ஈழத்து ஆங்கில இலக்கிய உலகில் சி. வி. வேலுப்பிள்ளை-மு.நித்தியானந்தன்


டப்ளியூ. எஸ். சீனியர் (W.S.Senior) என்ற ஆங்கிலக் கவி தனது பிரசித்தமான The Call of Lanka என்ற கவிதையில்,

 “இலங்கை அன்னையின்

நீண்டுயர்ந்த மலைச் சிகரங்களின்

மேலேறி நின்று,

பொன்னிறக் கடலலையை

பார்க்கின்றேன்.

புராதன வாழ்விடத்தின்

சிதிலத்திலிருந்து

அந்த அன்னையின் ஆத்மா

எனை அழைத்ததைக் கேட்டேன்:

‘என் புகழ் பாடிட ஒரு கவிஞனைத் தா!

கவிதையில் இழைக்க வேண்டிய அனைத்தையும் இசைத்திடும்

ஒரு பாணனைத் தா!”

என்கிறார்.

இலங்கை அன்னையின் குரல் அது.

கவிஞர் சீனியர் இலங்கை அன்னைக்கு உறுதிமொழி கூறுகிறார்:

நிச்சயமாக,

அவன் உன் சொந்தப் புதல்வனாயிருப்பான்,

உன் கர்ப்பப்பையிலிருந்து ஜனிப்பான்.

நிலவு சிந்தும் கானகத்தை அவன் பாடுவான்.

வெயில் எரிக்கும் விண்ணை அவன் பாட்டில் வைப்பான்.

அன்னை மார்பின் மென்சூட்டில்

பாசம் தவழும் அவள் விழிச்சுடரில்

உயிர்த்தெழுவான்,

வருவான், அவன் நிச்சயமாக!

அந்தக் கவி எழுந்தான்!

அந்தக் கவிதான் சி.வி.வேலுப்பிள்ளை!

சீனியர் என்ற கவிஞனின் கனவு அவர் வாழ்ந்த காலத்திலேயே பலித்துவிட்டது.

1938இல் சீனியர் மறைந்தார் எனினும், வங்கக்கவி தாகூரின் ஆளுமையின் நிழலில் வளர்ந்த சி.வி.வேலுப்பிள்ளை, 1935இல் தனது Vismadgenne என்ற ஆங்கிலப் பா நாடகத்தின் மூலம் மலையகத்தின் வட்டகொடை, மடக்கும்புற தோட்டத்தில், ஒரு கவிஞனின் உதயத்தைப் பிரகடனம் செய்கிறார்.

1949இல் Wayfarer என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பின் மூலமும், 1954இல் In Ceylon’s Tea Garden என்ற ஆங்கிலக் கவிதையின் மூலமும் ஈழத்தின் ஆங்கிலக் கவியுலகில் சி.வி. தனது இலக்கியத் தடத்தைப் பதிக்கிறார்.

சீனியர் எழுதியதைப் போல, சிவனொளிபாத மலையின் பழமைப் பெருமையினை அவர் பாடவில்லை. தனித்து ஓங்கி உயர்ந்து நிற்கும் அந்த மலையின் அழகைப் பாடவில்லை. துங்கிந்த செங்குத்துப் பாறையினை, புகைமூட்டமாய் கவியும் அதன் நீர்வீழ்ச்சியை அவன் பாடவில்லை. தூரப் பார்வையில் மிளிரும் சிகிரியாவின் எழிலைப்  பாடவில்லை. மின்னேரியாப் பசுந்தரையில்  மேய்ந்து மகிழும் பசு மாடுகளைப் பற்றி அவர் பாடவில்லை. இலங்கையில் எவையெல்லாம் பழமைப் பெருமை உடையனவோ அவையனைத்தையும் அவன் அலங்கார மொழியில் வர்ணிப்பான் என்ற சீனியரின் வார்த்தையில் அவன் மாய்ந்து போகவில்லை. ஏரிகளை, அதில் முகிழ்க்கும் தாமரை மலர்களை, கல்லில் கலை வண்ணம் கண்ட அழகை  அவன் வர்ணிக்கவில்லை.

ஆனால், “இலங்கையில் தேயிலை, றப்பர், தேயிலைத் தோட்டங்களில் உழைத்து மாயும் இலங்கை இந்தியர்களின் மத்தியிலிருந்து ஒரு கவிஞன் எழுந்திருக்கிறான். ஒரு காவியக் கவிஞனின் வலிமையுடன் ஆங்கில மொழியில் அவன் பேசுகிறான். இந்த தேசத்தின் நாடற்ற, குரலற்ற பாட்டாளி வர்க்கத்தின் எட்டு லட்சம் தோட்டத் தொழிலாளர்களின் தெளிவான, தீர்க்கமான குரலாக இந்தக் கவிஞன் எழுந்திருக்கிறான்” என்று மலையகத்திலிருந்து எழுந்த சி.வி.யின் இலக்கிய வருகைக்கு கட்டியம் கூறுகிறார் பம்பாயிலிருந்து வெளியாகும் ‘பாரத்ஜோதி’ என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியர் ஜெக் மோஹன்.

“சி.வி. வேலுப்பிள்ளை ஸ்பானியக் கவிஞன் கார்ஸியா லோர்க்காவிற்கு நிகராக வருகிறார்; சிலிக் கவிஞன் பாப்லோ நெருடாவிற்கு, ரஷ்யப் புரட்சியின் விளாடிமீர் மயகோவிஸ்கிக்கு அல்லது தற்போது ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எந்த கவிஞருக்கும் நிகரானவராக அவர் திகழ்கிறார்” என்று கவிஞர் ஜெக் மோஹன் சி.வி.யைக் கொண்டாடுகிறார்.

கவி தாகூருக்குக் காணிக்கையாக ‘விஸ்மாஜினி’ என்ற ஆங்கிலப் பா நாடகத்தை 1934இல் சி.வி. எழுதியபோது, இலங்கையில் முன்னணியில் நின்ற ஆங்கிலக் கவிஞர்கள் யாருமில்லை. 1930களில் லண்டனில் ஆங்கிலக் கவிதை உலகில் ஒரு பத்தாண்டு காலமாவது கோலோச்சிய தம்பிமுத்துவைப் பற்றிப் பேசுகையில், “தம்பிமுத்து  சிறந்த கவிஞராகவே  ஆரம்பித்திருந்தாலும், அவர் தொடர்ந்து உறுதியாக எழுதவல்ல சிருஷ்டிகரமான கவிஞராக எனக்குத் தோன்றவில்லை” என்கிறார் ஜெக் மோஹன்.

“இலங்கையில் அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தில் தம்பிமுத்து பங்கு பெறவில்லை. அவரது நண்பர் அழகு சுப்பிரமணியமும் அப்படித்தான். இந்தக் கவிஞர்கள் எல்லோருமே brown Englishmen ஆவதில் அக்கறை கொண்டிருந்தனர். தம்பிமுத்து ஏற்கனவே அத்தகைய இங்லீஷ்காரன்தான்” என்று தம்பிமுத்துவுடன் நெருங்கிய நட்புப் பேணிய முற்போக்கு நாவலாசிரியர் முல்க் ராஜ் ஆனந் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

ஆனால், தேயிலைத் தோட்டங்களில் உழைத்து மாய்ந்த லட்சோப லட்சக்கணக்கான மலையகத் தமிழரின் உயிர் மூச்சாய், அவர்களின் உரிமை முரசமாக சி.வி. திகழ்ந்தார். செனட் சபைக் கட்டிடத்தின் பிரதம மந்திரியின் அலுவலக வாயிலில் 140 தினங்களுக்கு மேலாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னணிப் போராளியாக நின்றவர் சி.வி. அந்தப் போராட்ட அனுபவத்தை கவிதையில் வார்த்த பெருங்கவி அவர்.

1930களில் ஆரம்பமான இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை, அதன் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் ஈ.எப்.சி.லுடோவைக் அவர்களின் வழிகாட்டலில் உருவான பற்றிக் பெர்னாண்டோ என்ற ஆங்கிலக் கவிஞர் தனது The Return of Ulysses என்ற ஆங்கிலக் கவிதைக் தொகுப்பை வெளிக்கொணர்ந்தது 1955இல்தான். இலங்கையின் ஆங்கிலக் கவிதை வரலாற்றின் முன்னோடிக் கவிஞராக பற்றிக் பெர்னாண்டோ பேசப்படுகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின், இலங்கையின் ஆங்கிலக் கவிஞர்களின் பாடநெறியில் சி.வி. என்ற கவிஞன் எடுத்துக்கொள்ளப்பட்டதேயில்லை.

“பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புண்யகாந்தி விஜேநாயக்கவின் Giraya (பாக்குவெட்டி) நாவல் பற்றியும், மலைநாட்டு சிங்கள உயர்வர்க்கத்தினரின் வீழ்ச்சி பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தபோது, பெருந்தோட்டங்களில் உழைக்கும் ‘தமிழர்கள்’ தொடர்ந்தும் உழைத்தவண்ணமேயிருந்தனர். ஆனால், ஆய்வுக்குத் தகுதியான விடயப்பொருளாக மலையகத் தமிழர் கருத்தில் கொள்ளப்படவேயில்லை. பேராதனையில் ஆங்கிலத் துறையில் சிறப்புப் பயிற்சிநெறியின் பாடவிதானத்தில் சிங்கள, தமிழ் இலக்கியம் குறித்த ஒரு பாடம் போதிக்கப்பட்டபோதிலும், செவ்வியல் தமிழ் இலக்கியமே போதிக்கப்பட்டதே தவிர விளிம்புநிலை இலக்கியங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. சி.வி.வேலுப்பிள்ளை பற்றியோ அவரது கவிதைகள், சிறுகதைகள் பற்றி நாங்கள் பேசியது கிடையாது. சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். அவரது எழுத்துக்களின் அரசியல்சார் இருமொழித்தன்மை, தோட்டப்புற மக்களின் நாட்டார் பாடலில் அவருக்கிருந்த நுட்பமான பார்வை, காலனித்துவ காலத்திலும், 1948, 1949 காலப்பகுதியில் தோட்டத் தொழிலார்கள் வாக்குரிமை மறுக்கப்பட்டு, அவர்கள் இலங்கையரல்லாத இலங்கையராக மாற்றப்பட்டதையும் ஸ்ரீலங்காவின் ஆங்கில எழுத்தாளர் உருவாக்கத்தில் காணாமல்போனது ஒரு துயரமே”  என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் சுமதி சிவமோகன் கூறுகிறார்.  

ஆனால், பற்றிக் பெர்னாண்டோவின் கவிதைத் தொகுப்பு வெளியாவதற்கு முன்பே, இருபது ஆண்டுகளுக்கு முன்பே, 1934இல் சி.வி.யின் ‘விஸ்மாஜினி‘ என்ற ஆங்கிலப் பா நாடகம் வெளியாகிவிட்டது. அந்நூல் ஆங்கில இலக்கிய உலகில் பெரிதும் பேசப்படவில்லை. அதன் பின்னர், பதினைந்து ஆண்டுகள் கழித்து, 1949இல் Wayfarer கவிதைத் தொகுப்பும், இருபது ஆண்டுகள் கழித்து 1954இல் In Ceylon’s Tea Garden என்ற கவிதை நூலும், அதற்கடுத்த ஆண்டில், 1970இல் Born to Labour என்ற நடைச் சித்திரமும் வெளியானபோது, ஆங்கில எழுத்தில் சி.வி. தனது ஸ்திரமான இடத்தை உறுதி செய்து கொண்டார்.

 Source: chakkram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...