லக்கிம்பூர் வன்முறை: தாமாக முன்வந்து விசாரிக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்-அஜய் மிஸ்ரா

 

த்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

நாளை (07.10.2021) தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. அமர்வில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹீமா கோலி இடம்பெறுகின்றனர். உத்தரப் பிரதேச சம்பவத்தில் விசாரணை முறையில் போலீஸார் காட்டும் சுணக்கமும், மெத்தனமும் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளது.

லக்கிம்பூர் சம்பவம்: அன்று முதல் இன்று வரை:

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒக்ரோபர் 3 ஆம் தேதியன்று காலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் தந்தை, மகனுக்கு கருப்புக் கொடி காட்ட கேரி கிராமத்தில் விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார் விவசாயிகள் மீது ஏறிச் சென்றது. இதில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். முதலில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறிவந்த பாஜகவினர், காங்கிரஸார் அதிரவைக்கும் கார் ஏற்றும் காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டதில் இருந்து அதனைப் பற்றி பேசுவதைத் தவிர்த்துவிட்டனர்.

ஒக்ரோபர் 3ஆம் தேதியன்று இரவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூருக்குச் செல்ல முற்பட்டார். ஆனால், அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்ற முற்படுவது போன்ற அநாகரிகமான செயல்களில் போலீஸார் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியானது. பிரியங்கா காந்தி சீதாபூரில் அரசினர் விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். 36 மணி நேரத்துக்கும் மேலாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

லக்கிம்பூர் செல்ல வந்த சத்தீஸ்கர் முதல்வர் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் லக்கிம்பூர் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடே கொந்தளித்து வரும் சூழலில், இன்னமும் இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வருகிறார். இன்று அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

அஜய் மிஸ்ரா

விவசாயிகள் 4 பேர், பொதுமக்கள் நால்வர், பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்தை காவல்துறை கையாளும் விதம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது உச்ச நீதிமன்றம். நாளை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

இதற்கிடையில் 2 நாட்களாக தடுப்புக் காவலில் இருந்த பிரியங்கா காந்தி லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

லக்கிம்பூர் சம்பவம் – இணையத்தில் வெளியான வீடியோ:

லக்கிம்பூரில் ராகுல், பிரியங்கா – அஜய் மிஸ்ரா பதவி விலக தொடரும் அழுத்தம்

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்களான சரண்ஜித் சிங் சன்னி, பூபேஷ் பாகெல் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

காவல்துறையின் கடுமையான பாதுகாப்பு, இன்டர்நெட் முடக்கம் உள்ளிட்ட கெடுபிடி, 144 தடை உத்தரவு என பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலரை ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வழக்குகள் விசாரணை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் ஆகியோரை கேரோ செய்வதற்காக விவசாயிகள் லக்கிம்பூர் கேரி பகுதியில் திரண்டிருந்தபோது, சாலை வழிமறித்து நின்ற அவர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் வாகனங்களை வேகமாக மோதச் செய்து சென்றதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகள், பொதுமக்கள் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் இறந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்க கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முற்பட்டபோது, அவரை லக்கிம்பூர் கேரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீதாபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி லக்கிம்பூர் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி லக்கிம்பூரில் கலவர சூழல் நிலவுவதாகக் கூறி பிரியங்கா காந்தியை சீதாபூரில் உள்ள பிஏசி அரசு விருந்தினர் இல்லத்தில் தடுத்து வைத்தனர். வழக்கறிஞர்களை சந்திக்கவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், தன்னை காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்து வைத்துள்ளதாக பிரியங்கா காணொளி ஒன்றை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதனால், உத்தர பிரதேச அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் லக்கிம்பூர் செல்ல லக்னெள விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது, அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் லக்கிம்பூர் செல்ல முற்பட்டோபது, அவரையும் அதிகாரிகள் டெல்லியைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் திங்கட்கிழமை அனுமதி மறுத்தது உத்தர பிரதேச உள்துறை. ஆனால், பிரியங்கா காந்தி போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 38 மணி நேரத்துக்கும் மேல் ஆன நிலையில், திடீரென்று லக்கிம்பூரில் கட்டுப்பாடுகள் தொடரும் அதே சமயம், ராகுல் காந்தி தலைமையில் ஐந்து பேர் கொண்ட காங்கிரஸ் தலைவர்களை மட்டும் அனுமதிக்கப்படுவர் என்று உத்தர பிரதேச உள்துறை தெரிவித்தது.

இதையடுத்து, டெல்லியில் இன்று புதன்கிழமை காலையில் லக்னெள விமான நிலையத்துக்கு சென்றார் ராகுல் காந்தி. அவருடன் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ரந்தீப் சூர்ஜிவாலா, கே.சி. வேணுகோபால் சென்றனர். மறுபுறம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலும் லக்னெள விமான நிலையத்துக்கு வந்தனர்.

ஆனால், ராகுல் காந்தி போலீஸ் வாகனத்தில் மட்டுமே லக்கிம்பூருக்கு செல்ல வேண்டும் இல்லை என்றால் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால், விமான நிலைய வெளிப்புற நடைபாதையிலேயே அமர்ந்து ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டார்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்து தமது சொந்த வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து லக்னெள விமான நிலையத்தில் இருந்து சீதாபூரில் தமது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியை சந்திக்கப் புறப்பட்டார் ராகுல் காந்தி. மாலை 5.45 மணியளவில் அவர் சீதாபூரை அடைந்தபோது அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அங்கு பிரியங்காவை சந்தித்து சில நிமிடங்கள் பேசிய ராகுல், பிறகு அவருடன் சேர்ந்து லக்கிம்பூருக்குப் புறப்பட்டார். வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இரவு 7 மணியைக் கடந்த நிலையில், ராகுல் தலைமையிலான குழுவினர் லக்கிம்பூருக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. எல்லா வீதிகளிலும் காவல்துறையினரும் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டிருந்தது, அங்கிருந்து பகிரப்பட்ட காணொளியொன்றின் மூலம் தெரிய வந்தது.

ஊடகங்கள் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் அங்கு தங்கியிருக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தப்பின்னணியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இதற்கிடையே, விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 10 பேர் உத்தர பிரதேச காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் விசாரிக்கப்படவோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை.

சம்பவம் நடந்தபோது, மத்திய இணை அமைச்சரின் மகன் அங்குதான் காரில் இருந்தார் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தமது மகன் அங்கு இல்லை என்பதை நிரூபிக்கும் காணொளி ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

இதற்கிடையே அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை குரல் கொடுத்து வருகின்றன. அவர் ராஜிநாமா செய்ய வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியிருந்தாலும், கடந்த திங்கட்கிழமையில் இருந்து அஜய் மிஸ்ராவின் ராஜிநாவை வலியுறுத்தும் குரல்கள் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, லக்கிம்பூருக்கு செல்வதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டை மொரதாபாத் பகுதியில் காவல்துறையினர் தடுத்துள்ளதாக அவர் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

யார் இந்த அஜய் மிஸ்ரா?

51 வயதாகும் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரியிலேயே பிறந்தவர். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உத்தர பிரதேச மாநில அரசியலில் உள்ளூர் தலைவராக அறியப்பட்டு வந்த அஜய் மிஸ்ரா, சட்டப்பேரவை உறுப்பினர் ஆன பிறகே பொதுமக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு அதிகமானது. பாரதிய ஜனதா கட்சியின் அடிமட்டத்தில் அவர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், கேரியிலிருந்து பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்ட அஜய் மிஸ்ரா, ஒரு லட்சத்து பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று எம்.பி ஆனார்.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், அஜய் மிஸ்ரா தனது போட்டியாளரை இரண்டு லட்சத்து பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இரண்டாவது முறையாக எம்.பி ஆனார். இதன் காரணமாக அஜய் மிஸ்ராவின் செல்வாக்கு உள்ளூரில் அதிகமானது.

2019 முதல் 2021ஆம் ஆண்டு பல நாடாளுமன்ற குழுக்களில் பாஜகவின் பிரதிநிதியாக இருந்த அவர், பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவியேற்றார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கம்பூரில் விவசாயிகள் உயிரிழக்க காரணமான சம்பவத்தில் மத்தியிலும் உத்தர பிரதேசத்திலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசுகளை கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரான பின்னணி என்ன?

லக்னெளவைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் ஷரத் பிரதான், ஆஜய் மிஸ்ராவுக்கு திடீரென மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததே ஓர் ஆச்சரியமான விஷயம்தான் என்கிறார்.

“அஜஸ் மிஸ்ரா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அதுவே அவர் அமைச்சராவதற்கு முக்கிய காரணம். காரணம், அந்த பகுதியில் பிராமணர்களின் வாக்குகளை பாஜக இழக்கும் நிலையில் இருந்தது. உத்தர பிரதேசத்தில் எப்போதும் தாக்குர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே பகைமை உணர்வு இருக்கும். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் உத்தி தாகுர்களுக்கு சாதகமாகவே இருப்பதாக ஒரு பேச்சு உண்டு. அது பிராமணர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. அவர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே அஜய் மிஸ்ராவுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது,” ஷரத் பிரதான்.

வீரேந்திரநாத் பட் என்கிற மற்றொரு மூத்த செய்தியாளரும் பிரதானின் கருத்துடன் ஒத்துப் போகிறார். “பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. லக்கிம்பூர், ஹர்தோய், சீதாபூர், ஷாஜகான்பூர் ஆகிய இடங்களில் பிராமணர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்,” என்றார் வீரேந்திரநாத் பட்.

கட்சியின் அடிமட்டத்திலும் உள்ளூர் மக்களிடமும் செல்வாக்கு பெற்ற அஜய் மிஸ்ரா, சமீப காலமாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதுவும் மத்திய உள்துறை இணை அமைச்சரான பிறகு, தம்மால் எதுவும் சாதிக்க முடியும் என்ற போக்கில் அவரது செயல்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார் செய்தியாளர் ஷரத் பிரதான்.

வீரேந்திரநாத் பட், “அறிவு பலத்தை விட ஆள் பலமே அரசியலுக்கு தேவை என்பதை அஜய் மிஸ்ரா உணர்ந்திருக்கிறார். அடுத்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அதை மனதில் வைத்தே அஜய் மிஸ்ராவை மோதி அரசு அமைச்சராக்கி இருக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.

மேலும், டெராய் பிராந்தியத்தில் சீக்கியர்கள் வாழ்கிறார்கள். விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு அவர்களின் ஆதரவு உள்ளது. விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை இங்குள்ள சீக்கியர்களே வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் சீக்கியர்களின் இருப்பு, பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளூரில் சவாலாகவே இருக்கிறது என்றும் வீரேந்திரநாத் பட் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...