபர் உரிமையும்:

டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கும்போது அது தனிநபர் உரிமை சிக்கல்களையும் கொண்டு வருகிறது. ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடிய நாடுகளிலேயே அதனை உணர்ந்து சட்டப்பாதுகாப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சீனத்தில் அவ்வாறான முன்னோடி சட்டங்கள் உள்ளன. புதிய சட்டங்களை விவாதித்தும் வருகிறார்கள்.

ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி 351 செயலிகளின் தவறுகள் வெளிப்படையாக கண்டிக்கப்பட்டன. திருத்திக் கொள்ளாத 52 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. தனிநபர் உரிமை தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது, அவை உடனுக்குடன் தீர்க்கவும்படுகின்றன. 2017ஆம் ஆண்டில் 1393 வழக்குகள் தீர்க்கப்பட்டன. அதுவே 2020ஆம் ஆண்டில் 2558 வழக்குகள் தீர்க்கப்பட்டன.

சமீபத்தில் அலிபாபா என்ற நிறுவனத்தின் தலைவரான ஜாக்மா என்ற முதலாளி மீதான விசாரணை பரபரப்புச் செய்தியாக ஆனது. முதலாளித்துவ ஊடகங்கள் ஜாக்மாவிற்காக கண்ணீர் விட்டன. உண்மையில் அது ஏகபோகத்திற்கு எதிராகவும், இணைய பயன்பாட்டாளர்களின் தனி உரிமை பாதுகாப்பிற்காகவும் சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே ஆகும். இப்போது மனித முகங்களை கண்டறியும் தொழில்நுட்பங்கள், வங்கித்துறை செயலிகள், இணையவழி வர்த்தக தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, சீன குடிமக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை மின் ஆளுகை வழியாக பெறுவதில் உலக நாடுகளில் 9வது இடத்தில் இருக்கிறது.

Uighur Muslims

ஏகாதிபத்தியமும், சகவாழ்வும்:

சீன அரசாங்கம் எப்படிப்பட்ட வெளியுறவுக்கொள்கையை கடைப்பிடிக்கும்? அது இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமாக இருக்குமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.

சீனாவிற்குள்ளேயே ஹாங்காங், தைவான் ஆகிய பகுதிகளோடு சோசலிச அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? உய்குர் முஸ்லிம்கள் உரிமை பாதுகாக்கப்படுகிறதா போன்ற கேள்விகள் பொதுவெளியில் நிலவிக்கொண்டிருக்கின்றன.

உய்குர் முஸ்லிம்களின் நிலைமையை பொருத்தமட்டில், நாம் முன்பு கண்ட வகையில், இன வழி சிறுபான்மையோர் உரிமைகளை காக்கும் நடவடிக்கைகள் உய்குர் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுகின்றன. வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளும் அவர்கள் வாழும் பகுதிகளில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கையை விட்டு வெளிப்படையான விவாதங்களை சீனா வரவேற்றுள்ளது. முன்பு திபெத் குறித்தும் இதே வகையான பிரச்சாரத்தை அமெரிக்கா முன்னெடுத்தது, ஆனால் அங்குள்ள களநிலைமைக்கும் பிரச்சாரத்திற்கும் தொடர்பில்லை. சோசலிச திட்டமிடலின் காரணமாக திபெத் மாபெரும் முன்னேற்றங்களை சாதித்துள்ளது.

சமீப ஆண்டுகளில் பழைய ‘பட்டுப்பாதையை’ புதுப்பிக்கும் விதத்தில் சீனா தனது நட்புநாடுகளோடு தொடர்புகளை விரிவாக்குகிறது. அதில் உய்குர் முஸ்லிம் மக்கள் வாழும் சீனாவின் மேற்கு மாகாணங்கள் பலனடைகின்றன. எனவே, பகுதியில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அமெரிக்காவும் அதன் ஊடகங்களும் போலிச் செய்திகளை பரப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களின் அரசியல் நோக்கம் யாருக்கும் தெரியாததல்ல. ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஆகிய பிரச்சனைகளில் அமெரிக்கா கடைப்பிடித்த உத்திகளும், முன்னெடுத்த ஆக்கிரமிப்புகளையும் அறிந்த உய்குர் மக்கள், அமெரிக்காவின் புரளிகளை எதிர்த்து இணையதளங்களில் பேசுகிறார்கள்.

சீனா ஒரு சோசலிச நாடுதான் என்ற போதிலும், அதன் சிறப்பு மேலாண்மை பகுதிகளாக அமைந்த ஹாங்காங், மக்காவ் போன்ற பகுதிகள் தனியுடைமை பொருளாதாரத்தை கடைப்பிடிக்கின்றன. முதலாளித்துவ தனியுடைமை உற்பத்திமுறையை, சோசலிசகட்டமைப்பிற்கு கட்டுப்பட்ட விதத்தில் சட்டப்படி உறுதி செய்திருப்பது, சோசலிச ஜனநாயகத்தின் உச்சபட்சவெளிப்பாடாகும். இது தைவானுக்கும் பொருந்தும். (தைவான் – சீனாவின் ஒரு பகுதி என்ற போதிலும், அது உருவான வரலாற்று நிலைமையைக் குறித்தும், அதனை அவர்கள் கையாளும் முறை பற்றியும் நாம் வேறு ஒரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்)

இந்தியர்களாகிய நாம் கவனிக்க வேண்டியது சீனத்தின் வெளியுறவுக் கொள்கைகளைத்தான். அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகள், நமது வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தி வருவது நன்கு தெரியும். உலக அரங்கில் சீனாவின் கை ஓங்குமானால் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?.

வெளியுறவைக் குறித்து சீனா ஐந்து கொள்கைகளை முன் வைக்கிறது.

  • 1) ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லையை மதித்தல்,
  • 2) இருதரப்பிலும் ஆக்கிரமிக்காத கொள்கை,
  • 3) ஒரு நாட்டின் உள்பிரச்சனைகளில் தலையிடாமை
  • 4) சமத்துவம், இருதரப்பிற்கும் நன்மை
  • 5) சமாதான முறையில் சகவாழ்வு

எனவே, சீனாவின் அணுகுமுறையை இந்தியா பயன்படுத்திக்கொள்ள முடியும். வளரும் நாடாக உள்ள சீனாவின் அனுபவங்கள், நமது மக்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு உதவியாகவும் அமையும். அதே சமயம் அவர்களின் கொள்கைகளை நாம் பிரதியெடுக்க முடியாது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் இவ்வாறு பேசினார். “உலகமயம் என்பது இருமுனையும் கூரான கத்தி … மூலதனத்திற்கும், உழைப்பிற்குமான முரண்பாட்டை இது அதிகப்படுத்தியுள்ளது… பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது… உலகின் 1 சதவீதம் மட்டுமே உள்ள பணக்காரர்களின் கைகளில் 99 சதவீத வளங்கள் குவிந்திருக்கின்றன”.

உலக அளவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. அதே சமயத்தில் முதலாளித்துவ உலகின் தலைவனைப்போல் தன்னை முன் வைத்து வலம்வரும் அமெரிக்காவின் பொருளாதார வலிமை சரிந்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் சோசலிச சீனா வலிமை பெறுகிறது.

எனவே,உலகமய விதிகள் அதற்கு எதிரான திசையில் மாறுகின்றன. உலகப்போர்களுக்கு பின், அமெரிக்கா தன்னுடைய டாலர் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதில் கூடுதலான கவனம் செலுத்தியது. இப்போது அதன் டாலர் ஆதிக்கம் சரியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், உலகம் முழுவதும் டிஜிட்டல் வர்த்தகமும், டிஜிட்டல் செலாவணிகளும் அறிமுகமாகின்றன. இது உலகில் நடக்கும் பலமுனை வளர்ச்சி என்ற போக்கினை மேலும் வலுப்படுத்தலாம். (சீனா முன் மாதிரியாக டிஜிட்டல் பணத்தை உருவாக்கி மக்களிடையே ஊக்குவித்து வருகிறது)

எனவே, இந்த மாற்றங்கள் உலக அரசியலில் தாக்கம் செலுத்தும். ஒவ்வொரு நாடுகளிலும் உழைக்கும் மக்களையும், விடுதலையையும் பாதுகாக்கிற சக்திகளை வலுப்படுத்தும் போதுதான், ஒரு சிறந்த சமுதாயத்தை நோக்கி நாம் முன்னேறுவது சாத்தியமாகும்.

‘சியாகங்க்’ சமூகத்தை படைத்துக் காட்டியுள்ள சீன கம்யூனிஸ்டுகள், அடுத்து நவீன சோசலிசத்தை நோக்கிய பயணத்தை 2 நிலைகளில் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். இனிவரும் 15 ஆண்டுகளில் நவீன சோசலிசத்தைகட்டமைப்போம், அடுத்த 15 ஆண்டுகளில் அந்த சோசலிசத்தை பலநிலைகளில் மேம்படுத்துவோம் என்கிறார்கள். உழைக்கும் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளமுடியும் என்பதுடன், அதன் மூலம் அனைவருக்கும் சிறந்த வாழ்வை உறுதி செய்திட முடியும், சக மனிதர்களையும், சக உயிர்களையும் பாதுகாக்கும் பொருப்புள்ள மனிதர்களின் வருங்காலம் சாத்தியமே என நடத்திக்காட்டுகிறார்கள். இதற்காக, சீன கம்யூனிஸ்டுகள் கடும் போராட்டத்தை செய்து கொண்டுள்ளார்கள். இதில் வெற்றிபெற்று, தங்கள் மக்களை அவர்கள் காத்திட வேண்டும். இது உலக அளவில் சோசலிசத்திற்கான போராட்டங்கள் வலுப்பட ஊக்கமாக அமைந்திடும்.

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...